சர்வ நிச்சயமல்லவா?
Fri Jul 17, 2015 10:36 pm
அழகான ஒரு குட்டி நாடு இருந்தது. எங்கு பார்த்தாலும் தென்னை மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. அந்த நாட்டினுடைய வருமானத்தில் பெரும்பகுதி தென்னையின் விளைபொருட்களை சார்ந்தே இருந்தது. அந்த நாட்டினுடைய ராஜாவுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் மிகவும் அழகாகவும், நல்ல மனம் படைத்தவனாகவும் இருந்தான். அறிவிலும் அவனை மிஞ்ச ஆளில்லை.
இளவரசனுக்குத் திருமண வயது வந்தது. இதையடுத்து அரசர் பல நாடுகளிலும் அவனுக்கு சிறந்த பெண்களைத் தேட ஆரம்பித்தார். ஆனால் இளவரசனுக்கோ தன்னுடைய நாட்டில் இருந்தே ஒரு அறிவுள்ள பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆசை. அவள் ஏழைக் குடும்பமாக இருந்தாலும் மணந்து கொள்ளத் தயாராக இருந்தான். அந்த விருப்பத்தை அவன் தனது பெற்றோரிடம் கூறியபோது முதலில் அவர்கள் மறுத்தாலும் பின்பு தனது ஒரே மகனின் ஆசையை நிறைவேற்ற சம்மதித்தார்கள். நாடெங்கும் செய்தி அறிவிக்கப் பட்டது .
இளம்பெண்களெல்லாம் உற்சாகமானார்கள். மணமகளைத் தெரிவு செய்யும் நாள் வந்தது. போட்டி நடக்கும் இடத்தில் இடங்கொள்ளாத கூட்டம். மணமகளைத் தேர்ந்தெடுக்க , இளவரசன் சில போட்டிகளை அறிவித்தான். முதல் சுற்று உடல் தகுதி மற்றும் தோற்றப் பொலிவு. இதில் பாதி பேர் வெளியேறினார்கள். அடுத்தது கவனித்தல் திறன். இதிலும் பலர் தோற்றனர். இப்படிப் பல சுற்றுக்களைக் கடந்து கடைசி சுற்றுக்கு வந்தவர்கள் நாலே பேர்தான்.
இதோ நாட்டிலேயே மிகச்சிறந்த அழகும், அறிவும் வாய்ந்த பெண்கள். யாரைத் தேர்வு செய்வது? அரசருக்கே சற்று குழப்பம். இப்போது இளவரசன் வந்து அவர்களுக்கு வாழ்த்து சொல்லி இறுதிப் போட்டியை ஆரம்பித்தான். அந்த நாடு தென்னை மரங்களை உயிராக மதிக்கும் நாடு என்பதால் இறுதிப் போட்டி அதைச் சார்ந்ததாகவே இருந்தது.
தென்னை மரம் கொடுக்கும் காய், மட்டை, ஓலை, பதநீர் போன்ற பல விதமான பலன்களும் அவர்களுக்கு முன்பாக வைக்கப் பட்டன. போட்டி என்னவென்றால் , அங்கே வைக்கப் பட்டிருந்த ஒவ்வொரு விளை பொருளும் ஒவ்வொரு மரத்தினுடையது. அந்த மரங்களில் மதிக்கப்படத் தக்க சிறந்த மரம் எது என்பதை சரியாக சொல்ல வேண்டும். இதுவே போட்டி. நால்வரில் ஒரு பெண் சொன்னாள்,
" இந்தத் தேங்காயைக் கொடுத்த மரம்தான்
சிறந்தது ".
இன்னொருத்தி மக்களுக்கு வசிப்பிடம் கொடுக்கும் தென்னை மட்டையைக் கொடுத்த மரமே உயர்ந்தது என்றாள். இன்னொருத்தி மக்களின் தாகம் தீர்த்து உற்சாகமூட்டும் பதனீர் கொடுத்த மரமே நல்ல மரம் என்றாள். இளவரசன் முகத்தில் திருப்தி வரவில்லை. சற்று சோர்ந்து போனான். கடைசியாக இருந்த பெண் சொன்னாள்,
" உணவாகும் காயைக் கொடுத்த மரமும், கூரையாகும் ஓலைகளைக் கொடுத்த மரமும், தாகம் தீர்க்கும் பதனீரைத் தந்த மரமும் நல்லவைதான். ஆனால் மிகச்சிறந்தவை அல்ல"
இதைச் சொல்லி விட்டு அங்கிருந்த சுவையான தென்னங்குருத்தை எடுத்தாள்.
"மற்ற பலன்களையெல்லாம் கொடுத்த மரங்கள் மீண்டும் பலன் கொடுத்து நெடுநாள் வாழும். ஆனால் ஒரு தென்னை மரம் தனது குருத்துப் பகுதியைக் கொடுத்து விட்டால் அன்றோடு அதன் ஆயுட்காலம் முடிந்தது. எனவே தனது உயிர் போவதையும் பொருட்படுத்தாமல் நமக்கு இந்த சுவையும், சத்தும் நிறைந்த குருத்தைக் கொடுத்த மரம்தான் போற்றத்தக்கது" என்று சொல்லி கண்களில் கண்ணீரோடு அதற்கு முத்தமிட்டாள். இளவரசன் சந்தோஷமாய் ஒடி வந்து அவளுக்கு மாலை சூட்டினான்.
செல்லமே! மற்றவருக்காகத் தனது உயிருக்கு ஒப்பான குருத்தைக் கொடுத்த மரமே சிறந்த மரம் என்று சொன்னவள் இளவரசனுக்கு
மணவாட்டியானாள்.
நமக்காகத் தனது கடைசி சொட்டு ரத்தத்தைக்கூட சிந்தி, இனிமேல் ஒரு சொட்டு ரத்தமும் மீதமில்லை என்பதன் அடையாளமாய் விலாவில் நீர் வடித்தாரே அவரே போற்றப் படத்தக்க தேவன் என்று அறிக்கையிடும் நாம் பரலோகத்தில் மணவாட்டியாவது சர்வ நிச்சயமல்லவா?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum