புதிய பதிப்பில் வெளியான பென்ஹர்!
Mon Aug 22, 2016 1:59 pm
உலக சினிமாக்களில் அழிக்கமுடியாத தடத்துடன் மக்களின் மனதில் பதிந்துசென்ற ஒரு படம் பென்ஹர்.
1880ல் எழுதப்பட்ட “பென்-ஹர்: எ டேல் ஆஃப் த கிறைஸ்ட்” என்ற நாவலை அடிப்படையாககொண்டு இதுவரை நான்கு முறை பென்ஹர் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 1959ல் வெளியான பென்ஹர் சினிமா பிரியர்களால் காவியமாக விரும்பப்படுகிறது. அந்த ஆண்டில் 11 ஆஸ்கர் விருதினையும் அள்ளியது. சாதனைகள் பல படைத்த பென்ஹர், நவீன தொழில்நுட்ப வசதியுடன் ஐந்தாவது முறையாக உருவாகியிருக்கிறது.
இனி படத்தின் கதை....
கதை ரோமில் நடக்கிறது. இயேசு வாழ்ந்த காலம் அது. அந்த ரோமின் படைத்தளபதியாக இருக்கும் பால்ய நண்பன் சாட்டும் குற்றச்சாட்டினால் அந்த ஊரின் யூதபிரபுவாக இருக்கும் ஜூடோ பென்ஹர், தேசதுரோக கைதியாகிறார்; கப்பலில் வேலைசெய்யும் அடிமைகளுள் ஒருவராக அனுப்பப்படுகிறார். அடிமையாக சென்ற எவரும் மீண்டும் திரும்பிவரமுடியாது, ஆனால் மீண்டுவரும் பென்ஹர் தன் பால்ய நண்பனை பழிதீர்த்தாரா, பென்ஹரின் மனைவி, தங்கை, தாயார் மூவரின் நிலை என்னவானது என்பதே கதை
இயேசு வாழ்ந்த காலத்தில் நிகழும் கதையென்பதால், பென்ஹர் நாவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தவிர, இந்த படத்தில் வரும் குதிரைப் பந்தயக் காட்சிகள் உலகளவில் பேசப்பட்டவை.
1925-ம் ஆண்டு வெளியான சைலென்ட் படமும் சரி, ஆஸ்கர் விருதுகளை அள்ளிய 1959-ம் ஆண்டு வெளியான படமும் சரி மிகவும் நீளமானவை. 1959-ம் ஆண்டு வெளியான படம் 4 மணி நேரம் வரை ஓடும். ஆனால், அதில் இருக்கும் ஒரு சுவாரஸ்யம் கூட இதில் இல்லை என்றே சொல்ல முடிகிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகள்கூட ஒரிஜினல் பென்ஹரை ஸ்பூஃப் செய்கிறதோ என எண்ணும் நிலையில் தான் இருக்கிறது
எந்தவொரு தொழில்நுட்ப வசதியும் இல்லாமல், முந்தைய படங்களில் வந்த குதிரைப் பந்தயக் காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. ஆனால், அதன் பாதிப்பில் பல காட்சிகள் கடந்த 20 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு விட்டது. அதை, எதிர்பார்த்து காத்திருந்தால், மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது.அதே போல், அந்த போர்க்களக் கப்பல் காட்சியும். பழைய படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும். எடிட்டிங், சிஜி, இசை என பலவற்றிலும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.
கதை ஓட்டத்தில், போகிற போக்கில் இயேசு வந்து செல்வதும், அனைவருக்கும் அன்பை மட்டுமே பரிசாக தரவேண்டும் என்று பென்ஹருடன் உரையாடும் காட்சிகளும் படத்திற்கான வலிமையை கூட்டுகிறது.
பென்ஹரை சாட்டையால் அடித்து கூட்டிச்செல்லும்போது, இயேசு குடிக்க தண்ணீர் கொடுப்பார், அதேபோல, இயேசுவை சிலுவையில் அறைய கொண்டு செல்லும் போது பென்ஹர் தண்ணீர் கொடுக்கமுயலும் காட்சியில், “ என் மக்களுக்காக நான் விரும்பி ஏற்றுக்கொள்ளும் தண்டனை” என்று தண்ணீரை நிராகரிப்பார். முரணான இந்த காட்சியே படத்திற்கான எமோஷனல் வெற்றி.
ஜூடோ பென்ஹராக ஜாக் ஹஸ்டன் நேர்த்தியாக நடித்திருக்கிறார். யூத பிரபுவாக இருக்கும் பென்ஹர், ஐந்துவருட அடிமை வாழ்க்கையில் நிதானத்தையும், தப்பித்து தன் நண்பனையே பழிவாங்கும் இடம் என்று வாழ்ந்திருக்கிறார்.
பென்ஹரின் நண்பனான Toby Kebbell, தான் காதலிக்கும் பெண் என்று கூட பார்க்காமல், பென்ஹரின் தங்கையையும், தாயையும் தொழுநோய் சிறையில் அடைப்பது என சோகத்தையும், மூர்க்க குணத்துடன் இருப்பதும், திருந்தி இறுதியில் பென்ஹரிடம் மன்னிப்பு கேட்கும் இடமென்றும் சென்டிமென்ட்டில் நொறுக்குகிறார். படத்தின் இன்னொரு பலம் மார்கன் ஃப்ரீமேனின் கச்சிதமான நடிப்பு.
காவிய படைப்பென்றாலும், மீண்டும் மீண்டும் இயேசுவின் பெருமையை உலகிற்கு படத்தின் மூலம் பறைசாற்றுகிறது ஹாலிவுட் சினிமா.
தற்போது வெளியான பென்ஹர் பார்த்தவர்கள், 1959-ம் ஆண்டு வெளியான பென்ஹர் திரைப்படத்தைப் பார்க்கவும். பழைய பென்ஹர் பார்த்தவர்கள் , இதைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum