பைபிள் ஒரு நூலகம்
Thu Aug 11, 2016 5:39 pm
இன்றைய தொழில்நுட்ப உலகத்தினால் அழிந்து கொண்டிருக்கும் விஷயங்களில் முக்கியமானது நூலகம். முன்பெல்லாம் எந்த ஒரு விஷயத்தைக் குறித்த தகவல் வேண்டுமானாலும் நூலகங்கள் தான் ஒரே வழி. ஆனால் இன்று நிலமை அப்படி இல்லை. இணையம் தரும் வசதிகள் நூலகத்தின் தேவையை வெகுவாகக் குறைத்திருக்கின்றன.
எதிர்காலத்தில் நூலகம் என்பதை புத்தகங்கள் நிறைந்திருக்கும் ஒரு கட்டிடம் என புரிந்து கொள்வதே சிரமமாய் இருக்கும். அதைத் தாண்டி டிஜிடல் மயமான ஒரு தளம். அங்கே நூல்கள் நிரம்பியிருக்கும் என புரிந்து கொள்வதே எளிமையாய் இருக்கும். நூலகங்களைப் பார்க்கவும், நுழையவும், படிக்கவும் செய்கின்ற கடைசி தலைமுறை நாமாக இருந்தாலும் அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. எது எப்படியோ, நூலகங்களும் அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் வாசிப்பு அனுபவமும் பல வகைகளில் நமக்கு பயனளிக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. நூலகம் தரும் பயன்களில் முக்கியமானவை எவை
1. புதியவற்றைப் போதிக்கிறது.
புதிய விஷயங்களை நூலகங்கள் கற்றுத் தருகின்றன. கூடவே, தெரிந்த விஷயங்களைக் குறித்து ஆழமான அறிவைப் பெற்றுக் கொள்ளவும் நூலகங்கள் பயன்படுகின்றன.
வீரரைவிட ஞானமுள்ளவரே வலிமை மிக்கவர்; வலிமை வாய்ந்த வரைவிட அறிவுள்ளவரே மேம்பட்டவர் என்கிறது
நீதிமொழிகள் 24:5. உடல் வலிமைக்காக நாம் செலவிடுகின்ற நேரத்தையும், அறிவை வளர்ப்பதற்காக நாம் செலவிடும் நேரத்தையும் நாம் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். அறிவு வளர்ச்சிக்காய் சரியான அளவு நேரத்தைச் செலவிடுகிறோமா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
2. தனிமையைத் தருகிறது.
நூலகம் தனிமையான நேரத்தைத் தருகிறது. புத்தகங்களோடு அமர்ந்திருக்கும் போது அவை நம்மை
புதிய உலகிற்குள் அழைத்துச் செல்கின்றன.
தனிமை நம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. இயேசு தனது மண்ணுலக வாழ்க்கையின் போது அடிக்கடி தனிமை தேடிச் சென்றதை விவிலியம் கூறுகிறது. அந்தத் தனிமையான நேரங்களில் அவர் தந்தையோடு உரையாடினார். தனிமை ஒரு ஆத்மார்த்தமான உரையாடலுக்கான களம் என்பதை இயேசு தனது வாழ்க்கையின் மூலம் செய்து காட்டினார்.
நூலகத்தில் நாம் நல்ல நூல்களோடு தனிமையில் இருக்கும் போது நமக்கு புதிய பல விஷயங்கள் புரிகின்றன.
3. அமைதியைத் தருகிறது.
நூலகம் அமைதியான சூழலைத் தருகிறது. உலகின் சலசலப்புகளைத் தாண்டிய ஒரு அமைதியான சூழலாக நூலகங்கள் இருக்கின்றன.
“சைலன்ஸ் பிளீஸ்” என்று போர்ட் போடாமலேயே அமைதியாய் இருக்கும் ஒரே இடம் நூலகம் தான். அமைதி நமது சிந்தனைகள் ஒருமுகப்பட உதவுகின்றன.
இயேசு நமக்கு ஆன்மீக அமைதியை அருளுகிறார். அது வெளிப்பார்வைக்குத் தெரியாத ஆன்ம அமைதி. தாயின் கையில் சிரித்தபடி அமர்ந்திருக்கும் மழலையைப் போல, இறைவனோடு இணைந்திருக்கையில் நமக்குள் நிலவும் அமைதி அது !
4. தவறான வழிகளைத் தவிர்க்கிறது
தேவையற்ற செலவீனங்களையும், தவறான வழிகளில் நேரம் செலவிடுவதையும் நூலகங்கள் தடுக்கும். அல்லது தவிர்க்கும்.
வெறுமனே நண்பர்களுடன் அரட்டையடிப்பது பாவத்துக்குள் இட்டுச் செல்லும். நம்மை அறியாமலேயே அடுத்தவரைப் பற்றி குறை சொல்வது, கிசு கிசு பரப்புவது, தகாத செயல்களைக் குறித்து நகைச்சுவையாய் பேசுவது என இதயம் களங்கமடையும். திரைப்படம், மது என ஆபத்தான செலவினங்கள் உருவாகவும் வாய்ப்புகள் உருவாகும்.
நூலகங்கள் அத்தகைய ஆபத்துகளிலிருந்து நம்மைப் பாதுகாத்து நல்ல செயல்களுக்குள் நம்மை வழிநடத்தும்.
5. நண்பர்களை உருவாக்குகிறது.
நூலகம், ஒத்த சிந்தனையுடைய நண்பர்களைச் சம்பாதித்துத் தரும்.
சமூக வீதியில் அலையும் ஆயிரக்கணக்கான மக்களில் யார் வாசிப்பு வாசனை உடையவர்கள் என்பதைப் பெரும்பாலும் நூலகங்கள் தான் அடையாளம் காட்டுகின்றன.
கேடு வருவிக்கும் நண்பர்களுமுண்டு; உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு (நீதிமொழிகள் 18:24) என்கிறது விவிலியம். நல்ல நண்பர்களோடு இணைந்திருப்பதும், தீய நண்பர்களுக்கு விலகி ஓடுவதும் நாம் செய்ய வேண்டிய காரியங்களாகும்.
6. உத்வேகம் தருகிறது
வாசிக்கின்ற பழக்கமும், வேகமும், ஆர்வமும் நூலகங்களினால் அதிகரிக்கும். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நா பழக்கம் தானே ! கூடவே நமது தன்னம்பிக்கையை அதிகரித்து, நமக்கு உத்வேகத்தையும் நூலகங்கள் கொடுக்கின்றன.
நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன் (“யோவான் 13:15) என்கிறார் இயேசு. இயேசுவின் வாழ்க்கை நமக்குத் தரப்பட்டிருக்கும் வாழ்க்கைப் பாடம்.
பல வெற்றியாளர்கள், சாதனையாளர்கள், இறைமனிதர்கள் போன்றோரின் வாழ்க்கை நமக்கு உற்சாகத்தைத் தர முடியும். ஆன்மீகத்தில் நாம் ஆழப்பட அவை நமக்கு வழிகாட்டும்.
7. நினைவாற்றலை அதிகரிக்கிறது
வாசிப்பு பழக்கம் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும், இதன் மூலம் அல்சீமர் போன்ற பெரிய நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றும் என்கிறது மருத்துவம்.
வாசிப்புக்கும் மூளைக்குமான தொடர்பை பல்வேறு ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. இன்றைய உலகம் “படித்தலை” விட “பார்ப்பதை” யே முன்னிலைப்படுத்துகிறது. தொலைக்காட்சிகள், ஸ்மார்ட்போன்கள், கணினிகள் போன்றவை படிக்கும் பழக்கத்தை விட்டு மக்களை வேடிக்கை பார்ப்பவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
பார்ப்பதைக் குறைத்து படிப்பதை அதிகரிக்க வேண்டும்.
8. மன அழுத்தம் குறைக்கிறது
வாசிப்பு பழக்கம் மன அழுத்ததைக் குறைக்கும். மனதை இலகுவாக்கும் வல்லமை வாசிப்புக்கு உண்டு. வாசிப்பு மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், அல்லது சீராக்கும் என்கின்றன மருத்துவ ஆய்வுகள். செஸ்செக்ஸ் பல்கலைக்கழக மைன்ட் லேப் ஆய்வு ஒரு சிறிய உதாரணம்.
இன்றைய இளம் தலைமுறையினர் பல விதமான மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். சமூக, மத, அரசியல், மொழி, குடும்பம் சார்ந்த பல்வேறு நெருக்கடிகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர். அவற்றை இலகுவாக்கும் வழியைக் காட்டுகின்றன நூலகங்கள்.
9. முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கிறது
முடிவெடுக்கும் திறமையை மேம்படுத்துவதில் நூலகங்களும், அது தரும் வாசிப்பு அனுபவங்களும் கை கொடுக்கும். அதிகம் வாசித்தவர்கள் அதன் அடிப்படையில் நல்ல முடிவுகளை எளிதில் எடுத்து விடுகின்றனர்.
மூடர்கள் பாவத்தைத் தவிர வேறெதற்காகவும் திட்டமிடுவதில்லை; ஒழுங்கீனரை மக்கள் அருவருப்பார்கள் (
நீதிமொழிகள் 24:9) . எனும் பைபிள் வசனம், நமது அறிவுக்கும், திட்டமிடுதலுக்குமான தொடர்பைப் பேசுகிறது.
10. நிம்மதியான தூக்கம் தருகிறது.
வாசிப்பு பழக்கம், இரவில் நிம்மதியான உறக்கத்தைத் தரும் என்கின்றன ஆய்வுகள். உலகின் வெற்றியாளர்களில் பெரும்பாலானோர் இரவில் தூங்கச் செல்லும் முன் சிறிது நேரம் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.
நிம்மதியான தூக்கம், இறைவனின் வரம். அந்த வரம் கிடைக்காதவர்கள் பல்வேறு நோய்களுக்குள்ளும் சிக்கிக் கொள்கின்றனர். உலகிலுள்ள நோய்களில் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் நிம்மதியான தூக்கம், சரியான நேரத்தில், சரியான அளவில் கிடைக்காததே என்கிறது மருத்துவம்.
இப்படி நூலகங்களும், வாசிப்பும் நமக்குப் பல்வேறு பயன்களைத் தருகின்றன. இந்த பயன்களை வாய்க்கால் வெட்டி நமது ஆன்மீக வயலுக்குள் பாய்ச்சும் போது நமது வயல்களில் நூறு மடங்கு விளைச்சலை இறைவன் தருகிறார்.
முதலாவது, பைபிள் என்பது ஒரு நூல் அல்ல. அது ஒரு நூலகம் ! அது பல்வேறு நூல்களின் தொகுப்பு. அந்த நூல்களை முழுமையாக வாசிப்பதும், ஆழமாக வாசிப்பதும் நமது ஆன்மீக வாழ்வை வளமாக்கும்.
இரண்டாவது, உலகிலேயே பைபிள் மட்டும் தான் அறிவாளிகளால் புரிந்து கொள்ள முடியாமல்,
மழலைகளால் மட்டும் புரிந்து கொள்ளக் கூடிய நூல். “ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” (மத்தேயு 11:25) என்கிறார் இயேசு. ஒரு மழலையின் மனதோடு இதை வாசித்தால் நமக்கு ஆன்மீகப் புதையல்களை அது அள்ளித் தரும்.
மூன்றாவது, இயேசுவை நமக்கு முன்செல்பவராகச் சொல்கிறது வேதாகமம். அவருடைய வாழ்க்கை நமக்கான வழிகாட்டும் விளக்கு. அவர் வாழ்ந்த வாழ்க்கையை அப்படியே பின்பற்றுவதே நமது ஆன்மீக வாழ்வின் உயர்நிலை. இயேசுவின் வாழ்க்கை வரலாறு ஒன்றே போதும் நமக்கு அளவில்லா உத்வேகத்தை அள்ளித் தர.
நான்காவதாக, பைபிள் எனும் நூலகம் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றதல்ல. அது தரும் நிம்மதி அளவிட முடியாதது. அது தரும் சிந்தனையும், முடிவெடுக்கும் திறனும் உலகத்தின் பார்வையோடு ஒப்பிட முடியாதது. அந்த நூலகத்தில் அதிகபட்ச நேரம் குடியிருப்போம்.
கடைசியாக, உலக அறிவைப் பெற நூலகங்களில் வாசிப்போம். ஆன்மீக வெளிச்சம் பெற பைபிள் எனும் நூலகத்தை வாசிப்போம்.
“வேதாகமத்தைப் பற்றி” வாசிப்பதை விட அதிக நேரம்,
வேதாகமத்தை வாசிப்போம்.
“கடவுளைப் பற்றி” வாசிப்பதை விட அதிகமாய்
கடவுளையே வாசிப்போம்.
நன்றி: http://writerxavier.com/
Re: பைபிள் ஒரு நூலகம்
Thu Aug 11, 2016 5:42 pm
கல்வியும், கடவுளும்
ஒரு மனிதனின் அடிப்படைத் தேவை கல்வி. கல்வியில் வளர்கின்ற சமூகம் பொருளாதார வளர்ச்சியிலும், வாழ்க்கைத் தரத்திலும் முன்னேறும் என்பது கண்கூடு. இந்தியாவில் மொத்த மக்கள் தொகை சுமார் 125 கோடி. அதில் சுமார் 36 கோடி மக்கள் கல்வி வாசனையே இல்லாமல் இருக்கிறார்கள் என்பது தான் அதிர வைக்கும் புள்ளி விவரம்.
கல்வியறிவற்ற ஒரு சமூகம் எடுப்பார் கைப்பிள்ளையாகவோ, ஏமாற்றுபவர்களின் இலக்காகவோ மாறிவிடும் அபாயம் உண்டு. கல்வியறிவு ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுகிறது. தன்னம்பிக்கையான மனிதன் சமூகத்தில் முதன்மை இடங்களில் செல்வான்.
கல்வியறிவு மனிதனை மூட நம்பிக்கைகளை விட்டு வெளியே வர உதவுகிறது. எதையும் ஆராய்ந்து பார்க்கவும், காலம் காலமாய் செய்து வருகின்ற தவறான பழக்கங்களை உதறி விட்டு வெளியே வரவும் கல்வி உதவுகிறது
காரண காரியங்கள் இல்லாமல் தேவையற்ற செயல்களைச் செய்வதை விட்டு வெளியே வர கல்வியறிவு உதவுகிறது. ‘ஏன் சூரியனை வழிபட வேண்டும்?” என ஒரு கேள்வி எழுப்ப கல்வியறிவு பெற்ற மனிதனால் மட்டுமே முடியும்.
கல்வியறிவு நமது நாட்டின் கலாச்சாரம், இலக்கியம், உலக நாடுகள், தொழில்நுட்பம் என அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள உதவும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவும் கல்வியறிவு உதவுகிறது. ஒரு தேசத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கே கூட கல்வியறிவு ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது.
கிறிஸ்தவம் கல்வியை ஊக்கப்படுத்துகிறது. இந்தியாவில் கிறிஸ்தவர்கள் செய்த மிகப்பெரிய பணி கல்விப்பணி என்பதற்கு ஊரெங்கும் சாட்சிகளாய் நிற்கின்றன கல்வி நிலையங்கள். கிறிஸ்தவத்தைப் புரட்டிப் போட்ட பல தலைவர்களும், இறைவாக்கினர்களும், வழிகாட்டிகளும் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை பைபிள் சொல்கிறது.
பவுல் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தூணாக இருந்தவர். அவர் கல்வியறிவு பெற்றவராகவும், அறிவு நிறைந்தவராகவும் இருந்தார். “கமாலியேலின் காலடியில் அமர்ந்து நம் தந்தையரின் திருச்சட்டங்களில் நுட்பமாகப் பயிற்சி பெற்றவன் ( திருத்தூதர் பணிகள் 22 : 3 )” என அவரைப் பற்றி விவிலியம் சொல்கிறது.
தானியேல் வியப்பூட்டும் வாழ்க்கை வாழ்ந்தவர். “கடவுள் இந்த நான்கு இளைஞர்களுக்கும் அறிவையும் அனைத்து இலக்கியத்தில் தேர்ச்சியையும் ஞானத்தையும் அருளினார். சிறப்பாக, தானியேல் எல்லாக் காட்சிகளையும் கனவுகளையும் உய்த்துணரும் ஆற்றல் பெற்றிருந்தார்” ( தானியேல்1 ; 17 ) எனும் இறைவார்த்தை தானியேலில் கல்வியைப் பேசுகிறது.
மோசே எகிப்து நாட்டின் கலைகள் அனைத்தையும் பயின்று சொல்லிலும் செயலிலும் வல்லவராய்த் திகழ்ந்தார் ( திருத்தூதர் பணிகள் 7 : 22 ) எனும் இறைவார்த்தை மோசேயின் கல்வியறிவைப் பற்றிப் பேசுகிறது.
எல்லாவருக்கும் மேலாக இயேசுவும் ஞானத்திலும், உடல் வளர்ச்சியிலும் மிகுந்தார் என்பதையும் பைபிள் பேசுகிறது.
இந்த பின்னணியில் கல்வி எப்படி அமைய வேண்டும் என்பதைச் சிந்திப்பது பயனளிக்கும்.
துவக்கம் இறைவனில்.
“ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்” எனும் நீதி மொழிகள் நமக்கு மிகவும் பரிச்சயமானது. கல்வியின் முதல் சுவடும் இறைவனைப் பற்றிய அறிவிலும், அவர் மீதான அச்சத்திலும் உருவாக வேண்டும். அந்த ஞானமே நமது ஆன்மீக இருட்டை விலக்கும் ஒளிக் கீற்றாக விளங்கும்.
“என் வார்த்தைகளை உங்கள் நெஞ்சிலும் நினைவிலும் நிறுத்துங்கள். அவற்றை உங்கள் கைகளில் அடையாளமாகக் கட்டிக் கொள்ளுங்கள். உங்கள் கண்களுக்கிடையே அவை அடையாளப் பட்டமாக இருக்கட்டும். நீங்கள் அவற்றை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள் ( உப 11 : 18 ) என்கிறது உப ஆகமம்.
குடும்பமே முதல் பள்ளி.
“தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்துவாருங்கள். ( எபேசியர் 6 : 4 )”. கல்வியை முதலில் ஊட்ட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு. முற்றத்தில் முதல் சுவடு வைக்காமல் பயணங்கள் இல்லை. அது போல, கல்வியும் தாய் தந்தையரின் பங்களிப்பில்லாமல் துவங்குவதில்லை.
வெறுமனே எழுத்துகளையும், வார்த்தைகளையும் கற்பிக்காமல் வாழ்க்கையையும், இறைவனையும் கற்றுக் கொடுக்கும் ஆசான்களாக பெற்றோர்களே இருக்கின்றனர்.
கல்வி அதிக மதிப்பானது.
விலையுயர்ந்த பொன்னும், வைரமும், செல்வமும் இருப்பதை மக்கள் மிக முக்கியமானதாக நினைக்கின்றனர். ஆனால் பைபிள் அப்படிச் சொல்லவில்லை.
பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்; வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல் ( நீதி 16:16) என்கிறது பைபிள். எனவே கல்வியை உதாசீனம் செய்து விட்டு பணம் சம்பாதிக்கும் வேலைகளில் ஈடுபடுவது தவறானது.
படிப்படியான அறிவு அவசியம்.
“நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன். ” என்கிறார் பவுல். அவர் அதை ஆன்மீகத்தோடு ஒப்பிட்டாலும் கல்வியோடும் அது ஒத்துப் போகிறது.
கடவுள் தமது பிள்ளைகள் அறிவோடும் ஞானத்தோடும் இருக்க வேண்டும் என்பதை நீதி மொழிகளில் விளக்குகிறார். வயதுக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ப கல்வியிலும் நாம் வளர வேண்டும்.
கல்வியைத் தேட வேண்டும்.
“நீ உணர்வுக்காக வேண்டுதல் செய்து, மெய்யறிவுக்காக உரக்க மன்றாடு. செல்வத்தை நாடுவதுபோல் ஞானத்தை நாடி, புதையலுக்காகத் தோண்டும் ஆர்வத்தோடு அதைத் தேடு.” என்கிறது ( நீதி 2 : 3, 4 ) நீதிமொழிகள்.
கல்வி என்பது தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும் சமாச்சாரமல்ல. அதை நாம் நாடித் தேட வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம்.
கல்வி கர்வத்தை விலக்க வேண்டும்.
நமது ஆண்டவர் வெறுக்கும் செயல்களில் முதலாவது இருக்கிறது கர்வம். தலைக்கனம் இருப்பவர்களை ஆண்டவர் சிதறடிக்கிறார். நமது கல்வியோ, அறிவோ, புலமையோ, திறமையோ சிறிதும் நமக்கு கர்வம் தராதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
“தமக்கு ஏதோ அறிவு இருக்கிறது என்று நினைக்கிறவர் அறிய வேண்டிய முறையில் எதையும் அறிந்து கொள்ளவில்லை.( 1 கொரி 8 :2 ). தனக்கு அறிவு இருக்கிறது என நினைப்பதே அறியாமை என்பதையே விவிலியம் போதிக்கிறது.
கல்வி இறைவனை அறிதல்
“கடவுளைப் பற்றி அறியக்கூடியதெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக விளங்கிற்று” என்கிறது ரோமர் நற்செய்தி. இறைவனைப் பற்றிய அறிவில் தான் கிறிஸ்தவர்களுடைய கல்வி முழுமை அடைய வேண்டும்.
கிறிஸ்தவர்களின் கல்வி என்பது வெறுமனே அறிவை அடைத்து வைக்கும் அகராதி போல இல்லாமல், அந்த அறிவை அன்பினால் பகிரும் ஒரு வழிமுறையாக இருக்க வேண்டும்.
கல்வி இறைவனை அறிவித்தல்
“அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும்⁕ நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” ( மத் 6 : 33 ). எனும் வசனத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது. கல்வியை அதிலிருந்து நாம் விலக்கி விடக் கூடாது.
கல்வியையும் இறைவனை அறியவும், அறிவிக்கவும் பயன்படுத்த வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டிய ஒரு கருவியாக கல்வியைப் பார்க்கும் போக்கு நம்மிடமிருந்து விலக வேண்டும். பவுல் சொல்வது போல, “உழைக்காதவன் உண்ணலாகாது” எனும் இறைவார்த்தையின் படி கல்வி நமக்கு தேவையானவற்றைப் பெற்றுத் தரும் கருவியாக இருக்கலாம். ஆடம்பரத்தின் தேடலுக்கான கருவியாக இருக்க வேண்டாம்.
இன்றைய தொழில்நுட்பங்களும், சமூக வலைத்தளங்களும் எல்லாமே நமக்கு இறைவனை அறிவிக்கக் கிடைத்த தளங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
திணிப்பதல்ல கல்வி
இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையைக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொருவரையும் அவர் உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார். ஒவ்வொருவருடைய தலைமுடிகளைக் கூட எண்ணி வைத்திருக்கிறார், தன் எண்ணத்தில் வைத்திருக்கிறார். “நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள நாள்கள் எல்லாம் எனக்கு வாழ்நாள் எதுவுமே இல்லாத காலத்திலேயே உமது நூலில் எழுதப்பட்டுள்ளன. ( சங் 139 : 16 ). இந்த நம்பிக்கை கல்வி விஷயத்திலும் நம்மிடம் இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு கல்வி வழங்கும்போது அவர்களுடைய இயல்புக்கு ஏற்ற கல்வியை வழங்குவதே சரியானது. “நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு; முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார். ” எனும் நீதிமொழிகளுக்கு ஏற்ப கல்வியோடு சேர்த்து நல்வழிகளிலும் அவர்களைப் பழக்குவது இன்றியமையானது. கல்வி என்பது நமது விருப்பங்களை குழந்தைகளிடம் திணிப்பதல்ல. அவர்களுடைய இயல்புக்கேற்ப அவர்களை உருவாக்குவதே.
வார்த்தையானவரை அறிதல்.
இயேசு வார்த்தையானவர். வார்த்தையின் மனித வடிவமே இயேசு. கிறிஸ்தவர்களின் எழுத்தறிதல் என்பதும், வார்த்தை அறிதல் என்பதும் இறைமகன் இயேசுவை அறிவதாய் அமைவது மிகவும் சிறப்பானது.
எனக்கு என்னதான் இருந்தாலும், என்னதான் அறிவு இருந்தாலும் இயேசுவை அறியும் அறிவோடு ஒப்பிடுகையில் எல்லாமே வீண் என்கிறார் பவுல். மீட்பும் இறைவனோடான உறவுமே ஆன்மீகக் கல்வி.
இறுதியாக, கல்வி நம்மை எப்படி மாற்ற வேண்டும். நமது இயல்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் ஒரு இறைவார்த்தை நமக்கு தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.
“நீங்கள் உங்கள் நம்பிக்கையோடு நற்பண்பும், நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும், தன்னடக்கத்தோடு மன உறுதியும், மன உறுதியோடு இறைப்பற்றும், இறைப்பற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்கு(ங்கள்)” ( 2 பேதுரு 1 : 5..7 ) எனும் வசனத்தை இதயத்தில் இருத்துவோம்.
கற்போம்
கடவுளையும், கல்வியையும்.
பகிர்வோம்
படித்தவற்றையும், படைத்தவரையும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum