கீர்த்தனைக் கவிஞர் ஜான் பால்மர்
Sat Sep 07, 2013 2:32 pm
கன்னியாகுமரி மாவட்டக் கீர்த்தனைக் கவிஞர்களுள் முதன்மையானவர் ஜான் பால்மர். இவர் நாகர்கோவிலிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடி என்னும் ஊரில் 1812 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். இவ்வூரில் தான் தென் திருவிதாங்கூரின் முதல் சீர்திருத்த ஆலயம் 1809 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இச்சபை குமரி மாவட்டம் மற்றும் தென்கேரளத் திருச்சபைகளுக்குத் தாய்ச்சபையாக விளங்குகிறது.
கிறிஸ்தவரான வரலாறு
ஜான் பால்மரின் தந்தையார் ஞானப்பிரகாசம், தென்திருவிதாங்கூரின் முதல் கிறிஸ்தவரான மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரின் நெருங்கிய உறவினர். ஆனால் வேதமாணிக்கம் தேசிகரைப் போல் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர். வேதமாணிக்கம் தேசிகர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கிறிஸ்தவர் எனும் பெருமைக்குரியவர். இவருடைய அழைப்பின் பேரிலேயே தரங்கம்பாடியிலிருந்த ஜெர்மன் நாட்டு மிஷனெரி அருள்திரு. ரிங்கல்தௌபே மயிலாடிக்கு வந்து திருப்பணியாற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. வேதமாணிக்கம் தேசிகரின் மரபில் வந்த பலரும் மிக உயர்வான நிலையை அடைந்ததுடன் இறைப்பணியுடன் கிறிஸ்தவ இலக்கியப் பணிகளும் செய்துள்ளனர். இவர்களுள் ஜான் பால்மர், தேவவரம் முன்ஷியார், அருள்திரு. சி. மாசிலாமணி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வேதமாணிக்கம் தேசிகர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியதால் அவரை வெறுத் ஞானப்பிரகாசம் ஆத்திரமடைந்து வேதமாணிக்கம் தேசிகரைச் சாபமிட்டு அவருக்கு எட்டு நாட்களுக்குள் நல்லதொரு பாடம் கற்பிப்பதாகக் கூறினார்.
எட்டு நாட்களுக்குப் பின்பும் தனது சாபம் மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரை நெருங்காததால் ஆத்திரம் அடைந்த ஞானப்பிரகாசம் முப்பது நாட்களுக்குள்ளாக வேதமாணிக்கம் இவ்வுலகில் உயிருடன் இருக்கமாட்டார் என மீண்டும் சாபமிட்டார். முப்பது நாட்கள் கழிந்த பின்னரும் எதுவும் நடை பெறவில்லை. வேதமாணிக்கம் தேசிகரின் பின்னிலைமையானது முன்னிலைமையைக் காட்டிலும் ஆன்மீக உற்சாகத்துடன் சிறப்பாகவே அமைந்தது. எனவே, தம் தோல்வியை ஞானப்பிரகாசம் ஒப்புக்கொண்டார். மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரின் தெய்வமே உண்மையான தெய்வம் என்பதை உணர்ந்து இயேசு கிறிஸ்துவைத் தம் சொந்த மீட்பராக ஏற்றுக் கொண்டார். ஞானப்பிரகாசத்திற்குப் பால்மர் எனவும், அவரது மகனுக்கு ஜான் பால்மர் எனவும் அருள்திரு. ரிங்கல்தௌபேயால் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டது. ஜான் பால்மரின் தந்தையார் மிஷன் வயல்களுக்கு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். இன்றும் இவரது குடும்பத்தினர் அனைவரும் தங்கள் பெயருடன் பால்மர் என்னும் பெயரை இணைத்துள்ளனர்.
கல்வி
தமிழிலக்கியத்தில் தேர்ச்சி பெறத் தமிழ்ப் பண்டிதர் திருவம்பலத் திண்ணமுத்தம் பிள்ளையிடம் ஆரம்பக் கல்வியும் தொடர்ந்து நாகர்கோவில் இறையியல் பள்ளியில் திருமறைக் கல்வியும் பயின்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், வடமொழி மற்றும் கிரேக்க மொழி ஆகிய பாடங்கள் அங்கு கற்றுக் கொடுக்கப்பட்டன. ஜான் பால்மர் இறையியலில் அதிக நாட்டம் கொண்டு விளங்கியதால் அவர் தந்தை உயர் கல்விக்காகச் சென்னைக்கும் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்த வேதசாஸ்திரக் கல்லூரிக்கும் அனுப்பி வைத்தார். உயர் கல்வியை முடித்து மயிலாடிக்குத் திரும்பிய ஜான் பால்மரை மிஷனெரி அருள்திரு. மால்ட் தமக்கு எழுத்தராக நியமித்தார். தொடர்ந்து நாகர் கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட அச்சுக்கூடத்தின் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
ஆரம்பகாலப் பணி
ஜான் பால்மர் 1830 ஆம் ஆண்டு ஜூலை ஐந்தாம் நாள் பேரின்பம் அம்மாளை வாழ்க்கைத் துணைவியாக்கினார். இத்தம்பதியர்க்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தனர்.
நாகர்கோவிலில் மிஷனெரியாகப் பணி செய்து வந்த அருள்திரு. மால்ட்டுக்கு ஊழியத்தில் துணை செய்யும் பொருட்டு அருள்திரு. ஆடிஸ் அனுப்பப்பட்டபோது அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். பின்னர் அருள்திரு. ஆடிஸ் கோயம்புத்தூர் பகுதியில் நற்செய்தி ஊழியத்தை ஆரம்பிப்பதற்காக அனுப்பப்பட்டபோது தம் குடும்பத்தினருடன் ஜான் பால்மரும் சென்றார்.
கோயம்புத்தூரின் காலநிலை திருமதி. பேரின்பம் அம்மாளுக்கு ஒத்துக் கொள்ளாததால் நோய்வாய்ப்பட்டார். எனவே ஓராண்டு நற்செய்தி ஊழியத்திற்குப் பின் குடும்பத்துடன் நாகர்கோவிலுக்குத் திரும்பினார்.
அருள்திரு. மால்ட், ஜான் பால்மர் குடும்பத்தை அன்புடன் ஏற்று, சுதேசி துணை உதவியாளராகப் பணியில் சேர்த்தார். பிற பணிகளுடன் அச்சுக்கூடத்தில் மொழிபெயர்ப்பு,மெய்ப்புகளைத் திருத்தும்பணி, கிறிஸ்தவ நற்செய்திகளைத் துண்டுத்தாள்களில் அச்சிட்டு விநியோகம் செய்யும் பணி ஆகியவற்றையும் அருள்திரு. மால்ட்டுடன் மேற்கொண்டார்.
1845 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் நாள் இலண்டன் மிஷன் சங்கத்தின் 50ஆவது ஆண்டு விழா மயிலாடியில் நடைபெற்றது. அன்றைய தென் திருவிதாங் கூரிலுள்ள அனைத்து மிஷனெரிமார்களும், ஊழியர்களும், கிறிஸ்தவர் பலரும் கூடி ஆராதனை செய்தனர். ஆராதனையில் இலண்டன் மிஷன் சங்கத்தைப் பற்றியும் அருள்திரு. ரிங்கல்தௌபே,வேதமாணிக்கம் தேசிகர் ஆகியோரைப் பற்றியும் அவர்களின் சேவைகளைப் பற்றியும் ஜான் பால்மர் உரை நிகழ்த்தினார். மட்டுமின்றி,
"ஆ இது சந்தோஷம்,சந்தோஷம்"
என்ற பாடலை இயற்றி அன்று இராகத்துடன் பாடினார்.
அச்சிறப்புத் திருநாளில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஊழியம் செய்வதற்காகக் "கெம்பீர சத்தம்"என்னும் குழு அமைக்கப் பட்டது. அக்குழுவில் ஜான் பால்மரும் உறுப்பினராய் இருந்தார். அக்குழுவின் முயற்சியினால் நாகர்கோவில் சேகரத்தின் வடபாகத்திலுள்ள புளிக்குடி, காட்டுப்புதூர்,ஞாலம், அரசன்குழி, தாழக்குடி என்னும் கிராமங்களில் சபைகள் நிறுவப் பட்டன. ஜான் பால்மர் கவிபாடுவதுடன் புதிய சபைகளை நிறுவி ஊழியமும் செய்து வந்தார்.
நற்செய்தி ஊழியம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதிலும் குறிப்பாகத் தென்திருவிதாங்கூர் பகுதியில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. இதன் காரணமாக ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தனர். உயர்சாதிக்காரர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டிருந்தவர்கள், ஏழை மக்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்வதைப் பேரிழப்பாகக் கருதினர்.
இச்சூழலில், நாகர்கோவிலிலுள்ள கிருஷ்ணன் கோவில் என்னுமிடத்திற்கு நற்செய்தியைச் சொல்ல ஜான் பால்மர் சென்றார். உயர்சாதி எனத் தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்ட இந்துக்கள் அப்பகுதியில் அதிகமாக வாழ்ந்து வந்தனர். விக்கிரகங்கள் யாவும் கல், பித்தளை என்று ஜான் பால்மர் சொல்வதைக் கேட்ட அங்குள்ள பூசாரிக்குக் கோபம் ஏற்பட்டு இருவருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. எங்கள் தெய்வங்கள் உண்மையானவை என்பதை அறிந்து கொள்வாய் எனச் சூளுரைத்துச் சபித்தார். ஜான் பால்மர் பூசாரியின் சவாலை ஏற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.
பூசாரியின் கூற்றுப்படியே அன்றிரவு பேய் ஒன்று பயங்கரத் தோற்றத்துடன் ஜான் பால்மர் முன் தோன்றி "எங்கள் தெய்வங்களைப் பழித்தவன் நீ தானே" என்று அவரது கழுத்தில் தன் பத்து விரல்களையும் பதித்துக் கொல்ல முயன்றது. கவிஞர் உடனே பத்துக் கற்பனைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்ல, ஒரு கற்பனைக்கொரு விரலாக பேயின் விரல்கள் அகன்றதாம்.
கீர்த்தனைகள் பாடிய விதம்
அருள்திரு. மால்ட் ஊழியத்தினின்று ஓய்வுபெற்று இங்கிலாந்துக்குச் சென்ற பின்பு, ஜான் பால்மருக்கும் மிஷன் பொறுப்பில் இருந்தவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருவனந்தபுரத்திலிருந்த அருள்திரு. மீட்டிடம் அடைக்கலம் புகுந்தார்.
தம் வாழ்வில் நடந்துவிட்ட துயர நிகழ்ச்சியால் தேவவரம் முன்ஷியாரின் மூத்த மகளை மூன்றாவது மனைவியாய் மணந்த அருள்திரு. மீட் மிஷன் ஊழியத்திலிருந்து விலகினார். பின் ஆங்கில அரசின் பிரதிநிதி (ஸிமீsவீபீமீஸீt) உதவியுடன் மாவட்டப் பள்ளி ஆய்வாளராகவும், பின்னர் திருவனந்தபுரம் அரசு அச்சகத்தின் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். அச்சமயம் அருள்திரு. மீட், ஜான் பால்மரை அன்புடன் ஏற்று அச்சுக்கூடப் பணியில் அமர்த்தினார். தம் பணியிலும்,கீர்த்தனைகளை இயற்றுவதிலும், இராகங்களைக் கற்றுக் கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜான் பால்மர் பக்திப் பரவசம் ஊட்டும் பாடல்களால் இறைவனை மகிமைப்படுத்தி வந்தார். திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாப சுவாமி கோவிலில் அதிகாலை நடக்கும் வழிபாட்டின்போது நாதசுர இசை ஒலிக்கும். அக்காலத்தில் சாதிக் கட்டுப்பாடும் மதவைராக்கியமும் உச்சகட்டத்தில் இருந்தன. ஜான்பால்மர் அக்கால இந்துமத ஆலய ஒழுங்குமுறையின்படி இந்துக் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாத குலத்தைச் சார்ந்தவர். கீர்த்தனைகளை இயற்ற இராகம் மிகவும் இன்றியமையாதது. இராகங்களைக் கற்றுக் கொள்ள அதிகாலை வேளையில் தன் தலையைத் துணியால் மறைத்துக் கொண்டு கோயிலினுட் சென்று, பல புதிய இராகங்களைக் கற்று வந்து அதன் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய கீர்த்தனைகளை இயற்றுவது இவரது வழக்கம். தம் உயிரையும் பொருட்படுத்தாது இறைமகன் இயேசு கிறிஸ்துவின் புகழ்பாட புதிய இராகங்களைக் கற்றுவந்த ஜான்பால்மரின் துணிச்சல் பாராட்டுக்குரியது.
ஜான் பால்மரின் இத்துணிச்சலான செயலே பின்னாளில் திருவிதாங்கூரில் யாவர்க்கும் ஆலய பிரவேச உரிமைச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னோடியாக அமைந்தது எனலாம்.
கீர்த்தனைகளின் எண்ணிக்கை
ஜான் பால்மர் எழுதிய இருநூற்றுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் அச்சேறாமல் இருந்துவிட்டதால் அவை நமக்குக் கிடைக்கவில்லை. கிறிஸ்து குல ஆசிரமம், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், கன்னியாகுமரிப் பேராயம் ஆகியவை வெளியிட்டுள்ள கீர்த்தனைகளின் தொகுப்பு நூற்களிலும், மயிலாடியைச் சேர்ந்த சி.எம். ஆகூர் என்பவரால் எழுதப்பட்ட "திருவிதாங்கூர் சபைச் சரித்திரம்" என்னும் நூலிலிருந்தும் 54 கீர்த்தனைகள் இன்று கிடைக்கின்றன.
ஜான் பால்மர் ஓர் இசையை அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்றவாறு பாடல் புனையும் தன்மை உடையவர். இவர் இயற்றிய மூன்று பாடல்களுக்குத் தாளம் குறிப்பிடப்பட வில்லை. மொத்தம் 8 வகை தாளத்தைப் பயன்படுத்திய இவர், ஆதி தாளத்தை 27 பாடல்களுக்குப் பயன்படுத்தியுள்ளார். இராகங்களைப் பொறுத்தவரையில் 27 வகைகளைப் பின்பற்றி யுள்ளார். இன்று கிடைக்கும் 54 கீர்த்தனைகளும் பின்வருமாறு :
1. அடங்காதே நாவு தீதே அதை ஆட்கொள்ளவே பார்
2. அன்பின் விருந்தருந்த சகோதரர் அனைவரும் வாரும்
3. ஆர் இடத்தில் ஏகுவேன் நான் ஆதரி ஐயா
4. ஆரிடத்தினில் ஏகுவோம் எம் ஆண்டவனே
5. ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி
6. இங்கெமது நடுவில் எழுந்திடுவாய் இந்நாளில்
7. இந்நாளில் இயேசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்
8. இயேசுவே கிருபாசன பதியே
9. இறைவன் நீயே எளியனுக்கிரங்குவாயே
10. இன்னு மிரங்காயோ என்றன் கோனே
11. உந்தன் சுயமதியே நெறி என்று உகந்து சாயாதே
12. உள்ளக் கருத்துடன் இசைந்து கூடுவோம்
13. உன்னையே நிமிஷந்தோறும் ஓர்ந்தறி மனமே
14. எதற்காய் அஞ்சுகின்றனை பாவி
15. எழுந்தனன் முகில் மேலே விண்ணதில்
16. ஐயோ நான் ஒரு பாவ ஜென்மி ஆனேனே
17. ஒரு மருந்தரும் குருமருந்து உம்பரத்தில் கண்டேனே
18. ஓகோ! பாவத்தினை விட்டோடாயோ?
19. ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே
20. ஓய்வு நாளதை ஸ்தாபித்தருளிய
21. கருணாகர தேவா இரங்கி இந்தக் கங்குலில்
22. கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே
23. குணம் இங்கிதவடிவாய் உயர்கோவே யேசுதேவே
24. சந்துஷ்டி கொண்டாடினானே
25. சரணம் சரணம் சரணம் எனக்குன் தயை புரியும்
26. சீர் அடை தருணம் இதறி மனமே
27. சுத்திகரியாயோ துர்க்குணம் நீங்க என்னை
28. சுய அதிகாரா சுந்தரக்குமாரா
29. ஞான சுவிசேஷமே நன்மை தரும் நேசமே
30. தரி தாழ்மையே தெரிந்து
31. தருணம் இதில் அருள் செய் ஏசுபரனே
32. தாரணியதில் பவசாகரமதையான்
33. திருமுகத் தொளிவற்று பெருவினைகளில் உற்று
34. தீதிலா மா மகத்வ தேவா வந்தாளும்
35. தீயன் ஆயினேன் ஐயா எளியேன் உற்ற
36. தூய பரப்பொருளே
37. தேவாதி தேவன் இன்றுயிர்த்தார்
38. தேவா பரதேவா யேகோவா எனைக்காவா
39. தேவன் மரித்தே இவ்வுலகில் உயிர்த்தே
40. தேன் இனிமையதிலும் சத்திய வேதம் திவ்யமான
41. நரனாம் எளியேன் நற்கதி சேர
42. நல்வழி, மெய், ஜீவன் எனும் நாமதேயனே
43. நெஞ்சமே தள்ளாடி நொந்து நீ கலங்காதே
44. நொந்திடுமென் மனந்தேற உறுதியுடன்
45. பரனே உனை நம்பினேன் உரமுடன்
46. பாதகன் என் வினைதீர் ஐயா கிருபாகரா
47. பார் ஐயா எளியேன் செய்பவ வினை தீர்ஐயா
48. பாவியாம் எனை மேவிப்பார் ஐயா யேசுநாதா
49. பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே
50. பொருளொன்றுண்டிக மீது அதை மதிக்க
51. மங்களம் ஜெயமங்களம் மகத்துவர்க்கு
52. மத்திய பானத்தில் மிக நித்தியம் கருத்து வைக்கும்
53. வாராவினை வந்தாலும் சோராதே மனமே
54. வேதா தயை நிறை தாதா ஏசுநாதா அருள்தா
பிற படைப்புகள்
கீர்த்தனைகள் மட்டுமின்றி வேறுபல நூற்களையும் இவர் படைத்துள்ளார். அவை,
1. ஞானப்பதக் கீர்த்தனம்
2. கிறிஸ்தாயனம்
3. மேசியா விலாசம்
4. சத்திய வேத சரித்திரக் கீர்த்தனை
5. பேரானந்தக் கும்மி
6. நல்லறிவின் சார்க்கவி
என்பனவாகும்.
1. ஞானப்பதக் கீர்த்தனம்
இந்துக்களின் முத்துத்தாண்டவர் பதக் கீர்த்தனம், ஸ்ரீபராங்குச தாசர், ஸ்ரீவிஷ்ணுதர்சனசுகீதம் ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு ஞானப்பதக் கீர்த்தனம் என்னும் நூலை இயற்றினார். இந்நூல் தற்போது கிடைக்கவில்லை.
2. கிறிஸ்தாயனம்
தமிழ் நாட்டிலுள்ள கிறிஸ்தவக் கவிஞரால் எழுதி நூல்வடிவில் முதன் முதலாக வெளிவந்த காப்பியம் கிறிஸ்தாயனம் ஆகும். இராமபிரானின் வரலாற்றை விவரிக்கும் காப்பியத்திற்கு இராமாயணம் எனப் பெயர் சூட்டியது போன்று இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை விளக்குவதனால் இந்நூலிற்கு அதன் ஆசிரியர் கிறிஸ்தாயனம் எனப் பெயரிட்டுள்ளார். கிறிஸ்தாயனம் 1865 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இக்காப்பியம் கிறிஸ்தவ கலாவிருத்திச் சங்கத்தாருக்காக நாகர்கோவில் இலண்டன் மிஷன் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டது. இந்நூலின் இரண்டாம் பதிப்பு ஆசியவியல் நிறுவனத்தின் மூலம் 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தாயனம் பாயிரம், தெய்வ வணக்கம், நூல் வரலாறு எனும் பகுதிகளுடன் தொடங்குகிறது. தெய்வ வணக்கம் என்னும் பகுதியில் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்னும் திரியேகக் கடவுளைத் தனித்தனிப் பாடல்களின் மூலம் வணங்குகிறார். . இந்நூல் வரலாற்றினை,
பண்டிறைவன் விதித்தளித்த பழவேற்பாடதில் குறியாய்
விண்டுரைத்த தேவசுதன் விடுத்தாந்த மதுவிரிவாய்க்
கொண்ட சுவிசேஷமதைக் கூர்ந்தாராய்ந் தெளிதுணரத்
தண்டமிழால் இங்கமைத்துத் தமியேனு ரைக்கலுற்றேன்
ஆண்டவனிங் கேமனுவாய் அவதரித்த வாறதுவும்
ஈண்டிரட்சிப் பின்கிரியை இயற்றிவந்த வாறெதுவும்
மாண்டுயிர்த்தே முந்ததற்பின் வானடைந்த வாறுமவன்
மீண்டுவந்து நடுத்தீர்க்கும் மேலுரையையும் கூறலுற்றேன்
என்னும் இரு பாடல்களால் அறிந்துகொள்ள முடிகின்றது.
இக்காப்பியம் பால காண்டம், கிரியா காண்டம், அவஸ்தா காண்டம், ஆரோகண காண்டம் என்னும் நான்கு காண்டங்களைக் கொண்டு 842 விருத்தப் பாக்களால் ஆனது. ஒவ்வொரு காண்டமும் பல்வேறு உட் தலைப்புகளைக் கொண்டது.
பால காண்டம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முதல் அவரது பன்னிரண்டு வயது வரையுள்ள செய்திகளைத் தருகிறது. இரண்டாவதான கிரியா காண்டத்தில் இயேசு கிறிஸ்து தன் சீடர்களைத் தெரிந்து கொண்டது முதல் பத்து ராத்தல் திரவியம் பெற்ற ஊழியக்காரரைக் குறித்து சொன்ன உவமை வரையிலான செய்திகள் இடம் பெற்றுள்ளன. அவஸ்தா காண்டத்தில் மரியாள் இயேசு நாதருக்கு பரிமளத் தைலம் பூசுவதிலிருந்து அவர் சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்ட செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன. இறுதியான ஆரோகண காண்டத்தில் இயேசு பெருமான் உயிர்த்தெழுந்தது முதல் அவரது இரண்டாம் வருகை வரையுள்ள செய்திகள் இடம் பெற்றுள்ளன.
கம்பராமாயணத்தைப் பின்பற்றி இயேசு கிறிஸ்துவின் இளமைப் பருவத்தை விவரிக்கும் முதல் காண்டத்திற்குப் பால காண்டம் எனவும், இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களை விளக்குவதால் அப்பகுதிக்கு கிரியா காண்டம் எனவும், இயேசு கிறிஸ்து பட்ட பாடுகளை விவரிப்பதால் அதற்கு அவஸ்தா காண்டம் (அவஸ்தை-துன்பம்) எனவும், இசைப்பாட்டின் ஏறுமுகக் குறிப்பினை நினைவில் நிறுத்தி அவர் வானுலகம் சென்ற செய்திகளை விவரிக்கும் பகுதிக்கு ஆரோகண காண்டம் எனவும் பெயர் சூட்டியுள்ளார்.
காப்பியத்திற்குரிய இலக்கணத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை விவிலியப் பின்னணியில் கவிநயம்படப் பாடியுள்ளார். கவிதையின் அழகுக்காகக் கவிஞர்கள் பயன்படுத்தும் உவமைகள், அணிகள், வருணனைகள் முதலியவற்றை ஆன்ம ஈடேற்றங் கருதி எழுதிய தம் நூலில் ஆசிரியர் எடுத்தாளவில்லை. இத்தகையச் சுவைகளைப் பின்பற்றினால் நற்செய்திக் கருத்துகளையும், அற்புதங்கள், பாடு, மரணம், உயிர்ப்பு முதலிய கருத்துகளையும், அக்கருத்துகளால் வெளிப்படும் தெய்வீக உணர்வுகளையும் சிதைத்துவிடும் என்னும் எண்ணமே அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கலாம். மத்தேயு, மாற்கு,லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தி நூல்களிலுள்ள செய்திகளைக் கோவைப்படுத்தி,திருமறை வாக்குகளின் அடிப்படையில் எளிமையான கவிதைகளாக்கி ஆசிரியர் நூலைப் படைத்துள்ளார். விவிலியத்திலுள்ள செய்தியை நேரடியாக, தெளிவாக, எளிமையாகச் சுருக்கமாகக் கூறியுள்ளார். பாயிரத்தில் இது குறித்த செய்தியை,
கற்றவரன்றியுங் கல்லாதவரு
முற்றெளிதாய்க்கண் டுணருதற்கிடனா
யதியரும்பதங்க ளகல மிக்காறும்
பொதுநிகழுரைகள் புலப்பட வமைத்து
என நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார். இவரது கவிதையாக்கத்தின் மூலம் இவருக்குக் கம்பராமாயணத்தில் இருந்த புலமையையும், பிற பக்தி இலக்கியங்களில் இருந்த பயிற்சியையும் அறிந்து கொள்ள முடிகிறது. பல்வேறு இலக்கியங்களைப் படித்து அவற்றை உள்வாங்கி அவற்றின் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைப் பாடியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை எளிமையாக எவ்வித வர்ணமும் இன்றி கவிதை நடையில் கொடுப்பதே இவரது இலக்கியக் கொள்கையாகும். ஆசிரியர் தன் கருத்தை எந்த இடத்திலும் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கிறிஸ்தாயனத்தில் ஆசிரியரின் தடையற்ற கவிதை ஓட்டத்தைக் காணமுடிகிறது. இயேசு கிறிஸ்துவின் மலைப் பிரசங்கத்தைச் சிறப்பாகக் கவிதையாக்கியுள்ளார்.
ஜான் பால்மர் செவ்வியல் நெறிப்பட்ட யாப்பு வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளார். காப்பியத்தில் எளிமையான கவிதை வடிவத்தைப் (சிந்து போன்ற வடிவம்) பயன்படுத்தவில்லை. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், எழுசீரடி ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலிநிலைத்துறை,விருத்தக் கலித்துறை, சந்தவிருத்தம், கலிசந்தவிருத்தம், வெளிவிருத்தம், வஞ்சி விருத்தம் முதலிய இலக்கண வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் இவரது இலக்கண அறிவினை அறிய முடிகின்றது.
ஜான் பால்மர் தமது காப்பியத்தின் அனைத்துப் பாடல்களிலும் இயல்பாக எதுகை,மோனையைப் பயன்படுத்தியிருப்பது அவருடைய கவித்திறனுக்குச் சான்றாக அமைகின்றது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum