கார், பைக் பராமரிப்பு
Mon Jun 29, 2015 6:15 am
காசு கொடுத்து வாகனம் வாங்கிவிட்டோம். அதை முறையாகப் பராமரித்தால்தான் நம் கைக் காசு கரையாமல் இருக்கும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அலட்சியமாக இருந்தால், கூடுதலாகச் செலவு வைப்பதுடன், நடு ரோட்டில் நம்மைத் தவிக்க வைத்துவிடும். மேலும், சரிவரப் பராமரிக்கப்படாத வாகனங்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பும் உண்டு. எனவே, உயிருக்கும் பணத்துக்கும் வேட்டுவைக்கும் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஆபத்து. வாகனப் பராமரிப்பு என்பது தினசரி அதற்கு நேரம் ஒதுக்கி, படாதபாடுபட்டுச் செய்ய வேண்டிய விஷயம் அல்ல. சில விஷயங்களை அன்றாடம் முறையாகக் கடைப்பிடித்து வந்தாலே போதும். செலவு மிச்சமாவதுடன், நமது வாகனம் மதிப்புமிக்கதாக இருக்கும்.
கார் பராமரிப்பு என்பது குழந்தையை வளர்ப்பதுபோல. பார்த்துப் பார்த்துச் செய்தால்தான் பரவசமாக இருக்கும். அதோடு, காரின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். இந்தக் கையேட்டைப் முழுவதுமாகப் படிக்கும்போது, கார் பராமரிப்பின் அவசியத்தை நீங்களே உணர்வீர்கள்.
இன்ஜின் டயர் மைலேஜ் பிரேக்ஸ் சஸ்பென்ஷன் உள்ளே வெளியே
இதயம் சொல்வதைக் கேளுங்கள்!
கார் பராமரிப்பின் முதல்படி, அது என்ன சொல்கிறது என்று பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்பதுதான். கார் எப்படிப் பேசும் என்கிறீர்களா? பின்னால் வரக்கூடிய பல பிரச்னைகளை, கார் ஓடும்போது வரும் சத்தங்களை வைத்தே சொல்லிவிடலாம். காலையில், முதலில் காரை ஆன் செய்துவிட்டு, இன்ஜின் சத்தம் எப்படி இருக்கிறது என்று காது கொடுத்துக் கேளுங்கள். ஆரம்பத்தில் சில விநாடிகளுக்குக் குறிப்பிட்ட ஆர்பிஎம்களில் இருக்கும் இன்ஜின், தானாகவே இன்னும் கீழே இறங்கி ஐடிலிங் ஆர்பிஎம்மில் ஓடும். இப்படியே குறைந்தது 5 நிமிடங்களுக்கு ஐடிலிங்கில் ஓடவிடுங்கள். இப்போது இன்ஜின் சத்தம் தாறுமாறாக இருக்கிறதா எனக் கவனியுங்கள். ஏ.சி.யை இப்போது ஆன் செய்யக் கூடாது.
காலையில் முதன்முதலாக இன்ஜினை ஸ்டார்ட் செய்யும்போது இன்ஜினை 'ரெவ்’ செய்துகொண்டே இருக்க வேண்டும் என நிறைய பேர் நினைக்கிறார்கள். இது தேவை இல்லை. பெட்ரோல் காராக இருந்தாலும் சரி, டீசல் காராக இருந்தாலும் சரி, காலையில் காரை ஸ்டார்ட் செய்யும்போது, குறைந்தது 5 நிமிடங்களுக்காவது ஐடிலிங்கில் ஓடவிடுங்கள். முக்கியமாக, டர்போ சார்ஜர் இருக்கும் கார்களில் இது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
இரவு முழுவதும் இன்ஜின் ஓடாமல் இருக்கும்போது, புவியீர்ப்பு விசை காரணமாக, இன்ஜினுக்குள் ஆயில் வழிந்து கீழிறங்கி இருக்கும். காரை ஸ்டார்ட் செய்தவுடன்தான் இந்த ஆயில் கொஞ்சம் கொஞ்சமாக இன்ஜின் முழுக்கப் பரவ ஆரம்பிக்கும். அதற்கு முன்பு, இன்ஜினை ரெவ் செய்தால், டர்போ சார்ஜர் பேரிங், இன்ஜின் ஹெட் போன்ற இடங்களில் ஆயில் சரியாகப் பரவாமல் இருக்கும். இதனால் ஏற்படும் உராய்வுகளில் அனைத்துமே பாதிக்கப்படும். டர்போ சார்ஜர் நீண்ட நாட்கள் உழைக்காது.
இன்ஜினை ஸ்டார்ட் செய்தவுடன், அதற்குச் சாதகமான வெப்ப நிலைக்கு (ஆப்டிமம் டெம்பரேச்சர்) வரும்வரை விரட்டாமல் காரை ஓட்டுங்கள். டர்போ சார்ஜர் இருக்கும் கார்களை ஆஃப் செய்யும்போது, சில நிமிடங்கள் ஐடிலிங்கில் ஓடவிட்டு பின்பு ஆஃப் செய்யுங்கள்.
இன்ஜின் ஆயில் என்பது, நம் உடலில் ஓடும் ரத்தம்போன்றது. இன்ஜினுக்குள் ஏற்படும் உராய்வுகள், வெப்பமடைதல் போன்றவற்றைக் குறைப்பதே இதன் வேலை. உடலின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால், எப்படி ஹார்ட் அட்டாக் வருகிறதோ, அதேபோலத்தான் இன்ஜின் ஆயில் சீராகச் செல்லவில்லை என்றால், இன்ஜினுக்கும் 'அட்டாக்’ வந்து சீஸ் ஆகிவிடும்.
ஆனால், கார் வைத்திருக்கும் பெரும்பான்மையினர், இந்த இன்ஜின் ஆயில் விஷயத்தில் அலட்சியமாக இருந்து விடுகின்றனர். ஒவ்வொரு கார் உரிமையாளருக்கும் கார் ஓட்டுவதைத் தவிர, கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டிய விஷயம், இன்ஜின் ஆயிலைச் சோதனை செய்வது. உங்கள் கார் மேனுவலில் 'டிப்-ஸ்டிக்’ வைத்து ஆயில் அளவை எப்படிச் சோதிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகக் கொடுத்திருப்பார்கள். ஒவ்வொரு முறையும் ஆயில் அளவைச் சோதிக்கும்போது, அதன் தரத்தின் மீது ஒரு கண்வைத்து வாருங்கள்.
ஆயிலை மாற்ற வேண்டுமா என்ற குழப்பம் பலருக்கு இப்போது இருக்கிறது. கார் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ள கி.மீ/சர்வீஸ் இடைவெளிகளில் இன்ஜின் ஆயில் மாற்றினாலே போதும்.
பெரும்பாலும் ஒவ்வொரு 10,000 கி.மீ-க்கு ஒருமுறை இன்ஜின் ஆயிலை மாற்றுவது நல்லது. சர்வீஸ் செய்யும்போதே பெரும்பாலான சர்வீஸ் சென்டர்களில் ஆயிலை டாப்-அப் செய்துவிடுகிறார்கள்.
ஆயில் மாற்றும்போது வரும் இன்னொரு குழப்பம், வழக்கமான மினரல் ஆயிலைப் பயன்படுத்துவதா அல்லது சிந்தெடிக் ஆயிலை மாற்றுவதா என்பது. முதல் 20,000 கிமீ வரை சிந்தெடிக் ஆயில் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பின்பு, உங்கள் காருக்கு ஏற்ற சிந்தெடிக் ஆயிலைத் தாராளமாக மாற்றிக்கொள்ளலாம். சிந்தெடிக் ஆயில் விலை அதிகம் என்றாலும், அதன் பயன்களும் அதிகம்.
ஸ்பார்க் ப்ளக்குகளை சர்வீஸ் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ள கால இடைவெளிகளில் மாற்றிவிடுங்கள். ஃப்யூல் இன்ஜெக்டர்களை 'அல்ட்ராசானிக் க்ளீனிங்’ மூலம் சுத்தப்படுத்துவது மைலேஜையும் அதிகரிக்கும்.
இன்ஜின் திடீரென்று ஓவர்ஹீட் ஆனால் என்ன செய்வது? இந்தக் குழப்பம் நிறைய பேருக்கு உண்டு. ஓவர்ஹீட் ஆவதை காரின் டெம்பரேச்சர் மீட்டரை வைத்துத் தெரிந்துகொள்ளலாம். அப்படி ஓவர்ஹீட் ஆனால், முதல் வேலையாக காரை பத்திரமாக சாலையோரம் நிறுத்துங்கள். ஏ.சியை மட்டும் ஆஃப் செய்துவிட்டு, காரின் இக்னீஷனை ஆன் மோடில் வையுங்கள். இதனால், காரின் கூலிங் ஃபேன் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கும். கூலிங் ஃபேன் ஓடும் சத்தம் கேட்கவில்லை என்றால், ஒன்று ஃபேனின் ஃப்யூஸ் போயிருக்கும் அல்லது ஃபேன் ரிப்பேர் ஆகியிருக்கும். கூலிங் ஃபேன் இயங்காமல், காரைத் தொடர்ந்து நெடுஞ்சாலையில் மெதுவாக இயக்கலாம். ஆனால், டிராஃபிக்கில் இயக்கினால், இன்ஜின் மிக வேகமாகச் சூடாகும்.
ஏ.சி.யை ஹீட்டரில் செட் செய்தால், அதற்கான வெப்பத்தை இன்ஜினில் இருந்துதான் உங்கள் கார் எடுத்துக்கொள்ளும். காரின் ஏ.சி-யை ஃப்ரெஷ் ஏர் மோடில் வைத்துவிட்டு, ஏ.சி-யை அதிகபட்ச வெப்பநிலைக்கு செட் செய்யுங்கள். இப்போது ஏ.சி-யை ஆன் செய்யாமல், ப்ளோயரை மட்டும் ஆன் செய்யுங்கள். வென்ட்டுகளில் இருந்து சூடான காற்று வரும் என்பதால், எல்லா ஜன்னல்களையும் கீழிறக்கி விடுங்கள். இதன் மூலம் இன்ஜினின் வெப்பத்தை ஓரளவு குறைக்க முடியும்.
ரேடியேட்டரைச் சோதனை செய்ய வேண்டும் என்றால், காரை நிறுத்திய பின்பு, குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு ரேடியேட்டர் கேப்பைத் திறக்காதீர்கள். இந்த நேரத்தில் அருகில் யாராவது மெக்கானிக் இருக்கிறார்களா எனத் தேடிப் பார்க்கலாம். கூலன்ட் டாப்-அப்தான் என்றால், மெக்கானிக் மற்றும் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல கவனமாக டாப்-அப் செய்யலாம். இதெல்லாம் சின்னப் பிரச்னைகள். ரேடியேட்டர் லீக் ஆனால், உடனடியாக காரை சர்வீஸ் சென்டருக்கு டோ செய்ய வேண்டும். பெரிய அளவில் லீக் இல்லாமல் இருந்தால், எம்-சீலை லீக் ஆகும் இடத்தில் ஒட்டிவிட்டு, காரை நிதானமாக சர்வீஸ் சென்டருக்கு ஓட்டிச் செல்லுங்கள்.
இன்ஜின் ஓவர்ஹீட் ஆவதற்கு மேலே கூறப்பட்டுள்ளது போன்ற செல்ஃப் ரிப்பேர்களை செய்ய யோசனையாகவோ, பயமாகவோ இருந்தால், சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து அவர்கள் வழிகாட்டுதல்படி செயல்படலாம்.
டயர்... உயிர்!
டயர் பராமரிப்பு பற்றிய விழிப்புஉணர்வு, இப்போது அதிகமாகவே இருக்கிறது. வீல் அலைன்மென்ட், வீல் பேலன்ஸிங், டயர் ரொட்டேஷன் போன்ற அம்சங்களை இப்போது பலரும் முக்கியத்துவம் கொடுத்துக் கவனிக்கின்றனர். திறமை வாய்ந்த ஒரு டயர் எக்ஸ்பெர்ட்டால், ஒரு காரின் டயரைப் பார்த்தே அந்த காரின் சஸ்பென்ஷன் சிஸ்டம் எப்படி இருக்கிறது என்பதைச் சொல்ல முடியும்.
மோசமான வீல் அலைன்மென்ட்/பேலன்ஸிங், முதலில் காரின் சஸ்பென்ஷனையும் ஸ்டீயரிங்கையும் பதம் பார்க்கும். ஸ்டீயரிங்கை நேராக வைத்தாலும் கார் தொடர்ந்து நேர்கோட்டில் செல்லாமல், இடது அல்லது வலது பக்கம் இழுத்துக்கொண்டு போனால், அலைன்மென்ட்டில் பிரச்னை என்று அர்த்தம்.
எவ்வளவு வேகமாக இழுத்துக்கொண்டு போகிறதோ, அவ்வளவு மோசமாக அலைன்மென்ட்இருக்கிறது என்று பொருள். உங்கள் காரில் இப்படி இருந்தால், மேனுவலில் இருக்கும் டோ, கேம்பர், காஸ்டர் வால்யூக்களுக்கு ஏற்றபடி முதலில் வீல் அலைன்மென்ட் செய்துவிடுங்கள்.
இரண்டாவது, வீல் பேலன்ஸிங். எந்த ஒரு காரின் வீலுமே 100 சதவிகிதம் சரியான பேலன்ஸிங் இருக்காது. வீல் பேலன்ஸிங் செய்த பின்பு, சாலையில் ஓடத் துவங்கிய முதல் விநாடியில் இருந்தே, பேலன்ஸ் மாற ஆரம்பித்துவிடும். அதனால்தான், அடிக்கடி வீல் பேலன்ஸிங் செய்ய வேண்டும். காரின் வீல் பேலன்ஸ் செய்தே ஆக வேண்டும் என்பதற்கான அறிகுறி, சீரான டயர் உராய்தல் இல்லாததும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு டயரில் இருந்து அதிர்வுகள் எழுவதும்தான். இது தொடர்ந்தால், வீல் பேரிங்கை பாதிக்கும். அதனால், அலைன்மென்ட் செய்யும்போதே, வீல் பேலன்ஸிங் செய்து விடுங்கள்.
மூன்றாவது, டயர் ரொட்டேஷன். காரின் 5 டயர்களும் (ஸ்டெப்னி சேர்த்து) சமமான அளவில் தேய்மானம் அடைய வேண்டும் என்பதற்காகச் செய்யப்படுவது. ஃப்ரன்ட் வீல் டிரைவ், ரியர் வீல் டிரைவ் மற்றும் 4-வீல் டிரைவ் கார்களுக்கு ஏற்ப ரொட்«டஷன் முறை மாறுபடும்.
காரில் புது டயர்களைப் பொருத்தினால், குறைந்தது 500 கிமீ வரை, காரை மிக வேகமாக ஓட்டாதீர்கள். அப்போதுதான் புதிய டயர்கள் சாலையில் தேய்ந்து செட் ஆகி, நல்ல க்ரிப் கிடைக்கும்.
டயர் பாலீஷ் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதை வைத்து பாலீஷ் செய்தால், பழைய டயர்கள்கூட பளபளவென்று புதிய டயர்கள்போலக் காட்சியளிக்கும். இதை டயரின் ட்ரெட்டுகளில் போடக் கூடாது. டயர் பாலீஷ் போட்டுவிட்டு வெயிலில் காரை நிறுத்தினால், பாலீஷ் உருகி டயரின் ட்ரெட்டுகளுக்குள் சென்றுவிடும்.
உங்கள் டிரைவிங்... உங்கள் மைலேஜ்!
மைலேஜ் அதிகம் கிடைக்கச் சிறந்த வழி, அதற்கு ஏற்றதுபோல நீங்கள் காரோட்டும் விதத்தை மாற்றிக்கொள்வதுதான். பிரேக் மற்றும் ஆக்ஸிலரேட்டரை மென்மையாகக் கையாளும் வகையில் உங்கள் ஓட்டுதல் இருந்தால், மைலேஜ் அதிகரிக்கும்.
மிதமான வேகத்தில் செல்லும்போதுதான், சாலையை முழுவதுமாக அனுமானித்து ஓட்ட முடியும். ஷார்ப்பான வளைவு ஒன்று சாலையில் இருக்கிறது என்றால், அதை நெருங்கும்வரை வேகமாக ஓட்டிவிட்டு, அதிக பிரேக் அழுத்தி காரின் வேகத்தை மொத்தமாகக் குறைத்து ஓட்டுவதற்குப் பதிலாக, சீரான வேகத்துடன் வளைவைக் கடப்பதுதான் சிறந்த முறை.
இதனால், தேவையில்லாமல் எரிபொருள் வீணாவது தடுக்கப்படும். தேவையில்லாமல் கிளட்ச்சை மிதித்துக்கொண்டே ஓட்டுவதைக் குறைத்தாலும் நிறைய எரிபொருள் வீணாவதைத் தடுக்கலாம். கிளட்ச் பிளேட்டும் தேவையில்லாத தேய்மானத்தில் இருந்து தடுக்கப்படும். காரில் இருந்து தேவையற்ற எடையைக் குறைப்பதன் மூலம் மைலேஜ் மட்டுமல்லாமல், காரின் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸும் கூடும்.
காரின் இன்ஜினை நாம் ஆக்ஸிலரேட்டர் மட்டுமில்லாமல், கியர்பாக்ஸ் மூலமும் கையாள்கிறோம். கியர்களை நாம் மாற்றும் விதத்திலும் கச்சிதமாக இருந்தால், நிறைய மைலேஜ் கிடைக்கும்.
வழக்கத்தைவிட கொஞ்சம் கியரை சீக்கிரமாக மாற்றிப் பாருங்கள். மிகவும் குறைந்த ஆர்பிஎம்-லேயே கியரை மாற்றினால், பின்னர் இன்ஜின் திணற ஆரம்பித்துவிடும். அதனால், இன்ஜினை அதிக ஆர்பிஎம்-ல் ரெவ் செய்து பின்னர் மாற்றுவதற்குப் பதிலாக, கொஞ்சம் குறைந்த ஆர்பிஎம்-ல் மாற்றுவதன் மூலம் நிறைய எரிபொருளை மிச்சம் செய்யலாம்.
ஆனால், 2,000 ஆர்பிஎம்-க்குக் கீழ் இருக்கும்போது, அப் ஷிஃப்ட் செய்யக் கூடாது. அதேபோல், அதிக ஆர்பிஎம்-ல் இன்ஜின் இயங்கிக்கொண்டிருக்கும்போது, தெரியாமல்கூட டவுன் ஷிஃப்ட் செய்துவிடாதீர்கள். எடுத்துக்காட்டாக, சிலர் மூன்றாவது கியரில் இருந்து நான்காவது கியருக்கு மாற்றுவதற்குப் பதிலாக, தெரியாமல் இரண்டாவது கியருக்கு மாற்றுவது. இதை 'மணிஷிஃப்ட்’ என்று கிண்டலாக அழைப்பார்கள். இப்படிச் செய்வதால், ஏற்படும் கியர்பாக்ஸ் சேதாரச் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால், அதை அப்படிச் சொல்கிறார்கள்.
டயர்கள் எப்போதும் சரியான காற்றழுத்தத்தில் இருந்தால், மைலேஜ் நிறைவாகக் கிடைக்கும் என்பது பொதுவான தகவல். ஆனால், இப்போதைய ட்ரெண்ட் நைட்ரஜன்தான். பலருக்கும் டயர்களில் நைட்ரஜன் நிரப்புவதா அல்லது சாதாரண காற்றையே நிரப்புவதா என்ற குழப்பம் இருக்கிறது.
நைட்ரஜன் நிரப்புவதால், டயர்களில் உள்ள அழுத்தம் விரைவில் குறையாது. மேலும், தொடர்ந்து ஓடும்போது டயரின் வெப்ப அளவு குறைவாகவே இருக்கும். நைட்ரஜனைப் பொறுத்தவரை, சாதாரண காற்றைவிட சற்றே அதிகமான நன்மைகளையே அளிக்கிறது.
நாம் நிரப்பும் சாதாரண காற்றிலேயே 78 சதவிகிதம் நைட்ரஜன்தான் இருக்கிறது. மீதம் இருப்பதில் 20 சதவிகிதம்தான் ஆக்ஸிஜன். டயர்களில் நைட்ரஜன் நிரப்புவதால் கிடைக்கும் நன்மைகளை முழுவதும் அனுபவிக்க, நாம் நிரப்பும் நைட்ரஜன் மிக சுத்தமானதாக இருக்க வேண்டும். செலவு செய்ய முடியும் என்பவர்கள் தாராளமாக நைட்ரஜன் நிரப்பலாம்.
சடர்ன் பிரேக்...
காரின் பிரேக்குகளை ஒவ்வொருமுறையும் சர்வீஸுக்கு விடும்போதும் செக்கப் செய்தாலே போதும்.
ஆனால், நீங்கள் ஓட்டும்போது வழக்கமான பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸில் இருந்து சின்ன மாறுதல் இருந்தால், உடனே சர்வீஸ் சென்டரில் சோதனை செய்துவிடுவது அவசியம். ஹேண்ட் பிரேக் எடுக்காமலேயே காரை ஓட்டினால், காரின் பின்பக்க பிரேக் லைனிங் மிக மோசமாகப் பாதிக்கப்படும்.
அதேபோல், மலைச் சாலையில் கீழே இறங்கும்போது இன்ஜின் பிரேக்கிங்கைப் பயன்படுத்திக்கொள்ளாமல், பிரேக்குகளையே பயன்படுத்தி வந்தால், பிரேக்குகள் ஏகத்துக்கும் சூடாகி அதன் செயல்திறன் குறைந்துவிடும். குறிப்பாக, முன் பிரேக்குகள் இதில் அதிகமாகப் பாதிக்கப்படும். ஒவ்வொரு நாளும் முதலில் காரை எடுக்கும்போது, பிரேக்குகள் சரியாக இருக்கிறதா என்று பிரேக் பிடித்து சோதனை செய்துவிட்டு பயணத்தைத் தொடர்வது நல்லது.
சும்மா அதிருதுல்ல!
காரின் சஸ்பென்ஷனை சிறப்பாகக் கவனித்து பராமரிக்கத் தேவை இல்லை. கார் ஓட்டும்போது சஸ்பென்ஷனில் இருந்து விநோதமான சத்தம் வந்தால், கவனிக்க வேண்டும். மோசமான சாலைகளில், வேகமாக ஓட்டாமல் இருப்பது சஸ்பென்ஷனைப் பாதிக்காமல் இருக்கும்.
கார் ஓட்டும்போது, அதிர்வுகள் எந்தப் பக்கம் இருந்து எழுகிறது என்று கவனியுங்கள். காரின் ஸ்டீயரிங் வீல் அதிர்ந்தால், காரின் முன் பக்கத்தில் பிரச்னை இருக்கலாம். பெரும்பாலும் மோசமான வீல் பேலன்ஸிங்/அலைன்மென்ட்தான் இதற்குக் காரணமாக இருக்கும்.
இருக்கையில் அதிர்வுகள் இருந்தால், காரின் பின்பக்க சஸ்பென்ஷன் அல்லது வீலில் பிரச்னை இருக்கலாம். காரின் மீது, ஒவ்வொரு வீலின் மேல் பகுதியில் அழுத்தி விட்டுப்பாருங்கள். ஒரு தடவை கார் கீழே இறங்கி மேல் ஏறி நிற்கும். அதற்குப் பதிலாக சிறிது அதிகமாகக் குலுங்கினாலும், சஸ்பென்ஷனில் பிரச்னைதான். ராக் அண்டு பினியன் ஸ்டீயரிங் சிஸ்டம் இல்லாத கார்களில், ஒவ்வொரு முறை டயர்கள் ரொட்டேஷன் செய்யப்பட்ட பிறகு, சஸ்பென்ஷனில் க்ரீஸ் வைக்க வேண்டும்.
புதிய அலாய் வீல் பொருத்தினாலோ, காரின் டயரையும் வீலையும் அப்-சைஸ் செய்தாலோ, மிக அகலமான டயர்களைப் பொருத்தினாலோ, சஸ்பென்ஷன் செயல்பாட்டில் மாற்றம் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
சஸ்பென்ஷன் அடிவாங்கும் என்றால், எந்தக் காரணத்தைக் கொண்டும் ஸ்டைலுக்காக வீல்களிலும் டயர்களிலும் கைவைக்க வேண்டாம். காருக்கு அடியில் அண்டர்சேஸி கோட்டிங்கை ஒவ்வொரு மழைக் காலத்துக்கு முன் செய்வது, முக்கிய பாகங்கள் துருப்பிடிப்பதில் இருந்து பாதுகாக்கும்.
இம்சிக்காத இன்டீரியர்!
காரின் இன்டீரியரில் என்ன பராமரிப்பு வேண்டியிருக்கிறது என சிலர் நினைத்தால், அது முற்றிலும் தவறு. காருக்குள் அமர்ந்து சாப்பிடுவது, பானங்கள் அருந்துவது போன்றவற்றைத் தவிர்த்தாலே, கார் இன்டீரியர் பராமரிப்பு விஷயத்தில் நீங்கள் பாஸ் மார்க் வாங்கிவிடலாம். இதனால், இருக்கைகளில் படியும் தேவையற்ற, சிரமமான கறைகளைத் தவிர்க்கலாம்.
ஸ்டீயரிங் வீலையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால், ஓரளவுக்கு மேல் அழுக்கு படிந்தபின், ஸ்டீயரிங் வீல் வழுக்க ஆரம்பித்துவிடும். இதனால், எதிர்பாராத சமயங்களில், வழுக்கி ஆபத்துக்கு வழி வகுத்துவிடும்.
காரின் இன்டீரியரில் கவனிக்க வேண்டிய முதல் விஷயம், தூசு. இருக்கைகளிலும் இன்டீரியர் பாகங்களிலும் படிந்திருக்கும் இது, உங்கள் பயணத்தின் மகிழ்ச்சியையே கெடுத்துவிடும். லெதர் சீட்களை எளிதாகச் சுத்தம் செய்துவிடலாம். ஆனால், ஃபேப்ரிக் சீட்களைச் சுத்தம் செய்வது சிரமமான காரியம். தவறாகச் செய்தால், தூசியும் அழுக்கும் இன்னும் ஆழமாக இருக்கையில் படிந்துவிடும். பெரும்பாலும் காரின் இன்டீரியரை நாம் சுத்தம் செய்வதைவிட, கார் டீட்டெயிலிங் சென்டரில் சுத்தம் செய்வது நலம்.
காரின் ஏ.சி-யில் கவனிக்க வேண்டிய அம்சம், அதன் ஃபில்ட்டர். சென்னை போன்ற பெருநகரங்களில் ஓடும் கார்களின் ஏ.சி ஃபில்ட்டர், மிக விரைவில் அசுத்தமாகி அடைத்துக்கொள்ளும். இதனால், ஏ.சி-யின் செயல்திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும். இந்த நிலையை அடையும் பலரும், ஏ.சி கேஸ் தீர்ந்து விட்டது என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால், அவ்வப்போது ஏ.சி ஃபில்ட்டரைச் சுத்தம் செய்தாலே போதும். கார் ஏ.சி ரிப்பேர் செய்யும் கடைகளில் குறைந்த விலையிலே இதைச் செய்து கொடுப்பார்கள்.
கார் டேஷ்போர்டின் முன் பகுதியில் உள்ள தூசியை பெரும்பாலும் நாமே துடைத்துவிடுவோம். ஆனால், கண்ணாடிக்குக் கீழ் இருக்கும் டீஃப்ராஸ்டர் வென்ட்டை பலரும் மறந்துவிடுவர். திடீரென்று என்றாவது அதைப் பயன்படுத்தும்போது, நீண்ட நாட்களாக அதில் படிந்திருந்த தூசுகள் வெளியேறி காரின் உள்ளே படிந்துவிடுவதோடு, மட்டுமல்லாமல், நம் மூக்கிலும் ஏறி தும்மலை வரவைக்கும். எனவே, டீஃப்ராஸ்டர் வென்ட்டை அடிக்கடி கவனியுங்கள்.
ஃப்ளோர் மேட்டுகளையும் அடிக்கடி துடைத்துவிடுவது அவசியம். நம் காலணியில் உள்ள அழுக்கு அத்தனையும் ஃப்ளோர் மேட்டுகளில்தான் படியும். இதைக் கவனிக்காமல் விட்டால், நாளடைவில் ஃப்ளோர் மேட்டைச் சுத்தம்கூட செய்ய முடியாமல், புதிதாக மாற்றவேண்டியிருக்கும். எனவே, வாரத்துக்கு ஒருமுறை ஃப்ளோர் மேட்டைச் சுத்தம் செய்யுங்கள்.
'க்ளீன்’ போல்டு!
காரின் வெளிப்புறத் தோற்றம் தான் உங்களுடைய அக்கறையை எடுத்துக் காட்டும். காரைச் சுத்தமாக, பளபளவென்று வைத்திருப்பது சமூகத்தினிடையே உங்களுக்கு மதிப்பைப் பெற்றுத்தரும்.
டிரைவர் இல்லாத பட்சத்தில், காரை தினம் தினம் கழுவிக் கொண்டிருப்பது சிரமமான காரியம்தான். வாரம் ஒருமுறை காரை குடும்பத்துடன் இணைந்து கழுவிப் பாருங்கள். இது கேட்பதற்கு சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் குடும்பத்துடன் சிறிது நேரம் ஜாலியாக செலவு செய்த மாதிரியும் ஆச்சு! காரை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று குடும்பத்தினருக்குப் புரியவைத்த மாதிரியும் ஆச்சு! தாங்களே கைப்பட கழுவிய கார் என்பதால், குழந்தைகளும் இனி காரில் எந்த அசுத்தத்தையும் செய்ய மாட்டார்கள்.
விண்ட்ஷீல்டு துடைப்பதற்கு ஃபைபர் கிளாத்தையும், நியூஸ் பேப்பரையும் பயன்படுத்துங்கள். பழைய துணியை மறந்தும் பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், கண்ணுக்குத் தெரியாத துகள்களால் விண்ட்ஷீல்டில் ஸ்கிராட்சுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
சில கார் உரிமையாளர்கள் கார் கழுவுவதை உடற்பயிற்சி போலச் செய்கிறார்கள். இதுவும் நல்லதுதான். உங்களால் இந்த வேலை செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால், கவலையே தேவையில்லை. எல்லா ஊர்களிலும் இப்போது கார் டீட்டெயிலிங் சென்டர்கள் வந்துவிட்டன. அங்கு காரை எடுத்துக் கொண்டுபோய் பாலிஷ், வாக்ஸ், ப்ரஷர் வாஷ், இன்டீரியர் க்ளீனிங் என காரை கச்சிதமாகச் சுத்தம் செய்துவிட்டு வாருங்கள். விலை அதிகம்தான். ஆனால், காரை புத்தம் புதிய காரைப்போல் மாற்றி விடுவார்கள்.
Re: கார், பைக் பராமரிப்பு
Mon Jun 29, 2015 6:15 am
பைக்
பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கும் பைக்கை முறையாகப் பராமரிக்காவிட்டால், பாக்கெட்டில் இருக்கும் பணத்துக்குப் பங்கம் வந்துவிடும். வாரத்தில், மாதத்தில் சில மணிநேரங்களை ஒதுக்கினாலே பைக் எந்தப் பிரச்னையும் கொடுக்காது. செலவும் வைக்காது.வாரம் ஒருமுறை சுத்தம்...
வாரம் ஒருமுறையாவது பைக்கைச் சுத்தம் செய்வது அவசியம். சர்வீஸ் ஸ்டேஷன் சென்றுதான் வாட்டர் சர்வீஸ் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லாதது. பைக்கில் சேறு படிந்திருந்தால், வீட்டிலேயே தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யுங்கள். அப்போதுதான் இன்ஜின், கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன் போன்றவற்றில் ஆயில் லீக் இருக்கிறதா என்பதைக் கவனிக்க முடியும். பேட்டரியில் டிஸ்டில்ட் வாட்டர் அளவு சரியாக இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். இரண்டு வீல்களிலும் காற்று சரியான அளவு இருக்கிறதா என்பதையும் சோதிக்க வேண்டும்.
செல்ஃப் ஸ்டார்ட் இருக்கிறதா?
காலையில் முதல்தடவையாக பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது, கிக் ஸ்டார்ட் செய்வதுதான் சிறந்தது. ஏனெனில், இரவு முழுதும் சும்மா நின்றிருந்த இன்ஜின் குளிர்ந்திருக்கும். அப்போது செல்ஃப் ஸ்டார்ட் செய்தால், உடனே ஸ்டார்ட் ஆகாது. அதனால், சிலமுறை கிக் செய்துவிட்டு செல்ஃப் பயன்படுத்தலாம் அல்லது கிக் ஸ்டார்ட்டையே பயன்படுத்தலாம். இதனால், பேட்டரி, செல்ஃப் மோட்டார் ஆயுள் நீடிக்கும். மேலும், செல்ஃப் ஸ்டார்ட்டரை ஒருமுறை பயன்படுத்தும்போது, பேட்டரியின் பெருமளவு சக்தி செலவாகிறது. அது மீண்டும் சார்ஜ் ஆவதற்கு, குறைந்தது 20 கி.மீ தூரமாவது பயணிக்க வேண்டும். அதனால், குறைவான தூரம் பயணிப்பவர்கள் அடிக்கடி செல்ஃப் ஸ்டார்ட் பயன்படுத்துவதில் கவனம் கொள்வது நல்லது.
அதேபோல், காலையில் ஸ்டார்ட் செய்த பிறகு, ஒருசில நிமிடங்களாவது ஆயில் இன்ஜின் முழுவதும் பரவ ஐடிலிங்கில் ஓட அனுமதியுங்கள். ஆக்ஸிலரேட்டரை முறுக்காதீர்கள். அப்படிச் செய்தால், இன்ஜின் பாதிக்கப்படும். கிக் ஸ்டார்ட் இல்லாத பைக்குகளில், சக்திவாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும்.
இன்ஜின் ஆயில்
ஆயிலின் மசகு(Viscosity)தன்மைதான் இன்ஜினை அதிகம் சூடாக்காமலும் உராய்வில் தேய்ந்துபோகாமலும் காக்கிறது. எனவே, வாகனத் தயாரிப்பாளர் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட கி.மீ தூரம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை (எது முந்துகிறதோ அதன்படி) இன்ஜின் ஆயில் மாற்றுவது இன்ஜினின் ஆயுளை நீட்டிக்கும். பரிந்துரைத்த கிரேடு ஆயில் பயன்படுத்துவது முக்கியம். ஆயில் குறைந்துவிட்டது என்பதால், வேறு ஏதாவது ஆயிலை ஊற்றுவது தவறு.
டயர்
பொதுவாக, இரு சக்கர வாகனங்களின் டயர்கள் 35,000 - 40,000 கி.மீ தூரம் வரை மட்டுமே உழைக்கும். சில பைக்குகளில் 20,000 கி.மீயிலேயே மாற்ற வேண்டிவரும். அடிக்கடி பஞ்சர் ஆவதுதான் டயர் பலவீனமடைந்துவிட்டது என்பதற்கான அறிகுறி. டயர்களின் பட்டன்கள் தேய்ந்து சமதளமாக டயர் மாறும்வரை ஓட்டுவது ஆபத்து. பட்டன்களின் ஆழம் குறைந்ததுமே மாற்றிவிடுவதுதான் பாதுகாப்பு. ஏனெனில், வளைவுகளில், மணற்பாங்கான சாலைகளில், வழுக்கும் தண்மைகொண்ட இடங்களில் தேய்ந்துபோன டயர் வாகனத்தை ஸ்கிட் ஆக்கிவிடும். மேலும், பிரேக்கைப் பிடிக்கும்போது ஸ்கிட் ஆவதுடன், பைக் தாறுமாறாக வளைந்து நெளிந்து சுழல்வதும் நடக்கும். அதேபோல், குறிப்பிட்ட தூரத்தில் பைக் நிற்காது. எனவே, டயர் விஷயத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கிளட்ச்
கிளட்ச் லீவரை கியர் மாற்றுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாகனம் ஓட்டிக்கொண்டு இருக்கும்போது கிளட்ச் லீவரைத் தொடுவதால்கூட இன்ஜினில் இருந்து கிடைக்கும் சக்தி முழுமையாக வீலுக்குச் செல்லாமல் விரயமாகும். அதனால், மைலேஜ் பெருமளவு குறையும். கிளட்ச் பிளேட்டின் தேய்மானத்துக்கு ஏற்ப லீவர் கேபிள் அட்ஜஸ்ட் செய்யப்பட வேண்டியது அவசியம். இதை மாதம் ஒருமுறை செக் செய்வது நல்லது. தேய்ந்துபோன கிளட்ச்சைத் தொடர்ந்து பயன்படுத்துவது பெட்ரோல் விரயத்துக்கு வழி வகுப்பதுடன், கியர்பாக்ஸைப் பாதித்து செலவை எகிறவைத்துவிடும். மேலும், டிராஃபிக் சமயங்களில் நம்மைத் தள்ளாட வைத்துவிடும்.
செயின் ஸ்பிராக்கெட்
இன்ஜினையும் விலையும் இணைக்கும் செயின் ஸ்பிராக்கெட், மிக முக்கியமான பாகம். இதன் செயின் அதிக இறுக்கமாகவோ அல்லது மிகத் தளர்வாகவோ இருக்கக் கூடாது. ஓட ஓடத் தேயும் செயினை மாதம் ஒருமுறை சோதித்து அட்ஜஸ்ட் செய்வது அவசியம். செயினில் தூசு இருந்தால் சுத்தம் செய்வது, ஆயில் விட்டுப் பராமரிப்பது நீண்ட நாள் உழைக்க வழிவகுக்கும். நேக்கட் பைக் சிலவற்றில் செயின் வெளியே தெரியும்படி இருக்கும். இதில், ஆயிலுக்குப் பதில் ஸ்ப்ரே பயன்படுத்தவேண்டும். மேலும், ஸ்பிராக்கெட்டில் இருக்கும் பற்கள் தேய்ந்துபோகாமல் இருக்கிறதா எனக் கவனிப்பதும் அவசியம். அட்ஜஸ்ட் செய்ய முடியாத அளவுக்குத் தேய்ந்திருந்தால் செயின் ஸ்பிராக்கெட்டை மாற்றி விடுவது நல்லது. பொதுவாக, செயின் ஸ்பிராக்கெட் 30,000 - 35,000 கி.மீ வரை உழைக்கும்.
ஸ்பார்க் ப்ளக்
இன்ஜின் இயங்க மிக முக்கியமான பாகம் ஸ்பார்க் ப்ளக். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யும்போது தவறாமல் இதையும் மெக்கானிக் சோதித்துப் பார்ப்பார் என்றாலும், அதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
சரியாக தீப்பொறி வராத ஸ்பார்க் ப்ளக்கால் பைக்கின் பெர்ஃபாமென்ஸ் பாதிக்கப்படுவதுடன், பெட்ரோலும் வீணாகும். மேலும், எப்போதும் ஒரு ஸ்பேர் ஸ்பார்க் ப்ளக் உங்கள் பைக்கிலேயே வைத்திருங்கள். 50 ரூபாய் முதல் 100 ரூபாய் விலை கொண்ட இது பழுதடைந்தால், நடுரோட்டில் நிற்க வேண்டியது வரும். இரீடியம் ஸ்பார்க் ப்ளக் எனும் வகை ஒன்று உண்டு. இது விலை அதிகம் என்றாலும், நீண்டநாள் உழைப்பதுடன் சீராக இயங்கி நல்ல பெர்ஃபாமென்ஸை அளிக்கும்.
சஸ்பென்ஷன்
வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் எடையேற்றினால், முதலில் பாதிக்கப்படுவது சஸ்பென்ஷன்தான். சஸ்பென்ஷன் பழுதடைந்தால், பைக்கின் பெர்ஃபாமென்ஸ், பிரேக், செயல்பாடு, மைலேஜ் என அனைத்துமே பாதிக்கும். மேலும் சஸ்பென்ஷன் சரியாக இயங்கவில்லை என்றால் கழுத்து வலி, முதுகு வலி, கை வலி வர வாய்ப்பு உண்டு. எனவே, சஸ்பென்ஷன் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், உடனுக்குடன் சரிசெய்வது நல்லது. ஷாக் அப்ஸார்பரைப் பொறுத்தவரை ரீ-கண்டிஷன் செய்து பொருத்துவது கூடாவே கூடாது. புதிதாக மாற்றுவதே நல்லது. முன்பக்க ஃபோர்க் சஸ்பென்ஷன் பழுதடைந்து ஆயில் கசிந்தால் உடனே சரிசெய்வதுதான் நல்லது. ஏனெனில், அதில் உள்ள ஆயில் முழுவதும் வெளியேறி ஆயில் இல்லாத நிலையில் இயங்கினால், ஃபோர்க் வளைந்துவிடும். ஃபோர்க்கைச் சரிசெய்வது என்பது நன்றாக இருந்த கையை உடைத்து மாவுக்கட்டு போடுவது போன்றதுதான்.
வீல்
சரியான காற்றழுத்தத்தை எப்போதும் கடைப்பிடித்தால், வீல் பெண்ட் ஆகாமல் இருக்கும். வீல் பஞ்சர் ஆனது தெரியாமல் பைக்கை ஓட்டும்போதுதான் பெரும்பாலும் வீல் பெண்ட் ஆகிறது. அலாய் வீல் சுலபத்தில் பெண்ட் ஆகாது என்றாலும், பெண்ட் ஆனால் சரிசெய்ய முடியாது. ஸ்போக் வீலைச் சரி செய்யலாம் என்றாலும், கவனமாக இருப்பது நல்லது. பெண்ட் ஆன வீலுடன் வாகனத்தை ஓட்டினால், செயின் ஸ்பிராக்கெட் பாதிக்கப்படும். டயர் ஏறுக்கு மாறாகத் தேயும். பைக்கின் பெர்ஃபாமென்ஸ், செயல்பாடு என ஒட்டுமொத்தமாகப் பாதிக்கும்.
எலெக்ட்ரிகல்
முடிந்தவரை மழையில் நனையாமல், வெயிலில் காயாமல் பைக்கைப் பாதுகாத்தால் எலெக்ட்ரிகல், பெயின்ட் போன்றவற்றில் பிரச்னைகள் வராது. ஹெட்லைட் பல்பை அதிக வெளிச்சம் தருவது போல மாற்றுவதாக இருந்தால் அல்லது அதிகச் சத்தம் தரும் ஹாரன் பொருத்துவதாக இருந்தால், குறிப்பிட்ட வாட்ஸ் அளவுள்ளதுதான் பொருத்த வேண்டும். மாற்றிப் பொருத்தினால், எலெக்ட்ரிகல் பாகங்கள் பாதிப்பதுடன் எலெக்ட்ரிக் ரெகுலேட்டரும் சேதமாகும். எனவே, எலெக்ட்ரிகல் விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருங்கள்.
பிரேக்
பிரேக்கில் கால் வைத்துக்கொண்டே அல்லது பிரேக் லீவரைப் பிடித்தவாறு பைக் ஓட்டுவது தவறு. அப்படி ஓட்டினால், பிரேக் பேட் விரைவில் தேய்ந்துபோகும். மேலும், பிரேக்கை அழுத்தியவாறு ஓட்டுவதால், அதிக வெப்பம் உருவாகும். இதனால், பிரேக் ட்ரம் தேய்ந்துவிடுவதுடன் மைலேஜும் கணிசமாகக் குறையும். எனவே. தேவை ஏற்படும்போது மட்டுமே பிரேக் பெடலில் கால் வைப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
மேலும், இன்ஜினும் ஒரு பிரேக்தான் என்பது பலருக்குப் புரிவது இல்லை. அவசரமாக பிரேக் பயன்படுத்தும்போது, கிளட்ச்சையும் பயன்படுத்துவது தவறு. கிளட்ச் பிடிக்கவில்லை என்றால், இன்ஜின் ஆஃப் ஆகி விடாதா எனக் கேள்வி எழும். கிளட்ச்சையும் சேர்த்துப் பிடிக்கும்போது, பைக் ஸ்டெபிளிட்டி பாதிக்கப்படும். மேலும், பைக் நிற்கும் தூரமும் அதிகரிக்கும்.
கிளட்ச் பிடிக்கவில்லை என்றால், இன்ஜினும் வீலும் நேராக இணைந்திருக்கும். ஆக்ஸிலரேட்டர் குறைவதும் பிரேக் பெடல் அழுத்தப்படுவதும் ஒரே சமயத்தில் நிகழும்போது, நீங்கள் திட்டமிட்ட தூரத்துக்கு முன்பாகவே பைக் நின்றுவிடும். அதேபோல், முன்-பின் இரு பிரேக்குகளையும் ஒரே சமயத்தில் பயன்படுத்துவதும் அவசியம். டிஸ்க் பிரேக்கைப் பொறுத்தவரை அதில் நாமாகச் செய்ய எதுவும் இல்லை. அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால், பிரேக் ஃப்ளூயிட் லெவல் சரியாக இருக்கிறதா என்பதை மட்டும் கவனிக்க வேண்டும். அளவு குறைந்தால், உடனே சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுசெல்வது நல்லது. அதேபோல், பிரேக் டிஸ்க்கில் சேறு படியாமல் சுத்தமாகப் பராமரித்து வரவேண்டியது அவசியம்.
ஏர் ஃபில்ட்டர்
ஏர் ஃபில்ட்டர் அவசியம் கவனிக்க வேண்டிய முக்கியமான பாகம். இன்ஜினுக்குள் செல்லும் காற்றைச் சுத்தமாக்கி அனுப்பும் வேலையைச் செய்யும் இது சேதம் அடைந்திருந்தாலோ அல்லது நீண்டநாள் பயன்படுத்தியதால் தூசு அதிகம் சேர்ந்திருந்தாலோ பிரச்னைதான். காற்றில் உள்ள தூசு இன்ஜினுக்குள் சென்றால், சிலிண்டரில் ஸ்க்ராட்ச் ஏற்படும். இதனால், இன்ஜின் விரைவாகத் தேயும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது ஏர்ஃபில்ட்டரைச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஏர் ஃபில்ட்ட்ரையே மாற்றுவதும் அவசியம்.
கார்புரேட்டர்
காற்றும் பெட்ரோலும் கலக்கும் இடம் கார்புரேட்டர். இதில், பல ஸ்க்ரூ-க்கள் இருக்கும். சில சமயங்களில் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், இதில் இருக்கும் ஏதாவது ஒரு ஸ்க்ரூவைத் திருக்குவது சிலருக்குப் பழக்கமாக இருக்கிறது. அப்படிச் செய்யவே கூடாது. ஏனெனில், காற்றும் பெட்ரோலும் என்ன விகிதத்தில் கலக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப இந்த ஸ்க்ரூ-க்கள் அட்ஜஸ்ட் செய்யப்பட்டிருக்கும். இதில் ஏதாவது ஒன்றைத் திருகினால், ஏறுக்குமாறாக மாறிவிடும். இதில் கைவைக்காமல் சுத்தமாகப் பராமரிப்பது மட்டுமே சிறந்தது. இதில் உள்ள 'சோக்’-கை அதிகாலை நேரத்தில் ஸ்டார்ட் செய்யும்போது அல்லது ஸ்டார்ட்டிங் ட்ரபுள் இருக்கும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற சமயத்தில் சோக் ஆன் ஆகி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஓட்டுவது நல்லது. ஏனெனில், சோக் அமைப்பு அதிக பெட்ரோல், குறைவான காற்று இன்ஜினுக்குச் செல்வதுபோல வடிவமைக்கப்பட்டது. கவனிக்காமல் ஓட்டினால், டேங்க்கில் இருக்கும் பெட்ரோல் காலியாகிவிடும்.
அவசியம் இல்லாத ஆக்சஸரீஸ்
புதிதாக பைக் வாங்கிய உடனே பல்வேறு ஆக்சஸரீஸ் வாங்கி அழகுபடுத்துவார்கள். அது தவறு இல்லை. ஆனால், இதில் ஹேண்ட் கிரிப், சீட் கவர், இன்ஜின் கார்டு போன்றவை அவசியமற்றவை என்பதுடன் பைக்குக்கு பாதுகாப்பானதும் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால், பைக்கில் ஏற்கெனவே இருக்கும் ஹேண்ட் கிரிப் மனித கைகளின் அளவுக்கு ஏற்ப திட்டமிட்டு டிஸைன் செய்தவை. அதன் மீது வேறு க்ரிப் பொருத்தும்போது, அளவு மாறுபடும். அளவு மாறினால், வாகனத்தின் செயல்பாடும் மாறுபடும். அதேபோல், பைக்கில் இருக்கும் ஒரிஜினல் சீட் கவர் கிரிப்புடன் இருக்கும் வகையில் டிஸைன் செய்யப்பட்டது. அதாவது, பைக் ஓட்டுபவர் திடீரென பிரேக் பிடிக்கும்போது சீட்டில் இருந்து நழுவாமல் இருக்க வேண்டும். அதன் மீது வழுக்கும் தன்மைகொண்ட கவரைப் போட்டால், அதன் நோக்கம் நிறைவேறாது.
- கா.பாலமுருகன், ர.ராஜா ராமமூர்த்தி
Re: கார், பைக் பராமரிப்பு
Mon Jul 20, 2015 8:27 pm
மைலேஜ் - செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்!
டிசைன், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், விலை என எல்லாம் பார்த்துப் பார்த்துதான் கார் அல்லது பைக்கை வாங்குகிறோம். ஆனால், எப்படிப் பயன்படுத்தினால் நமக்கு லாபம் என்ற விஷயத்தைக் கவனிக்கவும் கடைப்பிடிக்கவும் தவறிவிடுகிறோம். எந்த வாகனமாக இருந்தாலும், நாம் பயன்படுத்துவதில்தான் சூட்சுமமே இருக்கிறது. இதில், மைலேஜ் என்பது மிக முக்கியம். ஏனென்றால், நம் பர்ஸில் இருக்கும் காசை கரைத்துக் கொண்டே இருப்பதில், இதற்குத்தான் முதல் இடம். சரி, எப்படியெல்லாம் எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்த முடியும்?
அணுகுமுறை முக்கியம்!
நீங்கள் கார் அல்லது பைக் ஒன்றை வாங்கிவிட்டீர்கள் என்றால், உங்களுக்குத் திருமணம் நடந்தது மாதிரிதான். வாகனத்துக்கும் உங்களுக்கும் ஒரு பரஸ்பர ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும். எல்லோரும் அட்வைஸ் செய்வார்கள். 'முதல் 2,000 கி.மீ வரை காரை அளவாக ஆக்ஸிலரேஷன் செய்யுங்கள். அப்போதான் இன்ஜின் செட் ஆகும்’ என்பார்கள். ஏன் இவ்வாறு சொல்கிறார்கள்?
ஏனென்றால், முதல் 2,000 கி.மீ-க்கு நீங்கள் எவ்வாறு இன்ஜினைக் கையாள்கிறீர்களோ, அதைப் பொறுத்துதான் பின்னாளில் உங்கள் வாகனத்தின் பெர்ஃபாமென்ஸும் மைலேஜும் அமையும். இதைத்தான் வாகனத் துக்கும் உங்களுக்குமான உறவு என்பார்கள். ஏனென்றால், எல்லா டிரைவர்களும் ஒரே விதத்தில் வாகனத்தை அணுகமாட்டார்கள். எனவே, ஒவ்வொரு ஓட்டுனரின் அணுகுமுறைக்கு ஏற்ப வாகனம் பின்னாளில் அவர்களுக்கான செலவுகளை தீர்மானிக்கும்.
எனவே, புதிய வாகனத்தில் வீணாக ஆக்ஸிலரேஷன் செய்து விளையாடாமல், நிதானமாகவே ஓட்டுங்கள். கொஞ்ச நாள் பொறுமையுடன் ஓட்டி, வாகனத்தை உங்களுக்குப் பழக்கப்படுத்துங்கள். நீங்கள் ஓட்டுகையில் மைலேஜ் கூடுதலாகவோ, குறைவாகவோ தருகிறதா என்று சோதியுங்கள். அதைப் பொறுத்து, நீங்கள் ஓட்டும் விதத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்!
ஓட்டும் விதத்தைப் பொறுத்தே பர்ஸ் காலியாகும்!
சிலர், ஜாலியாக ஓட்டுகிறேன் எனத் தேவையில்லாமல் டவுன் ஷிஃப்ட் செய்து ஓட்டுவார்கள். அவசியம் இல்லாமல் குறைந்த கியரில் ஓட்டினால், இன்ஜின் அதிகமாக எரிபொருளைக் குடிக்கும். சரியான வேகத்தில் சரியான கியர் என்பதுதான் எப்போதும் சரி.
எந்த மனநிலையிலும் வாகனத்தை நிதானமாக இயக்குங்கள். திடீர் திடீரென்று வேகமெடுத்து ஓட்டக் கூடாது. சிலர், பிக்-அப் கிடைக்கும் என நினைத்துக்கொண்டு சும்மாவே கிளட்சை அழுத்துவார்கள். இதனால், தேவையில்லாமல் இன்ஜின் அதிகமாக ஆக்ஸிலரேஷன் ஆவதுடன், பழைய ஆர்பிஎம்முக்கே திரும்பிவிடும். பிக்-அப் ஒருபோதும் அதிகரிக்காது.
சீரான வேகம்! இதுவும் நல்ல மைலேஜுக்கு வழி வகுக்கும். மணிக்கு 100 கி.மீ வேகத்துக்குக் கீழே சீராக ஓட்டுவது நல்லது. அதேபோல், பைக் என்றால், 40 - 60 கி.மீ வேகத்தில் ஓட்டினால் சிறந்த மைலேஜ் கிடைக்கும்.
சிக்னலை நெருங்குகிறீர்களா? திரும்பப் போகிறீர்களா? வேகத்தடை முன்னே இருக்கிறதா? - ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்துவிடுங்கள். அருகே சென்று பிரேக் செய்வதால், இரண்டு மடங்கு கூடுதலாக எரிபொருள் வீணாகும்!
மைலேஜ் நிறையக் கிடைக்கும் என சரிவான சாலையிலோ, காலியான ரோட்டிலோ காரை நியூட்ரலில் ஓட்டாதீர்கள். திடீரென பிரேக் செய்ய வேண்டிய சமயத்தில், 'இன்ஜின் பிரேக்கிங்’ இல்லாமல் விபத்துக்கு வழி வகுத்துவிடும்.
நாலு தெரு தள்ளி இருக்கும் கடைக்கோ, கோவிலுக்கோ வாகனம் பயன்படுத்துவதைத் தவிர்த்து ஒரு குட்டி நடை போட்டு வாருங்கள். வாகனத்துக்கும் நல்லது; உடலுக்கும் நல்லது.
இன்னும் இருக்கு!
டயர்களில் இருக்கும் காற்றின் அளவும் மைலேஜைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எப்போதும் டயர்களில் வாகன நிறுவனம் பரிந்துரைத்த அளவில் காற்றை நிரப்பி வைத்திருங்கள். குறைவான காற்றழுத்தம் டயரின் சுழலும் திறனைக் குறைத்துவிடும். இதனால், மைலேஜ் மிகக் குறைவாகவே கிடைக்கும். அதிகமான காற்றழுத்தத்தில் இருக்கும் டயர்கள் சமமாக தரையில் பதியாது. எனவே, காற்றழுத்தம் எப்போதும் சரியான அளவிலேயே இருக்க வேண்டும்!
இன்னொரு முக்கியமான விஷயம், காரில் இருக்கும் தேவையில்லாத கூடுதல் எடை. எப்போதும் தேவைப்படும் அத்தியாவசியமான லக்கேஜை மட்டும் எடுத்துச் செல்லுங்கள்.
எப்படி நம் உடலுக்கும் அவ்வப்போது முழு செக்-அப் தேவைப்படுகிறதோ, அது போலத்தான் காருக்கும். கார் நிறுவனம் சொன்ன கி.மீ கணக்கில் வாகனத்தைக் கண்டிப்பாக சர்வீஸ் செய்ய வேண்டும்.
இதையெல்லாம் தாண்டி ஒரு முக்கியமான விஷயம், எரிபொருள் நிரப்பும் பங்க். நம் ஊரில் உள்ள பங்க்குகளில் என்னென்ன தகிடுதத்தங்கள் நடக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். முடிந்த வரை ஒரு நல்ல பங்க்கை தேர்ந்தெடுத்து, அதிலேயே தொடர்ந்து எரிபொருள் நிரப்புங்கள். எந்த பங்க்கில் நாள் முழுக்க கூட்டம் குழுமுகிறதோ, அது நிச்சயம் நல்ல பங்க்காகத்தான் இருக்கும்.
நகரத்தில் கார் வைத்திருப்பவர்கள் டிராஃபிக்கைத் தவிர்க்க முடியாது. நகரத்தில் பயன்படுத்தும் கார்களில், ஓடும் நேரத்தில் செலவாகும் எரிபொருளைவிட சிக்னலிலும், டிராஃபிக் நெருக்கடியிலும்தான் அதிகம் எரிபொருளைக் குடிக்கும். காரணம், குறைந்த கியர்களில்தான் இந்த சமயங்களில் இன்ஜின் இயங்க வேண்டி இருக்கும். அதனால், இன்ஜின் ஆர்பிஎம்கள் இந்த சமயங்களில் அதிக அளவில்தான் இருக் கும். அப்படியானால் மைலேஜும் குறையும்தானே? இதைத் தடுக்க, முடிந்தவரை பீக் ஹவரில் காரை எடுத்துக்கொண்டு செல்லாமல், அரைமணி நேரம் முன்னதாகக் கிளம்புங்கள். சிக்னல்கள் அதிகம் இருக்கும் சாலையைத் தேர்ந்தெடுக்காமல், சுற்றி வந்தாலும் நிதானமாக ஒரே வேகத்தில் செல்லக் கூடிய சாலையாகப் பார்த்து ஓட்டுங்கள்!
இறுதியாக, இனிவரும் காலங்களில் எந்த எரிபொருள் விலையும் குறைய வாய்ப்பு இல்லை. எனவே, எரிபொருளைச் சேமித்தீர்கள் என்றால், உங்கள் காசை சேமிக்கிறீர்கள் என்றே பொருள். இந்தச் சேமிப்பை குடும்பத்துக்காக வேறு எதிலாவது சின்ன அளவில் முதலீடு செய்யலாம்.
அணுகுமுறை முக்கியம்!
நீங்கள் கார் அல்லது பைக் ஒன்றை வாங்கிவிட்டீர்கள் என்றால், உங்களுக்குத் திருமணம் நடந்தது மாதிரிதான். வாகனத்துக்கும் உங்களுக்கும் ஒரு பரஸ்பர ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும். எல்லோரும் அட்வைஸ் செய்வார்கள். 'முதல் 2,000 கி.மீ வரை காரை அளவாக ஆக்ஸிலரேஷன் செய்யுங்கள். அப்போதான் இன்ஜின் செட் ஆகும்’ என்பார்கள். ஏன் இவ்வாறு சொல்கிறார்கள்?
ஏனென்றால், முதல் 2,000 கி.மீ-க்கு நீங்கள் எவ்வாறு இன்ஜினைக் கையாள்கிறீர்களோ, அதைப் பொறுத்துதான் பின்னாளில் உங்கள் வாகனத்தின் பெர்ஃபாமென்ஸும் மைலேஜும் அமையும். இதைத்தான் வாகனத் துக்கும் உங்களுக்குமான உறவு என்பார்கள். ஏனென்றால், எல்லா டிரைவர்களும் ஒரே விதத்தில் வாகனத்தை அணுகமாட்டார்கள். எனவே, ஒவ்வொரு ஓட்டுனரின் அணுகுமுறைக்கு ஏற்ப வாகனம் பின்னாளில் அவர்களுக்கான செலவுகளை தீர்மானிக்கும்.
புத்தம் புதிய வாகனத்தில் இருக்கும் இன்ஜினில் பிஸ்டன், சிலிண்டர், பிஸ்டன் ரிங்ஸுகள், பேரிங்குகள் என அசையும் பாகங்கள் அனைத்துமே புதியவை; உராய்ந்து கொண்டே இருப்பவை. இங்கே எது முக்கியம் என்றால், அவை உராயும் விதம். இந்த உராய்தல் சமமாகவும், மிருதுவாகவும் இருக்க வேண்டும். புதிய வாகனத்தைக் கண்டபடி ஆக்ஸிலரேஷன் செய்தால், செட் ஆகியிருக்காத பிஸ்டன் ரிங்ஸுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டு விடும். இதனால், எரிபொருள் கலவை எரியும் இடமான கம்பஷன் சேம்பரில் சரியான அழுத்தம் கிடைக்காது. அதனால் எரிபொருள், விரயமாகும்.
எனவே, புதிய வாகனத்தில் வீணாக ஆக்ஸிலரேஷன் செய்து விளையாடாமல், நிதானமாகவே ஓட்டுங்கள். கொஞ்ச நாள் பொறுமையுடன் ஓட்டி, வாகனத்தை உங்களுக்குப் பழக்கப்படுத்துங்கள். நீங்கள் ஓட்டுகையில் மைலேஜ் கூடுதலாகவோ, குறைவாகவோ தருகிறதா என்று சோதியுங்கள். அதைப் பொறுத்து, நீங்கள் ஓட்டும் விதத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்!
ஓட்டும் விதத்தைப் பொறுத்தே பர்ஸ் காலியாகும்!
சிலர், ஜாலியாக ஓட்டுகிறேன் எனத் தேவையில்லாமல் டவுன் ஷிஃப்ட் செய்து ஓட்டுவார்கள். அவசியம் இல்லாமல் குறைந்த கியரில் ஓட்டினால், இன்ஜின் அதிகமாக எரிபொருளைக் குடிக்கும். சரியான வேகத்தில் சரியான கியர் என்பதுதான் எப்போதும் சரி.
எந்த மனநிலையிலும் வாகனத்தை நிதானமாக இயக்குங்கள். திடீர் திடீரென்று வேகமெடுத்து ஓட்டக் கூடாது. சிலர், பிக்-அப் கிடைக்கும் என நினைத்துக்கொண்டு சும்மாவே கிளட்சை அழுத்துவார்கள். இதனால், தேவையில்லாமல் இன்ஜின் அதிகமாக ஆக்ஸிலரேஷன் ஆவதுடன், பழைய ஆர்பிஎம்முக்கே திரும்பிவிடும். பிக்-அப் ஒருபோதும் அதிகரிக்காது.
காரில், மணிக்கு 80 கி.மீ வேகத்துக்கு மேல் நெடுஞ்சாலையில் ஓட்டப் போகிறீர்கள் என்றால், ஜன்னல்களை ஏற்றிவிட்டு ஏ.சியுடன் பயணிப்பதுதான் சரி. ஏ.சி மைலேஜைக் குறைக்கும் என நினைத்து, நெடுஞ்சாலையில் ஜன்னகளைத் திறந்துவிட்டு ஓட்டினீர்கள் என்றால், காற்றால் ஏரோடைனமிக்ஸ் பாதிக்கப்பட்டு, காரை அலைக்கழிக்கும். இதனால், மைலேஜ் பாதிக்கப்படும்
சீரான வேகம்! இதுவும் நல்ல மைலேஜுக்கு வழி வகுக்கும். மணிக்கு 100 கி.மீ வேகத்துக்குக் கீழே சீராக ஓட்டுவது நல்லது. அதேபோல், பைக் என்றால், 40 - 60 கி.மீ வேகத்தில் ஓட்டினால் சிறந்த மைலேஜ் கிடைக்கும்.
சிக்னலை நெருங்குகிறீர்களா? திரும்பப் போகிறீர்களா? வேகத்தடை முன்னே இருக்கிறதா? - ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்துவிடுங்கள். அருகே சென்று பிரேக் செய்வதால், இரண்டு மடங்கு கூடுதலாக எரிபொருள் வீணாகும்!
மைலேஜ் நிறையக் கிடைக்கும் என சரிவான சாலையிலோ, காலியான ரோட்டிலோ காரை நியூட்ரலில் ஓட்டாதீர்கள். திடீரென பிரேக் செய்ய வேண்டிய சமயத்தில், 'இன்ஜின் பிரேக்கிங்’ இல்லாமல் விபத்துக்கு வழி வகுத்துவிடும்.
நாலு தெரு தள்ளி இருக்கும் கடைக்கோ, கோவிலுக்கோ வாகனம் பயன்படுத்துவதைத் தவிர்த்து ஒரு குட்டி நடை போட்டு வாருங்கள். வாகனத்துக்கும் நல்லது; உடலுக்கும் நல்லது.
இன்னும் இருக்கு!
டயர்களில் இருக்கும் காற்றின் அளவும் மைலேஜைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எப்போதும் டயர்களில் வாகன நிறுவனம் பரிந்துரைத்த அளவில் காற்றை நிரப்பி வைத்திருங்கள். குறைவான காற்றழுத்தம் டயரின் சுழலும் திறனைக் குறைத்துவிடும். இதனால், மைலேஜ் மிகக் குறைவாகவே கிடைக்கும். அதிகமான காற்றழுத்தத்தில் இருக்கும் டயர்கள் சமமாக தரையில் பதியாது. எனவே, காற்றழுத்தம் எப்போதும் சரியான அளவிலேயே இருக்க வேண்டும்!
இன்னொரு முக்கியமான விஷயம், காரில் இருக்கும் தேவையில்லாத கூடுதல் எடை. எப்போதும் தேவைப்படும் அத்தியாவசியமான லக்கேஜை மட்டும் எடுத்துச் செல்லுங்கள்.
எப்படி நம் உடலுக்கும் அவ்வப்போது முழு செக்-அப் தேவைப்படுகிறதோ, அது போலத்தான் காருக்கும். கார் நிறுவனம் சொன்ன கி.மீ கணக்கில் வாகனத்தைக் கண்டிப்பாக சர்வீஸ் செய்ய வேண்டும்.
இதையெல்லாம் தாண்டி ஒரு முக்கியமான விஷயம், எரிபொருள் நிரப்பும் பங்க். நம் ஊரில் உள்ள பங்க்குகளில் என்னென்ன தகிடுதத்தங்கள் நடக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். முடிந்த வரை ஒரு நல்ல பங்க்கை தேர்ந்தெடுத்து, அதிலேயே தொடர்ந்து எரிபொருள் நிரப்புங்கள். எந்த பங்க்கில் நாள் முழுக்க கூட்டம் குழுமுகிறதோ, அது நிச்சயம் நல்ல பங்க்காகத்தான் இருக்கும்.
நகரத்தில் கார் வைத்திருப்பவர்கள் டிராஃபிக்கைத் தவிர்க்க முடியாது. நகரத்தில் பயன்படுத்தும் கார்களில், ஓடும் நேரத்தில் செலவாகும் எரிபொருளைவிட சிக்னலிலும், டிராஃபிக் நெருக்கடியிலும்தான் அதிகம் எரிபொருளைக் குடிக்கும். காரணம், குறைந்த கியர்களில்தான் இந்த சமயங்களில் இன்ஜின் இயங்க வேண்டி இருக்கும். அதனால், இன்ஜின் ஆர்பிஎம்கள் இந்த சமயங்களில் அதிக அளவில்தான் இருக் கும். அப்படியானால் மைலேஜும் குறையும்தானே? இதைத் தடுக்க, முடிந்தவரை பீக் ஹவரில் காரை எடுத்துக்கொண்டு செல்லாமல், அரைமணி நேரம் முன்னதாகக் கிளம்புங்கள். சிக்னல்கள் அதிகம் இருக்கும் சாலையைத் தேர்ந்தெடுக்காமல், சுற்றி வந்தாலும் நிதானமாக ஒரே வேகத்தில் செல்லக் கூடிய சாலையாகப் பார்த்து ஓட்டுங்கள்!
இறுதியாக, இனிவரும் காலங்களில் எந்த எரிபொருள் விலையும் குறைய வாய்ப்பு இல்லை. எனவே, எரிபொருளைச் சேமித்தீர்கள் என்றால், உங்கள் காசை சேமிக்கிறீர்கள் என்றே பொருள். இந்தச் சேமிப்பை குடும்பத்துக்காக வேறு எதிலாவது சின்ன அளவில் முதலீடு செய்யலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum