இராபர்ட் மோரிசன்
Tue Jan 08, 2013 4:18 am
இராபர்ட் மோரிசன் 1782-1834
பத்தொன்பதாவது
நூற்றாண்டில் முதல் பாதியிலே சீனா தேசத்திற்கு மிஷனெரியாகச் சென்றவர்
இராபர்ட் மோரிசன். கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றின வேதத்தின் காலேப் இந்த
மலைநாட்டை எனக்குத் தாரும் என்று ஜெபித்ததுபோல உலகிலே அதிக கடினமான
பணித்தளத்தை எனக்குத் தாரும். அங்கு உமக்கென்று ஊழியம் செய்வேன் என்ற
மோரிசனின் ஜெபத்திற்கேற்ப, சுவிசேஷம்
வெளிப்படையாகச் சொல்ல அதிகத் தடை இருந்த சீனா தேசத்தில், 25 வருடம்
பணிபுரிந்து, பல கடின பாதைகளைக் கடந்து, சீன மொழியில் வேதத்தை முதலாவது
மொழி பெயர்த்து அழியாத கிறிஸ்துவின் வார்த்தையை சீன மக்களின் கரத்தில்
தந்தவர் மோரிசன்.
பிறப்பும் வளர்ப்பும்
1782-ம்
ஆண்டு, இங்கிலாந்து தேசத்தில் பிறந்த மோரிசன் எட்டுப் பிள்ளைகளில் கடைசி
மகனாவார். தனது தந்தையின் காலணிகள் செய்வதற்கான மர அச்சுகளை உற்பத்தி
செய்யும் கம்பெனியில், சிறு வயதிலிருந்தே உதவி வந்தார் மோரிசன். தேவ
பக்தியுள்ள அவரது தந்தையின் மூலம் தனது ஓய்வு நேரத்தை வேதத்தைக் கற்பதில்
செலவிட்டார். விளையாடுவதற்கு சிறிது நேரமே ஒதுக்கிவிட்டு, தனது சபைப்
போதகரிடம் கிறிஸ்துவைக் குறித்தும் வேதப்பாடங்களை ஆராய்ந்து அறியவும் நேரம்
செலவழித்தார்.
அழைப்பு
தனது
15-ம் வயதில், உண்மையான மனமாற்றம் அடைந்து கிறிஸ்துவுக்குள் அனுதினமும்
வளர ஆரம்பித்தார். சில மிஷனெரி ஸ்தாபனங்களின் மாத பத்திரிக்கைகளை வாங்கி
வாசிக்கும்போது, இயேசுவைப் பற்றி அறியப்படாத வெளிநாட்டவர்களுக்கு சுவிசேஷம்
சொல்ல வேண்டும் என்ற வாஞ்சை அவருக்கு ஏற்பட்டது. தானும் ஒரு மிஷனெரியாகச்
செல்லவேண்டும் என்ற பாரம் அனுதினமும் அவரை உந்தித்தள்ள, தனது தரிசனத்தை
குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால் அவரது தாயாரோ தான் உயிருடன்
இருக்கும் வரை வெளிநாட்டிற்கு எங்கும் மோரிசன் போகக்கூடாது என்பதில் அதிக
உறுதியுடன் இருந்தார். தேவனின் வேளைக்காக காத்துக்கொண்டு, ஜெபித்துக்
கொண்டே இருந்தார் மோரிசன். அவரது 20-வது வயதில் அவரது தாய் அதிக
சுகவீனப்பட்டு மரிக்கும் தருவாயில் இருந்ததால், தாயை அன்புடன் கவனித்து,
அவரது கடைசி நாட்களில் கூட இருக்க கிடைத்த வாய்ப்பை நினைத்து தேவனைத்
துதித்தார். 1802-ம் ஆண்டு அவரது தாயார் மரித்துப் போனார்.
தாயின்
மரணத்திற்குப் பிறகு, இங்கிலாந்து சென்று, 2 வருடம் மிஷனெரிப் பயிற்சி
பெற்றார். லண்டன் மிஷனெரி சங்கத்திற்கு விண்ணப்பித்தபோது, இவரை தங்களது
மிஷனெரியாக ஏற்றுக்கொண்டனர். அதிக சந்தோஷமடைந்த மோரிசன், தனது
குடும்பத்தினருக்கு இதை அறிவித்தபோது, இங்கிலாந்து
தேசத்திலே ஊழியத்திற்கான அதிக வாய்ப்புகள் இருக்கும்போது, அந்நிய
தேசத்தில்போய் உன் வாலிப வாழ்வை ஏன் வீணாக்கவேண்டும்? என்று சோர்வடையச்
செய்தனர்.
எனினும், தனது ஊழிய அழைப்பில் மோரிசன் உறுதியாய் நின்றார். சீன தேசத்தைக்
குறித்து பாரத்தைப் பெற்ற மோரிசன் அதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தபோது,
லண்டன் பட்டணத்திலே சீன மொழியைக் கற்க ஒரு வாய்ப்பை ஆண்டவர் தந்தார்.
லண்டன் மிஷனெரி ஸ்தாபனமும் இவருடன் சீனா செல்ல, ஏற்ற சக ஊழியர் கிடைக்கும்
வரை காத்திருக்க சொன்னது. 1807-ம் ஆண்டு வரை சரியான சக ஊழியர் கிடைக்காது
போனதால் இவரைத் தனியாகவே சீன தேசத்திற்கு அனுப்ப தீர்மானம்
எடுக்கப்பட்டது.
கிழக்கிந்தியக்
கம்பெனி இவரை கப்பலில் பயணம் செய்யவும், சீன தேசத்தில் குடியேறவும்
அனுமதி தர மறுத்தது. எனவே முதலில் அமெரிக்க தேசம் சென்று அங்குள்ள மாநிலச்
செயலாளரான ஜேம்ஸ் மாடிசனிடம் ஒரு அறிமுகக் கடிதம் பெற்றுக்கொண்டு,
அமெரிக்கக் கப்பலில் சீன தேசத்திற்கு புறப்பட்டார்.
ஏழு
மாதப் பிரயாணத்திற்குப் பிறகு 1807-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்
சீனாவிலுள்ள கேன்டன் என்ற பகுதிக்கு வந்து சேர்ந்தார். கேன்டனில் இருந்த
அமெரிக்கக் கவுன்சில் இவரை ஏற்றுக்கொண்டது. ஆனால் கிழக்கிந்தியக்
கம்பெனியர் இவரை சந்தேகக்கொண்டு கண்காணிக்க ஆரம்பித்தனர். ஏனெனில்
அந்நாட்களில் கிழக்கிந்தியக் கம்பெனியர் சுவிசேஷம் சொல்வதற்கு முற்றிலும்
தடைசெய்து, வியாபாரத்தில் மட்டும் கவனத்தை செலுத்தினர். எனவே மோரிசனுக்கு
சீனா மொழியைக் கற்பது கூட அதிக ரகசியமாகக் செய்யப்பட வேண்டியதாயிற்று. சக
ஊழியர் கூட இல்லாதது, அதிக தனிமையை உணரவைத்தது. வீட்டிலிருந்தும் கடிதத்
தொடர்பே இல்லாதது, அவரை அதிகம் சோர்வுறச் செய்தது. தனது நண்பனுக்கு அவர்
எழுதிய கடிதத்தில் நேற்று உன்னிடமிருந்து நான் பெற்ற இரண்டாவது கடிதம்.
ஆனால் இதுவரை நான் 200 கடிதங்கள் எழுதியுள்ளேன். என் கடிதங்களைப் பெற்ற
அனைவரும் அதிக வேலைப் பளுவினால் எனக்குக் கடிதம் எழுத இயலவில்லை போலும்
என்கிறார்.
சுவிசேஷத்தை
வெளிப்படையாகப் பிரசங்கிக்கக்கூடாது என்ற தடை கேன்டனில் இருந்த போதும்,
மோரிசன் தனது நேரத்தை வீணடிக்கவில்லை. இரண்டு ரோமன் கத்தோலிக்க நண்பர்களைக்
கண்டுபிடித்து அவர்களிடம் சீன மொழியைக் கற்றுக்கொள்ளச் சென்றபோது.
அவர்கள் ஒப்புதல் தெரிவித்தபோதும், உமக்கு
எங்கள் மொழியைச் சொல்லி தருவதால் எங்கள் உயிருக்கு ஆபத்து உண்டு.
அதிகாரிகள் எங்களைக் கைதுசெய்து கொடுமைக்கு ஆளாக்குவதற்கு முன், நாங்களே
எங்களை மாய்த்துக்கொள்ள எப்போதும் விஷம் வைத்து உள்ளோம் என்றனர். இவர்களிடம் ஜெபத்துடன் மொழியை நன்கு கற்றுக் கொண்டு முதலில் சீன அகராதியை உண்டு பண்ணி ரகசியமாக வேதத்தையும் மொழி பெயர்க்கலானார்.
கேன்டன்
வந்து 18 மாதத்திலே சீன மொழியில் அகராதியை ஆயத்தம்பண்ணி, தந்த மோரிசனை
கிழக்கிந்திய கம்பெனியார் பாராட்டி அவருக்கு மொழிபெயர்ப்பாளர் என்ற
பதவியைத் தந்து மாத வருமானமும் தர முன்வந்தனர்.
குடும்ப வாழ்வு
சீன
தேசத்தில் வாழ்ந்து வந்த இங்கிலாந்து மருத்துவரின் மகளான மேரி மார்டேனை
திருமணம் புரிந்தார். சீனா தட்பவெப்ப சூழ்நிலையில் மேரி அதிக
சுகவீனமடைந்து, 1815-ம் ஆண்டு, தனது இரண்டு சிறு குழந்தைகளுடன் இங்கிலாந்து
போக நேர்ந்தது. அதிகமான வேதனையுடன் அவர்களுக்கு பிரியா விடை
கொடுத்தனுப்பிய மோரிசன், தன்னுடைய முழு நேரத்தையும் ஊழியத்தில்
செலவிட்டார். ஆறு வருடப் பிரிவுக்குப் பிறகு மேரியும் பிள்ளைகளும் 1821-ம்
ஆண்டு சீனா வந்தபோதிலும் சிறிது நாட்களிலே மேரி சுகவீனமடைந்து
மரித்துப்போனார். 9 வயது மகள் ரெபேக்காவும், ஏழு வயது மகன் ஜாணும்
மறுபடியும் இங்கிலாந்து தேசத்திற்குக் கல்விக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
குடும்ப வாழ்வில் பல கஷ்டங்களையும், மனவேதனையையும் அனுபவித்த மோரிசன்,
பிள்ளைகள் போனபிறகு, தனிமையில் வேதத்தை மொழிபெயர்ப்பதில் முழு கவனத்தையும்
செலுத்தினார்.
சீன
மொழியில் அவரது அறிவுத்திறன் வெகுவாக விருத்தியடைந்தது. சுவிசேஷத்திற்கு
சீனாவில் முதல் மிஷனெரியாக இவர் கருதப்பட்டாலும் பகிரங்கமாக சுவிசேஷம்
சொல்ல முடியவில்லை.
ஊழியத்தின் முதல் விசுவாசி பட்டம், ஊழியம் ஆரம்பிக்கப்பட்டு, ஏழாவது
வருடமே கிடைத்தது. மனித நடமாட்டம் இல்லாத இடத்தில், சீன அதிகாரிகள்,
பிரிட்டிஷ் அதிகாரிகளின் கவனத்தில் இல்லாத பகுதியில் அவர்களுக்கு
ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. சீனாவில் வாழ இடம் கிடைத்ததே கிழ்க்கிந்தியக்
கம்பெனியரின் ஆதரவால்தான். கிழக்கிந்தியக் கம்பெனியர் இவரது
சுவிசேஷப்பணிக்கு அதிகத் தடையாக இருந்தனர்.
1815-ம்
ஆண்டு, சீன மொழியில் புதிய ஏற்பாட்டை, மொழிபெயர்த்து, வெளியிட்டபோது,
கம்பெனியர் மோரிசனை வேலை நீக்கம் செய்தனர். அதிகக் கவலையுற்ற மோரிசன்
தேவனைப்பற்றிக் கொண்டு ஜெபித்தபோது, அவரது வேலை நீக்க உத்தரவு
அமலாக்கப்படாமல், ரத்து செய்யப்பட்டது. மோரிசனின் சீனமொழி ஞானம்
கம்பெனியருக்கு அவசியமாக இருந்தது.
கிழக்கிந்தியக்
கம்பெனியரின் அச்சுறுத்தலும், சீனாவிலிருந்த ஒருசில கிறிஸ்தவர்களின்
எதிர்ப்பும், இவரது ஊழியத்திற்கு அதிகத் தடையாக இருந்தது. எனினும் 1824-ம்
ஆண்டு வேதத்தை முழுவதும் சீன மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
இங்கிலாந்து தேசத்திற்கு விடுமுறைக்குச் சென்று, இரண்டு வருடம் அங்குள்ள பல
பகுதிகளில் சீன தேசத்தின் தேவையை பகிர்ந்துகொண்டு, அதன் மூலம் மிஷனரியாக
வர முன் வந்தவர்களுக்கு சீன மொழியை கற்றுக்கொடுத்தார். சீனப் பெண்கள்
மத்தியில் கிறிஸ்து அறிவிக்கப்படவேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி தனது
வீட்டிலே ஊழிய வாஞ்சையுள்ள பெண்களுக்குச் சிறப்பு வகுப்புகளை நடத்தினார்.
அந்த வகுப்பில் பயின்ற அநேகர் பின் சீனாவிற்கு மிஷனெரியாகச் சென்றனர்.
அவர்களில் ஒருவர்தான் சீனா சென்ற மிஷனெரி மேரி அலடர்சே.
1826-ம்
ஆண்டு மறுபடியும் சீனா வந்து, கேன்டன் பகுதியில் தனது பணியைச் செய்தார்.
சில கிறிஸ்தவ இலக்கியங்களையும் சீன மொழியில் மொழி பெயர்த்தார்.
இங்கிலாந்து, சீனா தேசத்திற்கு இடையேயுள்ள வியாபாரத் தொடர்புகளுக்கு
மத்தியஸ்தராகப் பணி புரிந்தார். கம்பெனி வேலை, ஊழியம் என்று அதிக வேலைப்
பளுவினால், பெலன் இழந்து, சுகவீனப்பட்டு 1834-ம் ஆண்டு மரித்துப்போனார்.
இவரது மரணத்திற்குப்பிறகு சில நாட்களிலே கிழக்கிந்திய கம்பெனியாரும், சின்ன
அரசியல் நிலைமையினால் சீனாவைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. சீனாவில்
25 வருடம் கடினமாகப் பணி செய்தும், சிலரை மட்டுமே கிறிஸ்துவுக்குள்
வழிநடத்த முடிந்தபோதிலும், வேதத்தைச் சீன மொழியில் மொழிபெயர்த்து
அழியாப்பணி செய்தார்.
கடினமான பணித்தளத்திலும் ஆண்டவருக்காகச் சாதனை புரிய நம்மில் எத்தனை பேர் ஆயத்தம்.
நன்றி: சிலுவை பாதை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum