சுவையான வெஜ் பிரியாணி ரெடி
Mon Oct 31, 2016 7:28 pm
தேவையானபொருட்கள்
பாசுமதி அரிசி (அ) சாப்பாட்டு அரிசி – 2 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – ஒன்று
கேரட், பீன்ஸ், உருளை – கால் கிலோ
மீல் மேக்கர் – சிறிது
தனி மிளகாய்த் தூள் – 1 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் (இஞ்சி அதிகமாக) – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
பட்டை – சிறு துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – ஒன்று
பிரிஞ்சி இலை – ஒன்று
பொடிக்க:
மிளகு – 10
சீரகம் – அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – அரை தேக்கரண்டி
செய்முறை
அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். மீல் மேக்கரில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்து உப்பி வந்ததும் இறக்கி தண்ணீர் வடித்து ஒன்றிரண்டாக நறுக்கவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
வதக்கியவற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கேரட், பீன்ஸ், உருளை, மீல் மேக்கர் ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
காய்கறிகளுடன் தனி மிளகாய்த் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
பின்னர் புதினா, கொத்தமல்லி சேர்த்து பிரட்டவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து ஊற வைத்த அரிசியை சேர்த்து மெதுவாக அரிசி உடைந்து விடாமல் கிளறவும்.
அரிசி, காய்கறிக் கலவையில் தக்காளியும் சேர்த்து கிளறவும்.
அதில் தேவையான தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி பொடி செய்த மிளகு, சீரகத்தை சேர்க்கவும். (தண்ணீரின் அளவு பாசுமதி அரிசியாக இருந்தால் ஒரு கப்பிற்கு 1 1/2 கப் என்றும், சாப்பாட்டு அரிசியாக இருந்தால் ஒரு கப்பிற்கு 2 கப் என்றும், காய் வேக கூடுதாலாக அரை டம்ளர் தண்ணீரும்வைக்கவும்.) நன்கு கிளறி விட்டு குக்கரை மூடி தீயை அதிகமாக வைக்கவும்.
குக்கரில் ஆவி வரும் போது சிம்மில் வைத்து ஆவி அடங்கியதும் திறந்து கரண்டியால் அடி வரை நன்கு கிளறி மீண்டும் மூடி தீயை அதிகமாக வைத்து வெயிட் போடவும். ஒரு விசில் வந்தவுடன் இறக்கி விடவும். (இப்படி செய்வதால் அடி பிடிக்காமல் சீக்கிரம் வெந்து உதிரி உதிரியாக வரும்.)
ஆனியன் ரைத்தாவிற்கு வெங்காயத்தை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து நன்கு கிளறி அப்படியே வைக்கவும். பரிமாறும் போது தயிர் சேர்த்து பரிமாறவும்.
சூடான சுவையான வெஜ் பிரியாணி ரெடி.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum