எச்சில்... 7 உண்மைகள்!
Wed Aug 31, 2016 7:46 am
ரத்தம் சிந்தினான்.. கண்ணீர்விட்டுக் கதறினான்... வியர்வை சிந்தப் பாடுபட்டான் என்ற வரிகளில் இருக்கும் கவித்துவமும் உயர்வுநவிற்சியும் எச்சிலுக்குக் கிடைப்பது இல்லை. ஆனால், இந்த மூன்றையும்போலவே எச்சிலும் மனித உடலுக்கு அவசியமான சுரப்புகளில் ஒன்று. எச்சிலில் என்னென்ன உள்ளன...
1.எச்சில் என்பது 99 சதவிகிதம் நீரால் ஆன ஒரு திரவம். இதில் வைட்டமின்கள், மினரல்கள், ஹார்மோன் சுரப்புகள், என்சைம்கள், அமிலங்கள், நல்ல பாக்டீரியா உட்பட என்னென்ன உணவுப்பொருட்கள் எல்லாம் நாம் வாயில் இடுகிறோமோ அதன் சத்துக்கள் அனைத்தும் கலந்திருக்கும்.
2. ம்யூகின்ஸ் (Mucins) எனப்படும் உயவுச்சுரப்புத்தான் எச்சிலில் பிரதானமாக உள்ளது. புரோட்டின் மூலக்கூறுகளால் ஆன இது, நுண்ணிய மைரோஸ்கோபிக் பால்பேரிங்களைப் போல செயல்படுகின்றன. உணவை மெல்லவும், விழுங்கவும், பேசவும், பற்களை ஈறுகளோடு வலுவாகப் பிணைக்கவும், பற்குழி, பற்சொத்தை போன்றவற்றில் இருந்து காக்கும் நல்ல பாக்டீரியா, அமிலங்கள் வாயிலேயே தங்கி இருக்கவும் இது உதவுறது.
3.எச்சில் உலர்தல் பிரச்னை இருப்பவர்களுக்கு பற்கள், ஈறுகள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில், எச்சில்தான் பற்களையும் ஈறுகளையும் வாயில் உள்ள தாதுஉப்புக்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கிறது.
4. நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களையும், ஸ்டார்ச்சையும், கொழுப்பையும் உடைத்து செரிமானத்துக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கான என்சைம்கள் எச்சிலில் உள்ளன. இவ்வாறு, உணவை எச்சில் சுலபமாகக் குழைத்துக் கூழாக்குவதால், உணவை விழுங்கும் திறனும் செரிமானிக்கும் திறனும் சுலபமாகின்றன.
5.நாவின் சுவை நரம்புகள் உணவின் ருசியை உணர்ந்ததும், அதன் மூலக்கூறுகளின் பண்புக்கு ஏற்ப எச்சில் சுரக்கிறது. இதனால், உணவுப்பொருள் எளிதாகக் குழைவாக்கப்பட்டு, செரிமானத்துக்குத் தயாராகிறது.
6.எச்சிலில் நுண் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபாடி) அதிகம் உள்ளது. தோல் செல்களின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான இந்த ஆன்டிபாடி, எச்சிலில் அதிகம் உள்ளதால்தான் வேறு இடங்களில் ஏற்படும் புண்களைவிட, வாயில் ஏற்படும் புண்கள் விரைவில் குணமாகிவிடுகின்றன.
7.ஆல்கஹால், புகைபிடித்தல், போதைப்பொருட்கள் பயன்படுத்துதல் போன்றவற்றை எச்சிலைப் பரிசோதிப்பதன் மூலம் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். நோய்களைக் கண்டறியவும் எச்சில் பயன்படுத்தப்படுகிறது.
இத்தனை வேலைகளைச் செய்யும் எச்சில் என்பது இயற்கை மனிதனுக்குக் கொடுத்த அருங்கொடை அமுதம். இனியும் எச்சை என்பதை மட்டமாக நினைக்கமாட்டீங்கதானே...
- இளங்கோ கிருஷ்ணன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum