நாங்கள் செய்த பாவம் தான் என்ன ?
Sun Jan 17, 2016 10:26 pm
வீட்டு மனை தயாராகிக் கொண்டிருந்த அந்த
நிலத்தின் ஓரம் நின்றிருந்த
பனை மரங்களின் ஓலைகளில்
தொட்டு தடவி வந்த காற்று கேட்டது -
நாங்கள் செய்த பாவம் தான் என்ன ?
அந்த மரத்தின் கிளைகளில்
கூடு கட்டி குடும்பத்துடன்
வசித்து வந்த தூக்கணா குருவிகள் கேட்டது -
இனிமேல் நாங்கள் எங்கு தான் சென்று வாழ்வது ?
அந்த மரங்களையே சுற்றி சுற்றி
விளையாடி வந்த அந்த சிறுவர்களின்
வாடிய முகங்கள் சோகத்துடன் கேட்டது -
இனிமேல் நாங்கள் எங்கு தான் விளையாடுவது ?
அந்த மரங்களின் நிழலையே
மதிய வெயில் ஆற்ற பயன்படுத்திய
அந்த இடத்தில் கட்டப்பட்ட மாடுகள் ஏக்கத்துடன் கேட்டது -
இனிமேல் நாங்கள் எங்கே தான் ஒதுங்குவது ?
இதில் எந்த ஒரு கேள்விக்கும்
பதில் தரமுடியாமல் நடந்து வந்து கொண்டிருந்த
என் கண்களில் பட்டது அந்த பச்சை நிற பலகை
" கிரீன் சிட்டி "
உங்களை அன்புடன் வரவேற்கிறது !
Permissions in this forum:
You cannot reply to topics in this forum