இடவசதி குறைவான வீட்டிற்கு எட்டு யோசனைகள்
Sat Jun 11, 2016 2:03 pm
வீட்டில் இடவசதி குறைவாக இருந்தாலும் அங்கு சின்ன சின்ன மாற்றங்களைச் செய்து, அதிக அளவில் பொருட்களை வைக்க முடியும். அதற்கு நிறைய செலவுகள் செய்ய வேண்டியதில்லை. கீழே காணும் எட்டு யோசனைகளை பின்பற்றினாலே போதும்.
1. படுக்கையறையில் கட்டிலுக்குக கீழே உள்ள இடத்தை காலியாக விட வேண்டாம். அந்த இடத்திற்கு ஏற்ற விதத்தில் ஒரு சிறிய அலமாரியை வடிவமைக்கலாம். அதில் புத்தகங்களையோ துணிகளையோ அழகாக அடுக்கி வைக்கலாம்..
2. சமையலறையில் அனைத்து பாத்திரங்களையும் அடுக்கி வைப்பதற்கு போதுமான இடம் இல்லை என்று கவலைப்படவேண்டாம். திறந்த நிலையில் பொருட்களை அடுக்கிவைக்கும் இரும்பு அலமாரியை பயன்படுத்தலாம். அலமாரியில் இடையிடையே கொக்கி அமைப்புகள் இருந்தால் அதிக பொருட்களை அடுக்கி வைப்பதற்கு வசதியாக இருக்கும்.
3. புத்தக அலமாரியில் புத்தகங்களை அடுக்கிவைக்க போதுமான இடம் இல்லையா? வீட்டின் முன் கதவுக்கு அருகில் உள்ள அலமாரியை புத்தகம் அடுக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் அதில் ஒரு பகுதி இடத்தை சாவிக் கொத்துக்கள், காலணிகள், செல்போன், கடிகாரங்கள் ஆகியவற்றை வைப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
4. தொலைக்காட்சிக்கு அருகிலும் பின்னாலும் உள்ள இடங்கள் வெற்றிடமாக தோற்றமளிக்கிறதா? சிறிய வடிவத்தில் உள்ள காட்சிப் பொருட்களையும் அழகு செடிகளையும் வைப்பதற்கு ஏற்ற இடம் அதுதான்.
5. குளியலறை மற்றும் சமையறையில் தண்ணீர் குழாய் இணைப்புகள் கொண்ட சிங்க்குகளின் கீழே உள்ள இடத்தையும் பயன்படுத்தலாம். அங்கு ஒரு சிறு பெட்டியை அமைத்து அதில் சோப், சலவை தூள், ‘மக்’ ஆகியவற்றை வைக்கலாம்.
6. வீட்டின் உள்ளே படிக்கட்டுகள் இருந்தால் படிக்கட்டுகளின் கீழே உள்ள இடத்தில் அலமாரிகளை அமைக்கலாம். அந்த அலமாரியை காட்சிப் பொருட்கள் வைக்கவும் புத்தகங்களை அடுக்கிவைக்கவும் பயன்படுத்தலாம்.
7. படுக்கையறையில் கதவுக்குப் பின்னால் சிறிய ஆணிகளை அடித்து அவற்றில் பேனா, சீப்பு போன்ற சிறிய பொருட்களை வைப்பதற்கான ஹோல்டர்களைப் பொருத்தலாம்.
8. சுவர்களில் உள்ள அலமாரிகளை முழுவதும் கிடைமட்டமாக அமைக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அவை செங்குத்தாக பிரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்த அலமாரியில் அதிகமான அளவில் பொருட்களை வைக்க முடியும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum