வாழைத்தண்டில் தயாராகும் எளிய உணவுகள்
Sun Oct 25, 2015 9:23 pm
சிறுநீரக பிரச்சினைகள் இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கு வாழைத்தண்டு சிறந்த மருந்தாக இருப்பதால், அதன் மவுசும் அதிகரித்துள்ளது.
நம் உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. கழிவுகள் சரியான நேரத்தில் வெளியேற நாம் ஒருபோதும் தடைவிதிக்கக்கூடாது. பலரும் தங்கள் பணியாலோ, சூழ்நிலைகளாலோ சிறுநீர் கழிப்பதை தள்ளிவைத்துவிடுகிறார்கள். சிறுநீரை கட்டுப்படுத்துவது உடலில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கிவிடும். நோயால் சிறுநீர் சரியாக வெளியேறாமல் இருந்தாலும் பிரச்சினைதான்.
சிறுநீரக கல் தொந்தரவாலும் இப்போது பலர் அவஸ்தைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிக காரமான உணவுகளை சாப்பிடுதல், மிக குறைவாக நீர் அருந்துதல், மது அருந்தும் பழக்கம், அதிக தூரம் தொடர்ச்சியாக வாகனம் ஓட்டிச் செல்லுதல், வீரியமான மருந்துகளை உட்கொள்ளுதல், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரக கல் தோன்றுகிறது.
சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும், உணவின் மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.
வாழைத்தண்டு சிறுநீரக கற்களை வெளியேற்றுவதற்கான சிறந்த மருந்து. அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதன் மூலம் தொடக்க நிலையில் இருக்கும் சிறுநீரக கற்களை வெளியேற்றி விடலாம்.
வாழைத்தண்டு நார்ச்சத்து நிறைந்த உணவாகும். அதனால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்பு நிறைந்திருப்பவர்கள் இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள லாம்.
வாழைத்தண்டு ரத்தத்தை தூய்மை செய்யும் சக்தி கொண்டது. உடலில் உள்ள அமிலத்தன்மையையும் நீக்கும். உடலை குளிர்ச்சியாக்கவும் செய்யும். மலச்சிக்கலையும் நீக்கும். வயிற்றுப் புண் இருப்பவர்களும் இதனை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
வாழைத்தண்டு சாறு சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. நீர் கட்டு, நீர் எரிச்சல், சிறுநீரக தொற்று இருப்பவர்கள் இதனை பருகலாம்.
வாழைத்தண்டில் மூன்றில் ஒரு பங்கு தசையும், மூன்றில் இரண்டு பங்கு நீரும் உள்ளது. இதில் வைட்டமின் பி சத்தும் நிறைந்துள்ளது. பொட்டாசியமும் இருக்கிறது. கொழுப்பு சத்து இதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாழைத்தண்டில் டானின் எனப்படும் துவர்ப்பு சத்து நிறைந்திருக்கிறது. இதில் இருக்கும் பொட்டாசியம் சத்து இதய தசைகளை நன்கு இயங்கவைக்கும். வாழைத்தண்டு பித்தப்பை கற்களையும் குறைக்கும்.
வாழைத்தண்டு சித்த மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது.
சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் வாழைத்தண்டு சாறில் கலந்துகொடுக்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் விரைவாக குணமடைவார்கள்.
வாழைத் தண்டை நறுக்கும் முறை:
வாழைத் தண்டை குறுக்காக மெலிதாக வட்டமாக வெட்டி விரலால் சுற்றி எடுக்கவேண்டும். அவ்வாறு செய்தால் அதில் உள்ள நார்களை அகற்றி விடலாம்.
ஒரு பாத்திரத்தில் 50 மி.லி. மோர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்திருங்கள். வெட்டிய துண்டுகளை அதில் இட்டுவையுங்கள். இவ்வாறு செய்வதால் வெட்டிய துண்டுகள் நிறம் மாறாது. இவ்வாறு செய்யாவிட்டால் துண்டுகள் நிறம் மாறிவிடும்.
வாழைத்தண்டில் தயாராகும் எளிய உணவுகள்:
தண்டு மோர்
வாழைத்தண்டு –250 கிராம் (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
மோர் –300 மி.லி
நறுக்கிய கொத்தமல்லி தழை– தேவைக்கு
செய்முறை: வெட்டிய வாழைத் தண்டை மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளவும். மோரை கடைந்து அரைத்த வாழைத்தண்டு கலவையில் சேருங்கள். தேவைக்கு இந்துப்பு மற்றும் கொத்தமல்லி தழை கலந்து பருகவும்.
சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் இதை பருகலாம். நீர் எரிச்சல் நீங்கும். உடல் எடை குறையும். ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும். வாரம் இருமுறை இதை பருகுங்கள்.
சட்னி
வாழைத்தண்டு –200கிராம் (நறுக்கிக் கொள்ளவும்)
தேங்காய் துருவல் –3 தேக்கரண்டி
பச்சைமிளகாய்–2
தயிர்–100 மி.லி
உப்பு–தேவைக்கு
தாளிக்க:
கடுகு– சிறிதளவு காய்ந்த மிளகாய்– 1
கறிவேப்பிலை–சிறிதளவு
தேங்காய் எண்ணெய்–1 தேக்கரண்டி
செய்முறை: வாழைத்தண்டு, தேங்காய்துருவல், பச்சைமிளகாய் போன்றவைகளை எல்லாம் மிக்ஸியில் இட்டு அரைத் துக் கொள்ளவும். பின்பு அதில் உப்பு, தயிர் சேருங்கள். தாளித்துக்கொட்டுங்கள்.
இதை விரைவாக தயாரித்துவிடலாம். இட்லி, தோசை போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட அதிக சுவைதரும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் நார்ச்சத்தின் தேவைக்கு இதனை சாப்பிடலாம்.
தண்டு சூப்
வாழைத் தண்டு –300 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்)
வேகவைத்த பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பு–2 தேக்கரண்டி
மிளகு– 1 தேக்கரண்டி
சீரகம்– 1 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை–1 தேக்கரண்டி
எலுமிச்சம் பழம்– பாதி
உப்பு–தேவைக்கு
நெய்–1 தேக்கரண்டி
செய்முறை: வெட்டிய வாழைத் தண்டை குக்கரில் கொட்டி, விசில் வரும் வரை வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
மிளகு, சீரகம், கொத்தமல்லியை தூளாக்கிக்கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி பொடித்துவைத்துள்ள மசாலாவைக் கொட்டி நன்கு கிளறவும். பின்பு வேக வைத்த பருப்பு மற்றும் மசித்த வாழைத்தண்டு கலவையை இட்டு தேவையான அளவு நீர் ஊற்றி, ஒரு முறை கொதித்ததும், உப்பிட்டு இறக்கி ஆறவையுங்கள். ஓரளவு ஆறிய பின்பு எலுமிச்சை பழத்தை பிழிந்து சேர்த்து, சுவைக்கவும்.
இந்த சூப் உடலுக்கு சக்தியளிக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கும். சிறுநீரக கற்களை கரைக்கும். நீர் எரிச்சலை போக்கும். உடல் எடையை குறைக்கும்.
பொரியல்
வாழைத் தண்டு –500 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்)
பாசிப்பருப்பு–50 கிராம்
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
இஞ்சி– சிறுதுண்டு
பச்சைமிளகாய்– 2
உப்பு – தேவைக்கு
தாளிக்க:
கடுகு–1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு– 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை–சிறிதளவு
தேங்காய் எண்ணெய்– 2 தேக்கரண்டி
செய்முறை: வாழைத்தண்டையும், பாசிப்பருப்பையும் ஒரு பாத்திரத்தில் இட்டு சிறிது நீர் ஊற்றி, பாத்திரத்தை மூடி வேக வைக்கவும். பாசிப்பருப்பு முக்கால் பாகம் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி பொருட்களைக் கொட்டி தாளிக்கவும். அத்தோடு தேங்காய் துருவலை கொட்டி கிளறவும். பச்சை மிளகாய், இஞ்சியை நறுக்கி சேர்க்கவும். வேகவைத்த வாழைத்தண்டு, பருப்பு கலவையை அதில் சேர்த்து, உப்பும் கலந்து கிளறவும். பொரியல் தயார்.
இதுவும் அதிக சத்து நிறைந்தது.
டாக்டர் இரா. பத்மப்ரியா (சித்த மருத்துவர்)
Permissions in this forum:
You cannot reply to topics in this forum