புத்தம் புது காரை 'டெஸ்ட் டிரைவ்’ செய்து பார்க்கும்போது
Wed Aug 14, 2013 10:54 am
புத்தம் புது காரை 'டெஸ்ட் டிரைவ்’ செய்து பார்க்கும்போது அதன் வெளித்தோற்றமும், அழகும் நம் கவனத்தை திசை திருப்பக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள். காரில் இருக்கும் மியூஸிக் சிஸ்டம், கார் இன்ஜினில் இருந்து எழும் கடமுடா சத்தத்தை அமுக்கப் பார்க்கும். இதுபோன்ற கவனச் சிதறல்களுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் 'டெஸ்ட் டிரைவ்’ செய்வது எப்படி?
00.1 வசதியாக அமர முடிகிறதா?
காரில் வசதியாக அமர முடிகிறதா என்று பாருங்கள். ஸீட் மற்றும் ஸ்டீயரிங் நம் வசதிக்கேற்ப இருப்பது மிக மிக அவசியம். காரின் மேற்கூரையில் தலை இடிக்கிறதா, கால்களை நீட்டி அமர்வதற்கு வசதியாக இருக்கிறதா எனவும் கவனியுங்கள்.
00.2 கவனம் காரில் இருக்கணும்!
அகலமான, குறுகலான, நெரிசலான, குண்டும் குழியுமான என அனைத்து வகைச் சாலைகளிலும் காரை ஓட்டிப் பாருங்கள். சகலவிதமான சாலைகளிலும் ஓட்டும்போதுதான் காரின் தன்மைகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளமுடியும். டெஸ்ட் டிரைவ் செய்யும்போது உங்கள் கவனம் காரிலேயே இருப்பது நல்லது.
''ஏ.ஸி. சூப்பர் சார்! ஐந்து பேர் தாராளமா உட்காரலாம் சார்!'' என்பது போல உடன் பயணம் செய்யும் கார் விற்பனையாளர் லொட லொடவெனப் பேசி உங்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்வதை அனுமதிக்காதீர்கள்.
00.3 சடன் பிரேக் போடுங்கள்!
எல்லா கியரிலும் நன்றாக ஆக்ஸிலரேஷன் கொடுத்துப் பாருங்கள். சடன் பிரேக் அடித்துப் பார்ப்பதும் மிக முக்கியம். ஏனென்றால், அப்போதுதான் கார் நேராக நிற்கிறதா அல்லது பிரேக் போட்ட வேகத்தில் ஒரு பக்கமாக திரும்பி நிற்கிறதா எனத் தெரியும். கியர் மாற்றும்போது ஸ்மூத்தாக இருக்கிறதா, சத்தம் வருகிறதா என்பதையும் கவனியுங்கள். கையாள்வதற்கு ஸ்டீயரிங் ஃப்ரீயாக இருக்கிறதா? அல்லது கடினமாக இருக்கிறதா என்று ஊர்ஜிதம் செய்துகொள்ளுங்கள்!
00.4 ரிவர்ஸ் கியர் முக்கியம்!
காரைத் திருப்பும்போது கதவுகளில் உள்ள பில்லர்கள், சாலையை மறைக்கிறதா என்பதைக் கவனியுங்கள். ரிவர்ஸ் கியரில் வண்டியை எடுக்கும்போது, பின் ஸீட்டின் தலை சாய்க்கும் பகுதி (Head rest) சாலையை மறைக்காமல் இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்!
00.5 கைக்கு எட்டும் தூரத்தில் ஆடியோ!
வண்டியை ஓட்டும்போது ஸ்டீரியோ சிஸ்டம் மற்றும் ஏ.ஸி. பட்டன்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பது அவசியம். டெஸ்ட் டிரைவின்போது ஆடியோ சிஸ்டத்தை நிறுத்திவிடுங்கள். இது காரிலிருந்து உங்கள் கவனத்தைச் சிதறடிக்கும்.
00.6 குழந்தைகளை கூட்டிச் செல்லுங்கள்!
டெஸ்ட் டிரைவ் செய்யும்போது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்வது நல்லது. ஏனென்றால், காரில் அவர்களுக்குப் பிடித்த விஷயங்களையும், பிடிக்காத விஷயங்களையும் அப்போதே தெரிந்து கொள்ள முடியும்.
00.7 டிக்கியில் இடம் போதுமா?
காஃபி டம்ளர், நியூஸ் பேப்பர்... போன்ற விஷயங்களுக்குத் தனி இடம் இருக்கிறதா என்று பாருங்கள். காரின் டிக்கியில் பொருட்கள் வைக்க உங்களுக்குத் தேவையான இடம் இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள்.
டெஸ்ட் டிரைவ் செய்த பிறகு ஏதாவது சில, பல காரணங்களுக்காக அந்த கார் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், 'யோசித்துவிட்டுச் சொல்கிறேன்' என்று நாகரிகமாகச் சொல்லிவிட்டு வந்துவிடுங்கள். முக தாட்சண்யத்துக்காக எல்லாம் கார் வாங்க முடியாது!
via;vikatan
Permissions in this forum:
You cannot reply to topics in this forum