ஆட்டிசம்: அறிகுறிகளை கண்டவறிவது எப்படி...?
Sat Jun 11, 2016 10:05 am
'ஆட்டிசம் (Autism )'. ஒவ்வொரு வருடமும் ஏப்ரம் 2 ம் தேதி மட்டும் பரவலாக இணையங்களில் கேட்கப்படுகிற, பார்க்கப்படுகிற வார்த்தையாக இருக்கும். அன்றுதான் உலகம் முழுவதும் ஆட்டிசத்துக்கான விழிப்பு உணர்வு நாளாக கருதப்பட்டு விழாக்கள், விழிப்பு உணர்வுகள், மருத்துவ முகாம்கள் என்று சிறப்பாக நடக்கும். 'டிஸ்லெக்ஸியா' போன்று ஆட்டிசமும் ஒரு குறைபாடுதானெ தவிர இது ஒரு நோய் அல்ல.
" இந்தியாவில் மட்டும், சுமார் 125 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்" என்ற அதிர்ச்சியான தகவல்களுடன் நம்மிடம் பேச ஆரம்பித்தார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன்.
'' 'ஆட்டிசம்' என்பது மதியிறுக்கம். அதாவது இயல்பில் இருந்து விலகிய நிலை. பலர் 'ஆட்டிசம்' என்பதை மன நலக் குறைபாடு என்று நினைக்கிறார்கள் அது முற்றிலும் தவறு . இவர்களும் சாதாரணக் குழந்தைகள் போன்றவர்கள்தான்" என்றவர், 'ஆட்டிச குழந்தை'களைக் கண்டறியும் மூன்று அறிகுறிகளைச் சொன்னார்.
1. அவர்கள், சமூகத்துடன் ஒட்டி வாழ்வதற்கான குணங்களிலும், பழக்க வழக்கங்களிலும் பாதிப்பு உடையவர்களாக இருப்பார்கள் .
2. அவர்களுடைய பேச்சு மற்றும் உடல்மொழிகளால் மற்றவர்களோடு தொடர்புகொள்ள இயலாமை .
3. அவர்களுக்கென்று தனி உலகம் இருப்பது போல அவர்களின் செயல்கள் , நடத்தைகள், விருப்பங்கள் விநோதமாக இருக்கும் .
'ஆட்டிசம் குழந்தை' களின் குணாதிசயங்கள் :
1. தனிமையை விரும்புவார்கள். மற்றவர்களிடம் இருந்து விலகியே இருப்பார்கள்.
2. முகம் பார்த்து பேசும் இயல்பு இவர்களிடம் இருக்காது. சிலருக்கு தாய்ப்பால் குடிக்கும் தருணத்திலும் இந்த இயல்பு இருக்கும்.
3. மாற்றத்தை விரும்பாதவர்கள். வீட்டில் இருக்கும் சின்னச் சின்ன பொருட்களைக்கூட அவர்கள் மாற்றிவைக்க அனுமதிக்க மாட்டார்கள்.
4. நீங்கள் எவ்வளவு சத்தம் போட்டுப் பேசினாலும் அதற்கு கவனம் செலுத்த மாட்டார்கள். சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைக்கு காது கேட்கவில்லை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையில் ஆட்டிச குழந்தைகளுக்கு காதில் குறைபாடு இருக்காது .
5. அடிபட்டால் அவர்களின் வலியைக் கூட வெளிக்காட்டமாட்டார்கள். சில குழந்தைகள் சாதாரணமான அடிக்கு கூட ஊரையே கூட்டி விடுவார்கள்.
6. ஆபத்தைப் பற்றிய பயம் இவர்களுக்கு இருக்காது.
இத்தகைய குணாதிசியங்கள் உங்கள் குழந்தையிடம் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மன நல ஆலோசகர், மதியிறுக்கத்துறையில் தேர்ந்த மருத்துவ நிபுணர், குழந்தை நல நரம்பியல் நிபுணர், வளர்நிலை குழந்தைகள் நல மருத்துவர் ஆகிய யாரேனும் ஒருத்தரிடம் சென்று, ஆலோசனைப் பெறலாம். உங்கள் குழந்தை 5 வயதிற்குள் இருந்தால், குணமாக்ககூடிய சாத்தியங்கள் நிறைய உள்ளது .
பெற்றோர்களின் கவனத்திற்கு :
பல பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு உள்ள குறைபாடுகளை ஏற்க மறுக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள ஒரு பள்ளியில், ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பதை உணர்ந்த ஆசிரியை, அதை பெற்றவர்களிடம் சொல்வதற்கு அத்தனை பயந்திருக்கிறார். காரணம் ஒருமுறை வேறு ஒரு பெற்றோரிடம் 'உங்கள் குழந்தைக்கு ஆட்டிச குறைபாடு இருப்பதை போல் தெரிகிறது' என்று சொல்ல, அந்த பெற்றோர்கள் சண்டைக்கு வந்துவிட்டார்களாம்.
பொதுவாக 'ஆட்டிச குழந்தை'க்கு மருத்துவம் செய்வதன் மூலம் எந்த விதமான முன்னேற்றமும் இருக்காது என்று அவர்களாக நினைத்து' அந்தக் குழந்தைகளை அப்படியே விட்டுவிடக் கூடாது. உங்கள் காலத்திற்குப் பிறகு உங்கள் குழந்தை தன்னிச்சையாக வாழ வேண்டும். அதற்கு அவர்கள் திறமைகளை கண்டறிய முயற்சி எடுங்கள்.
சில வீடுகளில் தாமதமாக பேச ஆரம்பிக்காத குழந்தைகளை, 'உங்க ஆத்தா அப்பன் கூட 5 வயசுக்கு பெறகுதான் பேசுனான். கம்முனு இரு. குழந்தை தானா பேச ஆரம்பிச்சிடும்' என்று பல வகையான ஆறுதல்களை சொல்வார்கள். அதையெல்லாம் கேட்டு உங்கள் குழந்தையின் சிகிச்சை காலத்தை நீட்டித்து விடாதீர்கள். தயவு செய்து தாமதிக்காதீர்கள்" என்ற கோரிக்கையோடு முடித்தார் டாக்டர் கார்த்திகேயன்.
- சிந்தூரி
படங்கள் - ஆ.முத்துக்குமார்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum