உங்கள் அந்தரங்கத்தை படம் பிடிக்கும் ரகசிய கேமராக்கள்!
Sat Sep 17, 2016 7:41 pm
உங்கள் அந்தரங்கத்தை படம் பிடிக்கும் ரகசிய கேமராக்கள்!
எச்சரிக்கை கட்டுரை!
-------திரு.ஆர்.வரதராஜ் M.A,M.L,M.B.A.,(முன்னாள் காவல்துறை அதிகாரி)
தலைவர் நே.ப.தி.மு.க. (N.P.T.M.K)
நாம் இன்று நவீன தொழில் நுட்பயுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொழில் நுட்பம் நமக்கு எத்தனையோ நவீன யுக்திகளை பரிசாக கொடுத்திருந்தாலும் வளர்ந்து வரும் அந்த தொழில் நுட்பத்தால் நாம் சில அசௌகரியங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை.
இன்று அலுவலகம், விமான நிலையம், பஸ் நிலையம், ரயில் நிலையம், வணிக வளாகங்கள் அனைத்திலுமே பாதுகாப்பு கேமராக்கள் ( Security Cameras ) நம்மை படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த பாதுகாப்பு கேமராக்கள் நமக்கு பாதுகாப்பை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் குற்றம் செய்பவர்களை கண்டு பிடிப்பதற்கும் மிகவும் உதவியாக இருப்பது உண்மையே!
ஆனால் இந்த நவீன யுகத்தில் நமது அந்தரங்கத்தைப் படம் பிடிக்க பல குற்றவாளிகள் ரகசிய கேமராக்களை (Spy Cameras) பயன்படுத்தி அதன் மூலம் பலரது அந்தரங்கத்தை வாட்ஸ் அப்பிலும் இணைய தளத்திலும் வெளிச்சம் போட்டுக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
அப்படிப்பட்ட இந்த ஆபத்தான ரகசிய கேமராக்களிலிருந்து உங்கள் அந்தரங்கத்தை காத்து கொள்வது எப்படி? என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் எண்ணத்தில் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.
ரகசிய கேமராக்கள் எங்கெங்கு பொருத்தப்படுகின்றன:
பெரும்பாலான ரகசிய கேமராக்கள் வீடுகளிலும் படுக்கை அறைகளிலுமே பொருத்தப்படுகின்றன. சென்னை போன்ற நகரங்களில் கணவனை சந்தேகப்படும் மனைவி, மற்றும் மனைவியை சந்தேகப்படும் கணவர் ஆகியோர் இது போன்ற ரகசிய கேமராக்களை வீடுகளிலும் படுக்கை அறைகளிலும் பொருத்தி அந்த வீடியோக்க களையும் போட்டோக்களையும் விவாக ரத்து வழக்குகளில் நீதிமன்றங்களில் உபயோகப்படுத்துகின்றனர்.சுவாமி நித்யானந்தாவின் படுக்கை அறையிலே பிளவர் வாஷில் ( flower wash ) ரகசிய கேமராக்களை பொருத்தியே அவரது அந்தரங்க படுக்கையறை காட்சிகள் வெளியிடப்பட்டன. வீடுகளில் வேலை செய்ய வரும் எலெக்ட்ரிஷியன், கார்பெண்டர் ஆகியோர் வீடுகளில் வேலை செய்யும் போது அவர்களை நீங்கள் கண்காணிக்க வேண்டும் காரணம் நான் சந்தித்த ஒரு சில வழக்குகளில் இது போன்ற எலெக்ட்ரிசியன்களும், கார்பென்டர்களும் உரிமையாளருக்கு தெரியாமல் ரகசிய கேமராக்களை பொருத்தி அந்த வீடியோக்களை இணையதளத்தில் போட்ட சம்பவங்கள் நடந்துள்ளது.
நான் சந்தித்த இன்னொரு வழக்கில் குளியலறையின் சிறிய துளையில் மொபைல் போனை வைத்து ஒரு பெண்ணின் குளியலறைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு இணைய தளத்தில் போடப்பட்டது. எனவே பெண்கள் குளியலறையிலுள்ள சிறு துளைகளைக் கூட கண்காணித்து அவற்றை அடைத்து விடுவது அவர்களது பாதுகாப்பிற்கு மிகவும் நல்லது.
வெளியிடங்களில் உங்களைக் குறிவைக்கும் ரகசிய கேமராக்கள்:
நீங்கள் லாட்ஜ்களில் தங்கும் பொது ரகசிய கேமராக்கள் உங்களை குறிவைக்கலாம். பிரபல தமிழ் நடிகை ஒருவரின் குளியலறைக் காட்சிகள் அவர் லாட்ஜில் தங்கிய போது ரகசிய கேமராவில் படம் பிடிக்கப்பட்டு இணையதளத்தில் வெளிவந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.
இன்னோரு வழக்கில் ஒரு புது மனத் தம்பதியினர் தங்கள் முதல் இரவை ஒரு நட்சத்திர ஓட்டலில் கொண்டாடினர். ஆனால் சில நாட்களில் அவர்களது முதலிரவுக்கு காட்சிகள் இணையதளத்தில் வெளிவந்தது.
விசாரணையில் இந்த விஷயத்தை முன் கூட்டிய தெரிந்து கொண்ட ஒரு எலெக்ட்ரிஷியன் அந்த அறையின் ஏ.சி.மெஷினில் ரகசிய கேமராவை பொருத்தி படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
எனவே லாட்ஜ்களிலும் ஓட்டல்களிலும் தங்கும் போது இது போன்ற ரகசிய கேமராக்களை கண்காணிப்பது அனைவர்க்கும் நல்லது.
இது போன்று தியேட்டர்களிலும், வணிக வளாகங்களிலுள்ள பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்ட சம்பவங்களும் நம் நாட்டில் நடந்துள்ளன.
ரகசிய கேமராக்கள் பொருத்தப்படும் பொருட்கள் எவை:
ரகசிய கேமராக்கள் கீழே குறிப்பிட்டுள்ள பொருட்களில் பொருத்தப்படலாம்.
பொம்மைகள், கண்ணாடி, சுவர் கெடிகாரம், அலாரம் கெடிகாரம், தண்ணீர் பாட்டில்கள், பிளவர் வாஷ், எலக்ட்ரிக் பிளக் ஆகியவற்றில் பொதுவாக பொறுத்தப்படுவதுண்டு. உங்கள் வீட்டிலோ அல்லது படுக்கை அறையிலோ உங்களுக்குத் தெரியாமலோ இது போன்ற பொருட்கள் இருந்தால் அவற்றை உடனே அகற்றி விடுங்கள்.
ரகசிய கேமராக்களை கண்டுபிடித்து அகற்றுவது எப்படி?
பெரும்பாலான ரகசிய கேமராக்கள் வயர் இல்லாமல் பேட்டரியில் இயங்குபவை. அதனால் இப்படிப்பட்ட ரகசிய கேமராக்களை வெறும் கண்களால் கண்டு பிடிப்பது என்பது மிகவும் கடினம். ரகசிய கேமெராக்களை கண்டுபிடிக்க ஒரு எளிய வழி உண்டு.
அறைகளிலுள்ள அத்தனை விளைக்கையும் அணைத்து விட்டு டார்ச் லைட்டேயே அல்லது மொபைல் போன் ஒளியையோ ஒவ்வொரு இடமாக செலுத்திப் பார்த்தோமானால் ரகசிய கேமராவின் சிறிய லென்ஸ் நமது கண்களுக்கு பளிச்சென்று தெரிந்து விடும்.
இரண்டாவதாக ரகசிய கேமராக்களை கண்டு பிடிக்க நவீன செல்போன்களில் புதிய வசதி உண்டு.
ஐ-போனில் கேமரா டிடக்டர் என்ற வசதியும், ஆண்ட்ராய்ட் போனில் கிளிண்ட் பைண்டர் (glint finder ) என்ற வசதியும் உண்டு. இதை பயன்படுத்தி நம்மைச் சுற்றியுள்ள ரகசிய கேமராக்களை எளிதில் கண்டு பிடித்து விடலாம்.
இது போக ரகசிய கேமராக்களை கண்டு பிடிப்பதற்கென்றே கேமரா டிடக்டர் என்ற ஒரு கருவி உண்டு. இந்தக் கருவியை அறையின் எல்லாப் பகுதிகளிலும் சுழற்றினால் ரகசிய கேமராக்கள் இருக்கும் பட்சத்தில் இந்தக் கருவி பிப் சத்தத்தை எழுப்பி ஒரு ஒளிக்கதிரையும் உண்டாக்கும். இதன் மூலம் ரகசியக் கேமராக்களை நாம் எளிதில் கண்டு பிடித்து விடலாம். . இந்தக் கருவிகளை ருபாய். 1000 லிருந்து 10,000 வரை இணைய தளத்தில் வாங்கி கொள்ளலாம்.
ரகசிய கேமராக்களை பற்றி சட்டம் என்ன சொல்கிறது ?
ரகசிய கேமராக்களை உபயோகித்து பெண்களை படம் பிடித்தால் இந்திய தண்டனைச் சட்டம் 354 C மற்றும் 354 D ன் படி 7 வருட சிறைத் தண்டனை உண்டு. ஆண்களுக்கு எதிராக படம் பிடித்தால் ஐ.டி Act பிரிவு 72 ன் படி சிறைத் தண்டனை உண்டு. எனவே ரகசிய கேமராக்களால் உங்கள் அந்தரங்கம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டால் இந்தப் பிரிவுகளில் கீழ் காவல் துறையிடம் நீங்கள் புகார் கொடுக்கலாம்.
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
இது போன்ற சமுதாய சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்து படிக்க விரும்பினால் கீழ்க்கண்ட link ஐ Click செய்து https://www.facebook.com/varadarajpublicfigure/?fref=ts எனது பக்கத்திலுள்ள Like பட்டனை அழுத்துங்கள்.
இப்படிக்கு
- திரு.ஆர்.வரதராஜ் M.A,M.L,M.B.A.,
(முன்னாள் காவல்துறை அதிகாரி)
தலைவர்
நே.ப.தி.மு.க. (N.P.T.M.K)
தமிழ்நாட்டு ஊழல் அரசியலுக்கு எதிரான இயக்கம்
- செல்போனில் உங்கள் அந்தரங்கத்தை படம் பிடிப்பவரா? எச்சரிக்கை?
- எச்சரிக்கை!!! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கேமராக்கள் இப்படியும் இருக்கலாம்!!!
- அந்தரங்கத்தை விழுங்கும் ரகசிய கண்கள்: அறிவது எப்படி?
- செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு !!!
- குழந்தைகளுக்கு பாம்பு பிடிக்கும் பயிற்சி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum