காப்பீட்டு நிறுவனமே காப்பு!
Fri Aug 30, 2013 7:43 pm
We have seen how lax standards, excesses, or fraud can cause disproportinoate losses to insurance funds. – Alan Greenspan
காப்பீடு இன்றைக்கு ஒரு பெரிய துறை. ஆனால் அதன் ஆரம்பங்கள் சாதாரணமானவை. கப்பலில் வணிகம் செய்யும் வணிகர்கள், இயற்கை சீற்றங்களினால் பொருட்கள் பாதிக்கப்பட்டால் என்னவாகும் என்று யோசித்ததில் வந்தது தான் காப்பீட்டின் ஆரம்பம். இன்றைக்கு நீங்கள் நினைக்கும் எல்லா விஷயங்களுக்கும் காப்பீடு உண்டு.
சுருக்கமாய், காப்பீடு என்பது நீங்கள் எடுக்கும் ஒரு ரிஸ்க்’கின் பாதிப்புகளைக் குறைப்பது. எல்லா விதமான காப்பீடுகளுக்கும் இது தான் அடிப்படை. வாழ்க்கை சம்பந்தமான (Life), மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் சம்பந்தமான (non-life) என இரண்டு விதமாய் கழுகுப் பார்வையாய் காப்பீட்டினை பிரிக்கலாம்.
கருப்புப் பணம் இரண்டிலும் புழங்குகிறது. இரண்டின் வழியாகவும் உள்வந்து வெளியேறுகிறது. முதலில் லைஃப் காப்பீட்டினை எடுத்துக் கொள்ளலாம். இந்த தொடரின் ஆரம்பத்திலேயே எண்டோண்மெண்ட் பாலிசியில் என்ன கோல்மால் செய்யலாம் என்பதைப் பதிவு செய்திருப்போம்.
இப்போது சிங்கிள் ப்ரீமியம் பாலிசியில் நடக்கும் பணப் பரிமாற்றத்தினைப் பார்ப்போம். நாடு முழுவதும் இன்றைக்கு அரசு (எல் ஐ சி) மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்கள் கடைபரப்பி இருக்கின்றன. எந்தவொரு பாலிசி இந்தியாவில் எடுத்தாலும், அதற்கு 15 நாள் காலக்கெடு இருக்கிறது. 15 நாட்களுக்குள் உங்களுக்கு அந்த பாலிசியின் கூறுகள், காப்பீடு தொகை, இன்னபிற ரைய்டர்கள் பிடிக்காமல் போனால், நீங்கள் அந்த காப்பீட்டினைத் திருப்பி விடலாம். நீங்கள் கொடுத்த பணம் அமைப்புரீதியான காசினை மட்டும் கழித்துக் கொண்டு திரும்பக் கொடுக்கப் படும்.
ஒரு தொழிலதிபர் ரூ.10 இலட்சத்தினை வெளுப்பாக்க நினைத்தால், அவர் செய்ய வேண்டியது சுலபம். முதலில் 3-4 தனியார் காப்பீடு தரகர்களை அழைக்க வேண்டும். இப்போது பெரும்பாலான தரகர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீடு நிறுவனர்களுக்கு முகவர்களாக இருக்கிறார்கள். அந்த தொழிலதிபருக்கு ஒரு கோடி ரூபாய் காப்பீடு செய்யவேண்டும், அதை சிங்கிள் ப்ரீமியம் பாலிசியாக எடுக்க விருப்பம் என்று சொல்லலாம். எல்லாரும் உடனடியாக அவரவர் கால்குலேட்டர்களில் கணக்குப் போட்டு நீங்கள் ரூ.10 இலட்சத்துக்கு கூட குறைய செலுத்தினால், அடுத்த 25 வருடங்களுக்கு ஒரு கோடி ரூபாய் காப்பீடு கிடைக்குமென்கிற கணக்கு சொல்வார்கள். முகவர்களைப் பொறுத்தவரை ரூ.10 இலட்சம் ப்ரீமியம் என்பது ஜாக்பாட்.
இப்போது தொழிலதிபர் அந்தப் பத்தில் மூன்று இலட்ச ரூபாயை மட்டுமே வங்கிக் கணக்காக தரமுடியுமென்றும் மீதத்தினை பணமாகத் தருகிறேன் என்றும் சொல்லுவார். முகவர்கள் மென்று முழுங்குவார்கள். ஏனெனில் ரூ.50,000க்கு மேல் ப்ரீமியம் கட்டினால் அதில் PAN குறிப்பிடப் படவேண்டும் என்பது IRDA விதி. அதற்கு சுற்றல் வழி ரூ.49,999 பணமாக எடுத்து வெவ்வேறு நாட்களில் காப்பீடு நிறுவனத்துக்கு கட்டுவது. இந்த வெவ்வேறு நாட்களின் பணத்தினை சின்ன பாலிசிகளில் போடுவதாக கணக்கு காட்டுவது.
மொத்தமாய் மீதம் 7 இலட்சம் சேர்ந்தபின், சின்ன பாலிசி எடுக்காமல், பெரியதாய் ஒற்றை பாலிசி எடுக்க வைப்பதாக சொல்லி, காப்பீடு நிறுவனத்துக்கு முகவர்கள் தொழிலதிபரின் பணத்தினை மாற்றிவிடுவார்கள். பாலிசியும் வரும். பாலிசி கைக்கு வந்த நாளிலிருந்து 15 நாட்கள் வரை வாடிக்கையாளருக்கு உரிமையுண்டு. இந்த 15 நாளில் அவர் பாலிசி தேவையில்லை என்று திருப்பிவிடுவார். காப்பீடு நிறுவனமும் வாடிக்கையாளருக்கு செக் அனுப்பிவிடும். ரூ 7 இலட்சம் பணமாகக் கட்டியது, இப்போது காப்பீடு நிறுவனத்தாலேயே செக்’காக திருப்பப்பட்டு வங்கியில் வெளுப்பாக கணக்கு காட்டப்படும். தொழிலதிபர் ஸ்மார்ட்டாக இருந்தால், ஒரே நேரத்தில் பல தனியார் காப்பீடு நிறுவனங்களில் இடைவெளி விட்டு காசைப் போட்டு காசைத் திருப்பி வெளுப்பாக்கி விட்டு எஸ்ஸாவார்.
இதையே வேறு மாதிரியும் செய்யலாம். வங்கியில் இருக்கும் பணத்தினைக் கட்டி பாலிசியை எடுத்து விட்டு, அந்த பாலிசியின் மீது ஒரு கடன் எடுக்கலாம். அந்த கடன் பத்திரம், பாலிசியின் மீதிருக்கும். மேற்சொன்ன ரூ.10 இலட்சம் ப்ரீமியமே எடுத்தாலும், அதன்மீது 60-70% கடன் வாங்கலாம். ஏனெனில், காப்பீடு நிறுவனம் ஏற்கனவே தொழிலதிபரிடமிருந்து பணத்தினைப் பெற்று விட்டது. கடன் வாங்கினால், அது காப்பீடு நிறுவனத்திலிருந்து நேரடியாக அவரின் வங்கிக்கு செக்காகவோ, வங்கிப் பரிவர்த்தனையாகவோ வந்துவிடும். அதன் தவணைகளை கேஷ்ஷாக கட்டலாம். தனி முதலாளி நிறுவனமாகவோ, தனியார் நிறுவன இயக்குநராகவோ இருந்தால், அந்த கடனை liability யாக பாலன்ஸ் ஷீட்டில் காட்டி செலவினையும் குறைக்கலாம். இது கருப்பினை நேரடியாக ஒரே சமயத்தில் வெளுக்காமல், சட்டப்பூர்வமாக சம்பாதித்த பணத்தினை வைத்துக் கொண்டு இரண்டு மடங்கு பணத்தினை வெளுப்பாக்கும் வழி.
மேலே சொன்னது தனியார் தன்னுடைய கருப்புப் பணத்தினை மாற்றும் வழி. ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு எப்படி மாற்றுவது?
முதலில் கருப்புப்பணத்தினைப் பெற்றவர் ஒரு ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனத்தினைத் துவங்குவார். அந்த நிறுவனம் நைஜீரியா மாதிரியான ஏதாவது ஒரு ஆப்ரிக்க நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடும். கருப்புப் பணம் வைத்திருப்பவர் லண்டனிலோ, துபாயிலோ, சிங்கப்பூரிலோ இருக்கும் ஏதாவது ஒரு சின்ன காப்பீடு நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடுவார். கப்பலில் போகும்போது புயலோ, இயற்கைச் சீற்றங்களினாலோ, பைரைட்களாலோ, அல்லது கப்பல் நிறுவனத்தின் உதாசீனத்தாலோ ஏதாவது ஆகி, வாங்குபவருக்கு பொருள் சரியாகப் போய் சேரவில்லையென்றால், விற்றவருக்கு நஷ்டம். அந்த நஷ்டத்தினை ஈடுகட்ட காப்பீடு அவசியம். அந்த காப்பீட்டை தான் இந்த காப்பீடு நிறுவனத்தில் எடுப்பார்கள்.
பெரும்பாலான சின்ன காப்பீடு நிறுவனங்கள் இதற்கு ஒத்துக் கொள்ளும். இந்த நிறுவனங்கள் உடனடியாக தங்களுடைய ரிஸ்க்கினை குறைத்துக் கொள்ள, சுவிட்சர்லாந்து மாதிரியான ஊர்களில் இருக்கும் Re-insurance நிறுவனங்களில் எடுத்த காப்பீட்டின் மீது மறு காப்பீடு எடுத்துக் கொள்ளும். முக்கால்வாசி சின்ன காப்பீடு நிறுவனங்கள், இந்த மாதிரி பணத்தினை கடத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை. அவர்கள் காப்பீட்டினை விற்றவருக்குக் கொடுப்பார்கள். கூடவே, அவரிடமிருந்து காப்பீடு தொகைக்கு ஈடான, அல்லது மேலான பணத்திற்கு ஏதாவது ஒரு முதலீடு சமாச்சாரத்தினை விற்பார்கள். அந்த முதலீடு சமாச்சாரம் குப்பையாய் உலகப் பொருளாதாரம் அடுத்த மூன்று மாதங்களில் 6% ஏறும் என்பது மாதிரியான அபத்தங்கள் நிரம்பியிருக்கும். அதற்கு தேவையான முதலீட்டினை, பணமாகவே விற்பவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.
ஆக, ஏற்றுமதி செய்பவர் காப்பீடு எடுத்து விட்டார். முதலீடு சமாச்சாரத்தினை காப்பீடு நிறுவனத்தில் எடுத்துவிட்டார். கப்பல் சர்வநிச்சயமாக எங்கேனும் தரை தட்டும்; எஞ்சினில் தண்ணீர் போய் முழுகும்; பைரெட்கள் கடத்துவார்கள் என்றெல்லாம் காப்பீடு நிறுவனத்துக்கு செய்தியும், அதன் தரவுகளும் வரும். காப்பீட்டின் தொகை ஏற்றுமதி செய்பவரின் வங்கிக்கு வரும். இறக்குமதி செய்பவர் வேண்டுமென்றே ஒப்பந்தத்தில், இந்த வணிகம் நடைபெறாவிட்டால் பொருளின் மதிப்புக்கு ஈடான பணத்தினை தரவேண்டும் என்று போட்டிருப்பார்கள். ஏற்றுமதி செய்பவர் காப்பீடு நிறுவனத்திலிருந்து வந்த காசினை வங்கி வழியாகவே இறக்குமதி நிறுவனத்துக்கு தருவார்கள். காப்பிடு நிறுவனம், ஏற்றுமதி நிறுவனத்துக்கு முதலீடு சமாச்சாரம் நஷ்டமானதாக கணக்கு சொல்லும். ரீ இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அந்த பணம் வேறு விதமான டெபாசிட் தொகையாக போயிருக்கும்.
மொத்தத்தில் இதில் பங்குபெற்ற நான்கு நிறுவனங்களும் தங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் ‘நேர்மையான வழியில்’ வந்ததாக ஆடிட்டரிடம் சான்றிதழ் பெற்று சரக்கடிக்கப் போய்விடுவார்கள். மில்லியன் கணக்கில் வருடந்தோறும் இந்த வழியில் பணம் காப்பீடு டோபிகானாவில் வெளுப்பாக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது.
1990களுக்கு பின்னான காலக்கட்டங்களில் புதியதாய் surety bond என்றொரு சமாச்சாரம் காப்பீடு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது. ஸ்யூரிட்டி கடன் பத்திரமென்பது காப்பீடு நிறுவனம் மூன்றாம் நபராய் உள்நுழைந்து இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான ரிஸ்க்கையும், இறுக்கத்தையும் குறைக்க உதவுவது.
உதாரணத்துக்கு, உங்களிடத்தில் நிலம் இருக்கிறது. ஒரு கட்டுமானப் பொறியாளர் அந்த நிலத்தில் கட்டிடம் கட்டி, ப்ளாட் போட்டு விற்க நினைக்கிறார். ஆனால் அவரிடம் இருக்கும் பணம், கட்டிடம் கட்டி விற்க மட்டுமே இருக்கிறது. ஆக இருவருக்கும் இடையில் பணப் பரிவர்த்தனை என்பது கட்டிடம் கட்டி முடிந்து, விற்ற பின்பு தான் பணத்தினை பங்குப் போடமுடியும். இந்நிலையில் நில உரிமையாளரான உங்களுக்கு பாதி கட்டிடத்தில் பொறியாளர் வேறு வேலை பார்க்கப் போய்விட்டால் என்னாவது என்கிற கவலையிருக்கும். அவருக்கு, பாதி கட்டிடத்தில் பண பரிவர்த்தனைகள் நடக்காத பட்சத்தில், உரிமையாளரான நீங்கள் மனசு மாறிவிட்டால் என்கிற கவலையிருக்கலாம். ஆக உங்களுக்கு வர வேண்டிய பணத்திற்கு என்ன உத்தரவாதம் ?
இந்த உத்தரவாதத்தை தான் ஸ்யுரிட்டி கடன் பத்திரம் வழியாக காப்பீடு நிறுவனம் நில உரிமையாளருக்கு வழங்கும். இதை எடுக்க வேண்டிய பொறுப்பு கட்டுமானப் பொறியாளருடையது. இங்கே தான் மாடர்ன் வெளுப்பாக்கல் ஆரம்பிக்கிறது. காப்பீடு நிறுவனத்தோடு பேசி வைத்துக் கொண்டு ஒப்பந்தம் மீறப்பட்டதாக சொல்லி, காப்பீடு நிறுவனத்தினை பணத்தினைக் கொடுக்க சொல்லலாம். காப்பீடு நிறுவனத்துக்கு பொறியாளரோ, அல்லது உரிமையாளரோ பணத்தினை கேஷாக தரலாம். அதையும் காப்பீடு நிறுவனம் வேறு வகையில் வாங்கிக் கொண்டு பரிவர்த்தனை செய்யலாம்.
இதன் லேட்டஸ்ட் இந்திய உதாரணம் மெடிக்ளெய்ம். உதாரணத்திற்கு பணத்தினை நேரடியாகக் கட்டினால் ரூ.250,000 ஆகக் கூடிய ஒரு சிகிச்சை, மெடிக்ளெய்ம் வழியே போகும்போது ரூ.450,000 ஆக காப்பீடு நிறுவனத்துக்குப் போகும். இதில் சம்பாதிக்கப்படும் கூடுதல் ரூ.200,000 மருத்துவமனைக்கும், அந்த காப்பீட்டில் இருக்கும் நபர்களுக்கும் பங்கு பிரிக்கப்படும். இந்தியாவின் பெரும்பாலான மெடிக்ளெய்ம் தரும் நிறுவனங்கள் ரீ இன்சுரன்ஸ் நிறுவனங்களிடம் அதிக பணத்தினைக் கொடுத்து அதிக லெவரேஜ்ஜில் இருக்கும் நிறுவனங்கள். பணக்கார நோயாளிகள் முதலில் காசு கட்டி விட்டு, பின் தங்களின் மெடிக்ளெய்மை கொடுப்பதும் உண்டு. அது மருத்துவமனைக்கும், நோயாளிக்கும் இருக்கக் கூடிய நெருக்கத்தைப் பொறுத்து மாறக் கூடியது. காப்பீட்டு நிறுவனத்திலிருந்து வரும் பணத்தினை நோயாளி, கமிஷனை மருத்துவமனைக்கு வெட்டி விட்டு, எடுத்துக் கொள்வார். அவர் கணக்கில் அது காப்பீடு நிறுவனத்திலிருந்து வரும் பணம். எவ்விதமான கேள்வியும் இல்லை. உடலுக்கு உடலையும் பார்த்தாச்சு; பணம் வெளுப்பாச்சு.
காப்பீட்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளைகள் இன்னுமதிகம். ஆனால், அது சிக்கலான வலைப்பின்னல். இது தாண்டி, கப்பல் வாங்குவது, உயர்தர கார் வாங்குவது, உல்லாச படகுகளை குத்தகைக்கு எடுப்பது, காசினோக்களின் உள்ளிருக்கும் பணத்தினை பாதுகாப்பது என காப்பீடு புழங்கும் இடங்கள் அதிகம். இதில் எல்லாவற்றிலுமே பணத்தினைப் போட்டு எடுப்பதும், அல்லது காப்பீடு நிறுவனத்துக்கே குல்லா போடுவதும் சர்வசாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.
கல்லா நிரம்பும்………
O
நரேன்
நன்றி: தமிழ் பேப்பர்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum