பிறந்தது முதல் மூன்று வயது வரை... பாப்பாக்களை வளர்க்க பக்குவமான வழிகாட்டி!
Thu May 05, 2016 11:30 am
குழந்தை வளர்ப்பை எளிதாகக் கடந்து போனார்கள் சென்ற தலைமுறை அம்மாக்கள். ஆனால், இன்றைய ‘நியூக்ளியர் ஃபேமிலி மம்மி’களுக்கு, குழந்தையைக் குளிப்பாட்டுவதில் இருந்து, சோறூட்டுவது வரை அனைத்திலும் தடுமாற்றங்கள்; இதற்கு என்ன செய்ய வேண்டும், இதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என பல கேள்விகள். பிறந்தது முதல் மூன்று வயது வரை, குழந்தை வளர்ப்பில் அவசியம் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது பற்றி ஆலோசனைகள் வழங்குகிறார்கள், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ரமா மற்றும் நாமக்கல்லைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சுகுமார்.
கவனம் இருக்கட்டும்!
குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் அதற்கு மிக அவசியம், அது மட்டுமே போதும்... தண்ணீர்கூட தேவையில்லை. குழந்தையின் மூளை வளர்ச்சியில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி வரை, அடித்தளம் அமைப்பது தாய்ப்பாலே!
பிறந்த குழந்தைக்கு பவுடர் தேவையில்லை. மிருதுவான பருத்தித் துணிகள் அணிவிக்கலாம்.
ஆறு மாதங்களுக்குப் பின், இணை உணவுகள் தர ஆரம்பிக்கலாம். அது வீட்டில் தயாரித்ததாக மட்டும் இருக்கட்டும். டப்பா உணவுகள் வேண்டாம்.
இரவில் மட்டும் டயப்பர் பயன்படுத்தலாம், பகலில் அம்மா கொஞ்சம் மெனக்கெட்டு குழந்தை ஈரம் செய்யும் துணிகளை அவ்வப்போது மாற்றினால், டயப்பர் ஈரத்தினால் உண்டாகும் ரேஷஸ், தொடர் டயப்பர் பயன்பாட்டில் மாறிப்போகும் குழந்தையின் நடை போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
தடுப்பூசிகளை மறக்காமல் போடுவதுடன், குழந்தை நோயுற்ற சமயங்களில் டாக்டர் தரும் மருந்துச் சீட்டுகள், மருத்துவப் பரிசோதனை முடிவுகள் போன்றவற்றை ஃபைல் ஆக பராமரித்து வரவும். பீரோவில் இருக்கும் நகையைவிட இது முக்கியம்.
ஏழு, எட்டு மாதத்தில் ‘தாத்தா’, ‘ப்பா’ என்று குழந்தை பேச ஆரம்பிக்கும். அப்போது பெரியவர்களும் குழந்தையோடு நேரடியாக அதிகம் பேச வேண்டும். அதுதான் அவர்களைப் பேச வைப்பதற்கான முதல் படி.
ஏழு மாதத்துக்குப் பிறகு ‘டாய்லெட் டிரெய்னிங்’ பழக்க ஆரம்பித்து, இரண்டு வயதுக்குள் ‘கக்கா வருது, சுச்சா வருது’ என்று குழந்தைகள் பெற்றோரிடம் தெரிவிக்கும் வகையில் பழக்கிவிட வேண்டும்.
ஓடிப்பிடித்து விளையாடுவது... எழுத்துகள், எண்களை விளையாட்டாகச் சொல்லிக் கொடுப்பது என அவர்களின் உடலுக்கும், மூளைக்கும் பிடித்த வகையில் வேலை கொடுக்கவும்.
இரண்டு வயதில் பெரியவர்கள் சாப்பிடும் எல்லா உணவுகளையும் குழந்தையும் சாப்பிடப் பழக்கியிருக்க வேண்டும்.
ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தினமும் இரண்டு முறை உடலுக்கும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கும் குளிக்க வைக்கலாம். குழந்தையின் உடல்நிலை ஏற்றுக்கொண்டால், தாராளமாக ஏ.சி-யில் படுக்க வைக்கலாம்.
வீட்டுக்குள்ளேயே குழந்தைகளைப் பூட்டிவைக்காமல், பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடனும், அப்பார்ட்மென்டின் பிளே பார்க் போன்றவற்றிலும் விளையாட வைக்கவும். ‘சோஷியல் பிஹேவியர்’ அப்போதுதான் உருவாகும்.
ஒரு வயதில் இருந்தே குழந்தைகளின் அடத்துக்கு ‘நோ’ சொல்ல ஆரம்பிக்கவும். இதை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பின்பற்றவும்.
மாட்டுப்பாலில் உள்ள புரதத்தை ஜீரணிக்கும் அளவுக்கு பிறந்த குழந்தையின் உடல் வளர்ச்சி இருக்காது. இந்தப் புரதம் உடலில் படிந்து, பிற்காலத்தில் டயாபடீஸ் போன்ற நோய்க்கு ஆளாக நேரிடும். எனவே, பால் சுரக்காத தாய்மார்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் புரதம் உடைக்கப்பட்டு குடலுக்கு தீங்கு செய்யாத பவுடர் பாலை உபயோகிக்கலாம்.
இணை உணவு கொடுக்க ஆரம்பிக்கும்போது, உணவு அதீத தித்திப்பாகவோ, உப்பாகவோ இருக்கக் கூடாது. அது உடலுக்குக் கேடுகளை விளைவிக்கும். இணை உணவை மிக்ஸில் அடித்துக் கொடுக்கக் கூடாது; கை, கரண்டியில் மசித்துக் கொடுக்கலாம்.
நோய்த்தொற்று காரணத்தால் சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்களிடம் இருந்து இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை தள்ளி வைக்கவும்; கூட்டம் அதிகம் நிறைந்த இடங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டாம்.
தொட்டிலை இறக்கிக் கட்டவும். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தொட்டிலில் தூங்கும்போது கண்காணிப்பு அவசியம்.
குழந்தைகள் முன்னிலையில் கெட்ட வார்த்தை, மற்றவர்களை புறணி பேசுவது, பொய் பேசுவது, சண்டை போடுவதெல்லாம் கூடவே கூடாது. பின் அதையேதான் குழந்தையும் செய்யும்.
மூக்கை உறிஞ்சி சளி எடுப்பது, மார்பை அழுத்திப் பால் எடுப்பது... இவையெல்லாம் கூடவே கூடாது!
தனக்கு நேர்ந்ததை வெளியில் சொல்லத் தெரியாத வயது என்பதால், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை நெருங்கிய உறவுகளிடம்கூட ஐந்து நிமிடங்களுக்கு மேல் தனியாக இருக்கவிட வேண்டாம்.
டி.வி, போன், கம்ப்யூட்டர் போன்ற ஸ்க்ரீன் சமாசாரங்களை இரண்டு வயது வரை குழந்தைக்கு அனுமதிக்கக் கூடாது. அதற்குப் பிறகும், நேரக் கெடுபடி அவசியம்.
குழந்தை அடம்பிடிக்கும்போது அடிக்காமல், இடம், சூழல், பேச்சு போன்றவற்றை மாற்றி, அவர்களை வேறு ஒரு விஷயத்தில் சுவாரஸ்யம் கொள்ளச் செய்யவும். அடத்துக்குப் பணிந்து அவர்கள் கேட்பதை கொடுக்கவோ, செய்யவோ கூடாது.
பெற்றோர், பெரியவர்களைக் கிண்டல், கேலி செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவர்களுக்கு காட்டக்கூடாது. பச்சை மனதில் பதிந்ததை மாற்ற முடியாது... கவனம்!
ம.பிரியதர்ஷினி படம்: தே.தீட்ஷித் மாடல்: நர்மதா
Re: பிறந்தது முதல் மூன்று வயது வரை... பாப்பாக்களை வளர்க்க பக்குவமான வழிகாட்டி!
Thu May 05, 2016 11:32 am
இஸ்திரி செய்துவிட்டு சூடாக இருக்கும் இஸ்திரி பெட்டியை குழந்தைகள் எடுக்கும் வகையில் வைப்பது, குழந்தைக்கு எட்டும் உயரத்தில் இருக்கும் டைனிங் டேபிளில் சூடான உணவுகளை வைப்பது, தீப்பெட்டி, கத்தி, சிகரெட் லைட்டர் போன்றவை குழந்தைகள் கைக்கு கிடைக்கும்படி இருப்பது... இந்த அஜாக்கிரதைகள் எல்லாம் குழந்தைக்கு பெரிய ஆபத்தை உண்டாக்கும்.
இரண்டு வயது வரை, குழந்தைக்கு கொலுசு, குறிப்பாக நிறை கொலுசு அணிவிக்கலாம். நம் கண்களைத் தாண்டிச் சென்றாலும், குழந்தை எங்கு செல்கிறது என்பதை நம் காதுகளுக்கு உணர்த்தும் குறிப்பொலி, அந்தச் சலங்கையொலி. அந்த வகையில், ஆண் குழந்தைகளுக்கும் கொலுசு அணிவிக்கலாம்.
பைக் சைலன்ஸரில் எப்போதும் இரட்டை கவனத்துடன் இருக்கவும். என்னதான் நாம் கவனமாக நம் பைக்கை தொலைவில் நிறுத்தினாலும், வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களின் பைக் சைலன்ஸர் ஆபத்தும் இருக்கத்தான் செய்யும். எனவே, விவரம் தெரியும் குழந்தைகளுக்கு, சைலன்ஸரின் ஆபத்தைச் சொல்லி புரியவைக்கவும்.
தண்ணீர் பாட்டில்களில் மண்ணெண்ணெய், ஃபினாயில் போன்ற திரவங்களை சேமித்து வைக்கும்போது, அவற்றை உயரத்தில் வைக்கவும். தரையிலோ, குழந்தைகள் கைக்கு எட்டும் உயரத்திலோ வைத்தால், அந்த நிறத்தின் கவர்ச்சியில் இழுக்கப்பட்டு குழந்தை அதை எடுத்துக் குடித்துவிடும் அபாயம் உண்டு.
இரண்டு வயது வரை, குழந்தைக்கு கொலுசு, குறிப்பாக நிறை கொலுசு அணிவிக்கலாம். நம் கண்களைத் தாண்டிச் சென்றாலும், குழந்தை எங்கு செல்கிறது என்பதை நம் காதுகளுக்கு உணர்த்தும் குறிப்பொலி, அந்தச் சலங்கையொலி. அந்த வகையில், ஆண் குழந்தைகளுக்கும் கொலுசு அணிவிக்கலாம்.
பைக் சைலன்ஸரில் எப்போதும் இரட்டை கவனத்துடன் இருக்கவும். என்னதான் நாம் கவனமாக நம் பைக்கை தொலைவில் நிறுத்தினாலும், வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களின் பைக் சைலன்ஸர் ஆபத்தும் இருக்கத்தான் செய்யும். எனவே, விவரம் தெரியும் குழந்தைகளுக்கு, சைலன்ஸரின் ஆபத்தைச் சொல்லி புரியவைக்கவும்.
தொகுப்பு: பொன்.விமலா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum