நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்
Fri Feb 12, 2016 9:10 am
நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். ஆதி. 26:3
ஆதியிலே தேவன் ஈசாக்குக்கு “ நான் உன்னோடே கூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்” என்று வாக்குத்தத்தம் கொடுத்தார். வாக்குக் கொடுத்த தேவன் சொல்லிவிட்டு விட்டுவிடுகிறவராக இல்லாமல் சொன்ன வாக்குத்தத்தத்தை அப்படியே நிறைவேற்றினார்.
ஆதி. 26:13ல் ஈசாக்கு ஐசுவரியவானாகி வரவர விருத்தியடைந்து மகா பெரியவனானான். மாத்திரமல்ல ஆதி. 26:28ல் ஈசாக்குக்கு எதிராய் நின்றவர்கள்,துரோகம் செய்தவர்கள் கூட நிச்சயமாய் கர்த்தர் “உம்மோடே கூட இருக்கிறார் என்று சாட்சி சொல்லுகிறார்கள். மாத்திரமல்ல, 29ம் வசனத்தில் அவனுடைய சத்துருக்களும் கூட உம்மோடே உடன்படிக்கை பண்ணிக் கொள்ள வந்தோம். நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள்.“
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, உபா. 13:18ன் படி, கர்த்தர் உன்னை விருத்தியடைய பண்ணுவார் என்ற வாக்குத்த்த்த்தின் படி இங்கு ஈசாக்கு வரவர விருத்தியடைந்து மகா பெரியவனானான். மாத்திரமல்ல, அவனுக்கு எதிராய் சத்துருவாய் செயல்பட்டவர்கள் கூட ஈசாக்குக்கு பயந்து அவனோடேகூட உடன்படிக்கை பண்ணிக் கொண்டார்கள். “ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்”. என்று நீதி. 16:7ல் வேதம் சொல்கிறது.
இவ்விதமாய் கர்த்தர் ஈசாக்கோடே கூட இருந்து அந்நிய தேசத்திலே வரவர விருத்தியடையச் செய்து மகா பெரியவனாக்கி அவனுடைய சத்துருக்களையும் அவனோடே கூட பயந்து உடன்படிக்கை செய்ய வைக்க ஈசாக்கிடம் காணப்பட்ட குணாதிசயங்கள் என்ன என்பதை சற்று தியானித்து அப்படிப்பட்ட குணாதிசயங்களை நாமும் பெற்று ஈசாக்கை ஆசீர்வதித்த தேவனுடைய ஆசீர்வாதத்தினால் நாமும் ஆசீர்வதிக்கப்பட்டு நம்முடைய சகல காரியங்களிலும் நாமும் விருத்தியடைவோமாக.
பலிபீடத்தில் தன்னை அர்ப்பணித்தவன்.
ஆதி. 22:9 குமாரனாகிய ஈசாக்கை கட்டி பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனை கிடத்தினான். ஏன் ஈசாக்கு பலிபீடத்திலே கிடத்தப்படுவதற்கு தன்னை அர்ப்பணித்தான்? அவன் பெற்றோரை கனம் பண்ணுகிறவனாக இருந்தான். பெற்றோருக்கு கீழ்படிகிறவனாக இருந்தான். அது மாத்திரமல்ல. முக்கியமாக தகப்பனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு தன்னை ஒப்புக் கொடுத்தவனாய் காணப்பட்டான்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி பார்ப்போமென்றால்,மத். 26:39ல் என் பிதாவே! இந்த பாத்திரம் என்னைவிட்டு நீங்க கூடுமானால், நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தப்படி அல்ல, உம்முடைய சித்தத்தின் படியே ஆகக்கடவது.” என்று இயேசு கிறிஸ்துவும் கூட தன் பிதாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு தன்னை ஜீவபலியாக சிலுவை என்ற பலிபீடத்திலே முற்றிலுமாக ஒப்புக் கொடுத்தார்.
லூக்கா 9:23ல் “இயேசு, ஒருவன் என் பின்னே வரவிரும்பினால் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன்” என்று சொன்னார். மேலும், ரோமர் 6:6ல் “பாவ சரீரம் ஒழிந்து போகும் பொருட்டாக நம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூட சிலுவையில் அறையப்பட வேண்டும்” என்று பவுல் கூறுகிறார்.
ஆகவே நாமும் நம்மைத் தெரிந்து கொண்ட பிதாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு உலகத்தையே சார்ந்து உலகத்திற்காக மாத்திரம் வாழ்கின்ற நமது பாவம் மற்றும் சுய வாழ்க்கையை சிலுவை என்ற பலிபீடத்தில் நம்மை ஜீவபலியாக ஒப்புக் கொடுத்து பிதாவின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய புதிய வாழ்க்கையை தரித்து ஜீவிக்க நம்மை அர்ப்பணிப்போம் என்றால் நம்முடனே கூட கர்த்தர் இருந்து நம்மையும் ஆசீர்வதிப்பார்.
தியானம் பண்ணுகிறவன்
ஆதி. 24:63ல் ஈசாக்கு சாயங்கால வேளையிலே தியானம் பண்ண வெளியே போனான் என்று வாசிக்கின்றோம். ஈசாக்கிடம் காணப்பட்ட அடுத்து முக்கியமான குணம் கர்த்தருடைய வார்த்தைகளை, செய்கைகளை தியானிக்கிறவனாக காணப்பட்டான்.
சங். 119:97ல் “நாள் முழுவதும் அது என்னுடைய தியானம்.” சங். 1:2,3 வசனங்களில் “ கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஏன் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்வதெல்லாம் வாய்க்காமல் போகின்றது? சரியாக வேதத்தை வாசிப்பது கிடையாது, வாசித்து, தியானிப்பதும் கிடையாது. வாரம் ஒருமுறை ஆலயத்திற்கு போகும்போது வேதத்தை எடு்த்து கடமைக்காக மற்றவர்கள் கேட்பார்களே என்று வாசிப்பது. சிலபேர் ஆலயத்துக்கு வரும்போது கூட மதிப்பு குறைந்து விடும் என்று நினைத்து வேத புத்தகத்தை கொண்டு வருவது கிடையாது. அவர்கள் எப்படி வேதத்தை வாசிப்பார்கள்? அதை தியானிப்பார்கள். பிறகு எப்படி ஆசீர்வாதம் வரும்? தினசரி சமயம் கிடைக்கும் போதெல்லாம் வேதத்தை வாசித்து தியானித்து அதன்படி நடக்கும்போது தான் கர்த்தர் நம்மோடு கூட இருந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
நம்முடைய வீட்டில் எல்லோரும் ஒரே நேரத்தில் சாப்பிடும்படியாக ஆளுக்கு ஒரு சாப்பாட்டு தட்டு இருப்பதுபோல வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தனி வேதாகம் வாங்கி வைத்து வாசித்து தியானிக்கப் பழகுங்கள். குடும்பத்திற்கு ஒரு வேதாகமம் என்று இல்லாதபடி நபருக்கு ஒரு வேதாகமம் என்று வாங்கி வாசியுங்கள். தியானியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
ஜெபிக்கிறவன்.
ஆதி. 25:21ல் ஈசாக்கு கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். ஈசாக்கு வேதத்தை தியானிக்கிறவனாக மட்டும் இருக்கவில்லை. தனது தேவைகளுக்கு கர்த்தரிடத்திலே மன்றாடி வேண்டுதல் செய்கிறவனாகவும் காணப்பட்டான்.
இன்றைய நாட்களில் அநேக கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் ஏன் ஜெயம், ஆசீர்வாதம் இல்லை? ஜெபமே கிடையாது. கடமைக்காக 2 நிமிடம் 5 நிமி்டம் ஜெபிக்கிறவர்களாயிருக்கிறோம். மேலும் சிலபேர் அப்படியே உட்கார்ந்து கொண்டு முனுமுனு என்று சில வார்த்தைகளை முனுமுனுத்து விட்டு நானும் ஜெபித்துவிட்டேன் என்று சொல்கிறார்கள். அது அல்ல ஜெபம்.
உதாரணமாக நம்முடைய வீட்டில் நம்முடைய சிறு குழந்தை காலையிலேயே விழித்தவுடனே நாம் அந்த குழந்தையோடே கொஞ்சி பேசி மகிழ்கிறோமே அதே நேரத்தில் அந்த குழந்தை நம்மோடு கொஞ்சி சிரித்து பேசாமல் ஒரமாக ஒரு மூளையில் போய் உட்கார்ந்து தன்னுடைய வேலையை செய்தால் நமக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கும். அதுபோல தான் நமது பரம தகப்பனும் நம்மிடத்திலே எதிர்ப்பார்ப்பது காலையிலேயே அவரோடே கூட கொஞ்சி பேசி சிரித்து மகிழ ஆவலோடு காத்து கொண்டிருக்கிறார். ஆனால் நாமோ நமது வேலைதான் முக்கியம் என்று தகப்பனோடே கூட பேசுவது கிடையாது அல்லது கடமைக்காக பேசுவது.
ஆகவே கிறிஸ்துவுக்குள் அருமையானவர்களே இன்றுமுதல் நாம் நம் கடமைக்காக ஜெபிக்கிறதை விட்டுவிட்டு பிதாவாகிய தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கும் ஜெபத்தை காலை, மாலை, இரவு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெபம் செய்து அவருக்கு பிரியமான வாழ்க்கை வாழ்ந்தால் நிச்சயமாக கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து விருத்தியடையப்பண்ணுவார்.
எலியா என்பவன் நம்மைப் போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும் மழை பெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம் பண்ணினான். யாக். 5:17. அதுபோல பாடுகள் நிறைந்த நாமும் கருத்தாய் ஜெபிப்போம்! ஜெயம் பெறுவோம்!
பொறுமையுள்ளவன்
ஆதி. 26:17 முதல் 22வரை உள்ள வசனங்களை வாசித்துப் பார்த்தால் ஈசாக்கின் தகப்பனுடைய நீருற்றுகளை எல்லாம் அவன் வேலைக்காரர்கள் தோண்டி தண்ணீரை கண்டார்கள். அப்பொழுது அங்குள்ள மேய்ப்பர்கள் ஈசாக்குக்கு விரோதமாக எழும்பி வாக்குவாதம் பண்ணி இது எங்களுக்குரியது என்று சொன்னார்கள். உடனே ஈசாக்கு அவர்களோடே வாக்குவாதம் பண்ணி சண்டை போடாமல் அதை பொறுமையோடே விட்டுவிட்டான். பின்பு ஒரு துறவை தோண்டினான். அங்கும் சண்டைக்கு வந்தார்கள். அதையும் விட்டு விட்டான். இப்படி வாக்குவாதம் பண்ண வந்த போதெல்லாம் அவன் பொறுமையோடே அவைகளை விட்டு விட்டு போய் விட்டான். “பொல்லாத மனுஷர் மேல் பொறாமை கொள்ளாதே, அவர்களோடே இருக்கவும் விரும்பாதே”. நீதி. 24:1 என்று வேதம் கூறுகின்றது. ஆகவே பொல்லாப்பு நிறைந்த மனிதர்களுடன் நாம் இருக்காமல் அவர்களை விட்டு விலகி செல்வதே நமக்கு ஆசீர்வாதம். அவ்விதமாக ஈசாக்கு பொறுமையாக தனக்கு பொல்லாப்பு செய்த மனிதர்களை விட்டு விலகி சென்றான். ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டான்.
ஆகவே கிறிஸதுவுக்குள் பிரியமானவர்களே ஈசாக்கோடே கூட இருந்து அவனை ஆசீர்வதித்து விருத்தியடையப் பண்ணின தேவன் உங்களோடே கூட இருந்து உங்களையும், சகல காரியங்களிலும் விருத்தியடையப் பண்ணுவாராக. அதற்கு நாமும் ஈசாக்கைப் போல பிதாவின் சித்தத்திற்கு ஆவி, ஆத்துமா, சரீரத்தை முழுமையாக அர்ப்பணித்து, வேதத்தை வாசித்து தியானிக்கிறவர்களாகவும், கருத்தாய் ஜெபிக்கிறவர்களாயும், நமக்கு எதிராய் வருகின்ற சூழ்நிலைகளில், பொறுமையோடு இருப்பவர்களாயுமிருந்தால் நிச்சயமாக நாமும் ஈசாக்கைப் போல வரவர விருத்தியடைந்து மகா பெரியவர்களாகலாம்.
கர்த்தர் தாமே இப்படிப்பட்ட கிருபைகளை உங்களுக்கு கொடுத்து உங்களை சகல காரியங்களிலும் விருத்தியடைய செய்ய உங்களோடே கூட இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum