யார் இந்த ஐ.எஸ்? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
Thu Mar 26, 2015 12:30 am
உலகளவில் நினைத்துப் பார்க்க முடியாத வன்முறை வெறியாட்டத்தை தினந்தோறும் நடத்தி வருகின்றது ஐ.எஸ் என்னும் தீவிரவாத அமைப்பு.
தொடங்கப்பட்டது எப்போது?
ஈராக்கில் கடந்த 1999ம் ஆண்டில் ஜோர்டானைச் சேர்ந்த அபு முஸப் அல் ஜர்காவி என்பவரால் Jama'at al-Tawhid wal-Jihad என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 2004ம் ஆண்டு முதல் ஈராக்கிய அல் கொய்தா’ (al-Qaeda in Iraq) என்று பெயர் மாற்றம் பெற்றது.
பின்னர் 2006ல் Mujahideen Shura Council என்ற பெயரில் சிலகாலமும் Islamic State of Iraq என்ற பெயரில் 2006 முதல் 2013 வரையிலும் செயல்பட்டது.
2013-14ம் ஆண்டில் Islamic State of Iraq and the Levant என்ற பெயரிலும் செயல்பட்ட இவர்கள், இறுதியாக கடந்த 2014ம் ஆண்டு யூன் மாதம் முதல் தங்கள் அமைப்பை ”இஸ்லாமிய அரசு” (Islamic State) என்ற பெயரில் பிரகடனப்படுத்தி கொண்டனர்.
இவ்வாறு பல பெயர்களையும், பல தலைவர்களையும் கடந்து வந்த, சன்னி முஸ்லிம்களால் ஆன இந்த தீவிரவாத அமைப்பின் தற்போதைய தலைவர் Abu Bakr al-Baghdadi என்பவர் ஆவார்.
தற்போது எவரையேனும் பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு, பிணைத்தொகை கேட்டு தினந்தோறும் செய்திகளில் இடம்பிடிக்கும் இவர்கள் அது கிடைக்காத போது கொடூரமான முறையில் அந்த கைதிகளை கொன்று வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.
அமெரிக்கா காரணமா?
இந்நிலையில் இந்த அமைப்பு உருவானதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அமெரிக்காவே காரணம் என்று பலர் கருதுகின்றனர். 2003ம் ஆண்டு சதாம் உசேன் தலைமையிலான ஈராக் அரசாங்கத்திடம் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா நடத்திய படையெடுப்பை அடுத்து தான் இந்த அமைப்பு மிகப்பெரிய சக்தியாக மாறியதாக கூறப்படுகிறது. ஈராக் மீதான இந்த படையெடுப்பு, சதாம் உசேனின் கைது மற்றும் தூக்கு தண்டனையை அடுத்து ஈராக் அரசாங்கம் முற்றிலுமாக சிதைந்ததாலும், அங்கிருந்த அரசியல் உள்கட்டமைப்பு சீர்குலைந்ததாலும் அங்கு மிகப்பெரிய அரசியல் மற்றும் அதிகார வெற்றிடம் ஏற்பட்டது.
மிகப்பெரும் சக்தியாக விஸ்வரூபம் எடுத்த ஐ.எஸ் ஐஎஸ்
இந்த அதிகார வெற்றிடத்தாலயே ஐ.எஸ் அமைப்பு மிகப்பெரும் சக்தியாக உருமாறியதாகவும் கருதப்படுகிறது. மேலும், இந்த அமைப்பு சிரியாவில் நடந்த உள்நாட்டு போரில் தலையிட்டதன் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்ததுடன் ரஷ்யா, அமெரிக்கா நாடுகளின் ஆயுதங்களையும், சிரியா மற்றும் ஈராக் வங்கிகளில் பல கோடி மதிப்பிலான கஜானாக்களையும் கொள்ளையடித்து பெரும் பணக்கார தீவிரவாதிகளாக உருமாறினர்.
ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசுல் நகரை கைப்பற்றி தாங்கள் யார் என்பதையும், தாங்கள் எதையும் செய்ய துணிந்தவர்கள் என்பதையும் உலக நாடுகளுக்கு பறைசாற்றினர். 2014 யூனில் ஈராக்கில் 4000 போராளிகளுடன் வலம்வந்த ஐ.எஸ் அமைப்பினர், கடந்த செப்டம்பரில் ஈராக் மற்றும் சிரியாவில் மொத்தமாக 2014ல் 20,000 முதல் 31,500 என எண்ணிக்கையில் உயர்ந்ததாக அமெரிக்க உளவு அமைப்பான CIA தெரிவித்தது. மேலும், குர்திஷ் தலைவர் இவர்களின் எண்ணிக்கை பற்றி குறிப்பிடுகையில் கடந்த நவம்பர் 2014ல் 200,000 போராளிகள் உள்ளதாக அறிவித்தார்.
ஈராக், சிரியா அல்லாத பல்வேறு நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள், பல பெண்களும் கூட இதில் சேரவும் இவர்களை திருமணம் செய்யவும் படையெடுத்த வண்ணமே உள்ளனர். இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், ஈரான் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதாகும். தற்போது சிரியாவில் உள்ள அல்ராக் (Ar-Raqqah) என்ற நகரத்தை தலைநகரமாக கொண்டு ஐ.எஸ். அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இதுமட்டுமல்லாமல் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளின் அளவு பல நாடுகளை விட பெரிய அளவில் விளங்குவதாக தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் தங்களுக்கு என்று தலைமை மற்றும் அமைச்சர் பதவிகளையும், தனி பள்ளிகளும், நீதிமன்றமும், பல வினோத சட்டங்களையும் கொண்டு தனி அரசாங்கமே நடத்தி வருகின்றனர்.
கடவுளின் பெயரால் என்று கூறி இந்த ஜிகாதிகள் நடத்தும் ஈவு, இரக்கமற்ற தாக்குதல்களும், வன்புணர்வுகளும் மற்ற செயல்பாடுகளும் உலக மக்கள் மற்றும் உலகளவில் உள்ள சாமானிய இஸ்லாமியர்களுக்கு அச்சமும், எரிச்சலும் ஊட்டுகிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
ஐரோப்பாவிலும் தனது தாக்குதல்களை தொடர்ந்து வரும் இவர்களால் மக்களின் அமைதி தொடர்ந்து குலைந்து வருவதுடன், பாதுகாப்பின்மையும் அச்சமும் அனைவரது மனதிலும் நீடித்து வருகிறது.
அல்கொய்தா என்னும் மாபெரும் தீவிரவாத இயக்கத்தின் மூலம் சிறிய இயக்கமாக தோன்றிய இந்த ஐ.எஸ் அமைப்பு இன்று அல்கொய்தாவையும் மிஞ்சியதோடு உலகளவில் மிகப்பெரிய தீவிரவாத இயக்கமாக விளங்கி வருவது தான் சாபக்கேடு.
இந்த ஆயுதம் ஏந்திய கொடூர கும்பலிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டிய கடமை உலக நாடுகளின் முக்கிய பொறுப்பு என்பதை உலக தலைவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும்!!!
வேர்ல்ட் நியூஸ்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum