தொல்லை தீர்க்கும் வெள்ளைக் குங்கிலியம்!
Wed Jan 20, 2016 9:07 am
குங்கிலிய மரத்தை 'டாமர்’ என்பார்கள். இது மலேய மொழிச் சொல். 'எரியும் பொருள்’ என்று அர்த்தம். குங்கிலியத்தில் சீமைக் குங்கிலியம், கருங்குங்கிலியம், வெள்ளைக் குங்கிலியம், பூனைக் கண் குங்கிலியம் எனப் பல வகைகள் உண்டு. அவற்றில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் அதிகம் காணப்படுவது வெள்ளைக் குங்கிலியம்தான்.
அதிகமான மருத்துவப் பயன்களை உடையது இது. இதை நாட்டுக் குங்கிலியம் என்றும் சொல்வார்கள். வெள்ளைக் குங்கிலியத்தின் தாவர இயல் பெயர் வெடிரியா இண்டிகா (Vateria indica). 100 அடி உயரம்வரை வளரக்கூடிய பசுமை மாறாத மர இனம் இது.
கோயில்களிலும் வீடுகளிலும் கமகம என்று மணக்கும் புகை எழுப்பும் சாம்பிராணி இந்த மரத்தின் பட்டையில் இருந்து கிடைக்கும் கோந்தில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. காய்களுக்குள் இருக்கும் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்தி சோப், மெழுகுவர்த்தி போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
வெள்ளைக் குங்கிலியத்தின் வெவ்வேறு மருத்துவக் குணங்களை விவரிக்கிறார் எட்டையபுரம் அரசு மருத்துவமனை உதவி சித்த மருத்துவ அலுவலர் ஆர்.அனுஷா
''வெள்ளைக் குங்கிலிய மரப் பட்டையைக் கீறி, கோந்தைச் சேகரிப்பார்கள். சேகரிக்கப்பட்ட கோந்து வெள்ளை நிறத்தில் பளிங்குத் துண்டுகள் போல இருக்கும்.
குடலில் சேரும் வாயுவை அகற்றுவதற்கும்,கபத்தை வெளியேற்றுவதற்கும், மூலம், வயிற்றுப்போக்கு போன்றவற்றைப் போக்குவதற்கும், வாதங்கள் மற்றும் கட்டிகளைக் குணப்படுத்துவற்காகவும் வெள்ளைக் குங்கிலியம் பயன்படுத்தப்படுகிறது. டானிக் போலவும் செயல்படும் திறன் இதற்கு உண்டு.
வெள்ளைக் குங்கிலியக் கோந்தைப் பொடி செய்து நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி, மூட்டுகளில் பூசிவந்தால் மூட்டு வலி குணமாகும். நெய்விட்டுப் பொரித்து, தண்ணீர்விட்டு நன்றாகக் குழைத்து, பாதி தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுக்க வெள்ளைப்படுதல் குணமாகும். பசு வெண்ணெய் அல்லது நெய்யிலும் கலந்து கொடுக்கலாம்.
கோந்துத் தூளை 1 கிராம் எடுத்து 1 கோப்பைப் பாலில் கலந்து குடித்தால் இருமல், மார்புச்சளி, ரத்த மூலம் ஆகியவை கட்டுப்படும்.
1 கிராம் கோந்துத் தூளுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் சீதக்கழிச்சல் குணமாகும்.
10 கிராம் கோந்த்துத் தூளுடன், 20 கிராம் மாம்பருப்புத் தூள், 8 கிராம் இலவம் பிசின் தூள், 20 கிராம் சாதிக்காய்த் தூள் ஆகியவற்றை ஒன்றாக 130 மி.லி. நீரில் கலந்து கொடுக்க வயிற்றுப்போக்கு குணமாகும்.
குங்கிலியத்தூள், மெழுகு ஆகியவற்றை எடுத்துத் தீயில் உருக்கி நல்லெண்ணெய் சேர்த்துச் சூடாக இருக்கும்போதே வடிகட்டி, துணியில் தடவிப் புண்கள் மீது பற்றுப்போட்டால் விரைவில் ஆறும். தூள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். பாலில் கலந்து குடித்தால் உடல் வலிமை பெறும்.
குங்கிலியத்தைக் கொண்டு குங்கிலிய வெண்ணெய், குங்கிலியப் பற்பம், குங்கிலியத் தைலம் ஆகியவை தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கின்றன. மருத்துவர்களின் ஆலோசனையுடன் இவற்றைச் சாப்பிடலாம்.
குங்கிலிய வெண்ணெய் மேகப் புண், அக்கி, மூலப் புண், தீக்காயங்கள் ஆகியவற்றிற்கு வெளிப் பூச்சாகப் பயன்படுத்தலாம்.
குங்கிலியத் தைலம் வாத நோயைக் குணப்படுத்தும். அரை முதல் 1 கிராம் குங்கிலியப் பற்பம் எடுத்து அரை டம்ளர் இளநீரில் கலந்து தினமும் 3 வேளை கொடுத்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.
குங்கிலியப் பற்பத்தை முள்ளங்கிச் சாற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக் கற்கள் கரைந்து வெளியேறும்.
பட்டை: இதில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயத்துக்கு வீக்கத்தைக் குணமாக்கும் தன்மை உண்டு.
உபரித் தகவல்:
இதன் வாழிடமான காடுகள் அழிக்கப்படுவதாலும், அதிக அளவில் வெட்டப்படுவதாலும், இந்த மரங்கள் குறைந்துவருகின்றன என்பது இயற்கை ஆர்வலர்களைக் கவலைகொள்ளச் செய்யும் செய்தி!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum