கருவேப்பில்லையின் மவுசு தெரியுமா?
Fri Apr 03, 2015 6:23 am
Vikatan EMagazine
கருவேப்பில்லையின் மவுசு தெரியுமா?
- கு.சிவராமன்
கொசுறாய்க் கிடைப்பதால் கறிவேப்பிலைக்குக் கொஞ்சம் மதிப்புக் குறைவுதான். வெறும் மணமூட்டியாக இருந்து, இலையோடு சேர்ந்து வெளியேறும் பொருளாக இதனை, இத்தனை காலம் பார்த்திருந்த பலருக்கும், கறிவேப்பிலை வேம்பை போன்ற மாபெரும் மருத்துவ மூலிகை அது என்பது தெரியாது. உச்சி முதல் பாதம் வரை அனைத்தையும் அணைத்துக் காக்கும் அற்புதமருந்து... கறிவேப்பிலை.
முடி உதிர்தலைத் தடுக்க
தலைமுடி கொட்டுவதைத் தவிர்க்க, கறிவேப்பிலைப் பொடியை தினமும் சோற்றில் கலந்து சாப்பிடவேண்டும்.கறிவேப்பிலையை நிழலில் உலர்த்திப் பொடித்தால், அதுதான் கறிவேப்பிலைப் பொடி. கரிசாலை, நெல்லி, கீழாநெல்லி, அவுரி இவற்றுடன் சமபங்கு கறிவேப்பிலைச் சாறு எடுத்துச் சேர்த்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, தலைமுடித் தைலமாகப் பயன்படுத்தலாம்.
கண்கள் என்றால் நமக்கு ஞாபகம் வருவது கேரட் மட்டும்தான். ஆனால், கறிவேப்பிலையும் பார்வையைத் துலங்க வைக்கும், பீட்டா கரோட்டின் நிறைந்தது. பப்பாளி, பொன்னாங்கண்ணி, தினை அரிசி போன்றவையும் கண்களைப் பாதுகாப்பவையே.
ஆன்டிஆக்ஸிடன்ட்
தோல் சுருக்கம், உடல் சோர்வு, மூட்டு தேய்தல், நரை என வயோதிகம் வாசல் கதவைத் தட்டும் அத்தனைக்கும் இன்று ஆபத்பாந்தவனாய் இருப்பது ஆன்டிஆக்ஸிடன்ட்கள்தாம். முன்பு, மருந்துச்சீட்டில் கொசுறாக வைட்டமின் மாத்திரை இருப்பது போல, இப்போது, எந்த வியாதி எனப் போனாலும், மருத்துவர் எழுதித்தரும் சீட்டில், கடைசியாய் குத்தவைத்திருப்பது ஆன்டிஆக்ஸிடன்ட் மாத்திரைகளே. அதுவும் கொசுறாக இல்லை, கூடுதல் விலையில். ஆனால், காய்கறிக்கடையில் இலவசமாகவே பல நேரங்களில் கொடுக்கப்படும் கறிவேப்பிலையில் அதிகபட்ச ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை எதிர்க்கும் திறன் உடையவையும்கூட. ஆரம்பக்கட்ட ஆய்வுகளில், புற்றுநோய்க் கட்டியின் வேகமான வளர்ச்சியைக் குறைப்பதிலும் புற்றுக்கட்டி உருவாவதைத் தடுப்பதிலும் கறிவேப்பிலை பயன்அளிப்பதை நவீன விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. அதற்காக புற்றுநோய்க்குக் கறிவேப்பிலை சட்னி மருந்து என அர்த்தம் இல்லை. அவ்வப்போது கறிவேப்பிலையைத் துவையலாக, பொடியாக, குழம்பாக உணவில் சேர்த்துவந்தால், சாதாரண செல்கள் திடீர் எனப் புரண்டு புற்றாய் மாற எத்தனிப்பதைத் தடுக்கும் என்பதுதான் பொருள்.
மேற்கத்திய விஞ்ஞானம் இதைச் சொல்வதற்கு முன்னர், நம் தமிழ்ச் சித்தர்கள் கறிவேப்பிலையின் பயனைப் பல வருடங்களுக்கு முன்னதாகவே பாடியுள்ளனர். அஜீரணம், பசியின்மை, பித்த நோய்கள், பேதி எனப் பல நோய்களுக்குக் கறிவேப்பிலையைச் சாப்பிடச் சொன்னவர்கள் நம் மருத்துவர்கள். இந்த அஜீரணம், பசியின்மை, பேதி முதலியவைதான் குடல் புற்று நோயின் ஆரம்பகாலக் குறிகுணங்கள்.
குழந்தையை சாப்பிடவைக்க
சரியாய் சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு, கறிவேப்பிலை இலையை நிழலில் உலர்த்திப் பொடிசெய்து, உடன் சிறிது கல்உப்பு, சீரகம், சுக்கு ஆகியன சமபங்கு சேர்த்து, சுடுசோறில் சாப்பிடவைக்க, பசியின்மை போகும், என்றது சித்த மருத்துவம். அன்னப்பொடி, அய்ங்காய்ப்பொடி செய்து வைத்துக்கொள்வது போல, இந்தக் கறிவேப்பிலைப் பொடியை செய்துவைத்துக்கொண்டு, சோற்றின் முதல் உருண்டையில் இப்பொடியை போட்டுப் பிசைந்து, சாப்பிட வைப்பது சீரணத்தைத் தூண்டி, பசியூட்டும்.
அமெரிக்க நாட்டின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில் கறிவேப்பிலை ரத்த சர்க்கரை அளவை 42 சதவிகிதமும் ரத்த கொலஸ்ட்ராலை 30 சதவிகிதமும் குறைக்கிறது எனச் சொல்கிறார்கள்.
நல்ல கொழுப்பு அதிகரிக்க
பொதுவாய் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலான HDL (HIGH DENSITY LIPO PROTIEN) –ஐ சாதாரணமாக மருந்தால் உயர்த்துவது கடினம். நடைப்பயிற்சிதான் இதற்கு நல்ல வழி. ஆனால், கறிவேப்பிலை நல்ல கொலஸ்ட்ராலை உயர்த்த உதவும் என்பதை இன்றைய நவீன ஆய்வாளர்கள் உறுதிப்
படுத்தியுள்ளனர். சர்க்கரை, கொலஸ்ட்ராலுக்கு என்ன மருந்து சாப்பிட்டாலும் கூடவே கறிவேப்பிலையை தினம் சாப்பிட்டுவந்தால் இவ்விரு நோய்களுக்கும் செயல்படு உணவாக (functional food) ஆக இந்த மூலிகை இருக்கும்
கறிவேப்பிலை மணமூட்டி மட்டுமல்ல, நலமூட்டியும்கூட...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum