நளதம் - ஒரு வகை செடியின் வேர்
Sat Sep 14, 2013 7:39 am
விவிலிய நூலில் வரும் நளதம் என்னும் தைலம் மணம் மிகுந்தது. மாற்கு என்னும் நற்செய்தி நூலில் அது ‘உத்தம தைலம்’ என்று குறிப்பிடப்படுகிறது.(14:3)
வேதாகமத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் வரும் நளதம் என்னும் தைலத்தை நமது ‘உத்தமம்’ என்னும் உயர் குணத்திற்கு ஒப்பிடலாம்.
மன்னர் பந்தியிலிருக்கும் வேளை முழுவதும் நளதைலத்தின் மணம் கமழ்ந்துகொண்டே இருக்கும் என்று உன்னதப்பாட்டு விளம்புகிறது.(1:12)
ஒரு கிறிஸ்தவன் இருக்கும் இடத்தில் அவனது உத்தம குணம் பரிமளிக்க வேண்டும். அவனது முகத்தோற்றம் உயர் பண்புகளால் ஜொலிக்கவேண்டும்.
உன்னதப்பாட்டில் வரும் மணவாளனின் தோட்டம் நளதம் போன்ற நறுமணச் செடிகள் நிறைந்த சிங்காரவனம் போன்றிருக்கிறது என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தம மார்கத்தார் இயேசுவின் மணம் பரப்பும் சிங்காரத்தோட்டம் போன்றிருக்கிறார்கள்.(4:12)
மாற்கு நற்செய்தி நூலில் ஒரு பெண் நளதம் இருந்த தைலப்புட்டியை உடைத்து இயேசுவின் சிரசின்மேல் ஊற்றினாள் என்று படிக்கிறோம். (14:3)
பெத்தானியா ஊரில் தொழுநோயாளியாயிருந்த சீமோன் வீட்டில் விருந்து நடந்தபோது இது நிகழ்கிறது. வீடு முழுவதும் மணம் கமழ்கிறது. குஷ்டரோகியின் வீடு என்று முகம் சுளித்தோரின் முகங்களும் கூட மணத்தில் மலர்கின்றன.
ஆனால் அங்கிருந்த சிலர், ‘இது வீண் செலவு’ என்றும். ‘இதை அதிக விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுக்கலாமே’ என்றும் முணு முணுத்தார்கள்.
எந்நிகழ்விலும், எச்சூழலிலும் குறைகாணும் சிலர் உண்டு.
உத்தம சிந்தை உள்ளோர் பிறரின் நிறைவையே காண்பார். உத்தம குணத்தார் தங்களின் விலை உயர்ந்த தாலந்துகளை இறைவனுக்கே அருளுவார். அதனால் ஏற்ப்படும் தியாகத் தழும்புகளை எண்ணமாட்டார்கள். பணக் கணக்குப் பார்க்கமாட்டார்கள்.
இந்தியாவில் காணப்படும் ஒரு வகை செடியின் உயர்ந்த வேர்களிலிருந்து நளதைலம் எடுக்கப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த பணம் படைத்த சீமான்கள் நளதத்தை அதிக விலைகொடுத்து வாங்கி உபயோகித்து வந்தனர்.
ஆதார வசனங்கள்: உன்1:12,4:12,14; மாற் 14:3.
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum