உங்கள் ஆத்துமாக்களை விழிப்புடன் காத்துக் கொள்ளுங்கள்
Fri Jan 08, 2016 7:37 pm
தேவ ஜனமே, உங்கள் ஆத்துமாக்களை
விழிப்புடன் காத்துக் கொள்ளுங்கள்
முடிவில்லாத நித்தியத்தை (Eternity) நாம் ஆண்டவர் இயேசுவோடு பரலோகத்திலா? அல்லது எரி நரகிலா? எங்கு செலவிட வேண்டும்? என்பது நாம் எடுக்கும் திட்டமான தீர்மானத்தைப் பொறுத்த காரியமாகும். நாம் நமது இக லோக வாழ்விற்குப் பின்னர் மோட்சமா அல்லது நரகமா எங்கு செல்லுவோம் என்பதை இங்கேயே நாம் நிச்சயமாகக் கண்டு கொள்ளலாம். அதில் துளிதானும் சந்தேகமே கிடையாது. நமது மனந்திரும்புதலும், பாவ மன்னிப்பும், நமது மறுபுறப்பும் தேவனுடைய வசனத்தின்படி உண்மையாக இருந்து பரிசுத்த ஆவியானவர் அதற்கு ஆதாரமாக அதை முத்திரையிட்டு நமது உள்ளத்தில் எப்பொழுதும் வாசம் செய்து கொண்டிருப்பாரானால் நமது முடிவு எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி நீதிமானுடைய முடிவாகவே இருக்கும் (எண் 23 : 10)
இந்த உலக வாழ்வில் நாம் எப்பொழுதும் ஏனோக்கைப் போல தேவனோடு சஞ்சரித்துக் கொண்டே இருப்போம் (ஆதி 5 : 24) அந்த தேவாதி தேவனும் நம்மைப் பார்த்துக் களிகூர்ந்தவராக "மகனே நீ எப்போதும் என்னோடிருக்கிறாய்" (லூக்கா 15 : 31) என்று கூறுவார். கர்த்தர் நமது சுதந்திரமும், நமது பாத்திரத்தின் பங்குமாக இருக்கும் போது இந்த உலகத்தில் நமக்கு அவரைத் தவிர வேறு எந்த விருப்பமும், வாஞ்சையும் இருக்காது. அதைத்தான் தாவீது ராஜாவும் "பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பம் இல்லை" (சங் 73 : 25) என்று சொன்னார்.
உங்கள் வீட்டில் கரும் பெட்டி (தொலைக்காட்சி) இருந்து நீங்கள் அந்த தொலைக்காட்சியின் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளின் மகுடியில் மயங்கி அந்த ஆடல்கள், பாடல்கள், ஆனந்த கூத்துகளின் அரவணைப்பிலேயே உங்கள் நாளை செலவிட்டு இரவு உங்கள் இளைப்பாறுதலுக்குச் செல்லும் வரை அதின் ஆரவாரக் குரல்கள் உங்கள் காதுகளுக்குத் தேவைப்படும் பட்சத்தில் ஒன்றை நிச்சயமாக உங்கள் இருதயப் பலகையில் எழுதிக் கொள்ளுங்கள். "நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்" (தானி 5 : 27) இது உங்கள் ஆவிக்குரிய பரிசுத்த வாழ்வின் ஆபத்தான அறிகுறியாகும். உங்களுடைய இருதயம் கர்த்தரோடு செம்மையாக இருக்கவில்லை என்பதே அதின் பொருளாகும்.
உங்கள் இரட்சிப்பு, மறுபிறப்பின் காரியங்களில் நிச்சயமாக தவறுகள் இருக்கின்றது. அதின் காரணமாகவேதான் நீங்கள் தொலைக்காட்சியை நாள் முழுவதும் பார்த்து உங்கள் விலையேறப்பெற்ற காலத்தைப் பாழாக்குவதுடன் தினசரி செய்தித் தாட்களையும் வாங்கி ஆவலோடு வாசிக்கின்றீர்கள். அநேக கிறிஸ்தவர்களுக்கு செய்தித்தாட்கள்தான் தேவனுடைய பரிசுத்த வேதாகமம். ஒரு தடவை அதிக நேரம் செலவிட்டு அவைகளை வாசிப்பதுடன் நின்றுவிடாமல் மேஜை மீது கிடக்கும் அவைகளை அவ்வப்போது திரும்பவும் எடுத்து வாசித்துக் கொண்டிருப்பார்கள்.
அந்த பொன்னான மணி நேரங்களை ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிடுவது என்பது அவர்களுக்கு எட்டியாக கசக்கும். பகற்கால மணி நேரங்கள் முழுவதையும் தொலைக்காட்சி, செய்தித்தாட்கள் வாசிப்பு, நண்பர்கள், உற்றார் உறவினருடன் அரட்டை, பேரக் குழந்தைகளை பள்ளிக்குக் கூட்டிக் கொண்டு சென்று விட்டு விட்டு பின்னர் அவர்களை திரும்ப அழைத்து வருதல், மீன், இறைச்சி, காய்கறி கடைக்குச் சென்று மத்தியான ஆகாரத்திற்கான பொருட்களை வாங்கிக் கொடுத்தல், உள்ளூர் வாசகசாலைக்கு சென்று அங்கு வரும் உலக சஞ்சிகளை அப்படியே ஒரு கண்ணோட்டம் போடுதல், மாலையில் உள்ளூர் ரயில் நிலையம் சென்று சாவதானமாக அமர்ந்து அங்கு வரும் மக்களையும், மேற்கேயும் கிழக்கேயும் இருந்து வரும் இரண்டு ரயில்களின் சந்திப்பையும் பார்த்து வீடு வந்து சற்று நேரத்திற்கெல்லாம் உணவருந்தி இரவு நேர கடைசி பி.பி.சி. உலகச் செய்திகளைக் கேட்ட வண்ணமாகவே படுக்கைக்குச் செல்லுவதை ஒரு நடைமுறை பழக்கமாகக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ மக்கள் அநேகருண்டு.
இந்த மக்கள் தங்கள் ஆண்டவருடைய பாதங்களுக்கு நாளின் ஒரு முறை தானும் சென்று அவருடன் அளவளாவி ஆனந்திப்பது, ஆண்டவருடைய பரிசுத்த வார்த்தைகளை வாசித்து தியானிப்பது என்பது எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத காரியங்களாகும். சடுதியாக மரணம் வருகின்றது. ஆயத்தமில்லாத நிலையில் மகா துயரத்தோடு நிர்ப்பந்தமாக மரித்து என்றென்றைக்குமுள்ள காரிருளுக்குள் இந்த மக்கள் கடந்து செல்லுகின்றனர். எத்தனை பயங்கரம் பாருங்கள்!
தேவ ஜனமே, இந்தக் கிருபையின் காலத்தில் நன்கு கண் விழித்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு தேவ ஊழியன் சரீர சுகம், செல்வம், செழிப்பு (Health, Wealth, Prosperity) குறித்துப் பிரசங்கிக்கின்றானோ, எந்த ஒரு தேவ ஊழியன் நிலையில்லா உலக மாயைகளுக்கு கவர்ச்சியின் வண்ணங்கள் கொடுத்து உங்கள் மனதை மயக்குகின்றானோ அவனை நாடி ஒருக்காலும் சென்றுவிடாதீர்கள்.
எந்த ஒரு தேவ ஊழியன் தனது கூட்டங்களில் பெயர் சொல்லிக் கூப்பிடும் தேவன் விரும்பாத, தேவ வசனங்களின் அடிப்படையில்லாத கெட்ட பழக்கத்தைக் கொண்டிருப்பானோ அவனைக் கண்ணேறிட்டும் பாராதேயுங்கள். தேவனுடைய ஜனத்தை இடுக்கமான சிலுவைப் பாதையில் வழிநடத்திச் செல்லாமல் விசாலமான நரகத்தின் பாதையில் அழைத்துச் செல்லும் அவர்களைப் பார்ப்பதே பாவமாகும். அவன் சாத்தானின் கைக்கூலி, அவனது முன்னணி அடியாள் என்பதை உங்கள் நெஞ்சில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
எந்த ஒரு தேவ ஊழியன் தான் பிரசங்கிக்கப் போகும் மேடையில் ராஜ தோரணையில் திரள் கூட்டத்திற்கு முன்பாக பெருமையாக அமர்ந்திருந்து அந்த ஊழியன் பிரசங்கிக்கப் போகும் சமயம் அவரது ஊழியர்கள் பயத்தோடும், நடுக்கத்தோடும் கை மைக்கை அவர் கையில் கொடுத்து பேச வைப்பதும், பேசி முடிந்ததும் திரும்பவும் அதை பவ்வியமாக அவருடைய கரத்திலிருந்து வாங்கி மேஜை மீது வைப்பதும், அவரை அப்படியே அல்லாக்காகத் தாங்கி அரவணைத்து அழைத்துச் சென்று பிரசங்க மேடைக்கு அருகில் அவரது வரவுக்காகக் காத்திருக்கும் விலையுயர்ந்த அவரின் குளிர்பதன காரினுள் ஏற்றி அனுப்புவதுமான பந்தாக்களை விரும்புவானோ, எந்த ஒரு தேவ ஊழியன் மக்கள் தன்னை தங்கள் தலைமேல் தூக்கி வைத்து ஆரவாரித்து ஆர்ப்பரிக்க மனதார விரும்புவானோ, எந்த ஒரு தேவ ஊழியன் தான் பேசப் போகும் கூட்டங்களில் மக்கள் பெருக்கத்தை அதிகரிக்க பெருங்கூட்டங்களின் முன்பாக தான் நின்று பேசுவதைப் போன்ற பெரிய பெரிய டிஜிட்டல் விளம்பர படுதாக்களை பட்டணத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் வைத்து திரள் கூட்டத்தை கவர்ந்திழுக்க பிரயாசப்படுவானோ, அவன் அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலான தேவ மைந்தனாம் ஆண்டவர் இயேசுவின் தாழ்மையின் சுவிசேஷத்தை அறிவிக்க சற்றும் தகுதியற்றவன்.
"நான் சாந்தமும், மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்" (மத் 11 : 29) என்ற தாழ்மைச் சொரூபனுக்கும் இந்த பொல்லாத ஊழியனுக்கும் எந்த ஒரு சம்பந்தமுமே கிடையாது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சகோதரன் ஒரு சமயம் என்னிடம் சொன்னது போல "சபை குருவானவர், தெற்கு வாசல் வழியாக ஆராதனை நடத்த ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் போது, ஆலயத்தினுள் இருக்கும் ஆண்டவர் அவரைக் கண்டு பயந்து வடக்கு வாசல் வழியாக வெளியே ஓடியே போய்விடுவார்" என்று சொன்னது போல இந்த வித பெருமைக்கார ஊழியக்காரர்கள் பிரசங்கிக்க மேடை ஏறினதும், மேடையிலிருக்கும் ஆண்டவர் அவர்களைக் கண்டு பயந்து ஓட்டம் பிடித்து விடுவார்.
இந்தவித பெருமைக்கார தேவ ஊழியர்களை நீங்கள் துரிதமாக அடையாளம் கண்டு கொள்ளலாம். அவர்களை விட்டு விலகுங்கள். அவர்களுடைய பிரசங்கங்களினால் நீங்கள் எந்த ஒரு ஆவிக்குரிய ஆசீர்வாதமும் பெற மாட்டீர்கள். பெருமை இருக்கும் இடத்தில் ஆண்டவர் இருக்கமாட்டார். பெருமைக்காரருக்கு தேவன் எதிர்த்து நிற்கின்றார் (யாக் 4 : 6)
எந்த ஒரு தேவ ஊழியன் தனது ஊழியங்களுக்குப் பணம் தரும்படியாக தனது பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்துகின்றானோ, எந்த ஒரு தேவ ஊழியனின் பத்திரிக்கைகள் பணத் தேவைகளால் நிறைந்து காணப்படுகின்றதோ, எந்த ஒரு தேவ ஊழியன் தனக்கு முன்னாலுள்ள ஒரு பெருங்கூட்டத்திற்கு முன்பாக ஒரு தேவ தூதனைப்போன்று நின்று பிரசங்கிப்பதைப் போன்ற பெருமைக்காரப் படங்களை தனது பத்திரிக்கைகளில் போட்டு தன்னை ஒரு பெரிய மனிதனாக தேவ ஜனத்துக்கு உயர்த்திக் காண்பிப்பானோ, எந்த ஒரு தேவ ஊழியன் சமுதாயத்தில் ஐசுவரியவான்களுக்கும், செல்வந்தர்களுக்கும், பொன் மோதிரமும் மினுக்கான வஸ்திரமும் தரித்திருப்போருக்கும் முதலிடம் கொடுத்து ஏழை எளிய மக்களை கண்டு கொள்ளாதவனோ அவன் யாரென்று கண்ணில்லாத கபோதி கூட அவர்களை தடவிப் பார்த்து தேவனுடைய தானிய பயிர்களுக்குள் மனுஷர் நித்திரை செய்கையில் களைகளை விதைக்கும் பொல்லாங்கனின் ஊழியக்காரர் என்று சொல்லிவிடுவார்கள். இப்படிப்பட்ட ஊழியர்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
இந்த பொல்லாத ஊழியர்கள் நல்ல பங்கைத் தெரிந்து கொண்ட மரியாளைப் போல ஆண்டவருடைய பாதங்களுக்கு உங்களை தனி ஜெப மன்றாட்டிற்குச் செல்லவிடாமல் தாங்கள் நடித்த, தாங்கள் பிரசங்கித்த கிறிஸ்தவ தொலைக்காட்சிகளைப் பார்க்கும்படியாக கரும்பெட்டிக்கு நேராக உங்களைத் துரத்திவிடுவார்கள். இவர்கள் ஆண்டவரோடுள்ள தங்கள் அந்தரங்க ஜெப வாழ்க்கையை உங்களுக்கு முன் மாதிரியாக வைக்கமாட்டார்கள்.
காரணம், அந்த ஜெப வாழ்க்கை அவர்களிடம் இருக்காது. அப்படி ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட அந்தரங்க ஜெப வாழ்க்கை அவர்களிடம் இருக்கும் பட்சத்தில் தேவ ஜனத்திற்கு மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் இடுக்கமான சிலுவை பாதையையும் தவிர வேறு எதை அவர்களால் பேச முடியும்?
இவர்கள் தங்கள் ஆண்டவருக்காகவும், அழியும் ஆத்துமாக்களுக்காகவும் மேற்கொண்ட உபவாச ஜெப நாட்களை உங்களுக்கு சொல்ல முடியாது. இவர்கள் தங்கள் சரீர ஒடுக்கத்தையும், தங்கள் அருமை இரட்சகருக்காக தாங்கள் தங்கள் வாழ்வில் இழந்ததையும் உங்களுக்குச் சொல்லக் கூடாதவர்களாக இருப்பார்கள். "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்" (1 கொரி 11 : 1) என்ற பரிசுத்த பவுலைப் போல இவர்களால் ஒருக்காலும் சொல்ல இயலாது.
ஆனால், வேடிக்கையான காரியம் இந்த ஊழியர்கள் அடிக்கடி பரலோகம் சென்று அன்பின் ஆண்டவரையும், அவரது பரிசுத்தவான்களையும், பக்த சிரோன்மணிகளையும், முற்பிதாக்கள், தீர்க்கர்கள், அப்போஸ்தலர்கள், இரத்தசாட்சிகள் போன்ற பரலோகத்தின் சேனைத் திரளையே சந்தித்து ஒரு கலக்கு கலக்கி பரலோகத்தையே ஒரு அசைவு அசைத்து விட்டு மீண்டும் பூமிக்கு அமெரிக்க விண் கலம் டிஸ்கவரியைப் போல அற்புதமாக வந்து தரை இறங்குவதுதான்.
இந்த அண்டப் புழுகர்களை நம்ப தமிழ் கிறிஸ்தவ மக்களில் ஒரு பெருங்கூட்டம் மக்கள் அவர்களுக்குப் பின்னாக தோளோடு தோள் கொடுத்து அவர்களை ஆரோனும், ஊரும் மோசேயை மலையின் மேல் தாங்கிப்பிடித்து நிற்பது போல நிற்பதுதான் ஒரு மகா வேதனையான காரியமாகும்.
வணங்கா கழுத்துள்ள இஸ்ரவேல் மக்களைத் தேவன் தமது உக்கிரக கோபத்தில் அவர்களை அப்படியே வனாந்திரத்தில் அலைய விட்டு அழித்ததுபோல தங்கள் முழங்கால்களை தேவனுடைய சமூகத்தில் முடக்கி "ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?" (அப் 9 : 6) என்று தங்களைத் தாழ்த்தி தங்கள் அன்பின் ஆண்டவரின் குரல் கேட்டு அவருடைய சித்தம் செய்ய மனமற்ற இந்தப் பொல்லாத மக்களையும் கள்ள அப்போஸ்தலர், கபடமுள்ள வேலையாட்கள், நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக் கொண்ட பொல்லாத ஊழியக்காரரின் மாறுபாடான பொய் உபதேசங்களில் சிக்கி அவர்கள் தந்திரமாக எடுத்துவிடும் பரலோகக் கட்டுக்கதைகளைக் கேட்பதிலேயே தங்கள் வாழ்நாட் காலத்தைக் கழித்து தங்கள் ஆத்துமாக்களை நஷ்டப்படுத்தி துயரத்தோடு முடிக்கும்படியாக தேவனும் அவர்களை அழிவுக்கு ஒப்புவித்துவிட்டார் என்பதுதான் ஒரு கொடிய வேதனையான காரியமாகும் (2 தெச 2 : 11 - 12)
உலகத் தோற்றத்திற்கு முன்பு தேவன் உங்களை தமது சொந்த ஜனமாக நிலைப்படுத்தியது உண்மையானால் (எபேசியர் 1 : 4) "அவன் புற ஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்து கொண்ட பாத்திரமாயிருக்கிறான்" (அப் 9 : 15) என்று அவர் உங்களைக் குறித்துச் சொல்லக்கூடுமானால் நீங்கள் மறுபடியும் பிறந்து, இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்று தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாக வாழும் தேவ மக்களாக இருப்பதுடன், மற்ற உலக கிறிஸ்தவ மக்களைப் போல ஆசீர்வாத பிரசங்கிகளின் மனதை மயக்கும் பிரசங்கங்களைக் கேட்டு கோடீஸ்வரர்களாக ஆகிவிட வேண்டுமே என்ற ஆவலில் அங்கும் இங்கும் ஓடி அலையாமல், அவர்களின் பிரசங்கங்களுக்காக கரும் பெட்டிக்கு முன்பாக இரவும் பகலும் விழுந்து கிடக்காமல் "எனக்கோ தேவனை அண்டிக் கொண்டிருப்பதே நலம்" (சங் 73 : 28) என்ற சங்கீதக்காரரைப் போல சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவருடைய பாதங்களிலேயே ஜெப நிலையில் காணப்படுவீர்கள்.
"ஐயோ, நான் என் ஆண்டவரைப் போல மாற வேண்டுமே, என்னைக் காண்கின்றவர்கள் என் ஆண்டவர் இயேசுவை என்னில் காண வேண்டுமே" என்று கதறுவீர்கள். அதைக் கருத்தில் கொண்டு தானே பரிசுத்த பவுல் அப்போஸ்தலனும் "என் சிறு பிள்ளைகளே, கிறிஸ்து உங்களில் உருவாகுமளவும் உங்களுக்காக கர்ப்ப வேதனைப்படுகின்றேன்" (கலா 4 : 19) என்று கதறினார். ஆண்டவருடைய வேதம் உங்கள் களிகூருதலாக இருக்கும்.
உங்கள் முழங்கால்களில் நின்று வேதத்தை வாசித்து அவருடைய வார்த்தைகளுக்கு நடுநடுங்கி கீழ்ப்படிவீர்கள் (ஏசாயா 66 : 2) உங்கள் தனி ஜெப வேளைகளில் மோட்சத்தின் முன் ருசியை மனதார அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள்.
"உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருப்பதற்காக சந்தோசப்படுங்கள்" (லூக்கா 10 : 20) என்ற ஆண்டவருடைய வார்த்தையின்படி உங்கள் சந்தோசம் தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்காக ஆயத்தம் பண்ணிய (1 கொரி 2 : 9) பரலோகத்தைப் பற்றியதாகவிருக்கும்.
அந்தப் பரம பாக்கியத்தை தேவன் தாமே தேவ மக்களாகிய உங்களுக்கும் பாவியாகிய எனக்கும் தந்து ஆசீர்வதிப்பாராக. ஆமென்
நன்றி: தேவ எக்காளம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum