பெண்களுக்கு ஹெல்த் பாலிசி ஏன் மிக அவசியம்...?
Sat May 14, 2016 11:34 am
தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் நலனிலும், பாதுகாப்பிலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் பெண்கள் பலரும், தங்களுடைய பாதுகாப்பு குறித்து யோசிப்பது இல்லை.
பாதுகாப்பு என்பது வீட்டுக்கு கிரில் கேட் போடுவதில் மட்டும் இல்லை. பெண்களின் உடலில் மருத்துவ ரீதியாக ஏதாவது பிரச்னை ஏற்படும்போது சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கான உண்மையான பாதுகாப்பு வேண்டும். அதாவது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது மிகவும் அவசியம்.
ஏன் ஹெல்த் பாலிசி?
வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தாலும் சரி, வீட்டில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி - கட்டாயம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வேண்டும். ஏனெனில், ஆண்களைவிட அதிகமான நோய்த் தொற்று, உடல் ரீதியான பாதிப்புகள் பெண்களுக்கே வருகின்றன. மேலும், ஆண்களின் ஆயுட்காலத்தைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம்.
மாறி வரும் உணவுப் பழக்கங்கள், குறைவான உடல் உழைப்பு போன்றவற்றின் காரணமாக பல பிரச்னைகளை பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது. அதாவது மூட்டு வலி, சிறுநீரகப் பிரச்னை, கண் பார்வைப் பிரச்னை மற்றும் பல்வேறு வகையான புற்றுநோயின் தாக்குதல், கர்ப்பப் பையில் ஏற்படும் பிரச்னை போற்றவற்றின் காரணமாக மருத்துவமனை சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்புள்ளன. மேலும் உடல் ரீதியான பிரச்னைகளும் பெண்களுக்குச் சற்று அதிகம். இந்தக் காரணங்களால், பெண்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது மிகவும் அவசியமான ஒன்று.
குரூப் பாலிசி போதாது!
வேலைக்குப் போகும் பெண்களுக்கு அலுவலகத்தில் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருந்தாலும், தனியாக ஹெல்த் பாலிசி வைத்திருப்பது அவசியம். ஏனெனில், பெரும்பாலான அலுவலகங்களில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் கவரேஜுக்குத்தான் பாலிசி எடுக்கிறார்கள். மேலும் இடையில் வேலையை விட்டு விலகும்போது, ஏதாவது மருத்துவத் தேவையின் காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த நேரங்களில் பாலிசியைப் பயன்படுத்த முடியாது. மேலும், பெண்களுக்கு உடல் சார்ந்த சில பிரச்னைகள் அதிக செலவு வைக்கும். அப்போது மருத்துவச் சிகிச்சைக்குத் தேவையான பெரும்தொகை கையில் இருக்க வேண்டும். இல்லையெனில் சிக்கல்தான். எனவே, குறைந்தபட்சம் ரூ. 3-5 லட்சம் வரை கவரேஜ் உள்ள பாலிசிகளை வைத்திருப்பது நல்லது.
தெரிந்துகொள்ள வேண்டியவை!
பாலிசி எடுக்கும்போது எந்தெந்த நோய்களுக்கு க்ளெய்ம் கிடைக்கும், எந்த நோய்களுக்குக் காத்திருப்புக் காலம் இருக்கிறது என்பது பாலிசி பத்திரத்தில் இருக்கும். அதைத் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
குழந்தையின்மை சிகிச்சை, பிரசவம் போன்றவற்றுக்கு ஹெல்த் பாலிசியில் க்ளெய்ம் செய்ய முடியாது. ஆனால், சில நிறுவனங்கள் வழங்கும் குரூப் பாலிசியில் இதற்கு க்ளெய்ம் கிடைக்கும். ஒரு முக்கியமான விஷயம் - குரூப் பாலிசியை அலுவலகங்களில் மட்டும்தான் எடுக்க முடியும்.
பாலிசியை இளமைக் காலத்திலே எடுப்பது அவசியம். அதிக வயதில் பாலிசி எடுக்கும்போது பிரீமியம் அதிகரிப்பதோடு, ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு க்ளெய்ம் செய்வதில் சிக்கல் உருவாகும்.
'நமக்கு எதுக்கு தனியா இன்ஷூரன்ஸ் பாலிசி' என நினைக்காமல், உடனே பாலிசியை எடுங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதுதான் உங்களின் குடும்பமும் சிறப்பாக இருக்கும்.
- இரா.ரூபாவதி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum