நெபந்தஸ் - பாவம்
Wed Mar 25, 2015 11:01 am
நெபந்தஸ் (பாவம்) முதலில் இனிக்கும்.. பின்பு கசக்கும்..
நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் (கொலோ 2:6-.
தாவரவகைகளின் வழக்கமான உணவு ஸ்டார்ச். இந்த உணவைத் தாவரங்கள்சூரியஒளி, கார்பன் டை ஆக்ஸைடு, தண்ணீர் இவைகளைக் கொண்டு தாமே தயாரித்துக்கொள்ளும். எனவே பொதுவில் தாவரங்கள் சைவ உணவுப் பழக்கமுள்ளவை. இவை அனைவருக்கும் தெரிந்த தகவல்கள். ஆனால் தாவரங்களில் அசைவ உணவு உண்ணும் தாவரங்களும் உண்டு. அதில் ஒருவகைதான் நெபந்தஸ். இதற்கு ஜாடித் தாவரம் என்றும் பெயர் உண்டு. நம் நாட்டில், அசாம் காடுகளில் உள்ள காரியா மலைகளில் இது அதிகம் காணப்படுகின்றது. இவை உயிர்வாழ நீர் , சூரிய ஒளி , காற்று அவசியம். ஆனால் இவை தவிர சில முக்கியத் தனிமங்களும் இவற்றுக்குத் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் அத்தனிமங்கள் இவை வளரும் நிலத்தில் இருப்பதில்லை. அல்லது மிகக்குறைந்த அளவில் இருக்கும். எனவே இந்த நைட்ரஜன் போன்ற தனிமங்களுக்காகத்தான் பூச்சி போன்ற சிறிய விலங்குகளைத் தின்றுவிடுகின்றன.
இலையின் மத்திய நரம்பிலிருந்து ஒரு நீண்ட பாகம் வளர்ந்து ஒரு ஜாடி போல காட்சியளிக் கின்றது. இதற்கு ஒரு மூடி அமைப்பும் உண்டு. ஜாடியின் வாய் பாகத்தில் இனிப்பான திரவம் சுரக்கின்றது. பூச்சிகள் இந்த திரவத்தை ருசிக்க ஜாடியின் வாய் பாகத்தில் வந்தமரும். உடனே வழுக்கி அடிப்பாகத்தில் விழுந்து விடுகின்றன. உடனே ஜாடி தானாக மூடிக் கொள்கிறது. பிறகு என்ன? மாட்டிக்கொண்ட பூச்சி சிறிது நேரத்தில் இறந்து விடுகிறது. பின்னர் அந்தப் பூ ஒரு சின்ன வயிறு போலவே செயல்பட ஆரம்பிக்கிறது. மெதுவாக ஒரு திரவத்தைச் சுரக்கிறது. அந்தத் திரவம் பூச்சியின் முழு உடலையும் கரைத்த பின்னர் அதிலுள்ள , கனிமங்களை உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது. சரி, இது சின்னப் பூச்சிகளுடன் நிறுத்திக்கொள்கிறதா? இல்லை, சிறிய தவளைகள், சில சமயம் எலிகள் கூட இத்தாவரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
இதைப்போல்தான் பாவமும். முதலில் இன்பமாகத் தோன்றும். அதில் மயங்கி வழுக்கி விழுந்துவிட்டால் நம் வாழ்க்கையே நாசமாகிவிடும். கவர்ச்சிதான் சாத்தானின் கண்ணியாக காணப்படுகிறது. இன்றைய இளைஞர்கள் அழகையும் கவர்ச்சியையும் விரும்பி அழகான, அருமையான, புனிதமான வாழ்வை இழந்து விடுகின்றனர். *ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீ விரிக்கிறது போலும் அவளுக்கு (வேசியின்) பின்னே போனான்* (நீதிமொழிகள் 7: 23) என்று வேதம் கூறுகிறது.
ரோட்டிலே செல்லும் போது ஆபாசமான படங்களைப் பார்த்திருப்பீர்கள். சாராய கடைகளில் பெண்கள் மது அருந்துவது போல கவர்ச்சி படங்களை வைத்திருப்பார்கள். கிரிக்கெட் விளையாட்டில் கவர்ச்சி ஆட்டங்களை பார்த்திருப்பீர்கள். செய்திகள் பார்க்கும் பொழுது நடுவில் கவர்ச்சி விளம்பரங்கள் வருவதைப் பார்த்திருப்பீர்கள். பிசாசு நமக்கு தெரியாதபடி பல இடங்களில் அவனது வலையை விரித்து நம்மை சிக்கவைக்க நம்மைக் கவர்ந்திழுக்கும் வசீகர இரையைத் தூவிவிட்டிருக்கின்றான். பிசாசின் வஞ்ச வலையில் சிக்காதிருக்க நாம் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஜெபிக்க வேண்டும். அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தின் மூலமாக, சீர்கெட்டுப் போயிருக்கும் இந்த உலகத்தின் பாவங்களுக்கு நம்மால் விலகி வாழமுடியும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum