இந்தியாவிலுள்ள யூதர்கள் பல்வேறு காலப்பகுதிகளில் இந்தியாவிற்குள் வந்தனர். சாலமோனுடைய காலத்திலிருந்தே இந்தியாவில் யூதர்கள் இருந்தார்களென்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் திட்டமாக கூறுகின்றனர். பிற்காலங்களில் வந்த யூதர்கள் இந்தியாவின் பல பாகங்களில் குடியேறினர். சிலர் வணிக நோக்கத்துடன் இந்திய வந்தார்கள். அதிகமானோர் அசீரிய சாம்ராச்சிய காலத்தில் சிறையிருப்பிலிருந்து தப்பியோடி பல தேசங்களை கடந்து இந்தியா வந்தடைந்தவர்கள். சிலர் மதக்கலவரங்களினால் இந்தியா வந்தவர்கள்.....
கோச்சின் யூதர்: 2500 ஆண்டுகளுக்கு முன்பு வியாபார நோக்கத்துடன் இந்தியா வந்தவர்கள் (கேரளா)
பெனே இஸ்ரவேல்: 2100 ஆண்டுகளுக்கு முன்பு மஹாராஷ்டிரா பிரதேசத்தில் குடியேறினர்.
பக்தாத் யூதர்கள்: ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவின் பல பாகங்களிலிருந்து வந்து குடியேறியவர்கள்.
பெனே மனாசே: மணிப்பூர், மிசோரம் பகுதிகளில் குடியேறிவர்கள்.
பெனே எப்ராயிம்: இவர்களை தெலுங்கு யூதர்கள் என்று அழைப்பர்.
(இந்த வரைபடம் அண்ணளவாகவே குறிப்பிட்டு காட்டப்பட்டிருக்கின்றது: உதாரணம் குஜராத்திலிருந்த யூதர்கள் பிற்காலங்களில் கல்கத்தா, பம்பாய் போன்ற நகரங்களில் குடிபெயர்ந்தார்கள்)
கோச்சின் யூதர்கள் (கேரள யூதர்கள்)
இவர்கள்தான் இந்தியாவுக்கு முதலில் வந்த யூதர்கள். இவர்கள் வியாபார நோக்கமாக இந்தியாவிற்கு வந்து, பிற்பாடு அங்கேயே குடியேறியவர்கள். 2500 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இந்தியா வந்து, அங்கே தங்களுக்கென்று ஒரு சங்கத்தினையும் அமைத்தனர். தற்பொழுது மிகவும் சிறியளவிலேயே இவர்கள் இப்போது இந்தியாவில் இருக்கின்றார்கள். 5000க்கும் அதிகமான யூதர்கள் இஸ்ரவேலுக்கு மீண்டும் சென்று விட்டார்கள். கோச்சின் என்பது கேரளாவிலுள்ள ஓர் பட்டணம். கேரளாவில் உள்ள சினாக்கோக் (யூதர்களுடைய ஜெப ஆலயம்) மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு சரித்திரப்பின்னணியுள்ள ஒரு நினைவுச்சின்னமாகவுள்ளது. இவர்கள் சாலமோனின் காலத்தில் வந்தவர்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர், இன்னும் சில ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி: இவர்கள் பாபிலோனிய படையெடுப்பின்போது வந்திருக்கின்றார்கள். சில யூதர்கள்: தாங்கள் கி.பி 70 நூற்றண்டளவில் எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டபொழுது வந்தார்கள் என்று சொல்கின்றார்கள்.
இவர்களைக்குறித்து தமிழ் மொழியில் எழுதப்பட்ட இரண்டு செப்பு-தகடுகள் உள்ளன. இவைகளின் காலம் 4- 10 நூற்றண்டு. இந்த தகடுகள் தற்பொழுது கோச்சின் பரதேசி யூதர்களின் சினாக்கோக்-கில் உள்ளது.
இங்குள்ள யூதர்கள் தங்களை 3 வகுப்புக்களாக பிரித்து வைத்துகள்ளனர்.
கறுப்பு யூதர்கள் (மலபார் யூதர்கள்)
வெள்ளை யூதர்கள் (பரதேசி யூதர்கள்)
மண்ணிற யூதர்கள் (மெஷீராரிம் யூதர்கள்)
மலபார் யூதர்கள்: கோச்சின் யூதர்களில் 85 சதவிகிதத்தினர் மலபார் யூதர்கள் ஆவர். இவர்கள் தான் முதன் முதலில் கோச்சின் வந்தவர்கள். இவர்களை கறுப்பு யூதர்கள் என்றும் அழைப்பர். கோச்சினில் தற்பொழுது மலபார் யூதர்கள் யாருமில்லை. 1972ம் ஆண்டளவில் கடைசி யூதர்கள் இஸ்ரவேலுக்கு குடிபெயர்ந்தார்கள் இவர்கள் எபிரேய மொழியும் மலையாளம் கலந்த மொழியும் கலந்து பேசுகின்றனர்.
பரதேசி யூதர்கள்: பரதேசி யூதர்கள் சிலசமயங்களில் வெள்ளை யூதர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் கி.பி 16ம் நூற்றாண்டளவில் ஸ்பெயின், போர்த்துக்கீசு, மற்றும் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளிலி;ருந்து குடியேறியவர்கள். கோச்சின் யூதர்களில் இவர்கள் 14 சதவிகிதம். பரதேசி யூதர்களும், மலபார் யூதர்களும் சேர்ந்து ஆராதனைகள் செய்ய மாட்டார்கள்.
மெஷீராரிம் யூதர்கள்: இவர்கள் பரதேசி யூதர்களினதும், மற்றும் மலபார் வியாபாரிகளினதும் கொத்தடிமைகள். பிற்பாடு யூத மதத்திற்கு மாற்றப்பட்டவர்கள். கோச்சின் யூதர்களில் இவர்கள் 1 சதவிகதத்தை விட குறைவில் தான் உள்ளனர். 20ம் நூற்றாண்டு வரைக்கும் யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் இவர்கள் செல்வது தடை செய்யப்பட்டு இருந்தது.
தற்பொழுது 20 வெள்ளை யூதர்கள் தான் (மிகவும் வயது சென்றவர்கள்) கோச்சினில் வாழ்கின்றனர். 5000க்கும் அதிகமானோர் இஸ்ரவேலில் குடியேறியுள்ளனர். அமெரிக்காவிலும், மற்றும் இங்கிலாந்திலும் சிறியளவில் இவர்கள் இருக்கின்றனர்.
1901ம் ஆண்டு தியோடர் ஹேர்சலுக்கு கோச்சின் யூதர்கள் கடிதம் எழுதி, சியோன் இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். 1923ம் ஆண்டில் சீயோன் இயக்கம் கோச்சினிலும் ஆரம்பிக்கப்பட்டது.
கேரளாவிலுள்ள யூதர்களின் சினாக்கோக் (ஜெப ஆலயங்கள்)
பரதேசி சினாக்கோக்-இல் சுவரில் பதிக்கப்பட்ட எபிரேய எழுத்துக்கள்
பெனே இஸ்ரவேலர்கள் (இஸ்ரவேல் புத்திரர்கள்)
சரித்திர ஆசரியர்களின் கருத்துப்படி: பெனி இஸ்ரவேலர்கள் ஏறக்குறைய கி.பி 2ம் நூற்றண்டளவில் கலிலேயாவிலிருந்து வெளியேறி இந்தியாவிற்கு வந்து குடியேறியவர்கள். அநேகமானோர் மும்பாயில் வாழ்ந்து வந்தார்கள். 18- 19ம் நூற்றாண்டுகளில் இவர்கள் மகாராஷடி;ரா பிததேசத்திலும், அதன் அண்மைகளிலும் வசித்து வந்தனர். 19ம் நூற்றண்டளவில் மும்பாய், பூனா, அகமதபாத், மற்றும் கராய்ச்சி ஆகிய பட்டணங்களில் குடியேறினர். கராய்ச்சி பிற்பாடு பாகிஸ்தானுடன் இணைந்து கொண்டதால் இவர்களை பாகிஸ்தான் இஸ்ரவேலர்கள் என்றும் அழைத்தனர். இவர்கள் மத்தியில் சபாத், விருத்தசேதனம், மற்றும் வேதாகமத்தின் கட்டளைகள் ஆகியன முக்கிய சிறப்பம்சங்கள்.
இவர்கள் எபிரேயு கலந்த மராத்தி மொழியினை பேசி வருகின்றனர். 1948க்கு பிற்பாடு அநேக பெனி இஸ்ரவேலர்கள் தற்பொழுது இஸ்ரவேலுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இவர்கள் தங்களை ஆரோனின்(மோசேயின் சகோதரன்) வம்சா வழியினர் என்று அழைக்கின்றனர். இவர்களுடைய DNA-யும் அதை உறுதிப்படுத்துகின்றது.
இவர்களின் மொத்த தொகை 65.000க்கும் மேலே. இதில் ஏறக்குறைய 60.000 ஆயிரம் பெனி யூதர்கள் தற்பொழுது இஸ்ரவேலில் வசிக்கின்றனர். மும்பாயில் 4000, கல்கத்தா200, டெல்லி 200, அகமதபாத் 200......... மற்றும் ஏனைய ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஏறக்குடைய 2000ம் பேரும் வசிக்கின்றனர்.
ஒர்லே இஸ்ரவேல் சினாக்கோக் - நந்காவோன்-பொதேல் சினாக்கோக் - ரிவ்தந்தா
பக்தாத் யூதர்கள்:
இவர்கள் 18ம் நூற்றண்டின் கடைசிப்பகுதியில் அரேபிய நாடுகளிலிருந்து மத-கலவரத்தினால் துரத்தப்பட்டு இந்தியாவில் வந்து குடியேறியவர்கள். இவர்களை பக்தாத் யூதர்கள் என்று அழைத்தாலும், இவர்கள் சீரியா, ஈரான், யேமன், மற்றும் ஈராக்கின் வேறுபகுதிகளிலுமிருந்து வந்தவர்கள். இவர்களில் அதிகமானோர் பக்தாதியர்களாக இருந்தபடியினால் இவர்கள் பக்தாத் இஸ்ரவேலர்கள் என்று அழைக்கப்பட்டனர். சில சமயங்களில் இவர்களை ஈராக்கிய யூதர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்களில் அதிகமானோர் இந்தியா வருமுன்பே வியாபாரிகளாக இருந்தனர், அதன் காரணமாக இவர்கள் இந்தியாவின் முக்கிய வர்த்தக நகரமாகிய சூரத்-திலே குடியேறினர்(சூரத் - தற்போதைய குஜராத்). பிற்காலங்களில் மும்பாய் மற்றும் கல்கத்தா முக்கிய வர்த்தக நகரங்களாக விளங்கியபடியால் அவர்களும் அங்கே குடிபெயர்ந்தார்கள்.
ஒரு சில பக்தாத் யூதர்கள் சிறிய துணிக்கடைகள் போன்று வைத்திருந்தாலும், மற்றவர்கள் பெரிய வர்த்தகர்களாகவே இருக்கின்றனர். அநேகருக்கு சொந்தமாகவே தொழிற்சாலைகள் உள்ளன. அதிகமாக இவர்கள் நெசவு தொழிற்சாலைகளை வைத்திருக்கின்றார்கள். இவர்கள் தாங்கள் இருந்த இடங்களில் அநேக வைத்தியசாலைகள், பாடசாலைகள், மற்றும் வாசகசாலைகள் போன்றவற்றை கட்டியிருக்கின்றார்கள்.
அநேக பக்தாத் யூதர்கள் தங்கள் சொந்தமொழியை விட்டு ஆங்கிலேய மொழியை தங்களுடைய முதன் மொழியாக பாவிக்கின்றனர், ஆங்கிலேய கலாச்சாரத்திற்கு உட்பட்டவர்களாக இவர்கள் வாழ்க்கை முறை காணப்படுகின்றது. இவர்களில் அநேகர் மிகவும் வசதியுள்ளவர்களாக இருந்தபடியினால் இவர்கள் இங்கிலாந்திலே குடிபுகுந்த பின்பும் மிகவும் உயர்ந்த நிலையிலே இவர்கள் வாழ்க்கை நிலை காணப்படுகின்றது. அதே சமயம் அநேக பக்கதாத்-யூதர்கள் தாங்கள் சென்ற இடங்களில் இந்திய கலாச்சாரத்தை விட்டுவிடாமல் இந்தியாவில் அவர்கள் வசித்து வந்ததைப்போன்று வசித்து வருகின்றனர். 1940ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 7000ம் பக்தாத் யூதர்கள் இருந்தார்கள். தற்பொழுது 50க்கும் குறைவாகவே உள்ளனர்.
பெனே மனாஷே (மனாசேயின் பிள்ளைகள்):
5000-7000க்கும் இடையிலான பெனி-மனாசே ஜனங்கள் இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மற்றும் மிசோராம் பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் காணமற்போன 10 கோத்திரங்களில் உள்ள ஒரு கோத்திரத்தின் ஜனங்கள் என்று கருதப்படுகின்றனர். இவர்கள் பார்வைக்கு சீனர்களை போலிருக்கின்றனர். ஆசீரியர்கள் காலத்தில் இவர்கள் தப்பியோடி சீனாவிற்குள் வந்துசேர்ந்தார்கள். பிற்பாடு பர்மா ஊடாக இந்தியாவின் பகுதிகளை வந்தடைந்தார்கள். இவர்களில் அதிகமானோர் மணிப்பூர் மற்றும் மிசோராம் பகுதிகளில் வசிக்கின்றனர்.
சரித்திரம்: சாலமோன் கட்டிய முதலாவது தேவலய காலத்தில் இஸ்ரவேல் இரண்டு இராச்சியங்களாக பிரிந்தது. ஒன்று தென் இராச்சியம் (யூதா) இதில்; யூதா, பென்யமின் மற்றும் லேவி கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தார்கள். மற்றது வட இராச்சியம். இதனை இஸ்ரவேல் என்று அழைத்தனர். இது எஞ்சிய 10 கோத்திரத்திற்கு உரியது. கி. மு 721ல் அசீரியர்கள் வட இராச்சியமான இஸ்ரவேலின் மீது போர் தொடுத்து அவர்களை அடிமைகளாக தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்று தங்கள் நாடுகளிலே குடியமர்த்தினார்கள்.
ஏறக்குறைய 2700 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் அசீரியாவிலிருந்து மேதிய,பெர்சியாவுக்குள் தப்பியோடி பின்பு ஆப்கானிஸ்தான், ஹிந்து குஷ், திபெத், கடைசியில் சீனாவை கி.மு 240ல் வந்தடைந்தார்கள்.
சீனாவிலும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அவர்கள் அங்கும் துரத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். கி.மு 100ம் ஆண்டளவில் அவர்களுடைய தோற் சுருள்கள் (வேதம்) பறித்து எரிக்கப்பட்டது. அவர்கள் துரத்தப்படுகையில் அங்குள்ள குகைகளில் ஒளித்துக்கொண்டார்கள். இந்தச்சந்தர்பத்தில் அநேகர் அங்கிருந்து பல நாடுகளுக்கு பிரிந்து சென்று விட்டார்கள். சிலர் தாய்லாந்து, வியாட்நாம், மலேசியா, பர்மா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு தப்பிச்சென்றனர். இன்னமும் இவர்களை குகைவாசிகள் என்று சிலர் அழைக்கின்றனர்.
தற்பொழுது இந்த இஸ்ரவேலர்கள் வேறு பெயரில் அழைக்கப்படுகின்றனர் (ஷின்லுங், குகி, மிசோ, லுசாய், மர்).
கி.பி 1894ஆம் ஆண்டளவில் கிறிஸ்தவ மிஷனரிமார்கள் மணிப்பூரில் ஊழியம் செய்வதற்காக வந்திருந்தனர், இவர்கள் அங்கு வாழ்ந்த மக்கள் மத்தியில் உள்ள பழக்க வழக்கங்களையும், அவர்கள் பாடிய பாடல்கள் மற்றும் அவர்களுடைய பின்னணி கதைகளையும் அவர்கள் பைபிளில் உள்ள சில கதைகளையும் தெரிந்து வைத்திருப்பதை பார்த்து அவர்களை மனாசே கோத்திரம் என்று சொல்வதைப்பார்த்தும் அடையாளம் கண்டு கொண்டனர். இவர்களில் சிலர் கிறிஸ்தவ மதத்தை தழுவிக்கொண்டனர்.
இவர்கள் மத்தியில் இதுவரைக்கும் அழியாமல் பாடப்பட்டு வரும் பாடல் ஒன்று:
நாங்கள் பஸ்கா பண்டிகை கொண்டாடவேண்டும்
ஏனென்றால் நாங்கள் செங்கடலை கடந்து தரைக்கு வந்தபடியால்
இரவிலே நெருப்புடனும்
பகலிலே மேகத்துடனும் கடந்தோம்.
எதிரிகள் எங்களை இரதங்களினாலே துரத்திக்கொண்டு வந்தார்கள்
அவர்களை கடல் விழுங்கி விட்டது. அவர்கள் மீன்களுக்கு இரையாக்கப்பட்டார்கள்.
நாங்கள் தாகமாக இருந்தபோது
கன்மலையிலிருந்து எங்களுக்கு தண்ணீர் கிடைத்தது.
1951ம் ஆண்டு பெந்தேகொஸ்தே போதகரான ட்ச்சலா என்பவர் தனக்கு இறைவனிடம் இருந்து ஒரு தீர்க்கதரிசனம் கிடைத்ததாக சொன்னார். இந்த மக்கள் ஆர்மகெதோன் யுத்தம் வருமுன் இவர்கள் மீண்டும் தங்கள் சொந்த நாட்டிற்கும், மக்களிடத்திற்கும், சொந்த சமயத்திற்கும் திரும்பி போகவேண்டும் என்று கூறினார். இந்த கருத்தினால் 20 வருடங்களிற்கு பின்பு சில குகி ஜனங்கள் கிறிஸ்தவத்தை விட்டு தங்கள் சொந்த மதத்திற்கு தழுவினார்கள். இதன் மூலம் சிலர் யூதமதத்தை கற்கவும், நடைமுறைப்படுத்தவும் ஆரம்பித்தனர். பிற்பாடு இவர்கள் எருசலேமிலுள்ள சிலருடன் தொடர்புகொண்டு தங்கள் யூதமார்க்கத்தை சரியாக கடைப்பிடித்தனர்.
காலப்போக்கில் தற்பொழுது 5000க்கும் அதிகமானவர்கள் இந்தியாவின் வட-கிழக்கில் யூத சமயத்தை முழுமையாக கடைப்பிடித்து வருகின்றனர். குகி, மிசோ கோத்திரங்களினது ஜனத்தொகை கிட்டத்தட்ட 1, 5மில்லியன். இவர்களில் குறைந்தளவு ஜனங்களே தங்களை பெனி-மனாசே என்று கூறுகின்றார்கள். 300க்கும் அதிகமான பெனி-மனாசே ஜனங்கள் தற்பொழுது இஸ்ரவேலுக்கு திரும்பி சென்று அங்கே வாழ்கின்றனர். அநேகர் மீண்டும் இஸ்ரவேலிலே வாழ விரும்புகின்றனர்.
இங்கே நீங்கள் 49 பெனே-மனாசே யூதர்கள் இந்தியாவிலிருந்து இஸ்ரவேலுக்கு செல்வதை பார்க்கின்றீர்கள்.
இஸ்ரவேலுக்குள் வந்து சேர்ந்தபின்பு எடுத்த படம்
பெனே எப்ராயிம் (எப்ராயிமின் பிள்ளைகள்):
இவர்களை தெலுங்கு யூதர்கள் என்றும் அழைப்பர். காரணம்;: இவர்கள் தெலுங்கு பேசுவது. இவர்கள் மிகவும் சொற்பமானவர்களே. ஏறக்குறைய 300 பேர். ஆந்திரப்பிரதேசத்திலுள்ள குந்தூர் மாவட்டத்தின் கொத்தரட்டிப்பாலம் எனும் கிராமத்தில் இவர்கள் வசிக்கின்றனர். இவர்களும் காணமற்போன 10 கோத்திரங்களில் ஒன்றாகிய எப்ராயிம் கோத்திரத்தை சார்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்படுகின்றார்கள். இவர்கள் எபிரேயு- தெலுங்கு கலந்த ஒரு பாஷையை பேசிவருகின்றனர்.
19ம் நூற்றாண்டில் இவர்களும் பெனி-மனாசே கோத்திரத்தினரைப்போன்று கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். பிற்பாடு 1981ம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 50 குடும்பங்கள் யூத மார்க்கத்தையும், அவர்களது மொழியாகிய எபிரேய மொழியையும் கற்று வருகின்றார்கள்.
ஆதாரங்கள்