சிம்பிள் & ஹெல்த்தி சாலட்ஸ்!
Sat Mar 19, 2016 7:05 pm
பச்சைப் பட்டாணி உருளை சாலட்
தேவையானவை: உருளைக்கிழங்கு - 1, பச்சைப் பட்டாணி - கால் கப், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக் கிழங்கை தோல் நீக்காமல் வேக வைக்கவும். கிழங்கு வெந்ததும் தோல் நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மசித்துக்கொள்ளவும். பச்சைப் பட்டாணியை கொதிக்கும் தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் போட்டு எடுத்துவிடவும். உருளைக் கிழங்கு, பட்டாணி இரண்டையும் கலந்து, உப்பு, கொத்தமல்லித் தழையைப் போட்டு, கிளறிப் பரிமாறவும். தேவைப்பட்டால், எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்கலாம்.
பலன்கள்: வேகவைத்த உருளைக் கிழங்கில் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைவாக உள்ளன. புரதச்சதத்து குறைந்த அளவில் உள்ளது. இதனால், உடல் செல்களுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். இதில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாது உப்புக்கள் எலும்பு உறுதியாகவும், தசை மற்றும் நரம்பு செல்கள் துடிப்புடன் செயல்படவும் உதவும். பச்சைப் பட்டாணியில் வயிறு, இரைப்பை தொடர்பான புற்றுநோயை எதிர்க்கும் ஊட்டச்சத்து உள்ளது. இதில் உள்ள கெரோட்டினாய்ட்ஸ், பாலிபீனால்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள், முதுமையைத் தாமதப்படுத்தும்; வலிமையான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கும்.
வேர்க்கடலை சாலட்
தேவையானவை: தோல் நீக்கிய வேர்க்கடலை - அரை கப், பச்சை மிளகாய் - 2, பெரிய வெங்காயம், தக்காளி - தலா 1, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - இரண்டு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையுடன், நறுக்கிய காய்கறிக் கலவை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். மேலாக கொத்தமல்லித் தழையைத் தூவினால், வேர்க்கடலை சாலட் ரெடி. வறுத்த வேர்க்கடலை என்பதால், மொறுமொறுப்பாக இருக்கும்.
பலன்கள்: இதில் கலோரி அதிகமாக உள்ளது. 100 கிராம் வேர்க்கடலையில் 567 கலோரிகள் உள்ளன. இதில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதில் வைட்டமின் இ, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. கல்லீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum