தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
நெல்லை மிஷனரி ரேனியஸ் ஐயர் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நெல்லை மிஷனரி ரேனியஸ் ஐயர் Empty நெல்லை மிஷனரி ரேனியஸ் ஐயர்

Thu Apr 17, 2014 1:18 pm
நெல்லை மிஷனரி ரேனியஸ் ஐயர் 261RehniusRev
சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் நவம்பர் 5, 1790 ஆம் நாள் ஜெர்மனியில் உள்ள கிரான்டன்ஸ் (Graudens) என்னுமிடத்தில் பிறந்தார். 

ரேனியஸ் 6 வயதாயிருக்கும் போது தந்தை நிக்கலஸ் ரேனியஸ் இறந்து போனார். தாயார் பெயர் காத்தரின் டாரதி. ரேனியசோடு பிறந்தவர்கள் இரு சகோதரிகளும், இரு சகோதரர்களுமாவர். ரேனியஸ் 14 வயது வரை மரியன் வெர்டர் நகரிலிருந்த கதீட்ரல் பள்ளியில் கல்வி கற்றார். பின்பு 3 வருடங்கள் ‘பாஸ்கா’ என்ற ஊரிலிருந்த மாமாவிடம் எழுத்தாளராகப் பணிபுரிந்தார். 

அதன் பின்பு 1807ஆம் ஆண்டு அவருடைய பெரியப்பாவின் நிலபுலன்களைக் கவனித்துக் கொள்ளும் பணிகளைச் செய்து வந்தார். அங்கு இருக்கும் போது அவர் கிறித்தவ சமய ஊழியத்தில் ஆர்வங்கொண்டு, அதற்காகத் தன்னைத் தகுதிபடுத்திக் கொள்ள பெர்லின் (Berlin) சென்றார். அங்கு 15 மாதங்கள் இறையியல் கல்வி பயின்று 1812 ல் குரு பட்டம் பெற்றார்.


இந்தியா வருகை :-

‘சீர்திருத்தத் திருச்சபை’யைச் (Reformed Church) சேர்ந்த இவர் 1814ஆம் ஆண்டு, ஜூலை 4ஆம் தேதி, ‘சர்ச் மிஷன் சங்கம்’ (C M S) சார்பில் இந்தியாவுக்கு ஊழியராய் வந்தார். இந்தியா வந்த இவர் தரங்கம்பாடியில் சிறிது காலம் தங்கி தமிழ் பயின்றார். பின்பு சென்னை சென்றார். அங்கு அனி வேன் சாமரன் (Annie Van Someran) என்ற டச்சு நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அங்கு தமிழ், தெலுங்கு மொழிகளைக் கற்றார். ஜெர்மானிய கிறித்தவ மத போதகர்கள் ஆங்கிலிக்கன் திருச்சபையை அனுசரித்துப் போக வேண்டும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ரேனியசால் அது இயலவில்லை. எனவே சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு மாற்றம் செய்யப்பட்டார். 1820, ஜூலை 7ஆம் தேதி முதல் திருநெல்வேலியில் 18 வருடங்கள் பணியாற்றினார்.


சாதீயப் பாகுபாடு :-

திருநெல்வேலிக்குத் தஞ்சாவூரிலிருந்து வந்த முதல் பாதிரியார் (1786 – 1805) வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் திருநெல்வேலி சபையிலும் சாதிமதப் பழக்கங்களை அனுமதித்திருந்தார். ஆனால் ரேனியஸ் இந்தப் பாகுபாடுகளை அனுமதிக்கவில்லை. பள்ளி, ஆலயம், மாணவர் தங்கும் விடுதிகளிலும் அனைத்து மாணவர்களும் சரிசமமாக நடத்தப்படல் வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். மேலும் தமிழிலேயே பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் மாணவர்களுக்கான பாட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். பல பாடசாலைகளைத் தோற்றுவித்தார். இது போல் ஆண்களைப் போல் பெண்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பெண்களுக்கும் பாடசாலைகளை உருவாக்கினார். வேளாளரை மட்டுமின்றி, முதன் முறையாக நாடார்களை ஆசிரியர்களாகவும், உபதேசியார்களாகவும் நியமிக்கத் தொடங்கினார். இதனால் ரேனியஸ் அநேக தொல்லைகளுக்கு ஆளாக நேரிட்டது.


சமயப் பணி :-

"கதீட்ரல் ஆலயம்"
திருநெல்வேலி மாவட்டத்தில் கிறித்தவ சமயப் பணியில் இவர் ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. இதனால் இவரை ‘திருநெல்வேலி அப்போஸ்தலர்’ (The Apostle of Tirunelveli) என்று அழைக்கப் பட்டார். இவர் திருநெல்வேலி பகுதியில் 371 கிறித்தவ சபைகளை நிறுவினார். திருநெல்வேலி, பாளையங்கோட்டை, முருகன்குறிச்சியில், கதீட்ரல் ஆலயம் (Cathedral Church) இருக்கும் இடத்தில் 1826முதன் முதலில் ஒரு சிறு ஆலயத்தை பொது மக்கள் வழிபாட்டிற்காகத் கட்டினார். அது இன்று தூய திரித்துவப் பேராலயம் எனப்படும் ஊசிக்கோபுரம் (Holy Trinity Cathedral) ஆக சிறப்பு பெற்றுள்ளது. இதன் அருகில் பெண்களுக்கென்று ஒரு பள்ளிக்கூடத்தை நீறுவினார். அது இன்று ‘மேரி சார்ஜென்ட் மேல்நிலைப் பள்ளியாக’ உயர்ந்துள்ளது . அதுபோல் உபதேசியார்களும், ஆசிரியர்களும் கற்பதற்கு ஒரு போதனாப் பள்ளியைத் தொடங்கினார். அது இன்று ‘பிஷப் சார்ஜென்ட் போதனாப் பள்ளி’ எனும் பெயரில் அமைந்துள்ளது.

"சமத்துவக் குடியிருப்புகள்"
“சமூக அநீதிகளால் விளைந்த துயரங்களைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் வேகமாகக் கிறிஸ்தவம் தழுவியதாக ரேனியஸ் கருதினார்” என பால் அப்பாசாமி அவருடைய திருநெல்வேலி திருச்சபை வரலாற்றில் குறிப்பிடுகிறார். உயர் சாதியினரால் இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து புதிதாக மதம் மாறிய கிறித்தவர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பல கிறித்தவ கிராமங்கள் ரேனியஸ் காலத்தில் அமைக்கப்பட்டன. அவற்றில் நல்லூர், மெய்யூர், சமாதானபுரம், முதலூர், அடைக்கலாபுரம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.1827ல் புலியூர்க்குறிச்சி எனும் கிராமத்தைஜெர்மனியிலிருந்த “டோனா பிரபு” என்பவரின் நிதியுதவியோடு ரேனியஸ் விலைக்கு வாங்கி அங்கு கிறிஸ்தவர்களைக் குடியேற்றினார். அந்த ஊர் “டோனாவூர்” என்று பெயர் பெற்றது.

"சங்கங்கள்"
ரேனியஸ் சென்னையிலிருந்த போது 1818 ல், “துண்டுப் பிரசுரம் மற்றும் சமய நூல்கள் சங்கம்” (Madras Tract and Religious Book Society) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த அமைப்பு பின்னாளில் “கிறிஸ்தவ இலக்கிய சங்கத்துடன்” (Christian Literary Society) இணைக்கப்பட்டு விட்டது. திருநெல்வேலியிலும் “துண்டுப் பிரசுர சங்கத்தை ”நிறுவினார். லண்டனிலிருந்து கொண்டு வரப்பட்ட தாளில்,துண்டுப் பிரசுரங்களை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு வினியோகம் செய்தார். இதனால் கிறிஸ்தவ சமய அறிவும், சாதாரண மக்களின் எழுத்தறிவும் வளரலாயிற்று.

“தரும சங்கம்” என்ற பெயரால் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பாடசாலைகள், வீடுகள்,கோவில்கள் கட்டுவதற்கு நிலம் வாங்கிக் கொடுத்தார்.

“விதவைகளின் ஆதரிப்புச் சங்கம்” நிறுவி, அதன் மூலம் உபதேசியாரின் விதவைகளுக்கு ஜீவனாம்சம் கொடுத்துவர ஏற்பாடு செய்தார்.

கிறிஸ்தவர்களாய் மதம் மாறிய சில இந்து குடும்பத்தினர் அவர்களுடைய பழக்கத்தின் காரணமாக தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் குரங்கணி கொடை விழாவில் கலந்து கொள்வதை தடுப்பதற்காக பாளையங்கோட்டையில் , 1834 ஆம் ஆண்டு சூலை 9 அன்று மாம்பழச் சங்கத்தை ஆரம்பித்தார். இதன் மூலம் திருமண்டலத்தில் அனைத்து சபைகளையும் ஒருங்கிணைக்கின்ற தோத்திரப் பண்டிகையாக வருடந்தோறும் பாளையங் கோட்டை, நூற்றாண்டு மண்டபத்தில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆலய வளர்ச்சிக்காகச் சபை மக்கள் “ஒருநாள் வருமானக் காணிக்கைப் படைத்தல்”,“ஆலய பரிபாலன நிதித் திட்டம்” (Local Church Fund), “கைப்பிடி அரிசி காணிக்கை” போன்ற திட்டங்களை ரேனியஸ் ஐயர் அறிமுகப்படுத்தினார்.இத்திட்டங்கள் இன்றும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.


தமிழ்ப் பணி :-
இவர் சென்னையில் முகவை இராமானுஜக் கவிராயரிடம் தமிழில் நன்னூல் போன்ற இலக்கண நூல்களை முறையாகக் கற்றுத் தெளிந்தார். பின்பு திருப்பாற்கடல்நாதன் கவிராயர் என்னும் தமிழ் அறிஞரிடம் 14 வருடங்கள் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இயல்பாகவே இனிமையாகப் பேசக் கூடிய இவர் தமிழையும் சிறப்பாகப் பேசக்கூடியவரானார்.இவருடைய சொற்பொழிவுகளை இந்துக்களும் இரசித்துக் கேட்டார்கள்


தமிழ் நூல்கள் :-
இவர் பல தமிழ் நூல்களை எழுதியிருக்கிறார்.

உரைநடை நூல்கள்-
1. பூமி சாஸ்திர நூல்
2. பலவகைத் திருட்டாட்டம்
3. தமிழ் இலக்கணம்
4. வேத உதாரணத் திரட்டு
5. உருவக வணக்கம்
6. மனுக்குல வரலாற்றுச் சுருக்கம்
7. சமய சாரம்
8. புராட்டாஸ்ட்ண்ட் - கத்தோலிக்கன் உரையாடல்
9. சுவிசேஷ சமரசம்
10. கிறிஸ்து மார்க்க நிச்சயத்துவம்
11. தெய்வீக சாராம்சம்

பாட நூல்கள்-
1. பூகோளம்
2. சரித்திரம்
3. இயற்கை
4. வான சாஸ்திரம்
5. மனுக்குல வரலாறு
6. சூரிய மண்டலம்
7. பிரெஞ்சு இலக்கணம்
8. கால நூல்
9. தர்க்கம்

‘வெகுசன கிறிஸ்து இயக்கம்’, ‘அனைத்து மக்கள் கல்வி’, ‘சமுதாய நீதி குறித்த புதிய நோக்கு’, எளிமையான வசனத் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, அச்சுப் பிரசுரத் தொடர்பு சாதனம் இவையாவும் இவருடைய தெளிந்த கோட்பாடுகளினாலும், அர்ப்பண உழைப்பாலும் தமிழ் நாட்டில் புதிய பரிமாணங்கள் பெற்று வளரலாயின.தமிழ் மொழிக்குச் சிறப்பாய்த் தொண்டாற்றிய வீரமாமுனிவர், போப் ஐயர், கால்டுவெல் ஐயர் போன்றவர்களுக்கு இணையாக ரேனியஸ் ஐயரும் கருதப்படுகிறார்.


வேதாகம மொழிபெயர்ப்பு :-
பப்ரிஷியஸ் ஐயருடைய தமிழ் மொழிபெயர்ப்பு வேதாகமம் அச்சடிக்கப்பட்டாலும், போதிய அளவில் பிரதிகள் சபை மக்களுக்கு கிடைக்கவில்லை. அதிகமான பிரதிகள் தேவையென உணர்ந்த வேதாகம சங்கம் பப்ரிஷியஸ் ஐயருடைய மொழிபெயர்ப்பையே திருத்திப் பிரசுரிக்க எண்ணங் கொண்டு அந்தப் பொறுப்பை ரேனியஸ் ஐயரிடம் கொடுத்தது. சென்னையில் தொடங்கிய வேதாகம மொழிபெயர்ப்பு வேலை திருநெல்வேலியிலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதற்கென ஒரு செயற்குழு நியமனமாகியிருந்த போதிலும், குழுவின் பிரதம மொழிபெயர்ப்பாளரான ரேனியஸ் ஐயரே முழு வேலையையும் செய்து வந்தார். அவர் புதிய ஏற்பாட்டை முதலில் மொழிபெயர்த்து முடித்தபின், பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் தொடங்கி தானியேல் வரையும் முடித்தார். மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களை மொழிபெயர்க்க முடியாமற் போனது ஒரு மாபெரும் இழப்பாகும். கூட்டெழுத்து முறையை மாற்றி வார்த்தைகளுக்கு நடுவில் இடம் விட்டு எழுதும் பழக்கத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே. ரேனியஸ் மொழிநடை யாவராலும் போற்றப்பட்டாலும், மொழிபெயர்ப்பில் இவர் பப்ரிஷியஸ் ஐயரைப் போல் மூலத்தை நுணுக்கமாய்த் தழுவாதது ஒரு பிழையாகக் கருதப்பட்டது.


பணி நீக்கம்:-
இங்கிலாந்து திருச்சபையில், தான் குறைபாடுகளாகக் கருதியவற்றை ரேனியஸ் ஒரு நூலின் மதிப்புரைக்காக எழுதியதை அந்நூல் ஆசிரியர் பிரசுரிக்கவில்லை. ஆகையால் அதை ரேனியஸ் தாமாகவே பிரசுரித்து விட்டார். அதனால் ‘சர்ச் மிஷன் சங்கம்’ (Church Mission Society) ரேனியஸின் பணி நீக்கும் உத்தரவை, 1835 ல் டக்கர் ஐயருக்கு அனுப்பி, ரேனியஸ் ஐயருடன் உறவை முறித்துக் கொண்டது.


சின்னக் கோயில்:-
ரேனியசும் அவரைச் சார்ந்தவர்களும் ஆற்காடு சென்று அங்கே ஒரு புதிய அமைப்பை நிறுவி ஊழியம் செய்து வந்தனர். திருநெல்வேலியிலிருந்த உபதேசியரும், மக்களும் அவரை வேண்டிக் கொண்டதன்படி, ரேனியஸ் அவருடைய ஆதரவாளர்களுடன் மீண்டும் திருநெல்வேலி திரும்பினார். திருநெல்வேலி சிந்துபூந்துறையில் “யாத்ரிகர் சங்கம்” என்ற சுவிசேஷ சங்கத்தை நிறுவி, சுவிசேஷத்தைக் கிராமங்களில் பரப்பினர். இதனால் பாளையங்கோட்டையில் இருந்த ரேனியஸ் ஐயரின் ஆதரவாளர்கள் சி எம் எஸ் கோவிலுக்குப் போவதை நிறுத்தி விட்டனர். இதனால் அவர்களின் வழிபாட்டிற்காக அடைக்கலாபுரத்தில் ஒரு ஜெபக்கூடம் கட்டப்பட்டது. அந்த ஜெபக் கூடம் தூய. யோவான் ஆலயம் என்று பெயர் பெற்றது. இன்று அது “சின்னக் கோயில்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.கடைசியாக இவர் ஆங்கிலேய அரசுக்கு “பைபிள் சங்கத்தை” ஆதரிக்க வேண்டும் என்று கேட்டு ஒரு கடிதம் எழுதினார்.

{“ 1820 முதல் 1835 வரை ரேனியஸின் வாழ்க்கை வரலாறே திருநெல்வேலி திருச்சபையின் வரலாறாகும்” என மறைதிரு. டி. ஏ. கிறிஸ்துதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

“உயர்ந்த கருத்துக்களைத் தெளிந்த நடையில் உணர்த்தும் திறன் ரேனியசிடம் அமைந்திருந்தது. அவர் தம் நூல்களில் அழகுண்டு, இனிமையுண்டு, நிரந்துரைக்கும் நீர்மையுண்டு; வகுத்தும் தொகுத்தும் உரைக்கும் வனப்பும் உண்டு“ என்று ரேனியஸ் ஐயரின் தமிழைப் பற்றி சேதுப்பிள்ளை கூறியிருக்கிறார்.

“பவுல் அப்போஸ்தலனுக்குப் பிறகு தோன்றிய மிகப் பெரிய மிஷனரி ரேனியஸ் ஐயர்” என்று யூத மிஷனரி டாக்டர். உல்ப் (Dr. Wolf) என்பவர் தெரிவித்துள்ளார்.}


மறைவு :-

1838ஆம் ஆண்டு, ஜூன் 5 அன்று மரணமடைந்தார். அவருடைய உடல் அடைக்கலாபுரம், தூய. யோவான் ஆலயக் கல்லறைத் தோட்டத்திற்கு வெளியே ஊரின் நடுவில் அடக்கம் செய்யப்பட்டது.

- Immanuel Mathuram
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum