ஆரோக்கியத்துக்கு அவகேடோ!
Sat Nov 14, 2015 3:57 pm
ஆரோக்கியமான உணவு பட்டியலில் அவகேடோவும் ஒன்று. 25க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அவகேடோவில் அடங்கியுள்ளன. இதில் உள்ள சத்துக்கள் நோயின் பிடியிலிருந்து நம்மைக் காக்கின்றன.
ஹெல்தி ஹார்ட்
வைட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் ஒலியிக் அமிலம் (oleic acid) ஆகியவை இதயத் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன. மேலும், இந்தச் சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
குறையும் கொழுப்பின் அளவு
பீட்டா சிடோஸ்டெரால் (beta sitosterol) அதிகளவில் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இந்தப் பழம் வெகுவாகக் குறைக்கும். ஹைபர்கொலஸ்ட்ரொலெமியா (Hypercholesterolemia) என்ற நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஒருவர், 7 நாட்கள் தொடர்ந்து அவகேடோவை சாப்பிட்டு வந்தால், அந்த நோயின் தாக்கம் 17 சதவிகிதம் வரை குறையும். 22 சதவிகிதம் கெட்டக் கொழுப்பு குறைந்து, 11 சதவிகிதம் நல்ல கொழுப்பு உடலில் சேரும். நல்ல கொழுப்பு நிறைந்திருப்பதால் இன்சுலின் குறைப்பாடும் சரியாகும்.
ரத்தக் கொதிப்புக்குப் பை பை
வாழைப் பழத்தில் இருக்கும் பொட்டாஷியத்தை விட அவகேடோவில் 35 சதவிகிதம் அதிகமாகவே உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். மேலும், வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளதால் செரிமானத்துக்கு ஏற்றது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையைச் சமன் செய்கிறது.
அதிகரிக்கும் பார்வை திறன்
லுடீன் (lutein) என்ற ஆண்டி ஆக்சிடன்ட், வயதாகிய பிறகும், பார்வை திறன் குறையாமல் தடுக்கிறது. மேலும், கண்களில் ஏற்படும் புரையை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல் அவகேடோவில் உள்ளது.
கர்ப்பிணிகளுக்கு அருமருந்து
ஃபோலேட், வைட்டமின் பி6 ஆகிய ஃபோலிக் அமிலங்கள் அவகேடோ பழத்தில் 23 சதவிகிதம் உள்ளது. கர்ப்பிணிகள் இதைச் சாப்பிட்டு வந்தால், பிறக்க போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். வயதானவர்களுக்குப் பக்கவாதம் வராமல் தடுக்கும்.
புற்றுநோயை தடுக்கும் ஆன்டிஆக்சிடன்ட்
ஆன்டிஆக்சிடன்ட் இதில் நிறைந்திருப்பதால் ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் புற்றுநோயையும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயையும் தடுக்கிறது. மூப்படைதலை தடுத்து இளமையைத் தக்க வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். செல்களைச் சேதமடையாமல் பாதுகாக்கும்.
நேசர் மவுத் வாஷ்
இயற்கையான முறையில் வாயை சுத்தம் செய்வதால் இதனை ‘நேசர் மவுத் வாஷ்’ எனச் சொல்லலாம். குடலை சுத்தம் செய்யும் அதோடு நாக்கின் மேல் உள்ள கிருமிகளை நீக்கி, வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
உடல் எடையைக் கூட்டும்
100 கிராம் பழத்தில் 200 கலோரிகள் உள்ளன. இதனால், உடல் எடையைக் கூட்ட வேண்டும் என நினைப்போருக்கு அவகேடோ ஒரு சிறந்த உணவு. நல்ல கொழுப்பும், சர்க்கரையும் இதில் அதிக அளவில் உள்ளன.
அழகுக்கும் அவகேடோ
தொடர்ந்து அவகேடோ சாப்பிட்டு வர, சருமம் பளபளப்பாகும். கூந்தலின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும். முடி உதிர்தல் நிற்கும். கூந்தல் வறட்சி நீங்கும். எரிச்சல், சிவந்து போகுதல், சோரியாசிஸ் போன்ற சரும நோய்கள் குணமாகும்.
#doctorVikatan #vikatan
Permissions in this forum:
You cannot reply to topics in this forum