தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme - N.P.S.)
Sun Apr 12, 2015 3:26 pm
மாதச் சம்பளம் பெறும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பணியில் இருந்து ஓய்வு பெறுவார்கள். அப்போது 'பென்ஷன்' எனப்படும் ஓய்வூதியம்தான் அவர்களுக்கு மாதாந்திரச் செலவுகளைச் சமாளிக்க உதவும்.
ஆனால், இன்றைய சூழ்நிலையில் ஓய்வூதிய வசதி இல்லாதவர்களே அதிகம். அவர்கள் ஓய்வுகாலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆரம்பிக்கப்பட்டதுதான் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme - N.P.S.).
ஓய்வூதிய வசதி இல்லாதவர்கள், குறிப்பாக தனியார் நிறுவனங்களிலும், அமைப்புச் சாரா துறைகளிலும் வேலை பார்ப்பவர்களின் ஓய்வுகாலத் தேவைகளுக்கான பணத்தைச் சேமித்து வைக்கவே இந்தத் திட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
இந்த திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியச் சுமையைக் குறைக்கும் வகையில், கடந்த 2008-ம் ஆண்டு மத்திய அரசு தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதன்படி அரசு ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு தொகையைக் கட்டாயம் பிடித்தம் செய்து, அது தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டது.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு இது கட்டாயம் கிடையாது என்றாலும், விருப்பம் இருப்பவர்கள் இதில் சேரலாம். இந்தத் திட்டத்தின் நோக்கமே தனியார் மற்றும் அமைப்புசாரா நிறுவன ஊழியர்கள் பயன்பெற வேண்டும் என்பதுதான்.
பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, தபால் நிலையம் என அனைத்து இடங்களிலும் இந்த பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இவை பணப் பரிமாற்றம் மட்டுமே செய்துதருகின்றன. என்.பி.எஸ். கணக்குத் துவங்குபவர்களின் விவரத்தை தனியார் நிறுவனமான என்.எஸ்.டி.எல் நிர்வகித்து வருகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்யக் கட்டாயம் வேலையில் இருக்க வேண்டும் என்பதில்லை.
இல்லத்தரசிகளும் இதில் கணக்குத் துவங்க முடியும். ஒருவர் ஒரே கணக்கை மட்டுமே துவங்க முடியும். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், வழக்குகளில் சிக்கி நீதிமன்றத்தால் விடுவிக்கப்படாதவர்கள் இந்தத் திட்டத்தில் சேர முடியாது.
என்.பி.எஸ். கணக்கில் பணம், காசோலை அல்லது இ.சி.எஸ். முறைகளில் பணத்தைச் செலுத்தலாம். 50 ஆயிரத்துக்குமேல் நேரடியாகப் பணம் செலுத்தும்போது பான் கார்டு நம்பர் கட்டாயம் தரவேண்டும்.
இத்திட்டத்தில், பிரிவு 1, பிரிவு 2 என இரண்டு பிரிவுகளில் முதலீடு செய்யலாம்.
பிரிவு 1-ல் குறைந்தபட்சம் வருடத்துக்கு ரூ. 6 ஆயிரம் கட்டாயமாக முதலீடு செய்ய வேண்டும். கணக்கு ஆரம்பித்தபிறகு இடையில் பணத்தை எடுக்க முடியாது. 60 வயதில் தான் பணத்தை எடுக்க முடியும். அப்போதும் 40 சதவீதத் தொகையை என்.பி.எஸ். அமைப்பு கூறும் காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 60 சதவிகிதத் தொகையை பணமாகக் கையில் பெற முடியும். பிரிவு 1-ன் கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வரிவிலக்குப் பெறலாம்.
பிரிவு 2-ன் கீழ் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எப்போது பணம் தேவைப்பட்டாலும் எடுத்துக்கொள்ளலாம். இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு எந்தவிதமான வரிவிலக்கும் பெற முடியாது. ஆனால், பிரிவு 1-ன் கீழ் கணக்கை ஆரம்பித்து அதில் ஒரு வருடம் முதலீடு செய்தபிறகுதான் பிரிவு 2-ன் கீழ் முதலீடு செய்ய முடியும்
நன்றி: தினத்தந்தி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum