மூன்று “ஐயோ” நகரங்கள்
Sat Jun 30, 2018 11:19 pm
மூன்று “ஐயோ” நகரங்கள்
கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ! …கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய். என்று மூன்று முக்கியமான நகரங்களைக்குறித்து இயேசு தன் பிரசங்கத்தின்போது பரிதவித்தார். ஐயோ! என்று சொன்னது அவர்களில் மனந்திரும்பாத நிலையைக் குறித்த பெரும் வருத்தத்தின் வெளிப்பாடே தவிர அவை அழிந்துபோகவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. அதாவது, இந்த நகரங்களை அவர் சபித்தார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், இந்த ஊர்களை தேவன் அதிகம் நேசித்தார். அவர் தன் சுவிசேஷப் பயணங்களை பொதுவாக, இம்மூன்று ஊர்களைமையமாகக் கொண்டே அமைத்துக்கொண்டார் என்பதிலிருந்தே இது விளங்கும்.
கோராசின்
அழகிய கலிலேயாக்கடலோர நகரம் இது. சுமார் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது. கோதுமை விளைச்சலுக்குப் பெயர்பெற்ற ஊராக இருந்திருக்கிறது. முதல்பேரான காணிக்கையாகப் படைக்கப்படத் தகுதியானஎன்று, சிறப்பான கோதுமை விளையும் ஊர் என்று யூதர்களின் வாழ்வியல் நூலான தால்முத்தில் குறிப்பிடப்படும் அளவுக்குப் பேர் பெற்றிருந்தது. கோராசின் ஊர் எப்படி அழிந்தது என்பது குறித்த சரியான தகவல் இல்லை. நான்காம் நூற்றாண்டில் நிலநடுக்கத்தில் அழிந்ததாகவும் மீண்டும் ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டாலும்கூட அதுவும் பின் காரணம் தெரியாமல் அழிந்துவிட்டது. 1905–07லும் பின்பு 1980-84 அகழ்வாராய்ச்சிகளில் சிதைவுகளாகச் சிறிது கோராசின் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வூரில், மத்தேயு 23:2ல் இயேசு குறிப்பிட்ட மோசேயின் ஆசனம் என்று கருதப்படும் ஒரே கல்லால் ஆன இருக்கை ஒன்று இங்குதான் அகழ்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாம் நுற்றாண்டுக்குமுன் இந்த நகரம் எப்படி இருந்தது எனபதற்கான தடயங்கள் பெரும்பாலும் கிடைக்கவில்லை.
பெத்சாயிதா
பெரும்பாலும் ஊழியப்பயணங்களிலேயே இருந்தாலும், பெத்சாயிதாவை கிறிஸ்து வசித்த ஊர் என்று சொல்லலாம். கிறிஸ்து பல அற்புதங்கள் செய்த நகரம் இது. கடலோர ஊரான இங்குதான் இயேசு கடல்மேல் நடந்தார்; கடலை அதட்டினார். ஆனால், பிற்காலத்தில, அகஸ்டஸ் சீசரின் மனைவியான ஜுலியலின் (ஜூலியஸ் சீசர் அல்ல) பெயரை இணைத்து பெத்சாயிதா ஜுலியஸ் என்றும் பின்னர் (வெறும்)” ஜூலியஸ்” என்றும் அழைக்கப்பட்டது. கிபி 66-74ல் நடந்த கலவரங்களில் பெருமளவில் பாதிக்கப்பட்டு, 3ம் நூற்றாண்டுக்குப்பின் அனேகமாக அழிவைக்காண ஆரம்பித்தது. 8 நூற்றாண்டில் அசீரியப்படையெடுப்பு ஒன்றில் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என்று வரலாற்றாளர் கருதுகின்றனர். இன்று அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ள இந்நகரம், கடலில் இருந்து 2 கிமீ தள்ளி இருந்தது. நிலத்தின் பரப்பில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களில், மீன்பிடிநகரமான இந்நகரம் கடலைவிட்டு நகர்ந்துவிட்டது ஆச்சரியம்தான்.
கப்பர்நகூம்:
கப்ஃபர் என்றால் எபிரேயத்தில் கிராமம் என்று பொருள்படும். நகூம் என்பது பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசியான நாகூமைக் குறிக்கிறது. முக்கோணநகரங்களில் கிறிஸ்துவால் தன் ஊழியங்களுக்கு மையமாகக் கொண்டு அதிகம் பயணிக்கப்பட்ட நகரம் கப்பர்நகூம். மிகப்பழமையானது. அதாவது கிமு 3000ங்களில் ஏற்படுத்தப்பட்டது. டெல் கினரத் என்ற ஒரு நகராட்சியின் கீழ் இருந்த இந்நகரின் அப்போதைய மக்கள்தொகை 1500ஆக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பிலிப்பு, அந்திரேயா, பேதுரு என்ற மூன்று சீஷர்களின் ஊரும் இந்தக் கப்பர்நகூம்தான்; மேலும் பேதுருவின் கல்வீடு இங்கு கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 5ம் நூற்றாண்டில் ஒரு எண்கோண வடிவ ஆலயம் ஒன்றும் பேதுருவின் வீட்டின் மேலாக அமைக்கப்பட்டிருந்தது. முதலில் 7ம் நூற்றாண்டில் பெர்சியர்களாலும், பின்னர் 7-12ம் நூற்றாண்டுகளில் அரேபியர்களாகும் அழிக்கப்பட்டது. இந்த ஊர் தற்போது மண்ணுக்கு சில அடிகளில இடிபாடுகளாகத்தான் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
கோராசின், பெத்சாயிதா, மற்றும் கப்பர்நகூம் ஆகிய இம்மூன்று ஊர்களும் “சுவிசேஷ முக்கோணம்” என்று அழைக்கப்பட்டது. அதாவது, இயேசுவாலும், அவரது சீடர்களாலும் அதிகம் ஊழியம் செய்ய்யப்பட்ட நகரங்கள் இவை. மூன்று திசைகளில் ஒரு முக்கோணமாக இணைக்கப்பட்டிருந்ததது. தொலைந்துபோன ஆடுகளான யூதர்களுக்கே முதலில் நற்செய்தி வந்தாலும், அம்மூன்றுமே மீட்பின் திட்டத்திற்கு எதிரான நகரங்களாக, வந்த மீட்பரை உதாசினப்படுத்தி கிறிஸ்துவின் ஏக்கப்பெருமூச்சுக்கு உள்ளாயின. இங்கு பெரும்பாலும் புறமத வழிபாட்டில் நாட்டம் காட்டினர் இந்தகர யூதர்கள் என்பது இன்னுமும் வேதனைக்குறியது. ஏராளமான அற்புதங்களை இயேசு செய்த கோராசின் நகரத்தில், கிரேக்கககடவுளருக்குக் கோயிலைவேறு கட்டினர் கோராசின் யூதர்கள்.
கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள். வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும். மத்தேயு 11:21,23
தன்னை ஏற்றுக் கொள்ளாதவர்களைக் குறித்த துயரமே இப்படி இயேசுவைக் கூறச் செய்தது. தமது பலத்த செய்கைகளில் அதிகமானவைகளைச் செய்யக் கண்ட பட்டணங்கள், மனந்திரும்பாமற் போனபடியினால், அவைகளை அவர் கடிந்து கொள்ளத்தொடங்கினார். (மத்தேயு 11:20) என்று வாசிக்கிறோம்.
யாருக்கு ஐயோ?
அருமை பெருமை வாய்ந்த ஊர்கள்தான். கிறிஸ்துவின் பாதம் பட்ட பெருமை, அவரது வார்த்தைகளைக் கேட்ட மற்றும் அற்புதங்கள் பல கண்டவைதான். ஆனால், மனந்திரும்புதல் இல்லை.! கிறிஸ்துவை அறிந்துகொள்ளவேண்டிய அறிவு இல்லை. அதற்க்கு மாறாக, மற்ற எல்லாப் பெருமைகளும் சூழ்ந்துகொண்டு அங்கு ஆவிக்குறிய நிலை என்று ஒன்றே நினைக்கப்படாமல், பரிதாபமாக இருந்துவிட்டது. அந்த நகரங்களுக்குச் சொல்லப்பட்டது அங்கு வாழ்ந்த மனிதர்களுக்குச் சொல்லப்பட்டதே! அதாவது, அது உதாசினஇருதயம் உடைய அனைவருக்கும் சேர்த்தே சொல்லப்பட்டதே!
இன்றும் எல்லா வசதிகளும் உண்டு, ஆலயங்கள் உண்டு, பேச வசனங்கள் உண்டு, ஆடல் பாடலுடன் ஆர்ப்பரிப்புகள் உண்டு, ஆனால், ஆவிக்குறிய நிலைமை என்ன? கேட்க இனிமையானதே வசனம், பேச உகந்ததே ஊழியம் என்று பெருமையாக “எல்லாம் நன்றாகவே போகிறது!” என்ற இறுமாப்பைக் காணும் நம் தேவன் “ஐயோ!!” என்று பரிதபிப்பது காதில் விழவில்லையோ?
ஏன் அழிந்தன என்று ஆச்சரியப்படவைக்கும் வகையில் வெறும் கட்டாஞ்சுவர்களாக, பூமிக்கடியில் புதைந்துபோய் மறக்கப்பட்ட நகரங்களாக மண்மேடுகளாகிவிட்டன இந்நகரங்கள். நம் வாழ்க்கையும் இப்படி ஒரு நிலையில் இருக்கக்கூடுமோ?
கொசுறு தகவல்:
தீரு மற்றும் சீதோன் (தற்போது சைதா என்ற பெயரில்) நகரங்கள் பல்வேறு மாற்றங்களைக் காலப்போக்கில் சந்தித்தாலும், அவை இன்றும் லெபனான் நாட்டில் இருக்கிறன. இதில் சீதோன் அந்தாட்டின் மூன்றாவது பெரிய நகரம். பல அழிவுகளைச் சந்தித்த எருசலெம் முதல் பல தொன்மையான வேதகால நகரங்கள் இன்றும் வளர்ச்சி அடைந்து நன்றாகவே உள்ளன. எனவே, நகரங்கள் காலப்போக்கில் அழிவது சகஜம் என்று நாம் எளிதில் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.
Thanks: Benny Alexander
Permissions in this forum:
You cannot reply to topics in this forum