உலகின் முதலாவது யூதன் மற்றும் அவனது நாடு
Sun Dec 20, 2015 7:50 am
நோவாவின் இரண்டாவது குமாரன் காமுடைய மக்களில் ஒருவன் கானான். (ஆதியாகமம் 10:6). கானானுடைய சந்ததியார் சீதோன் முதல் காசா பட்டணம் மட்டும் பரவி வாழ்ந்தார்கள் (ஆதியாகமம் 10:19). அவர்கள் வாழ்ந்த நாட்டிற்குக் கானான் நாடு என்று பெயர் வந்தது.
கி.மு. 1195 க்கும் கி.மு. 1164 க்கும் இடைப்பட்ட காலத்தில், கப்த்தோரிலிருந்து (தற்கால சீப்புரு தீவு) பெலிஸ்தியர் என்ற ஜாதியர் கானான் நாட்டின் கடலோரப் பகுதிகளில் குடியேறின படியால் இப்பகுதிக்கு பெலிஸ்தியா என்று பெயர் வந்தது.
கி.மு. 334ம் வருடமளவில் கிரேக்கர் இப்பகுதியை ஜெயித்து அரசு செலுத்திய போது மத்திய தரைக் கடலுக்கும் சவக்கடலுக்கும் இடைப்பட்ட பூமி முழுவதும் பலஸ்தீனா என்று அழைக்கப்பட்டது. ரோமர் அரசாண்ட காலம் முதல் பலஸ்தீனா என்ற பெயர் அப்பகுதிக்கு உறுதிப்படுத்தப்பட்டது.இந்நாடு ஆப்பிரிக்கா கண்டத்துக்கும் ஆசியா, ஜரோப்பிய கண்டங்களுக்கும் நடுவில் வர்த்தக மார்க்கத்தில் அமைந்திருந்த படியால் தொன்று தொட்டு முக்கிய இடம் வகித்து வந்திருக்கிறது.
இந்நாட்டின் தலைநகர், எருசலேம், இது உலகில் மூன்று முக்கிய மதங்களுக்கு விசேஷித்த ஸ்தலமாக விளங்குகிறது,
முதலாவது, யூதருக்கு பிரதான ஸ்தலம். சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் சாலொமேன் அரசினால் யெகோவாவை ஆராதிக்க கட்டப்பட்ட தேவாலயம் இருந்த இடம். தாவீது, சாலொமேன் அரசர்களின் காலம் முதல் இஸ்ரவேல் ராஜ்யத்தின் தலை நகராக இருந்தது. கி.பி. 70 முதல் வெவ்வேறு அரசர்களின் கைக்குள் எருசலேம் போனாலும், கி.பி 1967 ல் எருசலேம் திரும்பவும் இஸ்ரவேல் ராஜ்யத்தின் தலைநகர் ஆனது. இரண்டாவது, கிறிஸ்தவர்களுக்கு முக்கிய இடம், இயேசு கிறிஸ்து பிறந்து, வளர்ந்து, தம் ஊழியத்தைச் செய்த நாடு எருசலேம். அவர் சிலுவையிலறையப்பட்டு, மரித்து, உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு எழுந்தருளிப் போன இடம். இவர் போன பிரகாரமே திரும்பவும் இங்கேயே வருவார் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. ஆகவே கிறிஸ்தவர்களுக்கு எருசலேம் புனித ஸ்தலம்.
மூன்றாவது, முகமதியார்களுக்கு மெக்கா, மெதினாவுக்கு அடுத்த முக்கிய பரிசுத்த ஸ்தலம். முகமது நபி எருசலேமிலிருந்து பரத்துக்கு ஏறிப்போனார் என்பது அவர்கள் நம்பிக்கை. முன்னே யூத தேவாலயம் இருந்த இடத்தில் கி.பி.691ம் ஆண்டு அப்துல் மெலக் இபன் மெர்வான் என்ற சுல்தான், ஹாரம் எஷ் ஷரீப் (Haram Esh Sharif) ஆங்கிலத்தில் (The Dome of the Rock) என்று அழைக்கப்படுகிற பெயர் பெற்ற அழகான மசூதியை கட்டி முடித்தார்.
இந்நாட்டில் இருக்கும் இஸ்ரேலியர் அல்லது யூதர் என்பவர்களைப் பற்றிய ஒரு தனி சிறப்பை கவனிப்பது நன்று.யாராவது முதல் ஆங்கிலேயன் யார்? அல்லது முதல் ஜெர்மானியன் யார்? அல்லது முதல் டச்சுக்காரன், அல்லது முதல் பிரான்சுக்காரன், அல்லது முதல் சைனாக்காரன், அல்லது முதல் தமிழன், அல்லது முதல் திராவிடன், எப்பொழுது எங்கிருந்து வந்தான்? என்று அந்த ஜாதியின் துவக்கத்தைப் பற்றி கூற முடியுமா? முடியாது. ஒரு கலைக் களஞ்சியமும் (என்சைக்ளோபீடியா) இச்சாதிகளின் துவக்கத்தைப் பற்றி திட்டவட்டமாக கூறுவதில்லை. ஆனால் உலகத்தை இரட்சிக்க மனு அவதாரம் எடுத்த இயேசுகிறிஸ்து பிறந்த யூத குலத்தின் (அல்லது இஸ்ரேலிய ஜனத்தின் அல்லது எபிரேய ஜனத்தின்) துவக்கம் மட்டும் தெள்ளத் தெளிவாக பரிசுத்த வேதாகமத்தின் மூலம் அறியக் கிடைப்பது எவ்வளவு ஆச்சரியம்!
சோமுடைய வம்சத்தில் ஏபேர் (ஆதி 11.16) என்பவனுடைய சந்ததியார் எபிரேயர் என்றழைக்கப்பட்டனர்.ஏபேரின் சந்ததியிலே வந்த ஆபிரகாமைக் கர்த்தர் கல்தேயர் நாட்டிலிருந்து ஊர் என்ற நகரிலிருந்து அழைத்து, தான் காண்பிக்கும் தேசத்திற்குப் போகக் கட்டளையிட்டார். (ஆதி 12.1) ஆபிராம் கீழ்ப்படிந்தான். கர்த்தர் ஆபிராமின் பெயரை ஆபிரகாம் என்று மாற்றினார். (ஆதி 17.5) ஆபிரகாமின் பேரன் யாக்கோபை ஆண்டவர் ஆசீர்வதித்து, அவனுக்கு இஸ்ரவேல் (ஆதி 32.28) என்று மறுபெயரிட்டார். (இஸ்ரவேல் என்பதற்கு தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டவன்” என்று அர்த்தம்). அவனுடைய சந்ததியார் இஸ்ரவேலர்.
யாக்கோபுடைய (இஸ்ரவேல்) நான்காவது மகன் யூதா. அவனை யாககோபு தன் புத்திரர் எல்லாரிலும் அதிகமாக ஆசீர்வதித்தான் (ஆதி 49.8-12) யூதாவின் சந்ததியார் யூதர் என்று அழைக்கப்பட்டனர்.
இவ்விதமாக எபிரேயர் அல்லது இஸ்ரவேலர் அல்லது யூதர் என்று ஜாதியரின் ஆரம்பத்தை கூட தெள்ளத் தெளிவாய் பரிசுத்த வேதாகமத்தின் மூலம் ஆண்டவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படிப்பட்ட இஸ்ரவேல் நாட்டின் தலை நகரான எருசலேம் நகர் அழிக்கப்படுதல், மற்றும் அவர்களின் உயிரினும் மேலான தேவாலயம் அழிக்கப்படுதல் போன்றவை சம்பந்தமான இயேசுவின் முன்னறிவிப்புகளையும் அம்முன்னறிவிப்புகள் எப்படி நிறைவேறின என்பதையும் அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
எருசலேம் நகரின் அழிவைப் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனம் நிறைவேறுதல்
- சிலுவையின் நிழல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum