வீட்டுக்கடன் வாங்குவதற்கு தேவையான ஆவணங்கள்
Sat Jun 11, 2016 2:01 pm
வீடுகளை கட்டினாலும், வாங்கினாலும் வங்கிக் கடன் வாங்கும் நடைமுறை தவிர்க்க இயலாததாக அமைந்துவிடுகிறது. நமது அவசரத்திற்கு ஏற்றமாதிரி வங்கிகளும் நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. முன்கூட்டியே தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருப்பது கால தாமதத்தை தவிர்ப்பதற்கு உதவும். வங்கிக்கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
மாத வருமானம்
கடன் வாங்குபவரின் மாத வருமானத்தைப் பற்றிய ஆவணங்கள்தான் கடன் பெறுவதில் முக்கிய பங்காற்றுகின்றன. ஏனென்றால் வங்கிகள் வீட்டுக்கடன் வழங்குவதில் மாதச் சம்பளம் பெறுபவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன. எனவே மாதச் சம்பளம், பிடித்தம், வருமான வரி செலுத்திய விவரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருங்கள்.
வழக்கறிஞரும், பொறியாளரும்
வீட்டுக்கடன் அளிக்கும் வங்கிகள் பொறியாளர், வழக்கறிஞர் ஆகியோரிடமிருந்து கருத்துக்களை பெற்ற பின்னரே கடன் வழங்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும். எனவே வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர் மற்றும் பொறியாளரிடமிருந்து கருத்துக்களை பெற வேண்டியது அவசியமாகும். பெரும்பாலும் வங்கிகளே இந்த கருத்துக்களை கேட்டு பெறுகின்ற நடைமுறையை பின்பற்றுகின்றன. அதற்காக ஒரு சிறு தொகையை கட்டணமாகவும் வசூலிக்கின்றன.
கடனுக்கு பொறுப்பு
கடனுக்கு ஈடாக வைக்கப்படும் சொத்துக்களின் ஆவணங்கள், கடனுக்கு பொறுப்பு ஏற்பவரின் ஒப்புதல் ஆகியவையும் வீட்டுக்கடன் பெறுவதற்கு முக்கியமானவை. சொத்தை வாங்கியதற்கான கிரயப் பத்திரமே பெரும்பாலும் கடனுக்கு ஈடாக வங்கிகளில் வைக்கப்படுகிறது.
கட்டிட அனுமதி
சென்னை மாநகரம் மற்றும் புறநகர்ப்பகுதிகளை பொறுத்தவரை, சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அனுமதி பெற்ற மனைகளில் மட்டுமே வீடுகளை கட்ட முடியும். எனவே வீட்டுக்கடன் கேட்டு விண்ணப்பிக்கும்போது கட்டிட அனுமதி வழங்கப்பட்டதற்கான சான்றிதழை வங்கியிடம் காட்ட வேண்டும்.
வரைபடங்கள்
கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்கினாலும் சரி, இனிமேல் கட்டப்பட உள்ள வீடாக இருந்தாலும் சரி அதன் மதிப்பீடு, வரைபடம் ஆகியவற்றை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்க முழுத் தொகையையும் ஒரே சமயத்தில் கடன் பெறலாம். ஆனால் கட்டப்பட உள்ள வீடுகளுக்கு பகுதி பகுதியாகவே கடன் வழங்கப்படும்.
மார்ஜின் தொகை
வங்கிகளில் வீட்டுக்கடன் கேட்பதற்கு முன்னால் ஆவணங்களை தயாரிக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதைவிடவும் மிக முக்கியமானது மார்ஜின் தொகையை தயாராக வைத்திருப்பது. ஒவ்வொரு தொகையும் தாங்கள் கடனாக கொடுக்கும் தொகையில் குறிப்பிட்ட சதவீத தொகையை மார்ஜினாக கட்ட வேண்டும் என்று வலியுறுகின்றன. மார்ஜின் தொகையை செலுத்தினால் மட்டுமே வீட்டுக்கடன் பெற முடியும்.
மேற்கண்ட ஆவணங்களையும் மார்ஜின் தொகையினையும் திரட்டிய பின்னர் வங்கிகளிடம் கடன் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். சில வங்கிகள் கூடுதலாக வேறு சில ஆவணங்களையும் கேட்கலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum