கறுத்த கறி
Fri Sep 23, 2016 7:57 am
கறுத்த கறி
‘‘முன்பெல்லாம் குழந்தை பெற்றவர்களுக்கு, பால் சுரப்பதற்காக ‘கறுத்தக் கறி’யை தினமும் மதியம் சிறிது சாதத்தோடு ஒரு மாதம் கட்டாயம் சாப்பிடச் சொல்வார்கள். இதே குழம்பை வாரம் ஒரு முறை குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் கட்டாயம் சாப்பிடக் கொடுப்பார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் பெற்று, அஜீரணம், பித்தக் கோளாறுகள் வாயுத்தொல்லை நீங்கி உடல் நலம் பெறும். இந்தக் குழம்பை உங்களுக்காக பத்திய சமையலாகச் சொல்லவிருக்கிறேன்” என்கிற தகவலோடு, இந்த இதழில் இருந்து தன் கைப்பக்குவத்தில் தொடங்குகிறார், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த இல்லத்தரசி பாஞ்சாலி.
தேவையானவை:
ஒமம் - கால் டீஸ்பூன்
சுக்கு - சிறிய துண்டு
மிளகு - கால் டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சின்னவெங்காயம் - 6
புளி - ஓர் எலுமிச்சை அளவு
பூண்டுப்பல் - 20
தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
கறிவேப்பலை - சிறிதளவு
சைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால் இத்துடன் - 4 தக்காளிப் பழங்கள்
அசைவப் பிரியர்கள் - அரை கிலோ திருக்கை மீன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் அரைக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு பெருங்காயம் சேர்த்துப் பொரித்து தனியாக எடுத்து வைக்கவும். சுக்கைத் தட்டி வைத்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் ஒமம், சுக்கு, மிளகு, கடுகு, மஞ்சள்தூள், வெங்காயம், 10 பூண்டுப்பல் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து பச்சை வாசனை போக வறுத்து ஆறவிடவும். வறுத்தவற்றை எல்லாம் சிறிது தண்ணீர் விட்டு நைஸாக மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
சைவப்பிரியர்கள், தக்காளியை நன்கு கழுவி மண்சட்டியில் சேர்த்து கையால் நன்கு பிசையவும். இனி அரைத்தவற்றை எல்லாம் மண்சட்டியில் சேர்த்து போதுமான அளவு தண்ணீர் விட்டு (குழம்பு கெட்டியாக இருக்க வேண்டும்) விட்டு கலக்கவும். புளியைக் கரைத்து மண்சட்டியில் கலவையில் ஊற்றவும். மண்சட்டியை அப்படியே அடுப்பில் ஏற்றி மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
அசைவப்பிரியர்கள் மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இனி சைவத்துக்கு சொல்லியது போலவே மண்சட்டியில் அனைத்தையும் விட்டு கலக்கவும். மண்சட்டியை அப்படியே அடுப்பில் ஏற்றி மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். அதிகம் கொதித்தால், மீன் உடைந்து போய் விடும். இறக்குவதற்கு ஐந்து நிமிடம் முன்பாக ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு:
அந்தக் காலத்தில் மஞ்சள்தூளுக்குப் பதில் விரலிமஞ்சளை சிறிதளவு உடைத்துப் போட்டு எண்ணெயில் வறுத்து எடுப்பார்கள். மேலே சொன்ன ரெசிப்பிக்களை எல்லாம் அம்மியில் அரைத்தே சமைப்பார்கள். குழந்தை பெற்ற பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிளகாய்த்தூள் மற்றும் காய்ந்த மிளகாயைக் குறைத்து மிளகை அதிகரித்து கொடுத்தால், உடல் நல்ல வலிமை அடையும். எங்கள் கிராமத்தில் அடுக்குத்தெரச்சி (திருக்கை மீன்) என்கிற மீனைத்தான் இந்தக் குழம்புக்கு உபயோகப்படுத்துவார்கள். பூண்டுப்பல்லைப் பொறுத்தவரை இதற்கு சிறியதாக இருக்கிற பூண்டுகளே அதிக ருசியைக் கொடுக்கும். தக்காளியை வதக்கிச் சேர்க்கக் கூடாது. இந்தக் குழம்புக்கு அஸ்திவாரமே பூண்டுதான். உங்களுக்கு பூண்டு மிகவும் விருப்பம் என்றால், இங்கே சொல்லியிருக்கும் அளவை விட அதிகமாகக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum