திரைச்சீலை கிழிந்தது!
Wed Apr 08, 2015 6:14 pm
ஏதேன் தோட்டத்திலே சாத்தான் விரித்த வஞ்சக வலையில் விழுந்துபோன மனுக்குலம், இன்னமும் அதே வஞ்சகத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பது மறுக்கமுடியாத உண்மை. அதிலும், தமது அன்பின் சிருஷ்டியான மனுக்குலத்தை மீட்கும்படிக்கு தேவன் தாமே மனிதனாகி உலகிற்கு வந்து, மனுக்குலத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கும்படி தம்மையே சிலுவையில் ஏக பலியாக ஒப்புக்கொடுத்து, பாவப்பிடியிலிருந்தவனுக்கு விடுதலையளித்து, தமது உயிர்த்தெழுதலினாலே நித்திய வாழ்வின் நிச்சயத்தை அருளியபின்பும், திருச்சபைகளாக, தனி மனிதனாக கிறிஸ்தவ சமுதாயமே இன்றும் சத்துருவின் வஞ்சக வலைக்குள் சிக்குண்டு, வஞ்சிக்கப்படுவது ஏன்?
நீண்ட மலைப்பிரசங்கத்தை முடித்த இயேசு, “கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” (மத்.7:13,14) என்றார். ஆம், கேடு எது, ஜீவன் எது; விசாலம் எது, இடுக்கம் எது என்று எல்லாமே தெரிந்திருந்தும், விசாலத்தை வெறுத்து, இடுக்கமான வாசலைக் கண்டு பிடிக்கிறவர்கள் இன்று எத்தனைபேர்?
அறிவு, உணர்வு, சுயம்:
அறிவு இன்று தாராளமாக வளர்ச்சியடைந்துள்ளது; அதை எவரும், எங்கும் பெற்றுக் கொள்ளலாம். அதில் தவறும் இல்லை. மனிதனின் வளர்ச்சிக்கு அறிவு அவசியம். ஆனால், ஒரு விஷயத்தை அறிந்து அதை விளங்கிக்கொள்கிறவன், தான் விளங்கிக் கொண்டதைத் தன் வாழ்வில் கண்டுகொள்கிறானா என்பதே கேள்வி. இது ஒரு விஷயம். அடுத்ததாக, சற்று அறிந்துவிட்டால் போதும், எல்லாவற்றையும் அறிந்துவிட்டது போன்ற ஒரு கிளுகிளுப்பு, ஆர்ப்பரிப்பு, உணர்ச்சி மேலிட்ட ஆரவாரம்; அதுவும் தவறல்ல.
விளங்கிக்கொள்வதற்கும், ஆர்ப்பரிப்புக்கும் மேலே, அதாவது, நமது அறிவுக்கும் உணர்வுக்கும் மேலே, இன்னுமொரு விஷயமும் உண்டு. அதுதான் ‘சுயம்’. அறிவும், உணர்வும் மகிழ்வைத் தந்தாலும், அவற்றைக் கடந்து, பாவம் பரிசுத்தம் என்று வரும்போது, நமது அறிவும் உணர்வும் அங்கே தடுமாறுகிறது. அங்கே தடுமாறுவது நமது சுயம்தான். “கர்த்தாவே, கர்த்தாவே” என்று கூப்பிடுகிற அநேகர், தேவனை அறியாமலா கூப்பிடுவார்கள். “உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா?” என்று சொல்லுகிறவர்கள் உணர்வில்லாமலா செய்தார்கள்.
அறிந்து உணர்ந்து நடந்த இவர்களைப் பார்த்து இயேசு என்ன சொல்லுவார்?“அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” (மத்.7:23) என்றார் இயேசு. இது எப்படி? அங்கே வார்த்தை வருகிறது. வார்த்தைக்குக் கீழ்ப்படிதல் வருகிறது. இக் கீழ்ப்படிதலுடன் சம்மந்தப்படுவது நமது சுயம்தான். இந்த சுயம் சிறைப்பிடிக்கப்படும் வரைக்கும், இன்னும் சொல்லப்போனால் செத்துப்போகும் வரைக்கும், அந்த இடுக்கமான வழிக்குள் என்னால் பிரவேசிக்க முடியாது (மத்.16:24).
இந்த சுயத்தை நாம் வெறுக்கவேண்டும், சிலுவை சுமக்கவேண்டும். அதாவது நான் என் சுயத்துக்கு மரிக்க வேண்டும். இது இரண்டும் இல்லாமல் நான் கிறிஸ்து நடந்த பாதையில் அவரைப் பின்பற்ற முடியாது (மத்.16:24). பின்னர் நான் கிறிஸ்தவன், கிறிஸ்தவள் என்று சொல்லுவது எப்படி?“கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” (கலா.5:24).அப்படியிருக்கும்போது இன்னமும், விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் (கலா.5:19-21) என்று மாம்சத்தின் கிரியைகள் அதாவது, விழுந்துபோன ஆதாமின் குணாதிசயங்கள், இன்னமும் நம்மில் வெளிப்பட நாம் இடமளிப்பது எப்படி?
“…அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து; நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின் மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார்” (கொலோ.2:13-15). இந்த வார்த்தைகள் கொடுக்கின்ற ஜெயம் நம்மிடம் உண்டா? நமக்கும் பரமபிதாவுக்கும் இடையே தடையாக தொங்கி நின்ற பாவம் என்ற திரைச் சீலை கிழிந்துவிட்டது. பாவத்தில் சிக்குண்டு சீரழிந்து, பிதாவை நெருங்கமுடியாமல் நம்மைக் கெடுத்துப்போட்ட சுயம் சிலுவையிலே கிழிக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்க இன்னமும் திரைச்சீலை தொங்குவதுபோல, சுயத்துடன் போராடிக்கொண்டு, தேவ சந்நிதானத்தை நெருங்க முடியாதவர்களாக நாம் திண்டாடுவது ஏன்? இதுவரை பிதாவிடமிருந்து நம்மைப் பிரித்திருந்த இந்தத் திரைச் சீலை எங்கிருந்து வந்தது?
ஆசரிப்புக்கூடாரத்தின் திரைச்சீலை:
சீனாய் மலையுச்சிக்கு மோசேயை அழைத்த கர்த்தர், கட்டளைகளைக் கொடுத்து விட்டு, தமது மக்கள் மத்தியில் தாம் வாசம் பண்ணும்படிக்கு தமக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை வனாந்தரத்தில் அமைக்கும்படி ஒரு மாதிரியைக் காண்பித்தார் (யாத்.25:8,9). சாட்சிப் பிரமாணம் வைக்கப்படவேண்டிய உடன்படிக்கைப் பெட்டி, அதன் மேலே கிருபாசனம், அதன் இருபுறமும் இரண்டு கேரூபீன்கள், இது மகா பரிசுத்த ஸ்தலம்; சமுகத்தப்பம் வைக்கும் மேசை, குத்துவிளக்கு இது பரிசுத்த ஸ்தலம்; இவற்றுக்குரிய மாதிரியைக் காண்பித்த கர்த்தர், ஆசரிப்புக் கூடாரத்திற்குரிய மூடு திரைகள், வாசலுக்குத் தொங்கு திரை என்பவற்றைக் குறித்த மாதிரியையும் காண்பித்தார் (யாத்.25,26ஆம் அதிகாரங்கள்). அத்துடன் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணும்படி மோசேயைப் பணித்தார் (யாத்.26:31-33).
பிரதான ஆசாரியன் மாத்திரம், அதுவும், பாவநிவாரண பலியின் இரத்தத்துடன் வருடத்திற்கு ஒருமுறை பிரவேசிக்கக் கூடிய மகா பரிசுத்த ஸ்தலத்தையும், ஆசாரியன் பணி விடை செய்யவேண்டிய பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கும்படியாக இத்திரைச் சீலை தொங்கவிடப்பட வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார். இந்தத் திரைச் சீலையைத் தாண்டி, எவரும் உட்புகமுடியாது. ஏனெனில் உள்ளே மகா பரிசுத்த தேவன் வாசம் பண்ணும் கிருபாசனம் இருந்தது. பாவியான எந்தவொரு மனுஷனும், வருடந்தோறும் இதனுள் பிரவேசிக்கும் பிரதான ஆசாரியன்கூட தன்னைச் சுத்திகரித்து பாவநிவாரண பலி செலுத்தாமல் உட்புகமுடியாது. ஏன்? பாவியான மனிதன் மகா பரிசுத்த தேவனை அணுகுவது எப்படி? அவன் தீய்ந்து சாம்பலாகிவிடுவான். அன்புள்ள தேவனே அன்பாய் அந்தத் தடையைப் போட்டார்.
இத்திரைச்சீலைக்கு இன்னுமொரு விசேஷம் உண்டு. “அதிலே விசித்திர வேலையால் செய்யப்பட்ட கேரூபீன்கள் வைக்கப்பட வேண்டும்” என்றும் சொல்லப்பட்டது. மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் புகமுடியாதபடி தொங்கவிடப்பட்ட தடிப்புள்ளதும், மிக உயரமுமான இந்தத் திரைச்சீலையும், அதன்மீது வைக்கப்பட்ட கேரூபீன்களும் நமக்கு எதையாவது நினைப்பூட்டுகின்றனவா?
அடைக்கப்பட்ட ஏதேனின் வாசல்:
தேவனாகிய கர்த்தருடன் உலாவி உறவாயிருந்த மனிதன், சாத்தானின் வஞ்சகத்தில் விழுந்து, தேவனைவிட்டுப் பிரிந்துபோனதற்கு மனிதனின் கீழ்ப்படியாமையே காரணம் என்று நாம் பொதுவாகச் சொன்னாலும், மனிதன் விழுந்த ஆழத்தை நாம் சற்று சிந்திப்பது நல்லது.
1. சுயவழி: தேவனுடைய வழியைப் பார்க்கிலும் தனது வழி தனக்குச் சிறந்தது என்று முடிவெடுத்தான் மனிதன். (ஆதி.3:6)
2. சுயமனசாட்சி: இதுவரை சந்தோஷமாக கர்த்தருடன் உலாவித் திரிந்தவன், தான் நிர்வாணி என்று தானே கண்டு தன்னை ஒளித்துக்கொண்டான். (ஆதி.3:7,
3. சுயநீதி: ஏன் இப்படிச் செய்தாய் என்று கர்த்தர் கேட்டபோது, நான் அல்ல அவள்தான், நான் அல்ல சர்ப்பம்தான் என்று தன் குற்றத்தை அடுத்தவனில் போட்டு தன் நீதியை நிலை நாட்டப் பார்த்தான் மனிதன். (ஆதி.3:11-13)
ஆக, மனிதன் என்றும் தம்முடன் வாழ வேண்டும் என்று தேவன் மனிதனில் கொண்டிருந்த சித்தம் ஏதேனிலே மீறப்பட்டு, மனிதனுடைய சுயசித்தம் அவளை மேற்கொண்டதைக் காண்கிறோம். இந்த மனிதனைக் கர்த்தர் ஏதேனிலிருந்து துரத்திவிட்டு, ஜீவ விருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல் செய்ய கேரூபீன்களையும் வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார் என்றும் காண்கிறோம் (ஆதி.3:22-24). இது ஏன்? கர்த்தர் மனிதனில் கோபம் கொண்டாரா? இல்லை. அன்பினிமித்தமே இதைச் செய்தார். பாவத்தில் விழுந்த மனிதன், ஜீவ விருட்சத்தின் கனியை உண்டு, நித்திய நித்தியமாகத் தம்மைப் பிரிந்து பாவத்திலேயே ஜீவிக்கக்கூடாது என்பதற்காகவே அவனை வெளியேவிட்டு, உட்புக முடியாதபடிக்குக் காவல் வைத்தார் அன்பு நிறைந்த தேவனாகிய கர்த்தர்.
சீனாய் மலையுச்சியில், கர்த்தர் மோசேக்குக் காண்பித்த ஆசரிப்புக் கூடாரத்தின் மகாபரிசுத்த ஸ்தலத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கும்படி தொங்கவிடப்பட்ட திரைச்சீலையில் இந்த அமைப்பையே காண்கிறோம். என்ன ஆச்சரியம்! கர்த்தர் மனுக்குலத்தை நேசிக்கும் நேசம் எவ்வளவு பெரிது! ஆசரிப்புக் கூடாரத்தில் தொங்கவிடப்பட்ட இந்தத் திரைச்சீலைக்கு ஒப்பான திரைச்சீலைதான் பின்னர், சாலொமோன் கட்டிய தேவாலயத்திலும், அது அழிக்கப்பட்டு, பின்னர் புதுப்பிக்கப்பட்டு இயேசு வந்த காலத்திலிருந்த எருசலேம் தேவாலயத்திலும் தொங்கியது. இந்தத் திரைச்சீலைதான் இயேசு சிலுவையிலே “முடிந்தது” என்று சொல்லி தமது ஆவியை விட்டபோது கிழிந்தது.
Re: திரைச்சீலை கிழிந்தது!
Wed Apr 08, 2015 6:14 pm
திரைச்சீலை கிழிந்தது:
“இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ் வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது…” (மத்.27:50,51). மிக உயரமான, தடித்த இத் திரைச்சீலை மேலிருந்து கீழாகக் கீழ்வரைக்கும் கிழிந்ததானால் அது மனிதனால் முடியாத காரியம். திரைச்சீலை கிழிந்துவிட்டது. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே தொங்கிய பாவம் என்ற திரை கிழிந்துவிட்டது. தேவனை நெருங்கமுடியாமல் தடைபோட்ட சுயம் கிழிந்துவிட்டது. இயேசுவின் பரிசுத்த இரத்தம் சிந்தப்பட்டு பாவத்தின் பரிகாரம் செலுத்தப்பட்டதால் திரை கிழிந்துவிட்டது; சுயத்தால் விரிந்த பாவத்திரை கிழிந்துவிட்டது. முழு மனிதனாய் சிலுவையில் தொங்கி, எந்த சுயத்தால் மனிதன் பாவத்தைச் சம்பாதித்தானோ, அந்த சுயத்தை, அவன் சம்பாதித்த பாவத்தைச் சுமந்த கிறிஸ்துவின் மாம்ச சரீரம் கிழிக்கப்பட்டது.“ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், …” (எபி.10:19) என்று எபிரெய ஆசிரியர் எழுதியிருப்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். “மாம்சமாகிய திரை” இயேசுவின் சரீரம் அடிக்கப்பட்டுக் கிழிக்கப்பட்டது உண்மைதான். அதிலும் மேலாக, அது கிழிக்கப்பட்டபோது, மாம்சத்தின் கிரியைகள், அதற்குக் காரணமாயிருந்த சுயம், மனுக்குலத்தையே வஞ்சித்த அந்த சுயம், பாவத்திற்கும் பரிசுத்தத் திற்கும் இடையே தடையாய் தொங்கி நின்ற சுயம் கிழிக்கப்பட்டுவிட்டது.
இயேசு உலகிற்கு வந்தது ஏன்? போதித்ததும், அற்புதங்கள் செய்ததும், சிலுவை சுமந்ததும் வந்த மெய் நோக்கத்தின் பகுதிகள். அவர் வந்த நோக்கத்தை அவரே சொல்லுகிறார்: “என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன்” (யோவான் 6:38). மனிதனாகிய இயேசுவும் சுயத்துடன் போராடினார். ஒவ்வொரு சமயமும் பிதாவுடன் தனித்திராமல் அவர் எதுவும் செய்ததில்லை. இயேசு என்ற மனிதரின் சுயபோராட்டம் கெத்செமனே தோட்டத்தில் வெட்ட வெளிச்சமாயிற்று. அவர்“… முழங்கால்படியிட்டு: பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்” (லூக்.22:42) என்று ஜெபித்தபோது, ஒரு மனிதன் எப்படித் தன் சுயவிருப்பத்தை வெளிப்படுத்துகிறானோ அந்த விருப்பத்தையே இயேசுவும் வெளிப்படுத்தினார். ஆனால், மறுகணமே, “ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று ஒப்புக்கொடுத்தபோது, அங்கேயே இயேசு என்ற மனிதருடைய சுயம் செத்தது. அவரடைந்த வியாகுலம் அவருடைய வியர்வையை இரத்தத் துளிகளாக மாற்றிவிட்டது. இறுதியில், “முடிந்தது” என்று இயேசு சிலுவையிலே கடைசியாகச் சொன்னபோது, தாம் பிதாவின் சித்தத்தைப் பூரணமாக முடித்துவிட்டதையே அவர் உரைத்தார்.
“நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” என்று பவுல் எழுதிய போதும், எத்தனை நிந்தைகள் நேர்ந்தபோதும், தம்மை அழைத்தவருடைய சித்தத்திலே தான் உறுதியாய் நின்றதையே குறிப்பிட்டுள்ளார். இன்று நம்மால் அப்படிக் கூறமுடியுமா?
இந்த உலகத்திற்குரிய நமது சரீர வாழ்வு அறிவைப் பெறுகிறது; அந்த சரீரத்தில் வாழு கின்ற நமது ஆத்துமா களிகூர்ந்து உணர்ச்சி வசப்பட்டு ஆர்ப்பரிக்கிறது. ஆனால் நமது ஆவி, அதுதான் தேவனுடைய ஆவியோடு இணைந்து இசைந்திருக்க வேண்டியது. அங்கேதான் அன்று பாவத்திரை விழுந்தது. நமது சுயம்தான் நமது ஆவியை உருவாக்குகிறது. ஆனால், இப்போது அந்தத் திரை கிழிந்துவிட்டதே. இயேசு சிலுவையிலே அந்த சுயத்தைக் கிழித்தெறிந்தபோது அந்தப் பாவத்திரை கிழிந்துவிட்டதே. எபிரெய ஆசிரியர் தொடர்ந்து எழுதுகிறார்:
“ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர் மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்” (எபி.10: 19-22). இவை எத்தனை ஆழமான வார்த்தைகள்!
இப்படியிருக்க, தேவனுக்கும் நமக்கும், நமக்கும் பிறருக்கும், நமக்கும் நமக்கும் இடையே திரைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு இன்னமும் திரைக்கு வெளியே நிற்பது எப்படி? அல்லது, திரை கிழிக்கப்பட்டது என்று தெரிந்தும், அதன் வாசல் வழியே பிரவேசிக்க மனதற்று, கிழியுண்ட திரைக்கு வெளியே நின்று உள்ளே வேடிக்கைப் பார்ப்பது எப்படி? கிழியுண்ட திரைவழியே உள்ளே கடந்து தேவபிரசன்னத்துள் செல்லுவோமாக.
மாறாக, மேலும் மனப்பூர்வமாக நாம் பாவம் செய்வோமானால், “…தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப் பாருங்கள்” (எபி.10:26-29).
திரைச்சீலை கிழிந்துவிட்டது! இந்த நல்ல செய்தியை இந்நாட்களில் நாமும் தியானித்து மனந்திரும்பி, பிறருக்கும் அந்த நற்செய்தியை எடுத்துச் சொல்லுவோமாக. தேவனாகிய கர்த்தர் எல்லோரிலும் அன்புகூர்ந்திருக்கிறார். அவரண்டை கிட்டிச்சேருகின்ற சிலாக்கியத்தை யாவருக்கும் கொடுத்திருக்கிறார். ஆகவே, நமது சுயத்திற்கு இன்னமும் இடமளித்து, பிசாசின் வஞ்சகத்துக்கு இன்னமும் பலியாகாமல், சத்துருவின் பிடியிலிருக்கிறவர்களையும் கைப்பிடித்து தூக்கி நிறுத்தி, நாம் நமது சுயத்துக்கு மரித்தவர்களாய், நமக்களிக்கப்பட்ட சிலுவையைச் சுமந்துகொண்டு, இயேசுவின் வழிநடப்போமென்று தேவசித்தத்துக்கு முழுமையாகவே ஒப்புவிப்போமாக. ஆமென்.
சகோதரி.சாந்தி பொன்னுPermissions in this forum:
You cannot reply to topics in this forum