மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன் !
Sat Aug 08, 2015 5:12 pm
மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன் !
மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன்களை அதிகம் உணவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாகை மீன்வள பல்கலைக்கழக தொழிலில் நுட்பநிலைய இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நிலைய இயக்குனர் நாகூர் மீரான், பேராசிரியர் கணேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
” மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல்வரை மத்தி மீன்கள் கிடைக்கிறது. விலையும் மிக மலிவாக ரூ.15 முதல் ரூ.20க்குள் கிடைக்கும். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.
100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது. மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.மேலும் தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும். மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது. மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum