இட்லிக்கு வடகறி தோசைக்கு குருமா!
Sun Feb 28, 2016 10:30 pm
“சைவத்துல மட்டுமில்லை, அசைவத்துலயும் அசத்தலா சமைக்கறவங்க சென்னைக்காரங்க. ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரி பிரியாணி செஞ்சு அசத்துனா குஸ்காவையே அருமையா சமைப்பாங்க இவங்க” என்று சென்னை உணவின் மகத்துவத்தைச் சிலாகிக்கிறார் அமைந்தகரையைச் சேர்ந்த அம்பிகா. பெருமை பேசுவதுடன் நின்றுவிடாமல், நாவூறும் சில சென்னை உணவு வகைகளைச் சமைக்கவும் கற்றுத் தருகிறார் இவர்.
வடகறி
என்னென்ன தேவை?கடலைப்பருப்பு - ஒரு கப்
வெங்காயம் - 5
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - ஒரு டீஸ்பூன்
முந்திரி - 6
தேங்காய்த் துருவல் - அரை கப்
புதினா - கால் கட்டு
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கடலைப் பருப்பை மூன்று மணி நேரம் ஊறவையுங்கள். ஊறியதும் அதைத் தண்ணீர் இல்லாமல் நன்றாக வடித்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்து சிறு சிறு பக்கோடாக்களாகப் போட்டு பொரித்தெடுங்கள். முந்திரியுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமானதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்குங்கள். அதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்குங்கள். அதனுடன் அரைத்த முந்திரி - தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்குங்கள். நன்றாக வதங்கியதும் அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்ரி நன்றாகக் கொதிக்கவிடுங்கள். புதினா இலை, மல்லித்தழை சேர்த்து, பொரித்த பக்கோடாக்களைப் போட்டு, சிறு தீயில் மூடிவையுங்கள். அனைத்தும் நன்றாகச் சேர்ந்து வந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறுங்கள். இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என சகல டிபன் வகைகளுக்கும் இந்த வடைகறி ஏற்றது.
சமையல் குறிப்பு - அம்பிகா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum