பொடுகு தவிர்க்க 10 கட்டளைகள்
Sat Dec 26, 2015 2:02 pm
எஸ்.சுகந்தன்
தோல் மருத்துவர்
தலையில் ஏற்படும் எரிச்சல் (Irritation), பூஞ்சை படிதல், உடலில் திடீர் மாற்றங்களால் ஏற்படும் இன்ஃப்லமேஷன் (Inflammation) போன்றவை காரணமாகத்தான் பொடுகு வருகிறது. இதனைத் தவிர்க்க, அவ்வப்போது தலைமுடியை நன்றாக அலசுவது அவசியம்.தோல் மருத்துவர்
வெயிலில் அடிக்கடி வெளியே செல்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் அதிக நேரம் பயணிப்பவர்கள், அடிக்கடி ஹெல்மெட் அணிபவர்கள் தினமும், தூய நீரில் தலைமுடியை முழுவதுமாகக் கழுவி, தனித் துண்டினால் தலையைத் துடைக்க வேண்டும். அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே செல்லாதவர்கள், தலையில் அழுக்கு படியக்கூடிய இடங்களில் வேலை செய்யாதவர்கள், வாரம் இரண்டு மூன்று முறை தலைமுடியை நன்றாக அலசவும்.
தலை முடி, எண்ணெய்த்தன்மையா, வறண்டதா என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற ஷாம்புவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மென்மையான (Mild) ஷாம்பு வகையைப் பயன்படுத்துவது நல்லது. சோடியம் லாரையில் சல்பேட் (Sodium lauryl sulphate) என்பது, கடினத்தன்மைகொண்ட ஷாம்பு. இதில், ரசாயனங்களின் வீரியம் அதிகமாக இருக்கும். ஷாம்புவில் பிஹெச் (pH) அளவு 5.5 - 7 வரை உள்ள மைல்டு ஷாம்புவைப் பயன்படுத்துங்கள்.
பொடுகு இல்லாதவர்கள், பொடுகு வராமல் தடுக்க, தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்கலாம். அதே சமயம், அதிகப்படியாக எண்ணெய்வைப்பதும் அழுக்குகள் படியக் காரணமாகிவிடும்.
முடியின் வேர்ப்பகுதியில், தோல் எரிச்சல் ஏற்படும் அளவு, அழுந்த வாரக் கூடாது. அப்படி செய்தால்,பொடுகு அதிகரிக்கும்.
பொடுகு இருந்தால், தலைக்கு எண்ணெய் வைக்கக்கூடாது. இதனால், தலையில் மேலும் அழுக்கு சேர்ந்து, பூஞ்சை அதிகரிக்கும். தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி, நன்றாகக் தலைக்குக் குளித்துவந்தால், பொடுகை விரட்டலாம். பொடுகை விரட்டியதும், தலையில் எண்ணெய் வைத்துக்கொள்ளலாம்.
தினமும் இரண்டு முன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இளநீர், மோர், நுங்கு, தர்பூசணி போன்ற உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். நீர்ச்சத்து, தலைமுடிக்கு மிகவும் அவசியம்.
ஒரே சீப்பை வருடக்கணக்கில் பயன்படுத்துவதோ, குடும்ப உறுப்பினர் அனைவரும், ஒரே சீப்பைப் பயன்படுத்துவதோ தவறு. சீப்பு மூலமாக ஒருவர் தலைமுடியில் இருக்கும் கிருமிகள், மற்றொருவரின் தலைக்குப் பரவ வாய்ப்பு உண்டு. சீப்பை அடிக்கடி நன்றாகக் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை எலுமிச்சைச் சாறுகொண்டு தலைமுடியைச் சுத்தம் செய்யலாம். எலுமிச்சைச் சாறு, முடியில் இருக்கும் பூஞ்சைகள், பாக்டீரியாக்களைக் கொன்றுவிடும்.
பொடுகு இருந்தாலும், செயல்திறன் மிகுந்த ஆன்டி டான்டிரஃப் ஷாம்புவைத் தினமும் பயன்படுத்தக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெற்று, வாரம் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த வகை ஷாம்புவைத் தடவிவிட்டு, உடனே தலைமுடியைத் தண்ணீரில் அலசாமல், மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் கழித்துத்தான் அலச வேண்டும்.
- ப்ரியா புஷ்பராஜ்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum