ஞாயிறு பள்ளியின் துவக்கம் - 1780 ம் வருடம்
Wed Mar 12, 2014 4:43 pm
ராபர்ட் ரைக்ஸ் என்ற பெயரை நாம் கேட்டிருக்கமாட்டோம். இங்கிலாந்தில் உள்ள குளோஸெஸ்டர் என்ற இடத்தில் ராபர்ட் ரைக்ஸ் என்ற பத்திரிக்கை பதிப்பாளருக்கும், மேரிடிரு என்பவருக்கும் மூத்தக் குழந்தையாக ராபர்ட் ரைக்ஸ் ஜூனியர் செப்டம்பர் 14, 1736-ம் வருடம் பிறந்தார்.
தன்னுடைய 21வது வயதில் ராபர்ட் ரைக்ஸ் ஜூனியரின் தந்தை காலமானார். அதைத்தொடர்ந்து தந்தை நடத்திவந்த குளோஸெஸ்டர் ஜர்னல் என்ற பத்திரிக்கையையும், அச்சகத்தையும் ரைக்ஸ் ஜூனியர் பொறுப்பாக ஏற்று நடத்த துவங்கினார்.
பத்து வருடங்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பர் 23, 1767 வருடம், ரைக்ஸ் ஆன் டிரிக்கே என்பவரை தன் துணைவியாக ஏற்றுக் கொண்டார்.
இன்று கிட்டத்தட்ட கிறிஸ்தவம் பரவியுள்ள எல்லா உலக நாடுகளிலும் நடத்தப்படும் ஞாயிறு பள்ளிகளை சுமார் 230 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தவர் ராபர்ட் ரைக்ஸ். ஞாயிறு பள்ளி இயக்கத்தின் தந்தை என்று இவரை கிறிஸ்தவ உலகம் அழைக்கின்றது.
பத்திரிக்கையாளராக இருந்தபோது லண்டன் மாநகரிலுள்ள சிறைச்சாலைகளை அவ்வப்போது சென்று பார்வையிடுவதும், அங்குள்ள கைதிகளை நலம் விசாரிப்பதும் அவர் வழக்கமாக இருந்தது.
ஆனால், ஒருமுறை லண்டன் நகரிலுள்ள சேரிப்பகுதியொன்றில் அவர் சென்றபோது அங்கு கண்டகாட்சி அவர் மனதை நொறுக்குவதாக இருந்தது. காற்றோட்டமில்லாத குடிசை வீடுகள், குறுகலான பாதைகள், வீடுகளுக்கு அருகிலேயே ஓடும் துர்நாற்றம் எடுக்கும் ஓடைகள், அதிலிருந்து தண்ணீரை எடுத்து மற்றவர்கள்மேல் தெளிக்கும் குரும்புகார பையன்கள் கட்டிப் பிடித்து சண்டைபோட்டு சகதியில் உருளும் பிள்ளைகள், பாவத்தில் விழுந்து மீண்டு வரமுடியாமல் தவிக்கும் மனிதர்கள், குடிகாரக் கணவனின் அக்கிரமங்களைப் பொறுக்க முடியாமல் எரிமலைபோல் குமுறிக்கொண்டிருக்கும் பெண்கள் என வாழ்க்கையில் எந்தவொரு நம்பிக்கையும் இல்லாது மனம்போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கும்அங்குள்ள மனிதர்களைப் பார்த்த ராபர்ட் ரைக்ஸின் மனம் செய்வதறியாது தவித்தது, பாவமும், ஒழுக்கக்கேடும், சாபமும், வன்முறையுமே வாழ்க்கையாக மாறிவிட்ட மனிதர்களை மாற்ற இது பிள்ளைகளிடம் தான் தன்வேலையைத் துவங்கவேண்டும் என்பதைமட்டும் அவர் உணர்ந்தார். வாரத்தில் ஆறு நாட்களும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சிறுவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் ஓய்வுநாள் என்பதைபறிந்த ரைக்ஸ் சிறுவர்களுக்கு ஞாயிறு பள்ளியொன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டார். அதன்படி ஜீலை மாதம், 1780ம் வருடம் மெரிடிக் என்ற பெண்மணியின் வீட்டில் முதன்முதலில்ஞாயிறுபள்ளி துவங்கியது. ஆரம்பத்தில் சிறுவர்கள் மட்டும் ஞாயிறு பள்ளிக்கு வந்தனர். நாளடைவில்சிறுமிகளும் வர ஆரம்பித்தார்கள். ஞாயிறுபள்ளி ஆரம்பித்த சில நாட்களிலேயே சிறுவர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் தென்பட்டன.
ஞாயிறுபள்ளி நடக்க வேண்டிய விதம் எப்படியிருக்க வேண்டும் என்பதை ராபர்ட் ரைக்ஸ் மிகத் தெளிவாக பின்வருமாறு எழுதினார். "காலை பத்து மணிக்கு பிள்ளைகள் வரவேண்டும். அவர்கள் மதியம் 12 வரை பள்ளியில் இருந்து வந்து பள்ளி கூறிய சம்பந்தப்பட்ட பாடங்களை படிக்கலாம் 12 மணிக்கு தங்கள் வீடுகளுக்குப் போய் உணவருந்திவிட்டு 1 மணிக்கெல்லாம் மீண்டும் அவர்கள் ஞாயிறுபள்ளிக்குவரவேண்டும். பள்ளி பாடங்கள் படித்துவிட்டு அவர்கள் சபையினுடைய ஆராதனையிலும் பங்கு பெறவேண்டும்.
அது முடிந்த பிறகு தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட வேதபாட போதனைகளை அவர்கள் மாலை ஐந்து வரை படிக்க வேண்டும். பள்ளி முடியும்போது, ஆரவாரமில்லாமல், சேட்டை செய்யாமல் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லவேண்டும்", இந்த ஏற்பாட்டின் மூலம் பிள்ளைகளுக்கு ஒழுக்கம் தானாக வர ஆரம்பித்தது.
ஞாயிறுபள்ளியை ஆரம்பித்த பிறகு மூன்று வருடங்கள் அதன் வளர்ச்சியை கவனித்து வந்த ரைக்ஸ்நவம்பர் 3, 1783-ம் வருடம் தன்னுடைய பத்திரிக்கையில் அந்த இயக்கத்தைக் குறித்தும்ஞாயிறுபள்ளிமூலம் பிள்ளைகளுக்கு உண்டான ஒழுக்கம் குறித்தும் பத்திரிக்கையில் எழுதினார். அதற்குப்பிறகு மற்ற பத்திரிக்கைகளும் ஞாயிறு பள்ளியைக்குறித்து தங்கள் பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுத, லண்டன் மாநகரெங்கும் பல ஞாயிறுபள்ளிகள் உருவாக்கப்பட்டன. 1831 வருடம் எடுத்த அன்றைய ஒரு ஆய்வின்படி பிரிட்டன் நாட்டின் மொத்த ஜனத்தொகையில் 25 சதவீதம் பேர், அதாவது சுமார் 1,25,000 குழந்தைகள், ஞாயிறுபள்ளிகளில் கற்பிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டது.
ஆனால் இந்தநிலை உருவாவதற்குமுன்னே ரைக்ஸ் பல எதிர்ப்புகளை சந்தித்தார். ஞாயிறுபள்ளி ஓய்வுநாள் ஆசரிப்பு, ஆராதனைக்கு எதிரானது என்றும், கிறிஸ்தவர்களை ஞாயிறு பள்ளிகளில்ஆசிரியர்களாக அமர்த்தக்கூடாது என்றும் அப்படி தொடர்ந்தால் அது சபை போதகர்களால் வீடுகளில் நடத்தப்படும் வேதபாட வகுப்பை, அது செயலிழக்கச் செய்துவிடும் என்றும், அது அரசாங்கம் சம்பந்தமான அரசியல் பிரச்சாரத்திற்கு அது அடிபணிந்துவிடும் என்றும் பல பிழையான கருத்துக்கள் ஞாயிறுபள்ளிக்கு எதிராக உருவாயின. அதேசமயம் ஞாயிறு பள்ளிக்கு ஆதரவாகப் பேசியவர்கள் மிக வலுவான ஒரு இயக்கம் ஞாயிறுபள்ளிதான் என்று வாதாடினார்கள்.
எது எப்படியோ, ஒரு காலகட்டத்தில் இங்கிலாந்து தேசத்தில் மட்டும் 4,000 ஞாயிறுபள்ளிகள் உருவானதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. ஞாயிறுபள்ளியில் பிள்ளைகளுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து முடிவு செய்து, ராபர்ட் ரைக்ஸீக்கு உறுதுணையாக நிற்க தேவன்ரெவ.தாமஸ் ஸ்டாக் என்ற பாஸ்டரும் பள்ளிகூட ஆசிரியருமான ஒருவரை எழுப்பினார்.
கிருஸ்தவ நற்செய்தி அறிவிப்பதன் மூலம் சமுதாயத்தில் அன்று இருந்த சீர்கேடுகளைக் களைவதேஞாயிறு பள்ளியின் நோக்கம் என்று ரைக்ஸ் தீர்மானித்து அதற்காக அயராது உழைத்தார்.கல்வியறிவில்லாதிருந்த இலட்சக்கணக்கான இங்கிலாந்து சிறார்களுக்கு ராபர்ட் ரைக்ஸ் ஆரம்பித்தஞாயிறுபள்ளி இயக்கம் DAY CARE CENTRE மாதிரி அதேசமயம் வேத வசனமும் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுத்தது.
19ம் நூற்றாண்டில் சமுதாயத்தைமாற்றும் ஒரு மாபெரும் சக்தியாக ஞாயிறு பள்ளிகள் மாறின என்று சொன்னால் அது மிகையாகாது. 1840ம் வருடத்திற்குள் இங்கிலாந்திலுள்ள அரசாங்கப் பள்ளிக்கூடங்கள் வெகுவாக வளர்ந்து விட்டதினால் ஞாயிறு பள்ளிகளில் எழுதவும், படிக்கவும் சொல்லிக் கொடுப்பது நிறுத்தப்பட்டது. ஆனால் வேத வசனம் கற்பிக்கப்பட்டது ஞாயிறு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் எல்லாப் பிள்ளைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி என்ற நியதியை ஞாயிறு பள்ளிகள் கொண்டு வரக் காரணமாய் இருந்தன.
நன்றி: THE CHRISTIAN MESSENGER (ஜாமக்காரன்)
Permissions in this forum:
You cannot reply to topics in this forum