சாமை பொங்கல்
Sat Feb 13, 2016 4:35 pm
சாமை பொங்கல்
இன்று, 25 வயதில் இதய நோய், 30 வயதில் மூட்டுவலி என அனைவருமே ஏதேனும் ஒரு நோயைச் சுமந்து, மருந்துகளையே உணவாக உட்கொள்கிறோம். உணவின் தேவை அதிகரித்து வரும் நிலையில், பாரம்பரிய விவசாய முறை என்பது படுபாதாளத்தை நோக்கிப்போய் கொண்டிருக்கிறது. விளை நிலங்களைப் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் ஆக்கிரமித்து விட்டன.
உணவும் நஞ்சாகி நோய்களுக்கு ரத்னக் கம்பளம் விரித்து விட்டது. இனி, உணவு புரட்சி செய்து, அதிகம் ஆர்கானிக் உணவுகளை அன்றாடம் சேர்த்துக் கொள்வது ஒன்றே நம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரே வழி.
சிறுதானிய உணவுப் பொருட்கள், நம் உடலுக்கு ஊட்டத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தருவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தினம் ஒரு சிறுதானியம் பற்றிய இந்த சிறப்புத் தகவல்கள், ஆரோக்கியமான வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பது உறுதி.
சாமை:
மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும், சாமையில்தான் இரும்புச்சத்து அதிகம். ரத்தசோகை வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். தாதுப் பொருட்களை உடலில் அதிகரிகக்ச் செய்து, உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும். இதில், கலோரி அளவு மிகக்குறைவு. ஆனால், ஊட்டச்சத்துக்கள் மிக அதிகம். புரதமும் இதில் இருக்கிறது. அதிகம் சேர்த்துக்கொண்டாலும் ஆபத்து இல்லை.
பலன்கள்:
மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்ற பிரச்னைகள் தீரும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது. உடலில் சத்துக்களை அதிகரிக்கச் செய்யும் சாமையை, தினமும் காலை உணவாகச் சமைத்துச் சாப்பிடலாம்.
சாமை பொங்கல்:
சாமையில் சாதம், உப்புமா, இட்லி, இடியாப்பம், பொங்கல், தோசை, புட்டென வெரைட்டியாக ருசியாகச் சமைக்கலாம்.
ஒரு கப் சாமைக்கு, கால் கப் பாசிப்பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் தனித்தனியாக வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும். குக்கரில் பால் ஒரு கப் மற்றும் கொஞ்சம் தண்ணீர் விட்டு, வறுத்த சாமை, பருப்புச் சேர்த்து, உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, ஒரு டீஸ்பூன் மிளகு, சீரகம், சிட்டிகை பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி அரை டீஸ்பூன் போட்டு வதக்கவும். கடைசியாக, முந்திரியை வறுத்து, பொங்கலில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இதற்குத் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி தொட்டுச் சாப்பிடலாம்.
வயோதிகர்கள், சர்க்கரை நோயாளிகள் நெய், முந்திரியைத் தவிர்த்துவிடுங்கள்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum