கை கொடுக்கும் காப்பீடுகள்
Tue Dec 01, 2015 8:58 am
வெள்ளப் பெருக்கு வீடுகளுக்குள் புகுந்ததால் விலை உயர்ந்த பல வீட்டு உபயோகப் பொருட்களும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இந்த சொத்துகளை மக்கள் இழந்து நிற்பது பொருளாதார ரீதியாக அவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பாக உருமாறி உள்ளது.
இந்த நிலையில் மழைக்கு பிறகு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வாழ அரசு பல திட்டங்கள் தீட்டி னாலும், மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீண்டு வர பல நாட்களாகும் என்பது தான் உண்மை. இந்த நேரத்தில் எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து மீள என்ன வழி என்பதையும் யோசிக்க வேண்டும்.
ஆபத்தில் காக்கும் காப்பீடு
ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போல இயற்கை பேரிடர் களால் உடமைகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டவும் காப்பீடுகள் உள்ளன. இதற்கு ஹவுஸ் ஹோல்டர்ஸ் பாலிசி என்று பெயர். இந்த பாலிசி குறித்து பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது. இயற்கை பேரிடர்களான மழை வெள்ளம், தீ விபத்து, பூகம்பம் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளை இதன் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள லாம். விலை உயர்ந்த பொருட்கள் திருடு போவதன் மூலம் ஏற்படும் இழப்புக்கும் காப்பீடு கிடைக்கிறது.
எவற்றுக்கு கிடைக்கும்
புயல், மழை வெள்ள பாதிப்பு, பூகம்பம் போன்றவற்றால் முழுமையா கவோ, பகுதி அளவிலோ சேதம் அடையும் வீடுகள், மழை மற்றும் வெள்ளம் காரணமாக வீட்டுச் சுவரின் பெயின்ட் பாதிப்பு, சுவர் விரிசலுக்குகூட இழப்பீடு பெறலாம். இந்த பாலிசியின் கீழ் 10 வகையான பிரிவுகள் உள்ளன. அதில் ஒவ்வொன்றுக்கும் ஒருவகையான கவரேஜ் இருக்கிறது. தீ விபத்து, வீடு பாதிப்படைவது, அனைத்து வகையான இழப்புக்கும் கவரேஜ், மின்னணு சாதனங்கள் போன்றவற்றுக்கான கவரேஜ், லேப்டாப், கம்ப்யூட்டர், தங்க நகைகள் மற்றும் ரொக்க கையிருப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பிரிவுகள் உள்ளன. இதில் அடிப் படையாக உள்ள தீ பாதுகாப்பு பிரிவு, வீட்டில் உள்ள பொருட்கள் திருடு போவது அல்லது சேதமடைவது போன்ற திட்டங்களை தேர்ந்தெடுப்பது கட்டாயமானது.
யாருக்கு எந்த பாலிசி
சொந்த வீடு மற்றும் வாடகை வீட்டில் வசிப்பவர்களும் இந்த பாலிசி எடுத்துக் கொள்ளலாம். சொந்த வீட்டில் இருப்பவர்கள் வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களுக்கும் சேர்த்து காப்பீடு செய்யலாம். அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்தால் தங்களது பொதுப் பயன்பாட்டுக்கான இடத்தைக் குறிப்பிட வேண்டும். குறிப்பாக கார் பார்க்கிங் தனியாக இருந்தால், அதைக் குறிப்பிட வேண்டும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பொருட்களுக்கு மட்டும் காப்பீடு எடுக்கலாம். பொதுவாக வீட்டின் தன்மைக்கு ஏற்ப பாலிசி பிரீமியம் இருக்கும். அதாவது ஓட்டு வீடு, கூரை வீடுகளுக்கும் இந்த காப்பீடு எடுக்கலாம்.
பிரீமியம் எவ்வளவு
இந்த பாலிசிக்கான பிரீமியம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. ஆனால் பொருட்களின் மதிப்பு அல்லது வீட்டின் மதிப்பின் அடிப்படையில் 2 அல்லது 3 சதவீதம் வரை இருக்கும். பொருட்களின் உண்மையான மதிப்பை விட குறைவான தொகைக்கும் பாலிசி கவரேஜ் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. பாலிசி கிளைம் செய்யும் சூழ்நிலையில் இந்த மதிப்புக்கும் மட்டுமே இழப்பீடு தொகை கிடைக்கும்.
மதிப்பை குறைத்து கவரேஜ் எடுத்தாலும் அந்த மதிப்பில் 2 அல்லது 3 சதவீத மதிப்புக்கு பிரீமிய தொகை மதிப்பிடப்படும்.
இழப்பீடு பெறுவது
பொருட்களுக்கோ உடமை களுக்கோ நிகழ்ந்துள்ள சேதாரம் தனிமனிதர்களால் ஏற்பட்டிருக்கக் கூடாது. இயற்கையாக ஏற்பட்டிருக்க வேண்டும். அல்லது பொருள் களவு போயிருக்க வேண்டும். உதார ணமாக வீட்டுக்குள் குழந்தைகள் விளையாடுகிறபோது டிவி உடைந்து சேதமானால் அதற்கு இழப்பீடு கோர முடியாது. பாதிப்பு இயற்கையாகவோ அல்லது திருடப்பட்டதால் ஏற்பட்ட தாகவோ இருந்தால்தான் இழப்பீடு கோர கிடைக்கும்.
இந்த பாலிசி எடுத்துள்ளவர்கள் மழை, வெள்ளத்தால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை உடனடியாக காப்பீடு நிறுவனத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். இயற்கை பேரிடரால்தான் பாதிப்பு நிகழ்ந்தது என்பதை உறுதிப் படுத்த ஆதாரங்களை காப்பீடு நிறுவ னத்துக்கு தர வேண்டும்.
குறிப்பாக சம்பந்தபட்ட புகைப் படங்கள், பத்திரிகை செய்திகளை ஆதாரமாகக் காட்ட வேண்டும்.
திருடு போன பொருட்களுக்கு கிளைம் செய்வது என்றால், அதற்கு காவல் நிலையத்தில் வாங்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையை இணைக்க வேண்டும். இயற்கை சீற்றங்கள் ஏதேனும் நடக்கும்பட்சத்தில் இது தேவையிருக்காது. ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், அதற்குக் காவல் துறையிடம் புகார் அளித்திருக்க வேண்டும். இந்த ஆதாரங்களை இழப்பீடு விண்ணப்பத் தில் இணைக்க வேண்டும். இது தவிர மின் கோளாறுகளால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சரி செய்யவும் இந்த காப்பீடு வழி வகை செய்யும்.
அதே சமயத்தில் காப்பீடு நிறுவனத் தினர், நீங்கள் கொடுத்த தகவல்கள் உண்மை தானா என்பதை ஆராய்ந்து, சோதனை செய்த பிறகே இழப்பீடு வழங்க முடிவு செய்வார்கள்.
எவ்வளவு கிடைக்கும்
வீட்டில் என்னென்ன பொருட்கள் வைத்திருக்கிறோம். அதன் மதிப்பு என்ன, தங்க நகை எவ்வளவு உள்ளது, ரொக்க கையிருப்பு எவ்வளவு என்பது போன்ற வற்றை காப்பீடு எடுக்கும்போதே குறிப்பிட வேண்டும். வெள்ளத் தினால் பழுதடைந்த, அல்லது வீணான பொருட்களுக்கு அன்றைய சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு தீர்மானிக்கப்படும். காப்பீடு எடுக்கும்போது பொருட்களின் மதிப்பின் அடிப்படையில் கவரேஜ் தொகை இருக்கும். தவிர காப்பீடு எடுத்த பிறகு மீண்டும் புதிதாக சாதனங்கள் வாங்குகிறோம் என்றாலும் அதையும் ஏற்கெனவே எடுத்துள்ள காப்பீடோடு இணைத்துக் கொள்ளலாம்.
பொதுவாக நமது பொருளாதார இழப்புகளின்போது அதிலிருந்து நம்மை மீட்க எங்கிருந்தாவது உதவி வராதா என்பதுதான் நமது எதிர்பார்ப்பாக இருக்கும்.
இது போன்ற சந்தர்ப்பங்களின் எவரையும் சார்ந்து நிற்காமல் நமக்கு பக்கபலமாக இருப்பவை இது போன்ற காப்பீடுகள்தான். வர்த்தக நிறுவனங்களுக்கு பாதுகாப்பளிக்கும் பாலிசிகள் போல இது தனிநபர் உடமை களுக்கு பாதுகாப்பளிப்பவை.
ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, மோட்டார் வாகனக் காப்பீடு போல ஹவுஸ் ஹோல்டர்ஸ் பாலிசியும் அத்தியாவசியம் என்பதை உணர வேண்டிய கால கட்டத்தில் இருக் கிறோம். ஏனென்றால் சூழலியல் மாற்றங்கள் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதை அனுபவ பூர்வமாக கண்டுகொண்டிருக்கிறோம்.
maheswaran.p@thehindutamil.co.in
Permissions in this forum:
You cannot reply to topics in this forum