சொந்த வீடு கட்ட கூட்டு கடன் கிடைக்கும்
Sun Jul 17, 2016 1:00 am
வங்கிகளில் வீட்டு கடன் பெறும்போது கடன் வாங்குபவர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நிகர சம்பளத்தை வங்கிகள் கணக்கில் எடுத்துக் கொள்வது வழக்கம். அதை வைத்துத்தான் ஒருவருக்கு எவ்வளவு கடன் தரலாம் என்பதை வங்கிகள் முடிவு செய்கின்றன. சொந்த வீடு கட்டும் கனவை வேலைக்கு செல்லும் கணவன், மனைவி ஆகிய இருவரும் கூட்டாக இணைந்து வங்கியில் கடன் பெற்று நிறைவேற்றிக்கொள்வது சுலபமான வழி என்று ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள். தனி நபராக வங்கியில் பெறும் கடன் தொகையை விடவும் கணவன், மனைவி ஆகிய இருவரும் பெறக்கூடிய தொகை அதிகமாக இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அது தவிரவும் தந்தை–மகன், தந்தை–மகள் போன்ற வாரிசுகளின் துணையுடனும் கடன் பெறும் வாய்ப்புகள் இருக்கின்றன.
நன்மைகள் உண்டு
சொந்தமாக வீடு கட்டலாம் அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை வாங்கலாம் என்று முடிவு எடுத்த பின்பு முதல் கட்ட நடவடிக்கையாக பட்ஜெட் பற்றி திட்டமிடவேண்டும். நடுத்தர வர்க்கத்தினராக இருக்கும்பட்சத்தில் கையில் முழுப்பணத்தையும் வைத்துக்கொண்டு வீட்டை கட்டுவது அல்லது அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவது என்பது அனைவராலும் முடியாது. வங்கிக்கடன் பெற்று வீடு கட்டினாலும் எல்லாவிதமான வசதிகளையும் வீட்டில் அமைத்துவிட வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகிறார்கள். கணவன், மனைவி ஆகிய இருவரும் இணைந்து கடன் பெறும் பட்சத்தில் ‘வீட்டுக்கான மொத்த பட்ஜெட்’ தொகையும் பெற்றுவிட முடியும்.
வரிச்சலுகை கிடைக்கும்
இருவரும் இணைந்து கூட்டாக கடன் பெறும்போது வீட்டுக்கடனுக்கான அசல் தொகை மற்றும் வட்டி ஆகியவற்றிற்கான வரிச்சலுகைகளை பெற முடியும். சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் கணவர் மட்டும் கடனை திருப்பி செலுத்தும்பட்சத்தில் அதற்கான சலுகைகளை பெறவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கான நடை
முறைகளும் எளிமையானவையாக உள்ளன. வீட்டுக்கடனுக்கான காப்பீடு எடுத்த பிறகு அதற்கான ‘பிரீமியம்’ தொகையை இருவருமே சரிபாதியாக பிரித்துக்கொண்டு செலுத்திவரலாம்.
சுய தொழில் செய்யலாம்
குடும்பத்தில் கணவர் மட்டும்தான் மாத சம்பளம் வாங்குபவராக இருந்து, மனைவி சுயதொழில் செய்பவராக இருந்தாலும் வீட்டுக்கடன் பெற முடியும். அதற்காக சில எளிமையான வழிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் என்று ஆலோசகர்கள் கூறுகிறார்கள். அதாவது மனைவி தமது சுய தொழில் வாயிலாக சம்பாதிக்கிறார் என்பதை வங்கிக்கு நிரூபணமாக காட்ட வேண்டும். அதாவது வங்கியில் தினமும் அல்லது வாரம் ஒரு முறை என்ற வகையில் பணத்தை வங்கியில் ‘டெபாசிட்டாக’ கட்டி வர வேண்டும். தொகை சிறியது அல்லது பெரியது என்பதை விடவும் அவரது வரவுசெலவு கணக்கு வங்கியில் இருக்க வேண்டும். அந்த வகையில் வங்கியானது அவர்மீது நம்பகத்தன்மை கொள்ள ஏதுவாக இருக்கும்.
இணை கடன்தாரர்
பொதுவாக வீட்டுமனை யாருடைய பெயரில் இருக்கிறதோ அவருக்குத்தான் வீட்டுக்கடன் வழங்கப்படும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கடன் பெறும்போது மனை யாருடைய பெயரில் இருக்கிறதோ அவர் பெயரில் கடன் தரப்பட்டு இன்னொருவரை ‘கோ–பாலோயர்’ என்று சொல்லப்படும் ‘இணை கடன்தாரராக’ வங்கிகள் நிர்ணயம் செய்து விடும். அதன் பிறகு மற்ற வங்கி நடைமுறைகள் பின்பற்றப்படும்.
தரவேண்டிய சான்றுகள்
கூட்டாக கடன் பெறுவதற்காக இருவரது வங்கியின் ‘ஸ்டேட்மெண்ட்’, ‘சேலரி சர்ட்டிபிகேட்’, கடந்த மூன்று ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி விபரங்கள் ஆகியவற்றோடு வங்கிகள் கேட்கும் மற்ற சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை தரவேண்டும். அந்த சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு வயது, சொத்து, இடத்தின் மதிப்பு, திருப்பி செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வங்கிகள் கடன் தரும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum