ஓய்கோஸ் ஊழியம் செய்த எப்பாப்பிரா!
Thu Mar 21, 2013 8:31 pm
இந்தக் கடைசிக் காலத்திலே தேவன்
அப்போஸ்தலர் கால எழுப்புதலை அகில உலகத்திலும் ஊற்றிக்கொண்டிருக்கிறார்.
அப்போஸ்தலர் கால ஊழியத்தின் மிக முக்கிய முறையானது வீடுகள் தோறும் அப்பம்
பிட்டு, வீடுகள் தோறும் ஜெபக்கூட்டங்கள் நடத்தி, தன் வீட்டின் அருகில்
இருப்பவர்களைக் கர்த்தருக்கென்று ஆதாயம் செய்து பல லட்சக்கணக்கான ஜனங்களை
ஆதாயப்படுதுவதாகும். இந்தத் திட்டத்தை முதலாவது வெளிப்பாடாகப் பெற்றுக்
கொண்டவர் கொர்நெலியு என்ற தேவ மனிதர்.
அவருடைய வீட்டிற்கு பேதுரு அப்போஸ்தலன்
வந்தபோது கொர்நெலியு வீட்டிற்கு முன்னால் பெரிய மேடை போட்டு
ஒலிபெருக்கிக் குழாய்களைக் கட்டி ஜனங்களுடைய செவியைப் பிய்த்துச்
செல்லும்வண்ணம் உயர்ந்த சத்தத்திலே ஒலிபெருக்கியை இயக்கி வாத்தியங்களை
மீட்டி விளம்பரங்களைச் செய்து பொதுக் கூட்டங்களை அவர் ஏற்பாடு செய்யவில்லை.
அதற்குப் பதிலாக தன வீட்டிற்குள் ஒரு சிறிய ஜெபக்கூட்டத்தை அவர் ஆயத்தம்
செய்தார். அந்த ஜெபக்கூட்டத்தின் மூலம் புறஜாதிகளுக்கு விசுவாசக் கதவை
தேவன் திறந்தார் என்று நாம் வேதப் புஸ்தகத்திலே திட்டவட்டமாய்
வாசிக்கிறோம். இவ்விதமாக கொர்நெலியு வீட்டிலே அவர் ஏற்பாடு செய்திருந்த
கூட்டத்திற்குப் பெயர் ஓய்க்கோஸ் ஊழியம் என்பதாகும்.
“மறு நாளிலே செசரியா
பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நெலியு தன் உறவின் முறையாரையும்
தன்னுடைய விசேஷித்த சிநேகிதர்களையும் கூட வரவழைத்து
அவர்களுக்காகக் காத்திருந்தான்.” (அப்போஸ்தலர் 10:24).
“கொர்நெலியுவின் உறவின்
முறையாரும் விசேஷித்த சிநேகிதரும் கூடி வந்த வீட்டிலே வசனத்தைக் கேட்ட
யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.” (அப்போஸ்தலர் 10:44).
இவ்விதமாக நடந்த இந்த ஊழியத்தின் மூலம்
புறஜாதி சபையானது ஸ்தாபிக்கப்பட்டது. புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவு
திறக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் அந்தியோகியாவிலே புறஜாதி சபை
ஸ்தாபிக்கப்பட்டது. அந்த அந்தியோகியாவிலிருந்துதான் அகில உலகத்திற்கும்
சுவிசேஷம் எடுத்துச் செல்லப்பட்டது. ஒரு பெரிய ஊழியத்தின் ஆரம்பம் ஒரு
சிறிய ஊழிய அற்பமான ஆரம்பமாகும். அந்த ஊழியத்திருக்குப் பெயர்தான்
ஓய்க்கோஸ் ஊழியம். வேதாகமத்தில் எழுதப்பட்ட கிரேக்க மொழியிலே உறவின்
முறையாருக்கும் விசேஷித்த சிநேகிதருக்கும் “ஓய்க்கோஸ்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த முறைமையின் படியாக இன்று விசுவாச
மக்கள் அவரவர் வீட்டை ஆண்டவருடைய ஊழியத்திற்காய் திறந்து வைத்து வாரத்தில்
ஒருமுறையாகிலும் தன்னுடைய உறவின் முறையாரையும், விசேஷித்த சிநேகிதர்களையும்
தன் வீட்டிற்க்கு அழைத்து அவர்களுக்கு ஒரு பிஸ்கட்டும் ஒரு தேநீரும்
வழங்கி ஒரு பாட்டுப்பாடி ஜெபம் பண்ணி கர்த்தருடைய வார்த்தையை அவர்களுக்குப்
போதிப்பார்கள் என்று சொன்னால் அகில உலகமும் ஒரு சில வருஷத்தில்
சுவிசேஷத்தால் நிரம்பி இரட்சிக்கப்பட்ட பரிசுத்தக் கூட்டமாய் உருவாகும்
என்று பல வேத பண்டிதர்கள் கணக்கிட்டு கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த ஓய்க்கோஸ் ஊழியத்தை உண்மையாய்ச்
செய்கிற பல சபைகள் அசாதாரண அளவிலே ஆச்சரியப்படத்தக்க விதத்திலே
லட்சக்கணக்கான ஆத்துமாக்களை ஆதாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த
வெளிப்பாட்டை எப்பாப்பிரா பெற்றதினாலே தன் உறவின் முறையாருக்கும் தன்
விசேஷித்த சிநேகிதருக்கும் அவர் ஊழியத்தைச் செய்து கர்த்தருடைய வேதப்
புஸ்தகத்திலே நிலையான இடத்தைப் பெற்றிருக்கிறார். அன்பான விசுவாச மக்களே!
அருமையான கர்த்தருடைய ஊழியர்களே! நமது ஊழியம் அந்தரங்க சீஷத்துவ ஊழியமாக
வீடுகள் தோறும் செய்யும்படி நாம் பயிற்றுவிக்கப்பட்டு போதிக்கப்பட்டு அதை
செயல்வடிவிலே கொண்டு வருவோமானால் மகா பெரிய எழுப்புதலும் ஆத்துமா
அறுவடையும் நம் பட்டணத்திலே காணப்படும் எனபது நிச்சயம்.
நன்றி – பாஸ்டர் மா. ஜான்ராஜ் , ”ஜெப வீரன் எப்பாப்பிரா ” ஆசிரியர்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum