தேநீர் - பலவகை (Tea)
Wed Mar 06, 2013 9:19 am
தேனீர் வகைகள்
வெண் தேநீர்:பச்சை நிறம் படியாத இளந்தளிர்களில் இருந்து இவ்வகைத்
தேயிலை தயாரிக்கப்படுகிறது. அதிக சூரிய வெளிச்சம் படாமல் இருக்க சில சமயம் அவ்விளந்தளிர்களை மறைத்து வைப்பதும் உண்டு. வசந்த காலத்தில் தளிர்களைப் பறித்துக்காய வைத்துப் பின் அப்படியே பெட்டிகளில் அடைத்தோ பொடி செய்து சிறிய பைகளில் அடைத்தோ விற்பனை செய்யப்படுகிறது. தேயிலைச் செடிகளில் இருந்து இவ்வகைத் தேயிலை சிறிய அளவிலேயே கிடைப்பதால் மற்ற வகைகளை விட இது அரிதாகவும் விலை உயர்ந்ததாகவும் உள்ளது. வெண்தேநீர் மங்கிய மஞ்சள் நிறமும், நறுமணமும், மிகக்குறைந்த
இனிப்பும் உடையதாக இருக்கும். வெண்தேயிலை புக்கியன் (Fukien) எனப்படும்
சீன மாகாணத்தில் தான் பெருமளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
வெண்தேயிலைகளை ஆண்டிற்கு ஒரு முறை வசந்த காலத்தில் இரண்டு நாட்களுக்குள் அறுவடை செய்து பின்னர் துரிதமாகநீராவியால் அவித்து காய வைக்கப்படுகிறது. இத்தேயிலை மற்ற வகைகளை விட மிகக் குறைவாக பதனிடப்படுவதால் சுவை மிகுந்ததாகவும் புதுமை குன்றாததாகவும் இருக்கும்.
பசுந்தேநீர்:
பசுந்தேநீர் சீனத்தில் கடந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கும்
மேலாக பலராலும் அருந்தப்படும் ஒரு பானமாகும். சப்பான்,
கொரியா மற்றும் பற்பல தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இவ்வகைத் தேநீர் மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது. பசுந்தேயிலைகளைப் பறித்த பின்பு துரிதமாக ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் சிறிது நேரம் நீராவியில்
அவித்து அல்லது சூடான காற்றில் உலர வைத்துப் பின் பெட்டிகளில் அடைத்து விற்கப்படுகிறது. சில வகை பசுந்தேயிலைகளை சிறிய உருண்டைகளாக உருட்டிப் பின் விற்பதும் உண்டு. ஆனால் உயர்ந்த வகை பசுந்தேயிலைகள் மட்டுமே சீராக உருட்ட முடியும் என்பதால் இவ்வகை பசுந்தேயிலைகள் சிறிய அளவில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. பசுந்தேநீரில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக, புற்று நோயைக்
குணப்படுத்தும் சில வகை வேதிப்பொருட்கள் உள்ளதாக சில ஆராய்ச்சிகள் சுட்டுவதால், பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிக் குழுக்கள் பசுந்தேநீரை ஆராய்ந்து
வருகின்றனர்.
ஊலாங்கு தேநீர்:
ஊலாங்கு தேயிலை பசுந்தேயிலைக்கும் கருந்தேயிலைக்கும் உள்ள இடைப்பட்ட வகையாகும். ஊலாங்கு தேநீர் சீனத்தில் உள்ள ஃபுசியன்
மாகாணத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் மிங்கு மன்னர்குல ஆட்சியின் கீழ் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. ஊலாங்கு தயாரிப்பதற்கு தேயிலைகள், மூவிலைகளும் ஒரு மொட்டும் கொண்ட தொகுதிகளாக பறிக்கப்படுகிறது. பறித்த இலைகளை ஒன்றில் இருந்து மூன்று நாட்கள் (தேயிலைகள் 30% சிவப்பாகும் வரை) புளிக்க வைத்துப் பின் கரிப்புகை கொண்டு உலர வைக்கப்படுகிறது. இவ்வகைத் தேயிலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரானது தெளிந்த சிவப்பு நிறம் உடையதாகவும், மணம் மிகுந்ததாகவும், கசப்பின்றி சிறு இனிப்புச் சுவையுடனும் விளங்குகிறது. சீனாவில் தயாரிக்கப்படும் ஊலாங்கு தேயிலைகள் சப்பானுக்குத் தான் பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கருந்தேநீர்/செந்தேநீர்:
கருந்தேயிலை அல்லது செந்தேயிலை ஆசியாவில்தான் மிக அளவில் தயாரிக்கப்படுகிறது. தென்னாசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,
வங்காளதேசம் மற்றும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் கருந்தேநீரை விரும்பி அருந்துகின்றனர். சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் தயாரிக்கப்படும் கருந்தேயிலைகள் பெரும்பாலும் ஏற்றுமதிக்கே பயன்படுகிறது. தேயிலைகளைப் பறித்த பின்பு இரண்டு வாரங்களில் இருந்து ஒரு மாதம் வரை புளிக்க வைத்துப் பின்பு உலர வைத்து பெட்டிகளில் அடைத்து விற்கப்படுகிறது. கருந்தேயிலைகளின் தரத்தை நிர்ணயிக்க செம்மஞ்சள் பீகோ என்னும் முறை பயன்படுத்தப்படுகிறது. கருந்தேயிலையில் மற்ற வகை தேயிலைகளை விட மிக அதிக அளவில் கஃபைன் எனப்படும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது. இதனால் கருந்தேநீர் அருந்துபவர்க்கு உடனடி புத்துணர்ச்சி கிடைக்கிறது.புவார் தேநீர்
புவார் தேயிலை சீனத்தில் உள்ள யுன்னான் மாகாணத்தில்தான்
பெருமளவு தயாரிக்கப்படுகிறது. கருந்தேயிலை போலவே புவார்
தேயிலைகளையும் புளிக்க வைக்கப்பட்டு, அதிலும் இருமுறை புளிக்க வைக்கப்பட்டு பின் பல ஆண்டுகளுக்கு முதிர வைக்கப்படுகிறது. புவார் தேயிலைகள் இரு வகையில், பச்சையாகவோ அல்லது பக்குவப்படுத்தியோ
தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான் புவார் தேயிலைகளை தயாரித்த முதல் ஆண்டுக்குள் உட்கொள்ளப்படுகிறது. ஆனால் சில உயர்ந்த வகை பச்சைப்
புவார் தேயிலைகள் 30 முதல் 50 ஆண்டுகள் முதிர வைக்கப்படுகிறது. பக்குவப்படுத்திய புவார் தேயிலைகள் 10 முதல் 15 ஆண்டுகளே முதிர வைக்கப்படுகிறது. புவார் தேயிலையை பெட்டிகளில் உதிரியாகவோ அடர்த்தியாகவோ அடைத்து விற்கப்படுகிறது. புவார் தேநீர் கருஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டதாக இருக்கும். இவ்வகைத் தேநீர் செரிமானத்துக்கும் இரத்தக்கொழுப்பை குறைப்பதற்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது.
மஞ்சள் தேநீர்:
இவ்வகைத் தேயிலை உலகச் சந்தையில் மிக அரிதாக சிறிய
அளவிலேயே கிடைக்கிறது. சீனாவில் உள்ள யுன்னான் மற்றும் அன்னூயி (Anhui) மாகாணத்தில் தயாரிக்கப்படுகிறது. வெண்தேயிலைகளைப் போலவே மஞ்சள் தேயிலைகளும் தளிர்களில் இருந்தும் மொட்டுக்களில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது. வெண்தேயிலை போலல்லாமல் தேயிலையை பறித்த பின் ஓரிரவு உலர (புளிக்க) வைக்கப்படுகிறது. இதனால் மஞ்சள் தேநீர் சிறிது பொன்னிறம் கலந்த மஞ்சள் நிறம் பெற்றிருக்கும். மஞ்சள் தேயிலை, 'பொன்னூசிகள்' எனவும் அழைக்கப்படுகிறது. சீன மன்னர்களின் முத்திரை நிறமான தங்க நிறத்தில் இவ்வகைத் தேநீர் இருப்பதால் சீன மன்னரவையில் மிகவும் அதிமாக அருந்தப்பட்டது.
குக்கிச்சா தேநீர்:
தேயிலைச் செடிகளில் உள்ள குச்சிகளையும் முற்றிய
இலைகளையும் குளிர்காலத்தில் பறித்த பிறகு காய வைத்து, நீராவியில்
அவித்து, முதிர வைத்துப் பின் நெருப்பில் வருக்கப்படுகிறது. இத்தேநீரை குச்சித் தேநீர் எனவும் அழைக்கின்றனர். குக்கிச்சா தேநீர் சப்பான் நாட்டில் பலராலும் அருந்தப்படுகிறது. உலகில் சீனாவும் இந்தியாவுமே இதை பெருமளவு தயாரிக்கின்றனர். குக்கிச்சா தேநீர் நறுமணத்துடனும், மிகக் குறைந்த அளவு கஃபைன் உடையதாகவும் இருப்பதால், இயற்கை உணவு அருந்தும் மக்களிடம் இது ஒரு முக்கியமான பானமாக விளங்குகிறது.
செய்முறை
சூடான தேநீர்:
பாலுடன் கலந்த கருந்தேநீர்
- தெளிந்த நீரை ஒரு சுத்தமான் கொதிகலத்தில் 75 முதல் 90 டிகிரி செல்சியசுக்கு சூடாக்கவும். நீரை அதிக அளவு
கொதிக்க விடாமல் இருப்பது நன்று. - தேயிலைகளை ஒரு கலத்திலிட்டு பின் கொதித்த நீரை அதன் மேல் கொட்டவும்.
- தேநீர் கலத்தை மூடி வைப்பதன் மூலம் தேநீரின் நறுமணத்தைக் காக்க முடியும்.
- மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்தபின் தேநீரை வடிகட்டவும்
- தூய்மையான பீங்கான் கிண்ணத்தில் தேநீரை ஊற்றி அருந்தவும்.
- தேநீரில் சிறிது பால்
மற்றும் தேவையான அளவு சர்க்கரை
சேர்த்தும் அருந்தலாம்
- தெளிந்த நீரை ஒரு தூய்மையான கொதிகலத்தில கொதிக்க விடவும்.
- நீர் சிறிது கொதித்ததும் நெருப்பைக் குறைத்து சர்க்கரையும் மசாலா
பொடியையும் (மிளகு,ஏலக்காய், இஞ்சி, சோம்பு) சேர்த்து
ஐந்து நிமிடங்கள் மென்மையாக கொதிக்க விடவும். - தேவையான அளவு கருந்தேயிலைகளையும் சிறிது பாலையும் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மென்மையாக கொதிக்க விடவும்.
- தூய்மையான பீங்கான் அல்லது மண் கிண்ணத்தில் வடிகட்டிய தேநீரை ஊற்றி அருந்தவும்.
- மசாலா பொடியில் சுக்கு, திப்பிலி, பட்டை, கிராம்பு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்
- தெளிந்த நீரை ஒரு சுத்தமான் கொதிகலத்தில் கொதிக்க விடவும்.
- தேயிலைகளை ஒரு கலத்திலிட்டு பின் கொதித்த நீரை அதன் மேல் கொட்டவும்.
- தேநீர் கலத்தை மூடி வைப்பதன் மூலம் தேநீரின் நறுமணத்தைக் காக்க முடியும்.
- மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்தபின் தேநீரை வடிகட்டவும்.
- குளிர்பதனப்பெட்டியில் தேநீரை ஆறு முதல் 24 மணி நேரம் வைக்கவும்.
- தூய கண்ணாடிக் கிண்ணத்தில் குளிர் தேநீரை பனிக்கட்டிகளுடன் அருந்தவும்.
- சிலர் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்தும் அருந்துவர்.
திரிகடுகம் தேநீர்:
- சுக்கு, மிளகு, திப்பிலி, இவை மூன்றையும் திரிகடுகம் என பொதுவாக அழைக்கப்படும். இம்மூன்றையும் சரி அளவு கலந்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
- சூடான தேநீரில் ஒரு சிட்டிகை அல்லது இரண்டு சிட்டிகை திரிகடுகப் பொடியை கலந்து பருகினால் கபம், சளி, புகைச்சலான இருமல், ஒவ்வாமையினால் உண்டாகும் (allergy) இருமல் ஆகியவை நீங்கும்.
- திரிகடுகம் உடம்பு சூட்டை கூட்டுவதால் அளவாக அருந்துவது உடலுக்கு நலம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum