டாக்ஸி தொழில் லாபமா? நஷ்டமா?
Sun Nov 22, 2015 6:56 pm
''புதுசா ஒரு கார் வாங்கி அதை கால் டாக்ஸி நிறுவனத்திடம் வாடகைக்குக் கொடுத்தால், மாசம் 30,000 ரூபாய்க்கும் மேல் லாபம் பார்க்கலாம்'' என்ற தகவல் உண்மையா? கால் டாக்ஸி தொழில் எப்படி இயங்குகிறது? யார் இயக்குகிறார்கள்? இந்தத் தொழில் லாபமா, நஷ்டமா?
என்டிஎல் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான சரவணனிடம் பேசினோம்.
''எங்களிடம் 5,900 கார்கள் உள்ளன. எங்களின் பெரிய பலமே கார்ப்பரேட்ஸ் தான். கிட்டத்தட்ட 3,300 கார்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஓட்டிக்கொண்டு இருக்கிறோம். பொதுமக்களுக்குக்காக இயக்கும் கால் டாக்ஸிகள் 2,600 மட்டுமே. இவற்றில், வெறும் 400 கார்கள் மட்டுமே எங்கள் சொந்த கார்கள்'' என்றார்.
''காரை அட்டாச் செய்து ஓட்டுவது லாபமா? மாதம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?''
''எங்கள் நிறுவனத்தில் காரை இணைப்பதற்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரை டெபாசிட் செலுத்த வேண்டியிருக்கும். ஜிபிஎஸ் சாதனத்தையும் சேர்த்தால், சுமார் 30,000 ரூபாய் டெபாசிட் ஆகும். கால் சென்டர் கட்டணமாக மாதம் எங்கள் நிறுவனத்துக்கு 5,050 ரூபாய் செலுத்த வேண்டும். ஒரு காரை ஒருநாள் முழுக்க ஓட்டினால், 1,500 முதல் 2,000 ரூபாய் வரை கிடைக்கும். மாதம் முழுவதும் சரியான நேரத்தில் டியூட்டிக்கு வந்து ஓட்டினால், 60,000 ரூபாய் வரை கிடைக்கும். டிரைவர் சம்பளம், கார் பராமரிப்பு போன்றவற்றைக் கழிக்கும் போது, 30,000 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். கால் டாக்ஸி தொழிலில் லாபம் சம்பாதிக்க, முதல் முக்கிய விஷயம் டிரைவரின் நேரம் தவறாமைதான்!''
''கால் டாக்ஸி டிரைவர்களிடம் கேட்கும்போது நஷ்டம் ஏற்படுவதாகச் சொல்கிறார்களே?''
''நஷ்டம் என்பது பெரிய வார்த்தை. இங்கே வருமானம் குறையலாமே தவிர, நஷ்டம் ஏற்படாது. மார்கழி மற்றும் ஆடி மாதங்களில் அதிக அழைப்புகள் வருவது இல்லை. அப்படியிருந்தும் நாள் ஒன்றுக்கு 1,500 ரூபாய் வரை தாராளமாகக் கிடைக்கும்.''
''இந்தத் தொழிலில் போட்டி எப்படி இருக்கிறது?''
''போட்டி மிக மிக அதிகம். ஆனால், தரம் என வரும்போது ஆரோக்கியமான போட்டியாகத்தான் இருக்கிறது. பல விஷயங்களில் போட்டி இருந்தாலும் உண்மையான போட்டி, வாடிக்கையாளரைக் கவனிக்கும் விஷயத்தில்தான் இருக்கிறது. மேலும், இந்த செக்மென்ட் நிறைய வளர்ச்சி அடையக்கூடிய இடம். தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவன் மூலம்தான் சம்பாதிக்க முடியும். ஆனால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, கால் டாக்ஸி பிசினஸ் இருக்குமா என்பது சந்தேகம். வெளிநாட்டில் இருப்பது போல 'பிக்-அப்’ டாக்ஸிகள்தான் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கும். அதாவது, ஆட்டோ பிடித்துக் கொண்டு போகிற மாதிரி, தெருவிலேயே டாக்ஸிகளைப் பிடித்துக் கொண்டு போகலாம். எங்களைப்போல மீடியேட்டர்கள் அப்போது இருக்க மாட்டார்கள். சொகுசு வாகனங்களை மட்டுமே இயக்கும் நிறுவனங்களாக கால் டாக்ஸி நிறுவனங்கள் மாறும்.''
''கால்சென்டருக்கு வரும் அழைப்புகளை, குறிப்பிட்ட சில ஓனர் / டிரைவர்களுக்கு மட்டும் திருப்பிவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பற்றி?''
''நீங்கள் சொல்வது உண்மைதான். கால் சென்டர்களில் பாலிட்டிக்ஸ் நடக்கிறது. ஆனால், எங்கள் நிறுவனத்தில் இதற்கான வாய்ப்பே கிடையாது. ஏனென்றால், எங்களுடையது முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் மூலம் இயங்குகிறது. உதாரணத்துக்கு, தி.நகரில் இருந்து ஓர் அழைப்பு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். முதலில், கம்ப்யூட்டரே அந்த இடத்தில் இருந்து 2 கி.மீ சுற்றளவில் இருக்கும் டிரைவர்களுக்குத் தெரியப்படுத்தும். எந்த டிரைவருமே வர இயலாத சூழ்நிலையில் அல்லது இல்லாத சூழ்நிலையில், கம்ப்யூட்டர் அடுத்ததாக 5 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் டிரைவர்களுக்குத் தெரியப்படுத்தும். யாருமே இல்லாத சூழ்நிலையில்தான் நாங்களாக டிரைவர்களைத் தேர்ந்தெடுத்துப் போகச் சொல்வோம். நாள்தோறும் வரும் அழைப்புகளில், சுமார் 5 சதவிகித அழைப்புகள்தான் மேனுவலாக டிரைவர்களை அனுப்பிவைக்கும் அளவுக்கு இருக்கும். அதனால், எங்கள் நிறுவனத்தில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை'' என்றார் சரவணன்.
ஃபாஸ்ட் டிராக் நிறுவனத்தின் இயக்குனர் அம்பிகாபதியிடம் பேசினோம்.
''சென்னையில் இருந்த ஏழு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இணைந்து, 2001-ம் ஆண்டு 51 மாருதி ஆம்னி கார்களைவைத்து துவங்கப்பட்டதுதான் ஃபாஸ்ட் டிராக் நிறுவனம். இப்போது சென்னையில் மட்டும் 6,100 கார்கள் எங்களிடம் உள்ளன. திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் ஒரு நகருக்கு சுமார் 500 கார்கள் வைத்திருக்கிறோம். சமீபத்தில்தான் கொல்கத்தா மற்றும் புனேவில் கிளைகளைத் துவங்கினோம்.''
''அட்டாச்மென்ட் கான்செப்ட் எப்படி வந்தது?''
''முன்பு, சுமார் 100 கார்கள் எங்கள் சொந்த கார்களாக இருந்தன. அவற்றைப் பராமரிக்க முடியவில்லை. அப்போது யோசித்து முதன் முதலாகக் கொண்டுவந்ததுதான் 'அட்டாச்மென்ட்’ முறை. அதுவும் இப்போதெல்லாம் கார் உரிமையாளரே ஓட்டுநராக இருப்பவர்களைத்தான் எடுக்கிறோம். எங்களுடைய நோக்கமே, எல்லா இளைஞர்களுக்கும் சுய வேலை வாய்ப்பு அளிப்பதுதான். ஒரு வகையில் ஓட்டுநரே காரின் உரிமையாளராக இருப்பது அவர்களுக்குத்தான் நல்லது.
அட்டாச்மென்ட் முறையில் காரைச் சேர்ப்பது வெகு சுலபம். கார் உங்கள் பெயரில் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், 10,000 ரூபாய் முதலில் டெபாசிட் கட்ட வேண்டும். கால் சென்டர் கட்டணமாக மாதத்துக்கு 5,000 ரூபாய் கட்ட வேண்டும்.
இங்கு, நீங்கள் உழைக்கும் அளவுக்குதான் வருமானம். வார நாட்களில் நாள் முழுக்க ஓட்டினால், ஒருநாளைக்கு 1,500 ரூபாய் வரை கிடைக்கும். வார இறுதியிலும் விடுமுறை நாட்களில் சரியாக ஓட்டும்பட்சத்தில், தாராளமாக 2,500 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். ஒருமாத வருமானத்தைப் பார்க்கும்போது, ஓனரே டிரைவராக இருப்பவர்த£ன் நிறைய சம்பாதிப்பார். நாங்களும் இப்போதெல்லாம் ஓனர் கம் டிரைவராக இருப்பவர்களைத்தான் எடுக்கிறோம்.
இங்கு, போட்டியும் பெருகிவிட்டது. ஒரே தொழிலில் பலர் இறங்கும்போது, எல்லாருக்குமே அடி விழுகிறது. எல்லாருக்குமே பிக்-அப் குறைகிறது. மும்பையில் ஒரு எண்ணிக்கைக்கு மேல் டாக்ஸிகளுக்கான லைசென்ஸ் தரப்படுவது இல்லை. ஆட்டோக்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிக்கும்போது, சில காலத்துக்கு அனுமதியளிப்பதை நிறுத்திவைத்து பின்னர் தருகிறார்கள். அதேபோல், டாக்ஸிகளுக்கும் சிஸ்டம் தேவை. அப்போதுதான் எல்லாருக்குமே நல்லது.''
''பாதுகாப்பு வழிமுறைகள் என்னென்ன செய்திருக்கிறீர்கள்?''
''நாங்கள் ஓட்டுநரைத் தேர்ந்தெடுக்கும்போது அவரது குடும்பத் தகவல்கள், புகைப்படம், லைசென்ஸ் போன்றவற்றைப் வாங்கிப் பரிசோதித்த பின்னரே சேர்த்துக்கொள்கிறோம். இப்போது ஓட்டுநர்களுக்கு ஐ.டி கார்டு கொடுக்கிறோம். இப்போது காவல்துறையும் நிறையக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஜிபிஎஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தும்போது, பாதுகாப்பும் அதிகரிக்கிறது.''
அட்டாச்மென்ட் முறையில் கார் ஓட்டும் அருண் என்பவரிடம் பேசினோம். ''நான் இதுவரைக்கும் மூன்று கால் டாக்ஸி நிறுவனங்களில் ஓட்டியிருக்கிறேன். எங்கு சென்றாலும், நிலைமை ஒன்றுதான். ஒருநாள் முழுக்க கார் ஓட்டினால், 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால், ஒருநாள் என்பது 24 மணி நேரம். தொடர்ந்து 24 மணி நேரம் யாரால் இந்த நெருக்கடி மிகுந்த சென்னை நகரத்தில் டாக்ஸி ஓட்ட முடியும்? 12 மணி நேரம் ஓட்டியே எனக்கு ஒரு நாளைக்கு 800 ரூபாய்தான் கிடைக்கிறது.
கால் சென்டர் ஃபீஸ், காருக்கான தவணை, டீசல் செலவு, காருக்கான மெயின்டனன்ஸ் என மாதாமாதம் செலவுகள் அதிகம். ஒரே உரிமையாளர் பல கார்களை அவரோ அல்லது நெருங்கிய உறவினர்களை டிரைவர்களாகக்கொண்டு ஓட்டினால் மட்டுமே லாபம் பார்க்க முடியும்.
சென்னையின் முக்கியச் சாலைகளில் எங்காவது பார்க்கிங் செய்ய முடிகிறதா? மேலும், பல சாலைகளில் நாம் நினைத்த இடத்தில் யு-டர்ன் போட முடியாது. பிக்-அப் இல்லாத சமயங்களிலும் காரை எங்காவது நிறுத்தித்தானே ஆக வேண்டும். மெயின் ரோட்டில் நிறுத்த முடியாது என்று, வீடுகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் பார்க் செய்தால், 'எதுக்கு எங்க வீட்டு முன்னாடி நிறுத்துறீங்க?’ என்று அங்கும் பிரச்னை. நள்ளிரவு நேரங்களில் போலீஸாரை வேறு சமாளித்தாக வேண்டும். எங்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதும் இல்லை; கண்டுகொள்வதும் இல்லை'' என்கிறார்.
தமிழக போக்குவரத்துத் துறை தரப்பில் விசாரித்தபோது, ''கால் டாக்ஸி ஆபரேட்டர்கள் யாரும் அரசிடம் முறையான அனுமதி பெற்று இயங்குவது இல்லை. யார் வேண்டுமானாலும் ஒரு கால் டாக்ஸி நிறுவனத்தை ஆரம்பித்துவிடலாம் என்ற நிலைதான் இப்போது இருக்கிறது. கால் டாக்ஸி தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கு, புதிய விதிமுறைகளைக் கொண்டுவர இருக்கிறோம். விரைவில் அது பற்றிய அரசாணை வெளிவரும்'' என்கிறார் தமிழக போக்குவரத்துத் துறையின் முதன்மை அதிகாரிகளில் ஒருவர்.
ர.ராஜா ராமமூர்த்தி ப.சரவணக்குமார்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum