ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதிருப்போமா?
Fri Jul 17, 2015 9:45 pm
ஒரு சிறுவன் தோட்டத்தில் நின்று கொண்டிருக்கையில் வித்தியாசமான ஒரு விஷயம் அவன் கண்ணில் பட்டது. கூட்டுப்புழு ஒன்று வளர்ந்து பட்டாம்பூச்சியாகிக் கூட்டைக் கிழித்துக் கொண்டு வெளிவரப் போராடிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் சிரமப்பட்டு கூட்டை விலக்கி வெளியே வரமுயன்று கொண்டிருந்தது.
பல மணி நேரம் இந்தப் போராட்டம் தொடர்ந்தது. சிறுவனுக்கு மனது கஷ்டமாக இருந்தது. அந்தப் பட்டாம் பூச்சியின் மேல் இரக்கம் கொண்டு அதற்கு பறக்க உதவி செய்ய நினைத்தான். உடனே அருகில் சென்று ஒரு குச்சியால் அந்தக் கூட்டை விலக்கிப் பட்டாம் பூச்சியை வெளியே எடுத்து விட்டான். இனி அது நிம்மதியாகப் பறந்து போகுமென்று நினைத்தபடி வீட்டுக்குள் சென்றுவிட்டான்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே இடத்துக்கு வந்து பார்த்தபோது பட்டாம்பூச்சி அந்த இடத்தில் இல்லை. அப்பாடா நிம்மதியாகப் பறந்து போயிருக்கும் என்று நினைத்தபடி கீழே பார்த்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவன் எடுத்து வெளியே விட்ட பட்டாம்பூச்சி கீழே விழுந்து கிடந்தது. அதன் உடலெங்கும் எறும்புகள். நடந்தது என்ன தெரியுமா?
அந்தப் பட்டாம்பூச்சி தன்னுடைய சொந்த முயற்சியில் வெளியேறி வந்திருந்தால் அதன் இறக்கைகள் பலமடைந்திருக்கும். சிறிது நேரத்தில் பறந்தும் போயிருக்கும். சிறுவன் அதன் சிறகுகள் பலப்படும் முன்னரே அதை வெளியே எடுத்துவிட்டதால் அது பறக்கும் வலிமையில்லாமல் கீழே விழுந்து எறும்புகளுக்கு இரையாகிப் போனது.
சில சோதனைகளின் போதும் செல்லமே, நாம் பலப்பட வேண்டுமென்று கர்த்தர் நினைப்பதனால்தான் பொறுமை காக்கிறார். ஏற்ற வேளை வரும் வரை அவரது பலத்த கரங்களில் அடங்கி இருப்பதுதான் நம்மைப் பாதுகாக்கும். எனவே நமது ஜெபத்திற்குப் பலன் கிடைக்கும்வரை வீணானவைகளைச் செய்து ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதிருப்போமா?
John Saravanan
Permissions in this forum:
You cannot reply to topics in this forum