விவசாயியின் 4 பங்கு
Wed Mar 13, 2013 12:18 pm
நாட்டில் மக்கள் எப்படி இருக்கிறார்கள்” என்று அறிந்து கொள்வதற்காக அரசர் மாறுவேடத்தில் வந்தார்.
ஒரு தோட்டத்தில் விவசாயி உற்சாகமாக வேலை செய்து கொண்டிருந்தான்.
அரசர் அவனிடம், “உன் உழைப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தோட்டத்தில்
உற்சாகமாக வேலை செய்து கொண்டிருக்கிறாயே? என்ன காரணம்?” என்று கேட்டார்.
”இந்த விவசாயத்தின் மூலம் நான்கு பங்குக்குத் தேவையான வருமானம் வேண்டியிருக்கிறது”
“அதென்ன நான்கு பங்கு?”
“ஆமாம்.முதல் பங்கு கடன் அடைப்பதற்குத் தேவை. இரண்டாவது பங்கு வட்டிக்குத்
தேவை. மூன்றாவது பங்கு தருமம் செய்யத் தேவை. நான்காவது பங்கு என்
கடமைக்காகத் தேவை” என்றான்.
அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. அவனிடமே கேட்டார்.
“என் பெற்றோரை மனம் நோகாமல் காப்பது என் கடன். இதற்கு என் முதல் பங்கு.
பிற்காலத்தில் என்னைக் காப்பாற்றுவார்கள் என்கிற நம்பிக்கையில் என்
குழந்தைகளை வளர்க்கிறேன். இது பின்னால் வரும் என்கிற நினைப்பில்
செலுத்தப்படும் வட்டி. இதற்கு என் இரண்டாம் பங்கு. என் உறவினர்கள் சிலர்
என்னுடைய ஆதரவு வேண்டி நிற்கிறார்கள். இது என் தருமம். இதற்கு என் மூன்றாம்
பங்கு. என் மனைவியைக் கடைசி வரைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை. இதற்கு
என் நான்காம் பங்கு” என்றான்.
அரசர் அவனுடைய பங்குக் கணக்கைக் கேட்டு வியந்து போனார்.
நன்றி: தமிழ்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum