மருத்துவ காப்பீடு எடுக்கப் போகின்றீர்களா..?
Thu Aug 01, 2013 2:37 pm
மருத்துவ காப்பீடு எடுக்கப் போகின்றீர்களா..?
கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன..?
மக்களின் இப்போதைய தேவை மருத்துவக் காப்பீடு. மருத்துவ செலவு என்பது எல்லோராலும் ஈடுகட்ட முடியாத ஒன்று. அதனால் தான் மக்களும் எதாவது ஓர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளத் தயாராகி வருகின்றனர் . தற்போதைய தொலைக்காட்சி விளம்பரங்களும் மருத்துவ காப்பீட்டின் அவசியத்தினை மக்களிடம் அதிகமாய் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியுள்ளன.
மார்ச் மாதம் நெருங்கினாலே வருமான வரி செலுத்துபவர்கள், தங்கள் வரிவிலக்கிற்காக பல்வேறு காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்வார்கள். இத்தருணத்தை எதிர்நோக்கி காப்பீடு செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ‘ கொக்கு மீனுக்காக’ காத்திருப்பதை போல் தயாராக இருப்பார்கள். நமக்கும் எதாவது ஒரு திட்டத்தில் சேர்ந்து காப்பீட்டு பத்திரம் வாங்கி அலுவலகத்தில் சமர்பித்தால் போதும்! அது தான் இப்போதைய தேவை. அதைவிட்டு சேரும் திட்டம் நல்லதா அதனால் என்ன பயன் என்று ஆராய நேரமில்லை.
நமது ஏஜெண்டும், பல்வேறு கதைகளை கூறி நம்மிடம் பாலிசி பெறுவதிலேயே குறியாய் இருப்பார். “நான் பார்த்துகிறேன் சார், நாங்க எத்தனை பேருக்கு பாலிசி எடுத்து கொடுத்து காப்பீடு செய்து உதவியிருக்கோம்” என்று உங்கள் எதிர்காலமே அவர்கள் கையில் தான் என்ற வகையில் உங்களை ஏதோவொரு திட்டத்தில் சேர்த்து விட்டுவிடுவர். நாமும் அதோடு அதனை மறந்து விடுவோம்.
ஆனால், நமக்கு எதாவது உடல் கோளாறு ஏற்ப்பட்டு மருத்துவமனைக்கு போனால் தான், அங்கு சந்திக்கும் பிரச்சனைகள் தெரிய வரும். ”உங்களுக்கு ஏற்கனவே இந்த வியாதி இருந்திருக்கிறது, பாலிசி போடுவதற்கு முன்னமே ஏன் தெரிய படுத்தவில்லை, உங்களுக்கு இதில் மருத்துவ காப்பீடு அளிக்க இயலாது, உடனே பணத்தை காட்டுங்கள்” என்று எல்லாம் கூறி நம்மை சங்கடத்தில் ஆழ்த்திவிடும் போதுதான், பாலிசியின் உண்மை சொருபம் தெரிய வரும்.
இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்க நாம் பாலிசி போடுவதற்கு முன் அதைப் பற்றி நன்கு அறிந்து இருக்க வேண்டும், நம் ஏஜென்டிடம் நம் சந்தேகங்கள் தீர்ந்த பிறகே பாலிசி போட சம்மதம் கொடுக்க வேண்டும். முக்கியமாக நம் வயது, நமக்கு எதாவது வியாதி இருக்கின்றதா, இல்லையா என முன் கூட்டியே மருத்துவ பரிசோதனை செய்து அதனை நம் விண்ணப்பத்துடன் இணைத்து பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம், எதற்கு தேவை இல்லாமல் மருத்துவ பரிசோதனை, நமக்கு வியாதி எதாவது இருக்கவா போகிறது, வயது நாற்பது தானே ஆகிறது என நினைத்து விட்டு விட்டால் சங்கடம் நமக்கு தான்.
இப்படிச் செய்வதால், பாலிசியின் கட்டணம் கூடலாம், அதை நம் சரியாக கணித்திருக்க வேண்டும். பொதுவாக மருத்துவ காப்பீட்டு பலன்கள் நிராகரிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று , நாம் முன் கூட்டியே நமது உடல் கோளாறு பற்றிய உண்மைகளை மறைத்திருப்பது, அல்லது கூறாமலிருப்பது தான். இந்த அடிப்படியிலேதான் பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் அதன் பலனை நிராகரிக்கின்றன . முடிந்தவரை நமது உண்மை நிலையை முன் கூட்டியே தெரிவித்து இருப்பது நல்லது.
ஏஜென்ட் தட்டிக்கழித்தாலும் நாற்பது வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து அதன் விவரங்களை தெரிவித்து இருப்பது நலம். உதாரணமாக, நமக்கு சக்கரை வியாதி சம்பந்தமான அறிகுறி மருத்துவ பரிசோதனையில் இல்லை என வைத்து கொள்ளலாம். இதன் மருத்துவ சான்றிதழை ஏற்கனவே கொடுத்திருந்தால், பிறகு நமக்கு சக்கரை வியாதி வந்து அதற்க்கான மருத்துவம் பார்க்கும் போது உங்கள் மருத்துவ காப்பீட்டில் சந்தேகம் எழவே வாய்ப்பில்லை, ஏனென்றால் நீங்கள் ஏற்கனேவே உங்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என முன்கூட்டியே ஆதாரத்தோடு கொடுத்திருக்கின்றீர்கள் . ஆனால், இதனை நீங்கள் கொடுக்காத பட்சத்தில், உங்கள் பெற்றோருக்கு சக்கரை வியாதி இருந்திருந்தால் மருத்துவக் குழு, உங்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்கனவே இருந்திருக்கின்றது, ஆனால் நீங்கள் அதனை மறைத்து காப்பீடு செய்துள்ளீர்கள் என உங்களுக்கு எதிராக நிருபிக்க வாய்ப்பிருக்கின்றது. ஆகவே, மருத்துவ சோதனை முன்கூட்டியே செய்து விண்ணப்பிப்பது மிகவும் முக்கியம்.
சில நிறுவனங்கள் காப்பீடு செய்தவர்களின் நண்பர்கள், சொந்தங்கள், மற்றும் அக்கம் பக்கத்தாருடன் நண்பர்கள் போல் பேசி, உங்களுக்கு ஏதேனுமொரு பிரச்சனை முன் கூட்டியே இருக்கின்றதா என்று விவரங்கள் சேகரிக்க ஆட்களை அனுப்புகின்றதாக தகவல். இந்த மாதிரி நேரங்களில் உங்களின் மருத்துவ சான்றிதழ் தான் கை கொடுக்கும். ஏனென்றால், இந்த மருத்துவ பரிசோதனை செய்பவர்கள் காப்பீட்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவமனைகளும், மருத்துவர்களும் தான். ஆகவே, உங்கள் வாதம் தான் வெற்றி பெரும்.
மருத்துவ பரிசோதனை செய்ய கடமைப்பட்டவர்கள் யார் யார் என்றால்,
**18 முதல் 30 வயது உள்ளவர்களுக்கு இரண்டு இலட்சத்திற்கு மேல் காப்பீடு செய்யும் போது முழு உடல் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, இரத்த பரிசோதனை போன்றவை தேவைப்படும்.
**31 முதல் 40 வயது உள்ளவர்களுக்கு இரண்டு இலட்சத்திற்கு மேல் காப்பீடு செய்யும் போது முழு உடல் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, இரத்தம், சிறுநீர் பரிசோதனை போன்றவை தேவைப்படும்.
**41 முதல் 50 வயது உள்ளவர்களுக்கு காப்பீடு செய்யும் போது முழு உடல் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, இரத்தம், சிறுநீர் மற்றும் விரிவான பரிசோதனைகள் விவரம் தேவைப்படும்.
மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் ஒரு வாரத்திற்கு முன் நம்மை நாமே தயார் செய்து கொள்ளவேண்டும். நாம் உட்கொள்ளும் உப்பு , இனிப்பு போன்றவற்றின் அளவை எப்போதையும்விட குறைத்தே எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு சம்பந்தமான உணவு பதார்த்தங்களை தவிர்த்து கொள்ளுதல் நலம் . புகையிலை போன்ற லாகிரி வஸ்துகளை அறவே தொடக்கூடாது. நன்றாக உறங்கி நம் இரத்த அழுத்தத்தை சீராக்கி கொள்ளவேண்டும். அதிகமான உடற்பயிற்சி, நடை பயிற்சி வேண்டாம். இதனால் நம் உடல் உறுப்புகளின் செயல் பாடு சீராக இருக்க உதவும். இப்போது செய்யப்படும் மருத்துவ சோதனையானது நம் உடலின் உண்மையான செயல் பாட்டை தெரியப்படுத்தும், மேலும் நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் அறிந்து கொள்ளலாம்.
மருத்துவ காப்பீட்டிற்காக நாம் செய்து கொள்ளும் இந்த மருத்துவ பரிசோதனையானது நமக்கு நன்மை தான் பயக்கும்!
நன்றி: வேர்ல்டு...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum