சுருட்டு வியாபாரிகள்
Fri Jul 17, 2015 10:39 pm
சுருட்டு கண்டு பிடிக்கப்பட்ட காலம் அது.
சுருட்டு என்றால் என்னவென்றால் தெரியாத நாடுகளுக்கு சுருட்டு வியாபாரிகள் படையெடுத்தார்கள். மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் நின்று சுருட்டின் பெருமையை எடுத்துக் கூறி மக்களை வாங்க வைத்தார்கள்.
அவர்கள் சொன்ன சுருட்டின் பெருமைகள்,
" இதைப் புகைத்தால் சிறிது காலம் சென்றதும் உங்களை நாய் கடிக்காது. இதைப் புகைத்தால் உங்கள் வீட்டுக்குத் திருடன் வரவே மாட்டான். இதைப் புகைப்பவர்களுக்கு முதுமையே வராது".
என்று கூறி விற்பனை செய்தார்கள்.
விற்பனை சூடு பிடித்தது. ஒரு முறை புகைத்தவர்கள் அதற்கு அடிமையானார்கள். சுருட்டின் விற்பனை அமோகமாக இருந்தது. கொஞ்ச காலம் சென்றது. சுருட்டு பிடிப்பவர்களின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு பலவீனம் வந்தது. எங்கு பார்த்தாலும் ஒரே இருமல் சத்தம். அகால மரணங்கள். ஊரே வியாதியஸ்தர்களால் நிரம்பியது. ஆனாலும் அவர்களால் சுருட்டை விட முடியவில்லை. சுருட்டு வியாபாரிகள் சொன்ன பொய்கள் அவர்களுக்கு நினைவு வந்தது. இந்த அவலத்துக்கெல்லாம் அவர்கள்தான் காரணம் என்று உணர்ந்து
கொண்டார்கள்.
ஒன்று கூடி சுருட்டு வியாபாரிகளின் வீட்டை முற்றுகையிட்டு அவர்களை வெளியே வரும்படி கோஷமிட்டார்கள். சுருட்டு வியாபாரிகள் பதறவில்லை. அவர்களில் ஒருவன் அவர்கள் சார்பில் வெளியே வந்தான். அவன் வந்தவுடனேயே மக்கள் குமுற ஆரம்பித்தது விட்டார்கள்.
"நீங்கள் பொய் சொல்லி எங்களை ஏமாற்றிவிட்டீர்கள். உங்களை தண்டிக்காமல் விடமாட்டோம்" என்றனர்.
வியாபாரி கொஞ்சமும் அயராமல் சொன்னான்,
" ஐயா! நான் எப்போது பொய் சொன்னேன். அதை நிரூபித்தால் நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்" என்றான்.
கூட்டத்தில் ஒருவன் உடனே கேட்டான்,
" சுருட்டு பிடித்தால் நாய் கடிக்காது என்றாயே! "
வியாபாரி , " அது உண்மைதான். சுருட்டு பிடிக்க ஆரம்பித்த சிறிது காலத்திலேயே உடல் பலகீனப்பட்டு கம்பை ஊன்றி நடக்கும் நிலை வரும். கையில் கோலோடு திரிபவனை நாய் எப்படி நெருங்கும்? " என்றான்.
இன்னொருவன் ,
" வீட்டுக்குத் திருடன் வரமாட்டான் என்றாயே! "
வியாபாரி , " உண்மைதான். சுருட்டை இழுத்து நுரையீரல் பழுதாகி ராவெல்லாம் லொக்கு லொக்கென்று தூங்காமல் இருமிக் கொண்டிருக்கும் மனிதன் உள்ள வீட்டில் திருடன் வர முடியுமா? "
கடைசியாக ஒருவன் கேட்டான், " சுருட்டு பிடித்தால் முதுமை வராது என்றாயே! "
வியாபாரி நிதானமாக சொன்னான் , "
" ஆமாம். முதுமை வராது. முதுமை வந்து சேருவதற்குள் அல்ப ஆயுசில் போய்ச் சேர்ந்துவிடுபவர்களுக்கு முதுமை எப்படி வரும்? " இப்போது யாரும் அவனைக் கேள்வி கேட்கவில்லை. தலைகுனிந்தபடியே கலைந்து சென்றனர்.
செல்லமே! பொய்யனும், பொய்க்குப்பிதாவானவனும் நம்மைக் கெட்ட பழக்கங்களில் தள்ள உண்மை போலவே தோன்றும் பொய்களைக் கூறி மயக்குவான். குடியும், புகையும், பாக்கும் மற்றும் கெட்ட பழக்கங்கள் எல்லாமுமே தற்கொலையின் ஆவிதான் என்பதை அறிந்து கொள். பலரிடமும் பகிர்ந்துகொள். செய்வாயா?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum