பெருமாள் முருகன் நூலும் - உயர்நீதிமன்ற தீர்ப்பும்!
Fri Jul 08, 2016 9:10 am
கலி. பூங்குன்றன்
July 6 at 7:02pm ·
பெருமாள் முருகன் நூலும் - உயர்நீதிமன்ற தீர்ப்பும்!
எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய மாதொருபாகன் நாவல் தொடர்பாக நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் கடந்த ஆண்டு சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் எஸ்.தமிழ்ச் செல்வன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எழுத்தாளர் பெருமாள்முருகன் 2010 இல் மாதொரு பாகன் என்ற நாவலை தமிழில் எழுதினார். இது 2013 இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் விழா பற்றி இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக எழுந்த பிரச் சினையால், 2015 ஜனவரி 10 ஆம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பெருமாள் முருகனை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வைத்து எழுதி வாங்கியது. எனவே, அந்த முடிவு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என அறிவிக்கவேண்டும் என கோரியிருந்தார். அதேபோன்று கடந்த பிப்ரவரி மாதம் எழுத்தாளரின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்க உத்தர விட வேண்டும் என்று கோரி பெருமாள்முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதே நேரத்தில் நாவல் விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரியும், ஆசிரியர் பெருமாள்முருகன் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யக் கோரியும் கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, நாமக்கல் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம், வேல்முருகன், வெள்ளியங்கிரி ஆகியோரும் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோரைக் கொண்ட அமர்வு, கருத்துரிமையைப் பாதுகாக்கும் மிக முக்கியமான உத்தரவை நேற்று (5.7.2016) பிறப்பித்தது.
அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:
‘‘நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். ஆனால் நீ சொல்வதுதான் சரியென வாதிட்டால் அதற்காக எதிர்த்துப் போராடி சாகவும் தயங்கமாட்டேன் என்ற தத்துவ ஞானி வால்ட்டரின் வார்த்தைகள்தான் இந்த வழக்குக்குப் பொருத்தமாக இருக்கும். இப்போது காலங்கள் மாறுகிறது. முன்பு எது ஏற்கப்படவில்லையோ, அதுதான் பின்னாளில் ஏற்கப்படுகிறது. ஒரு நாவலை படிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது அதைப் படிக்கும் வாசிப்பாளரின் விருப்பம். பிடித்தால் படிக்கட்டும். இல்லையெனில் அதைத் தூக்கி எறியட்டும். அதற்காக ஒரு படைப்பாளி என்ன எழுத வேண்டும், என்ன எழுதக்கூடாது என்பதை சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் தீர்மானிக்க முடியாது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத் துரிமை மற்றும் பேச்சுரிமைக்குக் குந்தகம் ஏற்படாத வண்ணம் அதைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், இந்த வழக்கில் அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து தவறி யுள்ளது. சமுதாயத்தில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் கலாச்சாரத்தைத்தான் ஆசிரியர் தனது நாவலில் பிரதிபலித் துள்ளார். இதில் எந்தத் தவறும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. வருவாய் அலுவலரின் முடிவுகள் செல்லாது.’’
‘‘எனவே, நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது; யாரையும் கட்டுப்படுத்தாது. மேலும் பெருமாள் முருகன்மீதான குற்றவியல் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன. இந்த நாவல் விற்பனைக்குத் தடை விதிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. எந்தவொரு படைப்பாளிக்கும் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காக வழக்குரைஞர் சுரேஷ், சில வழி காட்டுதல்களை அரசு பின்பற்றலாம் என ஆலோசனைகளை சமர்ப்பித்துள்ளார். படைப்பாளிகளின் கருத்துரிமை, பேச்சுரிமையை அரசு பாதுகாக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வெளிநபர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிடுவதை அரசு தவிர்க்க வேண்டும்.’’
‘‘படைப்பாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்ப தற்காக கலை, இலக்கியம் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் குழுவை தமிழக அரசு 3 மாதத்தில் அமைக்க வேண்டும். இதுபோன்ற அசாதாரண சூழல்களில் பாதிப்புக்குள்ளாகும் படைப்பாளி களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த பிரச்சினைகளை கையாள அரசு அதிகாரிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதொரு பாகன் நாவலை திரும்பப்பெற வேண்டிய அவசிய மில்லை. ஆசிரியர் பெருமாள்முருகன், புதைக்கப்பட்ட விஷயங்களில் இருந்து எதையெல்லாம் சிறந்ததாக எழுத முடியும் என நினைக்கிறாரே, அதை துணிவோடு பயமின்றி எழுதட்டும்.’’
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் (12.1.2015) தெரிவித்த கருத்தினை நினைவூட்டுகிறோம்
‘‘நான்கு ஆண்டுகளுக்குமுன் எழுதி வெளியிடப்பட்ட நூல்பற்றி இப்பொழுது பிரச்சினையை எழுப்பியுள்ளனர். ஒரு எழுத்தாளனுக்குக் கருத்துரிமை இல்லையா? வேண்டுமானால் மறுப்பு எழுதட்டும்.
அதை விட்டுவிட்டு, கதவடைப்பது என்றெல்லாம் கூறி அச்சுறுத்துவது அசல் பிற்போக்குத்தனம். பெருமாள் முருகன் தம் நிலையில் உறுதியாக இருக்கவேண்டும்; முற்போக்கு சக்திகளின் ஆதரவு அவருக்கு உண்டு. அவரை அழைத்துப் பாராட்டுவோம் - தமிழக அரசும் அவருக்குத் தேவையான பாதுகாப்பைக் கொடுக்கவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
அதிகாரிகளே எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களிடம் அச்சுறுத்திக் கையொப்பம் வாங்கியதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ‘விடுதலை’யில் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டார் (9.3.2015).
மாநில அரசு சரியாக செயல்பட்டு இருந்தால், நீதிமன்றத் தின் இத்தகைய தீர்ப்பை சந்திக்கவேண்டிய அவலம் ஏற்பட்டு இருக்காது. மதவாத சக்திகள், ஜாதிய வாத சக்திகள் மற்றும் தமிழக அரசு உள்பட இந்தத் தீர்ப்பிலிருந்தாவது புத்திக் கொள்முதல் பெறட்டும்!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum