இக்காலத்துப் பாடுகள்
Fri Jul 17, 2015 10:30 pm
பேருந்து ஒன்றில் ஊனமுற்ற பெரியவர் ஒருவர் ஏறினார். எல்லா இருக்கைகளுமே நிரம்பி இருந்ததால் அவர் நின்று கொண்டே பயணம் செய்தார். இதைப் பார்த்த இளைஞன் ஒருவன் மனமிரங்கி எழுந்து கொண்டு தனது இடத்தில் அவரை அமர வைத்தான். பெரியவர் அவனுக்கு நன்றி சொல்லி விட்டு "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! " என்றபடி அமர்ந்தார். இளைஞனுக்கு எரிச்சலாக இருந்தது.
"இப்படி ஊனத்தோடு ஒரு வாழ்க்கை வாழும்போதுகூட இதுங்களுக்கு அறிவு வருதா பாரு" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே அவரிடம் கேட்டான்,
" தாத்தா! கடவுள் மீது கோபப்பட வேண்டிய நிலையில் இருக்கும் நீங்களே ஸ்தோத்திரம் சொல்றீங்களே! உங்களை இந்த நிலையில் வச்சிருக்கிற அந்த கடவுளைத் திட்டித் தீர்க்க வேண்டாமா? " என்று பொரிந்து தள்ளினான். பெரியவர் ஒன்றும் பேசாமல் பையில் இருந்த வேதப்புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தார். சற்று நேரம் கழித்து அந்த இளைஞனிடம் கேட்டார்.
" தம்பி, பணம் கொடுத்து சீட்டு வாங்கி விட்டு பாவம் இப்படி நின்னு கிட்டே வர்ரியே! உனக்கு மனசு கஷ்டமா இல்லையா? "
இளைஞன் புன்னகைத்தபடி சொன்னான், " தாத்தா! இன்னும் பத்தே நிமிஷத்துல பஸ் ஸ்டாண்ட் வந்துடும். எங்க வீடும் அதுக்கு பக்கத்திலேயேதான். பத்து நிமிஷத்தில் வீட்டுக்குப் போய் ஹாயா மெத்தைல கால்நீட்டி உக்காந்துக்கப் போறேன். அப்புறம் எதுக்கு நான் வருத்தப்படணும்? " என்றான். பெரியவர் புன்னகைத்தார்.
"நல்லா சொன்னே தம்பி. நீ பத்து நிமிஷத்துல உன் வீட்டுக்கு போயிடுவோம்ங்கிற நம்பிக்கையால நீ நின்னுக்கிட்டு வர்ரதுகூட உனக்கு சிரமமாத் தெரியல. நீ எப்படி வீட்டுக்குப் போகப் போறோம்னு உறுதியா நம்புறியோ அதே மாதிரிதான் நானும் இந்த வாழ்க்கை முடிஞ்சதும் பரலோகம் போய் சேருவேன்னு உறுதியா நம்புறேன். போய் சேரப்போற இடம் குதூகலமான இடம்னு தெரிஞ்ச பிறகு வருத்தம் எப்படி வரும்? ஸ்தோத்திரம் அல்லவா வரும்? " என்றார். இளைஞன் மௌனமாய்த் தலையசைத்து ஆமோதித்தான்.
செல்லமே! நம் வாழ்வில் துன்பம் வருவது இயல்புதான். அதிலிருந்து கர்த்தர் நம்மை விடுவிப்பார் என்பதும் உண்மைதான். ஆனாலும் நமக்குக் கிடக்கப் போகிற மகிமையான வாழ்க்கையைப் பற்றி எண்ணும்போது எத்தனை பெரிய துன்பமும் தூசி போலத்தான் தோன்றும் என்பதும் உண்மைதானே?
ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
ரோமர் 8 :18
John Saravanan
Permissions in this forum:
You cannot reply to topics in this forum